Thursday, February 11, 2021

452. என் மகன்

நாங்கள் பள்ளி இறுதியாண்டை முடித்து 50 ஆண்டுகள் நிறைவடைந்ததைக் கொண்டாடும் விதத்தில், என்னுடன் படித்த சிலர் பள்ளியில் ஒரு ஒன்றுசேர்தல் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தனர்.

அப்போதுதான் பள்ளியில் படிக்கும்போது எனக்கு நெருக்கமாக இருந்த ஜகதீசனை நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் சந்தித்தேன்.

ஜகதீசன் ஒரு நிறுவனத்தில் நல்ல பதவி வகித்து ஓய்வு பெற்று விட்டதாகவும், அவனுடைய மூன்று மகன்களும் நல்ல நிலையில் இருப்பதாகவும் என்னிடம் கூறினான்.

குறிப்பாகத் தன் மூன்றாவது மகன் பற்றி அவன் மிகவும் பெருமையாகக் கூறினான்.

"என் முதல் ரெண்டு மகன்களும் எஞ்சினீரிங் படிச்சுட்டு நல்ல வேலையில இருக்கறது பெரிசில்ல. ஆனா என் மூணாவது பையன் பி காம்தான் படிச்சான். சி ஏ படின்னு சொன்னேன். கேக்காம ஒரு நிறுவனத்தில ஒரு சாதாரண வேலைக்குத்தான் போனான். 

"ரெண்டு மூணு வருஷத்திலேயே கம்பெனி எம் டிக்கு நெருக்கமா ஆயிட்டான். அஞ்சு வருஷத்தில அவங்களோட ஒரு புது நிறுவனத்துக்கு ஜெனரல் மானேஜர் ஆயிட்டான். 

"அப்புறம் அஞ்சு வருஷம் கழிச்சு அந்த வேலையையும் விட்டுட்டு தானே சொந்தமா ஒரு தொழிற்சாலையைத் தொடங்கி நடத்திக்கிட்டிருக்கான். கொஞ்சம் முதல் போட்டு பாங்க்ல கடன் வாங்கி நல்லா நடத்திக்கிட்டிருக்கான். 35 வயசுதான் ஆகுது. எனக்கு ரொம்பப் பெருமையா இருக்கு!" என்றான் என்னிடம்.

"ஓ, பெரிய விஷயம்தான்!" என்றேன் நான்.

"நீ வக்கீலா பிராக்டீஸ் பண்றதா சொன்னியே, எப்ப ரிடயர் ஆகப்போறே?" என்றான் ஜகதீசன்.

"எப்ப எனக்கு கேஸ் கிடைக்கறது நின்னு போகுதோ அப்பதான் எனக்கு ரிடயர்மென்ட்!" என்றேன் நான் சிரித்துக் கொண்டே.

இருவரும் எங்கள் தொலைபேசி எண்களையும், முகவரிகளையும்  ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொண்டாலும், அதற்குப் பிறகு அதிகம் தொடர்பு கொள்ளவில்லை. எப்போதாவது தொலைபேசியில் பேசிக் கொள்வதோடு சரி. 

ஒரு நாள் ஜகதீசனிடமிருந்து எனக்குத் தொலைபேசி அழைப்பு வந்தது. நான் ஃபோனை எடுத்ததுமே, ஜகதீசன் பதட்டத்துடன், "என் பையனை போலீஸ்ல கைது பண்ணிட்டாங்கடா! நீதான் அவனை ஜாமீன்ல எடுத்து அவன் கேசையும் நடத்தணும்" என்றான்.

"பதட்டப்படாம சொல்லு. எந்தப் பையன்? என்ன கேஸ்?"

"என் மூணாவது பையன்தான். பாங்க்ல கடன் வாங்க ஏதோ போலி ஆவணங்கள்ளாம் கொடுத்துட்டதாச் சொல்றாங்க."

"அப்படியா? தப்பா நினைச்சுக்காதே. வக்கீல்கிட்ட உண்மையைச் சொல்லணும். உன் பையன் போலி ஆவணங்கள் கொடுத்திருப்பான்னு நீ நினைக்கறியா?"

"நினைக்கறதென்ன? கொடுத்ததா அவனே எங்கிட்ட ஒப்புத்துக்கறான். ஆனா நீதான் அவனை எப்படியாவது காப்பாத்தணும். அவனைப் பத்தி எவ்வளவு பெருமைப் பட்டுக்கிட்டிருந்தேன்! இப்படிப் பண்ணிட்டானே!" என்று புலம்ப ஆரம்பித்தான் ஜகதீசன்.

"சரி. நான் கேஸ் விவரங்களைக் கேட்டுத் தெரிஞ்சுக்கிட்டு அப்புறம் என்ன செய்யலாம்னு பாக்கறேன். இன்னொண்ணு கேக்கணும்.... உன்னைப் பத்தி எனக்குத் தெரியும். உன் பையன் இப்படி ஒரு காரியத்தைச் செஞ்சிருந்தா அதுக்குத் தூண்டுகோலா யாராவது இருந்திருக்கணும். அதைப்பத்தி உனக்கு ஏதாவது தெரியுமா?"

"சகவாச தோஷம்தான் காரணம்."

"அப்படின்னா?"

"அவனோட பழைய முதலாளி ஒரு ஃபிராடு. அவன்கிட்ட நெருக்கமா இருந்ததாலதான் இவனுக்கு இப்படி ஒரு எண்ணம் வந்திருக்கணும்."

"யார் அவனோட பழைய முதலாளி?"

"எம் என் ஓ பி தான்."

"எம் என் ஓ பாண்டேயா? பல பாங்க்குகள்ள கோடிக்கணக்கா கடன் வாங்கிட்டு வெளிநாட்டுக்கு ஓடிட்டானே அவனா?" என்றேன் நான் அதிர்ச்சியுடன்.

"அவனேதான். அவன்கிட்ட நெருக்கமா இருந்ததாலதான் இவனுக்கும் அவனை மாதிரி சிந்தனை வந்திருக்கு!" என்றான் ஜகதீசன் விரக்தியுடன்.

அரசியல் இயல்
அதிகாரம் 46 
 சிற்றினஞ்சேராமை  
குறள் 452
நிலத்தியல்பால் நீர்திரிந் தற்றாகும் மாந்தர்க்கு
இனத்தியல்ப தாகும் அறிவு.

பொருள்:
தான் சேர்ந்த நிலத்தின் தன்மையால் நீர் தன் இயல்பை இழந்து, நிலத்தின் இயல்பாகவே மாறி விடும்; மனிதரின் அறிவும் அவர் சேர்ந்த இனத்தின் இயல்பாகவே ஆகி விடும்.
அறத்துப்பால்                                                                                       காமத்துப்பால்

No comments:

Post a Comment

1060. ஏன் உதவவில்லை?

"யார்கிட்ட உதவி கேக்கறதுன்னே தெரியல!" என்றான் பரந்தாமன். "யார்கிட்டயாவது கேட்டுத்தானே ஆகணும்? இன்னும் ரெண்டு நாளைக்குள்ள பணம்...