Saturday, February 27, 2021

458. தலைவர் தேர்தல்

'மூவர் இசைச் சங்கம்' துவங்கப்பட்டது முதல் அதன் தலைவராக இருந்த மாசிலாமணியின் மறைவுக்குப் பிறகு அடுத்த தலைவரைத் தேர்ந்தெடுக்க வேண்டி இருந்தது.

சங்கத்தின் பல நிகழ்ச்சிகளுக்குப் பொருள் உதவி செய்தும் பல முன்னணிப் பாடகர்களைத் தானே நேரில் சென்று பார்த்து, அவர்களை நிகழ்ச்சிக்கு அழைத்து வந்தும், அவ்வப்போது பலரிடமிருந்தும் நன்கொடை வசூலித்துக் கொடுத்தும் சங்கத்தின் நடவடிக்கைகளுக்கும், வளர்ச்சிக்கும் பெருமளவில் உதவி வந்த ராஜாமணிதான் அடுத்த தலைவராக வருவார் என்ற எதிர்பார்ப்பு பலரிடமும் இருந்தது.

சங்கத்தின் உறுப்பினர்கள்தான் தலைவரைத் தேர்ந்தெடுக்க வேண்டும். தலைவர் பதவிக்கான தேர்தலை அறிவித்தார் சங்கத்தின் செயலர்.

துவக்கத்தில் தலைவர் பதவிக்குப் போட்டி இடுவதில் ராஜாமணி அவ்வளவாக ஆர்வம் காட்டவில்லை. ஆனால் அவர் நண்பர்கள் அவரை வற்புறுத்தி வேட்பு மனு தாக்கல் செய்ய வைத்தனர்.

"மாசிலாமணி தலைவரா இருந்தப்பவே, சங்கத்துக்கு அதிகமா உழைச்சவர் நீங்கதான். ஒரு எதிர்பார்ப்பும் இல்லாம நல்ல மனசோட, உங்களோட இசை ஆர்வத்தினால இவ்வளவு  தூரம் ஈடுபட்டு இந்தச் சங்கத்துக்கு இவ்வளவு செஞ்சிருக்கற உங்களைத் தவிர வேற ஒத்தர் தலைவரா வரதை எங்களால நினைச்சுப் பாக்கக் கூட முடியல" என்றனர் அவர்கள்.

ஆனல் மாசிலாமணியுடன் சேர்ந்து அந்தச் சங்கத்தைத் துவக்கிய மூத்த உறுப்பினரான கன்னையாவும் தலைவர் பதவிக்குத் தன் வேட்பு மனுவைத் தாக்கல் செய்தார்.

"போட்டி எதுக்கு? நான் விலகிக்கறேன். கன்னையா ஒரு ஃபௌண்டர் மெம்பர். அவரே இருந்துட்டுப் போகட்டும்" என்றார் ராஜாமணி.

"என்னங்க நீங்க? சங்கத்தை ஆரம்பிச்ச சில பேர்ல கன்னையாவும் ஒத்தர்ங்கறது உண்மைதான். ஆனா, அவர் சங்கத்துக்கு ஒண்ணுமே செஞ்சதில்லையே! மாசிலாமணி போனதும், 'அண்ணன் எப்ப போவான், திண்ணை எப்ப காலியாகும்?'னு காத்துக்கிட்டிருந்த மாதிரி தலைவர் பதவிக்கு ஆசைப்படறாரு. நீங்க என்னன்னா அவரே இருந்துட்டுப் போகட்டும்னு சொல்றீங்க! உங்க நல்ல குணத்துக்காகவும் பெரிய மனசுக்காகவுமே நீங்கதான் தலைவரா வரணும். கன்னையாவுக்கு யாரும் ஓட்டுப் போட மாட்டாங்க. நீங்கதான் ஜெயிப்பீங்க!" என்றனர் அவருடைய ஆதரவாளர்கள்.

ஆனால் தேர்தல் முடிந்து ஓட்டுக்கள் எண்ணப்பட்டபோது கன்னையாதான் வெற்றி பெற்றிருந்தார்!

"என்ன இப்படி ஆயிடுச்சு? நம்ம உறுப்பினர்களைப் புரிஞ்சுக்கவே முடியலியே! சங்கத்துக்காக இவ்வளவு செஞ்சிருக்கற, இவ்வளவு நல்ல மனனுஷனான நம்ம ராஜாமணி சாரை விட்டுட்டு சங்கத்துக்காக ஒரு துரும்பைக் கூடக் கிள்ளிப் போடாத கன்னையாவுக்கு ஓட்டுப் போட்டிருக்காங்களே!" என்றார், ராஜாமணியின் ஆதரவாளர்களில் ஒருவரான மூர்த்தி.

"ராஜாமணி ரொம்ப நல்லவர்தான். சொக்கத் தங்கம்தான். ஆனா அவர் அந்த அரசியல் கட்சியில ஒரு முக்கிய உறுப்பினரா இருக்காரே! அந்தக் கட்சிக்கு அவ்வளவு நல்ல பேரு இல்லயே! அதனாலதான் பல பேரு அவருக்கு ஓட்டுப் போடலன்னு நினைக்கறேன்!" என்றார் ராஜாமணியின் நண்பரான சரவணன்.

"சார் நிக்கலேன்னுதான் சொன்னாரு. நாமதான் அவரை வற்புறுத்தி நிக்கச் சொன்னோம். இப்படி ஆச்சுன்னு தெரிஞ்சா வருத்தப்படுவாரு. சார் எங்கே இப்ப? இன்னும் அவருக்கு விஷயம் தெரியாதா?"

"ராஜாமணி அவங்க கட்சியோட பொதுக்குழுவில கலந்துக்கிட்டிருக்காரு. கூட்டம் முடிஞ்சதும் ஃபோன் பண்ணுவாரு. அவருக்கு அதிர்ச்சியாத்தான் இருக்கும். 'அந்தக் கட்சியில இருக்கறதால உங்க பேரு கெட்டுப் போகுது, வெளியில வந்துடுங்க'ன்னு எவ்வளவோ தடவை அவர்கிட்ட சொல்லி இருக்கேன். ஆனா எதனாலேயோ அவருக்கு அந்தக் கட்சி மேல ஒரு ஈடுபாடு. அதுக்கான விலையைத்தான் இப்ப கொடுத்திருக்காரு!" என்றார் சரவணன்.

பொருட்பால்
அரசியல் இயல்
அதிகாரம் 46 
 சிற்றினஞ்சேராமை  
குறள் 458
மனநலம் நன்குடைய ராயினும் சான்றோர்க்கு
இனநலம் ஏமாப் புடைத்து.

பொருள்:
ஒருவர் மனவளம் மிக்க சான்றோராக இருப்பினும், அவர் சேர்ந்துள்ள கூட்டத்தினரைப் பொருத்தே அவருக்கு வலிமை வந்து வாய்க்கும்.
அறத்துப்பால்                                                                  காமத்துப்பால்

No comments:

Post a Comment

1080. 'தன்மானத் தலைவரி'ன் திடீர் முடிவு!

தன் அரசியல் வாழ்க்கையின் துவக்கத்தில் இரண்டு மூன்று கட்சிகளில் இருந்து விட்டு, அங்கு தனக்கு உரிய மதிப்புக் கிடைக்கவில்லை என்பதால், 'மக்க...