சிறு வயதிலேயே பெற்றோரை இழந்து விட்ட சேகரை அவன் சிற்றப்பாதான் வளர்த்தார்.
சேகரின் தந்தை இறந்த பிறகு, அவருடைய சொத்து சேகரின் பெயருக்கு வந்து விட்டது. ஆயினும், அவனுக்குப் பதினெட்டு வயதாகும் வரை அவனை வளர்ப்பவர் என்ற முறையில் அந்தச் சொத்து அவன் சிற்றப்பாவின் கட்டுப்பாட்டில்தான் இருந்தது.
சேகர் பெரியவனான பிறகு தன் மீது எந்தக் குற்றமும் கூறி விடக் கூடாது என்பதற்காக அவர் அவனிடம் கடுமை காட்டாமல் அவனை வளர்த்து வந்தார்.
சிற்றப்பா கொடுத்த சுதந்திரத்தால் சேகர் மகிழ்ச்சியாகவும், தன் விருப்பத்துக்கு ஏற்பவும் நடந்து கொண்டான். ஆயினும் தவறான வழிகளில் செல்லாமல், பொறுப்புடன் நடந்து கொண்டு படிப்பில் கவனம் செலுத்தினான்.
படிப்பை முடித்ததும் ஒரு நல்ல வேலையில் சேர்ந்து, சில வருடங்களில் வேலையை விட்டு விட்டுச் சிறிய அளவில் சொந்தத் தொழிலையும் துவங்கி விட்டான்.
பள்ளியில் அவனுடைய நெருங்கிய நண்பனாக இருந்த அண்ணாமலை பள்ளிப் படிப்பை முடித்த பின் ஒரு அரசியல் கட்சியில் சேர்ந்து விரைவிலேயே ஓரளவுக்குப் பிரபலமாகவும் ஆகி விட்டான்.
பள்ளி நாட்களில் சேகருக்கும் அண்ணாமலைக்கும் இருந்த நட்பு அண்ணாமலை அரசியலில் பிரபலமடைந்த பிறகும் தொடர்ந்தது.
சேகருக்குத் திருமணமாகிப் பத்து ஆண்டுகளுக்குப் பிறகுதான் அவனுக்குக் குழந்தை பிறந்தது. பெண் குழந்தை.
தன் பெண் சுமதியின் ஓராண்டு நிறைவைப் பெரிய அளவில் கொண்டாட விரும்பினான் சேகர்.
"எதுக்குங்க? எளிமையாக் கொண்டாடலாமே!" என்றாள் அவன் மனைவி லதா.
"இல்லை. நமக்குக் கல்யாணம் ஆகிப் பத்து வருஷம் கழிச்சுப் பொறந்திருக்கா நம்ம பொண்ணு. அதோட என் பிசினஸ் பெரிசா வளர்ந்து நாம இப்ப ரொம்ப நல்ல நிலைமையில இருக்கோம். ஏன் எளிமையாக் கொண்டாடணுங்கற?"
லதா சற்றுத் தயங்கி விட்டு, "பிறந்த நாள் விழாவுக்கு உங்க நண்பர் அமைச்சர் அண்ணாமலையைக் கூப்பிடுவீங்க இல்ல?"
"நிச்சயமா! நான் கூப்பிட்டா, அன்னிக்கு அமைச்சரவைக் கூட்டம் இருந்தா அதுக்குக் கூடப் போகாம நம்ம விழாவுக்கு வந்துடுவானே அவன்!"
"அவரைப் பத்திப் பல பேருக்கு நல்ல அபிப்பிராயம் இல்ல. அவர் நிறைய ஊழல் பண்றதாச் சொல்றாங்க."
"அதைப் பத்தி நமக்கு என்ன?"
"உங்களுக்குப் புரியல. நீங்க ரொம்ப நல்லவரு. உங்க திறமையால உங்க தொழில்ல முன்னுக்கு வந்தவரு. ஆனா நீங்க அண்ணாமலைகிட்ட நெருக்கமா இருக்கறதால, அவரோட அரசியல் செல்வாக்கைப் பயன்படுத்தித்தான் நீங்க முன்னுக்கு வந்ததா பல பேர் நினைக்கறாங்க. நமக்கு நெருக்கமானவங்க சில பேர் கூட என் காதுபட இப்படிப் பேசி நான் கேட்டிருக்கேன். நீங்க எவ்வளவுதான் நல்லவரா இருந்தாலும், அண்ணாமலைகிட்ட நீங்க நெருக்கமா இருக்கறது உங்களுக்கு ஒரு கெட்ட பேரை உருவாக்கி இருக்கு. நீங்க அவர்கிட்டேயிருந்து விலகி இருக்கறதுதான் உங்களுக்கு நல்லதுன்னு நான் நினைக்கிறேன்" என்றாள் லதா.
அரசியல் இயல்
No comments:
Post a Comment