Sunday, June 5, 2022

789. இன்றே கடைசி நாள்!

"சார்! டெண்டருக்கு அப்ளை பண்ண இன்னிக்குத்தான் கடைசி நாள். டெண்டர் பேப்பர் எல்லாம் ரெடி பண்ணி உங்ககிட்ட கையெழுத்து வாங்கித் தயாரா வச்சிருக்கேன்" என்றார் மானேஜர் சுப்பையா.

"தெரியும். ஆனா, அதுக்கு அஞ்சு லட்சம் ரூபாய் செக்யூரிடி டெபாசிட் கட்டணும். நம்மகிட்ட பணம் இல்ல. பாங்க் ஓவர்டிராஃப்ட் லிமிட்டை ஏற்கெனவே தாண்டிட்டோம். அதனால, பாங்க்லயும் பணம் கிடைக்காது. பணத்துக்கு எங்கே போறது?" என்றான் ராஜவேல், பெருமூச்சுடன்.

"நாம அப்ளை பண்ணினா, கண்டிப்பா நமக்குத்தான் சார் கிடைக்கும். நம்மை விடக் குறைச்சலா யாராலயும் கோட் பண்ண முடியாது."

"அது எனக்குத் தெரியாதா? அதான் பணம் இல்லேன்னு சொல்றேனே? உங்களால ஏதாவது ஏற்பாடு பண்ண முடியுமா?" என்றான் ராஜவேல், எரிச்சலுடன்.

"சார்! நான் மாசச் சம்பளம் வாங்கறவன். என்னால அஞ்சாயிரம் ரூபா கூடப் புரட்ட முடியாது!"

"அப்ப, வாயை மூடிக்கிட்டுப் பேசாம இருங்க!"

மாலை ஐந்து மணிக்கு அலுவலகத்துக்கு வந்த ராஜவேலிடம், "சார்! உங்களுக்கு நிறைய தடவை ஃபோன் பண்ணினேன். ஆனா, நீங்க எடுக்கல!" என்றார் சுப்பையா.

"நீங்க டெண்டர் விஷயமாத்தான் ஃபோன் பண்றீங்கன்னு தெரியும். பணம் புரட்ட முடியாதுன்னு காலையிலேயே சொல்லிட்டேனே? அதனாலதான், ஃபோனை எடுக்கல."

"இல்லை, சார். பணம் கிடைச்சுடுச்சு. அதைச் சொல்லத்தான் உங்களுக்கு ஃபோன் பண்ணினேன். ஆனா, நீங்க எடுக்கல. டெண்டர் அப்ளிகேஷனை நேரிலேயே கொண்டு போய்க் கொடுத்துட்டேன்."

"ஓ! பணம் எப்படிக் கிடைச்சுது? நம்ம மேல இரக்கப்பட்டு பாங்க்ல கொடுத்தாங்களா?"

"பாங்க்ல கொடுக்கல சார்! உங்க நண்பர் பாலுதான் கொடுத்தார்."

"பாலுவா? அவனுக்கு எப்படித் தெரியும்?"

"மன்னிச்சுக்கங்க, சார்! என்னால ஏதாவது ஏற்பாடு பண்ண முடியுமான்னு நீங்க கேட்டது எனக்கு உறுத்திக்கிட்டே இருந்தது. உங்க நண்பர் பாலு இதுக்கு முன்னால சில தடவை உதவினது எனக்கு நினைவு வந்தது. அதனால, அவர்கிட்ட ஃபோன் பண்ணிக் கேட்டேன். அவர் கொஞ்சம் கூட யோசிக்கல. எந்த பேர்ல டிடி எடுக்கணும்னு கேட்டு, அஞ்சு லட்சம் ரூபாய்க்கு டிடி எடுத்து,  அதை அவர் ஆஃபீஸ் பியூன் மூலமா கொடுத்தனுப்பிட்டாரு. டெண்டர் அப்ளிகேஷன் ரெடியா இருந்ததால, அதில டிடி விவரங்களை எழுதி இணைச்சு, டெண்டரை நானே நேரில போய்க் கொடுத்துட்டேன். நான் செஞ்சது தப்பா இருந்தா, மன்னிச்சுக்கங்க" என்றார் சுப்பையா.

"தப்புதான். நான் பாலுவோட பேசியே ரெண்டு மூணு மாசம் ஆச்சு. ஆனா, நீங்க செஞ்சது பெரிய நன்மையாச்சே! உங்களை எப்படி நான் குத்தம் சொல்ல முடியும்? சரி, நான் வரேன்" என்றபடியே கிளம்பினான் ராஜவேல்.

"சார்! சில லெட்டர்கள்ள கையெழுத்துப் போட வேண்டி இருக்கு."

"அதையெல்லாம் நாளைக்குப் பாத்துக்கலாம். முதல்ல, நான் பாலுவைப் போய்ப் பார்க்கணும்!" என்று எழுந்தான் ராஜவேல்.

"சாரிடா, பாலு! உங்கிட்ட கோவிச்சுக்கிட்டு, நான் ரெண்டு மூணு மாசமா உங்கிட்ட பேசவே இல்லை. ஆனா, நீ எனக்கு இவ்வளவு பெரிய உதவி செஞ்சிருக்க!" என்றான் ராஜவேல்.

"முட்டாள்தனமாப் பேசாதேடா! ஒரு நண்பனுக்கு உதவி செய்யறது எப்பவுமே செய்ய வேண்டிய விஷயம். நண்பர்களுக்குள்ள சண்டை போட்டுக்கறது, பேசாம இருக்கறது எல்லாம் தற்காலிகமான விஷயங்கள்தானே!" என்றான் பாலு.

"இனிமே நமக்குள்ள அதெல்லாம் தற்காலிகமாக் கூட நடக்காது. என்னை விட, என் மானேஜர் உன்னை நல்லா புரிஞ்சு வச்சுக்கிட்டிருக்காரு போல இருக்கு. அது சரி. உன் பிசினஸ்ல கூட நிறைய பிரச்னை இருக்குன்னு கேள்விப்பட்டேனே! எப்படி உடனே அஞ்ச லட்சம் ரூபா ரெடி பண்ணினே? உன் நிலைமை இப்ப சரியாயிடுச்சா?

"என் நிலைமை இன்னும் சரியாகல. இன்னும் மோசமாத்தான் போய்க்கிட்டிருக்கு. உன் மானேஜர் ஃபோன் பண்ணினதும், எப்படியாவது உனக்கு உதவி செய்யணும்னு தோணிச்சு. என் மனைவி அக்கவுன்ட்ல கொஞ்சம் பணம் இருந்தது. அதுவும் ஃபிக்ஸட் டெபாசிட்லதான் இருந்தது. அதை கான்சல் பண்ணித்தான் டிடி எடுத்துக் கொடுத்தேன். அது வேற பாங்க். அது என்னோட பாங்க்கா இருந்தா, நான் கொடுக்க வேண்டிய பணத்துக்காக அதை எடுத்துக்கிட்டிருப்பாங்க!" என்றான் பாலு, சிரித்தபடி.

நண்பனுக்கு நன்றி சொன்னால் அது வெறும் சம்பிரதாயமாக ஆகி விடுமே என்று நினைத்தபடி, நண்பனை பிரமிப்புடன் பார்த்தான் ராஜவேல்.

பொருட்பால்
நட்பியல்
அதிகாரம் 79
நட்பு 

குறள் 789:
நட்பிற்கு வீற்றிருக்கை யாதெனின் கொட்பின்றி
ஒல்லும்வாய் ஊன்றும் நிலை.

பொருள்: 
நட்புக்கு சிறந்த நிலை எது என்றால், மாறுபாடின்றி, முடியும்போதெல்லாம் உதவி செய்து தாங்கும் நிலையாகும்.
       அறத்துப்பால்                                                                       காமத்துப்பால்

595. அப்பா சொன்ன அறிவுரை!

அந்தக் கல்லூரியின் ஆண்டு விழாவுக்கான சிறப்பு விருந்தின தொழிலதிபர் ஆறுமுகம் பேசத் தொடங்கினார்:

"நான் பள்ளிப் படிப்பையே முடிக்காதவன். படிக்க வசதி இல்லாததால, அஞ்சாவது வகுப்போட என் படிப்பு நின்னு போச்சு. கல்லூரியில படிக்கிற உங்களுக்கு நான் சொல்றதுக்கு என்ன இருக்குன்னு தெரியல. கல்லூரி நிர்வாகம் என்னைக் கூப்பிட்டப்ப, அவங்க கூப்பிட்டதுக்கு மரியாதை கொடுக்கணும்னுதான் வந்தேன்.

"என் அப்பா எனக்கு சில விஷயங்களை சொல்லிக் கொடுத்திருக்காரு. அதையெல்லாம் உங்ககிட்ட பகிர்ந்துக்கலாம்னு நினைக்கிறேன். என் அப்பாவும் அதிகம் படிக்காதவர்தான். அதனால, அவர் எனக்கு சொல்லிக் கொடுத்த விஷயங்கள் உங்களுக்கு எந்த அளவுக்குப் பயன்படும்னு தெரியல. ஆனா, எங்கிட்ட சொல்றதுக்கு வேற விஷயம் இல்லையே!

"எங்க ஊர்ல ஒரு குளம் இருக்கும். அதுல தாமரை, அல்லி இன்னும் சில வகை நீர்ப்பூக்கள் இருக்கும். நீர்ப்பூக்களை நீங்க கவனிச்சீங்கன்னா, பூக்கள் எல்லாம் நீர்மட்டத்தில மிதக்கும். அவற்றோட தண்டு தண்ணிக்குள்ள இருக்கும். சில சமயம் ஒரு சிறு பகுதி வெளியில தெரியும்.

"குளத்தில சில சமயம் தண்ணி அதிகமா இருக்கும், சில சமயம் குறைவா இருக்கும். ஆனா தண்ணி அளவு எப்படி இருந்தாலும், பூ தண்ணிக்கு மேலேயும், தண்டு தண்ணிக்குள்ளேயும் இருக்கும். எனக்கு அது ஆச்சரியமா இருக்கும். குளத்தில அஞ்சு அடி தண்ணி இருந்ததுன்னு வச்சுக்கங்க, அப்ப தண்ணிக்குள்ள இருக்கற தண்டும் கிட்டத்தட்ட அஞ்சு அடிநீளம் இருக்கும் இல்லையா?

"தண்ணி அளவு மூணு அடியாக் குறையுதுன்னு வச்சுப்போம். அஞ்சு அடி நீளம் இருந்த தண்டுல இப்ப மூணு அடிதானே தண்ணிக்குள்ளே இருக்கு, மீதி ரெண்டு அடி தண்ணிக்கு மேலே வெளியே நீட்டிக்கிட்டிருக்கணும் இல்ல? ஏன் அப்படி இல்லேனு எனக்குப் புரியல. இதை என் அப்பாகிட்ட கேட்டேன். அவரு சொன்னாரு. 'தண்ணி மட்டம் எந்த அளவுக்கு இருக்கோ அந்த அளவுக்குத்தான் தண்டோட நீளம் இருக்கும். தண்ணி மட்டம் மேலே போச்சுன்னா, தண்டு வளர்ந்து தண்ணி மட்டம் அளவுக்கு வரும். தண்ணி மட்டம் குறைஞ்சுடுச்சுன்னா, தண்டு நீளம் தண்ணி மட்டம் அளவுக்கு சுருங்கிடும்.' 'ஏன் அப்படி?'ன்னு நான் கேட்டதுக்கு, அதுதான் இயற்கையோட விதின்னு சொன்னாரு.

"பந்தைத் தூக்கிப் போட்டு விளையாடச் சொல்லுவாரு. முதல்ல, பக்கத்தில ஒரு இடத்தைக் காட்டி, அது மட்டும் தூக்கிப் போடச் சொல்லுவாரு. அஞ்சாறு தடவை தூக்கிப் போட்டப்புறம், தூரமா ஒரு இடத்தைக் காட்டி, அங்கே போடச் சொல்லுவாரு. அவ்வளவு தூரம் போட முடியாதேன்னு நான் சொன்னா, 'அவ்வளவு தூரம் போடணும்னு மனசுக்குள்ள தீர்மானிச்சுக்கிட்டு, முயற்சி செஞ்சு போடு'ம்பாரு.

"முதல் தடவை என்னால பந்தை அவ்வளவு தூரம் போட முடியாது. 'பரவாயில்ல, முன்னை போட்ட தூரத்தை விட அதிகமாப் போட்டிருக்க, இல்ல? முயற்சி பண்ணிக்கிட்டிருந்தே இருந்தா முடியும்'னு சொல்லுவாரு. அவர் சொன்னபடியே முயற்சி செஞ்சதில, என்னால அந்த தூரம் போட முடிஞ்சது. அது மட்டும் இல்ல. அதுக்கப்புறம் முயற்சி செஞ்சு, இன்னும் அதிக தூரமும் போட முடிஞ்சது.

"என் அப்பா சொன்ன இந்த அறிவுரைகள்தான் என் வாழ்க்கையில எனக்கு அடிப்படையா அமைஞ்து. உயர்ந்த லட்சியங்களை உருவாக்கிக்கிட்டு, விடாமுயற்சியோட செயல்பட்டதாலதான், என்னால வாழ்க்கையில வெற்றி பெற முடிஞ்சதுன்னு நான் நம்பறேன். நான் உங்களுக்குச் சொல்ல விரும்பறதும் இதுதான். உங்க லட்சியங்கள், உறுதி, உழைப்பு இவற்றோட அளவுக்குதான் உங்களோட உயர்வு இருக்கும், அதனால, உயர்ந்த இலக்குகளை வகுத்துக்கிட்டு, அவற்றை அடையணுங்கற உறுதியோட, சிறப்பா முயற்சி பண்ணுங்க. நிச்சயமா வெற்றி பெறுவீங்க!"

ஆறுமுகம் பேசி முடித்ததும், மாணவர்களிடையே பலத்த கரவொலி எழுந்தது. 

கரவொலி அடங்கியதும், ஒரு மாணவன் எழுந்து, "சார்! ஒரு கேள்வி. உங்கப்பா உங்களுக்குச் சொன்ன அறிவுரைகளைப் பத்தி சொன்னீங்க. உங்க அப்பா இதையெல்லாம் அவர் வாழ்க்கையில எந்த அளவுக்குப் பயன்படுத்தினார்னு சொல்ல முடியுமா?" என்றான்.

ஆறுமுகம் அந்த மாணவனை சற்று நேரம் உற்றுப் பார்த்து விட்டு, "தம்பி! உங்க புத்திசாலித்தனமான கேள்வியைப் பாராட்டறேன். உங்க கேள்விக்கு பதில், இந்த அறிவுரைகளை என் அப்பா அவரோட வாழ்க்கையில பயன்படுத்தல!" என்றார்.

ஒரு நிமிடம் அரங்கில் மௌனம் நிலவியது. 

ஆறுமுகம் தொடர்ந்து பேசினார்.

"எனக்கு அறிவுரை சொன்ன என் அப்பா, தன் வாழ்க்கையில இதை ஏன் பயன்படுத்தலைங்கற சந்தேகம் உங்க எல்லாருக்கும் வரும். இந்த அறிவுரைகள் என் அப்பா சொன்னவை இல்லை. என் அப்பா முகமே எனக்கு நினைவில்ல. நான் குழந்தையா இருந்தப்பவே, அவர் இறந்து போயிட்டாரு.

"இங்கே என்னைப் பேசக் கூப்பிட்டப்ப, முதல்ல எனக்கு என்ன பேசறதுன்னு தெரியல. என் உதவியாளர்கிட்ட சொல்லி ஒரு பேச்சை எழுதிக் கொடுக்கச் சொல்லி, அதைப் பேசிடலாமான்னு நினைச்சேன். என் தொழில் சம்பந்தப்பட்ட கூட்டங்கள்ள அப்படித்தான் செய்வேன். அப்புறம், வாழ்க்கையில நான் கத்துக்கிட்ட ஒண்ணு ரெண்டு விஷயங்களை எளிமையா சொன்னா, உங்களுக்குப் பயனுள்ளதா இருக்குமேன்னு நினைச்சேன். அதையெல்லாம் என்னோட அறிவுரை மாதிரி சொன்னா, வகுப்பில பாடம் எடுக்கற மாதிரி இருக்கும், அதனால, என் அப்பா எனக்குச் சொன்ன மாதிரி ஒரு கதை மாதிரி சொன்னேன். இந்த உண்மையை இப்ப சொல்றதில தப்பு இல்லேன்னு நினைக்கிறேன். ஏன்னா, நான் சொன்ன விஷயம் உங்க மனசில நல்லாப் பதிஞ்சுடுச்சுங்கறதை என் பேச்சை நீங்க ஆர்வமாக் கேட்டதிலேந்து புரிஞ்சுக்கிட்டேன்.நன்றி!"

இப்போது எழுந்த கரவொலி, முன்பு எழுந்ததை விடப் பல மடங்கு அதிகமாக இருந்தது.

பொருட்பால்
அரசியல் இயல்
அதிகாரம் 60
ஊக்கமுடைமை

குறள் 595:
வெள்ளத் தனைய மலர்நீட்டம் மாந்தர்தம்
உள்ளத் தனையது உயர்வு.

பொருள்:
நீர்ப்பூக்களின் உயரம் (அவை மலர்ந்துள்ள குளத்தின்) நீர்மட்டத்தின் அளவே. இருக்கும். அது போல், மக்களின் உயர்வும் அவர்களின் மன ஊக்கத்தின் அளவே.

Read 'Father's Advice' the English version of this story by the same author.

               அறத்துப்பால்                                                            காமத்துப்பால்

Thursday, June 2, 2022

594. ஆர்டர் கிடைக்குமா?

"நீங்களும் ரெண்டு வருஷமா முயற்சி செஞ்சுக்கிட்டிருக்கீங்க. உங்க தயாரிப்பை யாரும் வாங்க மாட்டேங்கறாங்க. பேசாம இந்தத் தொழிலுக்கு முழுக்குப் போட்டுட்டு, ஏதாவது வேலை தேடிக்கங்க. சம்பளம் குறைச்சலா இருந்தாலும், ஒரு நிலையான வருமானமாவது வரும்!" என்றாள் மீனாட்சி, சலிப்புடன்.

"முயற்சி செஞ்சவங்கள்ளாம் கொஞ்ச நாளிலேயே மனம் தளர்ந்து தங்க முயற்சியைக் கைவிட்டிருந்தா, இந்த உலகத்தில இவ்வளவு முன்னேற்றங்கள் ஏற்பட்டிருக்குமா?" என்றான் ராம்குமார்.

"தத்துவம் சோறு போடாதுங்க!"

ரு நிறுவனத்திலிருந்து தன் தயாரிப்புக்கு ஆர்டர் கிடைக்க வாய்ப்பு இருப்பதாக அறிந்து, அங்கே சென்றான் ராம்குமார். 

அந்த நிறுவனத்தின் பொது மேலாளரிடம் தன் தயாரிப்பைப் பற்றி ராம்குமார் விளக்கிய பிறகு, மற்ற பலரும் சொன்னது போல் அவரும், "யோசிச்சு சொல்றேன்!" என்று சொல்லி அவனுக்கு விடை கொடுத்தார்.

நம்பிக்கையுடன் வந்திருந்த ராம்குமார், ஏமாற்றத்துடன் அங்கிருந்து கிளம்ப யத்தனித்தான். 

அப்போது பொது மேலாளரிடம் ஏதோ கேட்பதற்காக, அவர் அறைக்குள் வந்த அந்த நிறுவனத்தின் உரிமையாளர் சிகாமணி, ராம்குமாரைப் பார்த்து விட்டு, பொது மேலாளரிடம், "'யார் இவரு?" என்று சாதாரணமாக விசாரித்தார்.

"அவரோட ப்ராடக்ட் பற்றி விளக்கறதுக்காக வந்தாரு. யோசிச்சு சொல்றதா சொல்லிக்கிட்டிருந்தேன்" என்றார் பொது மேலாளர்.

ராம்குமாரை உற்றுப் பார்த்த சிகாமணி, அவன் முகத்தில் இருந்த ஏமாற்றத்தை கவனித்து விட்டு, "உள்ளே வாங்க. உங்க ப்ராடக்ட் பத்தி நானும் தெரிஞ்சுக்கறேன்!" என்று சொல்லி, ராம்குமாரைத் தன் அறைக்கு அழைத்துச் சென்றார்.

சிகாமணி ராம்குமாருடன் தன் அறைக்குள் சென்றதும், பொது மேலாளர், அருகிலிருந்த தன் உதவியாளரிடம், "சாருக்கு ரொம்ப இரக்க குணம். இந்த ராம்குமார் மேல இரக்கப்பட்டு ஒரு சின்ன ஆர்டர் கொடுப்பாரு. அவரோட ப்ராடக்ட் எப்படி இருக்குமோ தெரியாது. அதனாலதான், நான் யாரையுமே சாரைப் பாக்க விடாம, நானே பேசி அனுப்பிடுவேன்!" என்றார்.

ராம்குமார் தன் நிறுவனம் பற்றியும், தன் தயாரிப்பு பற்றியும், அதன் சிறப்புகளைப் பற்றியும் கூறியதைப் பொறுமையாகக் கேட்டுக் கொண்ட சிகாமணி, "மிஸ்டர் ராம்குமார்! உங்களுக்கு நான் ஆர்டர் கொடுக்கலாம். ஆனா, அது உங்களுக்குப் பெரிசா உதவாதுன்னு நினைக்கிறேன்" என்றார்.

ராம்குமார் சற்று ஏமாற்றத்துடன், "சின்ன ஆர்டரா இருந்தாலும் பரவாயில்ல சார்!" என்றான்.

"சின்ன ஆர்டர்தான் கொடுக்கப் போறேன். ஆனா, உங்க தயாரிப்புக்கு நல்ல மார்க்கெட் இருக்குன்னு நினைக்கிறேன். அதனால, உங்க ப்ராடக்டைப் பயன்படுத்திப் பாத்துட்டு, அது நல்லா இருந்தா, நானே அதை டிஸ்டிரிப்யூட் பண்றேன். எனக்குப் பெரிய மார்க்கெடிங் நெட்வொர்க் இருக்கு. அதனால உங்க விற்பனை பலமடங்கு அதிகரிக்கும். உங்க உற்பத்தியையும் நீங்க அதிகரிக்க வேண்டி இருக்கும். அதுக்கு நீங்க தயாரா?" என்றார் சிகாமணி.

"நிச்சயமா சார்! ஒரு ஆர்டரை எதிர்பார்த்துதான் நான் வந்தேன், இவ்வளவு பெரிய வாய்ப்பு கிடைக்கும்னு எதிர்பாக்கல!" என்றான் ராம்குமார், பொங்கி வந்த மகிழ்ச்சியுடன்.

பொருட்பால்
அரசியல் இயல்
அதிகாரம் 60
ஊக்கமுடைமை

குறள் 594:
ஆக்கம் அதர்வினாய்ச் செல்லும் அசைவிலா
ஊக்க முடையா னுழை.

பொருள்:
தளர்வு இல்லாத ஊக்கம் உடையவனிடத்தில், ஆக்கம் (செல்வம்), தானே அவன் உள்ள இடத்திற்கு வழி கேட்டுக் கொண்டு போய்ச் சேரும்.

Read 'When Expectations Were Exceeded' the English version of this story by the same author.

               அறத்துப்பால்                                                            காமத்துப்பால்

Wednesday, June 1, 2022

788. விட்டுப் போன கையெழுத்து!

"கங்கிராட்ஸ்! இந்தத் தொகுதியில போட்டி போட உனக்கு டிக்கட் கிடைச்சிருக்கறது பெரிய விஷயம். இந்தத் தொகுதியில உங்க கட்சிக்கு நல்ல வாய்ப்பு இருக்கறதால, இந்தத் தொகுதியில தன்னோட மகனுக்கு சீட் வாங்கிக் கொடுக்க மாநிலத் தலைவர் ரொம்ப முயற்சி பண்ணினாரு. அதையும் மீறி, மேலிடத்தில உனக்கு சீட் கொடுத்திருக்காங்க!" என்றான் அருணன்.

"எனக்கே ஆச்சரியமாத்தான் இருக்கு! நான் முயற்சி செஞ்சதே மாநிலத் தலைவருக்குப் பிடிக்கல. தன் மகனுக்கு டிக்கட் கொடுத்துடுவாங்கன்னு அவர் ரொம்ப நம்பிக்கையா இருந்தாரு. இப்ப, என் மேல ரொம்ப ஆத்திரமா இருப்பாருன்னு நினைக்கிறேன்!" என்றான் சந்திரன்.

"ஜாக்கிரதையா இருந்துக்க. எதையாவது செஞ்சு, உன் காலை வாரிடப் போறாரு!"

"அப்படியெல்லாம் நடக்காது  என்னைத் தோற்கடிக்க அவர் ஏதாவது செஞ்சா, நிச்சயமா ஜெயிக்க வேண்டியல தொகுதியில கட்சி தோற்றதுக்கு அவரைத்தான் குற்றம் சொல்லுவாங்க. அவர் பதவிக்கே ஆபத்து வந்துடும். அதனால, என்னோட வெற்றிக்கு உழைக்கறதைத் தவிர, அவருக்கு வேற வழி இல்லை!" என்றான் சந்திரன்.

"என் நண்பனான நீ அரசியலில் இருக்கேங்கறதைத் தவிர, எனக்கும் அரசியலுக்கும் எந்தத் தொடர்பும் கிடையாது. ஆனா, அரசியல்வாதிங்ககிட்ட ரொம்ப எச்சரிக்கையா இருக்கணும்னு மட்டும் எனக்குத் தெரியும்!" என்றான் அருணன்.

"அடப்பாவி! அப்படின்னா, எங்கிட்ட நீ எப்பவுமே எச்சரிக்கையாத்தான் நடந்துக்கிட்டிருக்கியா?"

ந்திரன் வேட்புமனு தாக்கல் செய்யப் போனபோது, அருணனும் அவனுடன் சென்றான்.

"வேட்புமனுவில எல்லா விவரங்களையும் சரியாப் பூர்த்தி பண்ணி, தேவையான டாகுமென்ட்களையெல்லாம் கொடுத்திருக்கியா? ஏதாவது சின்னத் தவறு இருந்தா கூட, வேட்புமனுவை நிராகரிச்சுடுவாங்க" என்றான் அருணன்.

"அரசியல்ல ஆர்வம் இல்லேன்னு சொல்லிக்கிட்டு, ஏதோ பல தேர்தல்கள்ள வேட்புமனு தாக்கின அனுபவம் உள்ளவன் மாதிரி பேசறே! கவலைப்படாதே! இதுக்குன்னு சில நிபுணர்கள் கட்சியில இருக்காங்க. அவங்க எல்லாத்தையும் சரிபார்த்துட்டாங்க" என்றான் சந்திரன்.

"குட்!" என்றான் அருணன், "ஆமாம், உன் கட்சியோட மாநிலத் தலைவரும் வந்திருக்காரு போலருக்கே. அவர் பக்கத்தில ஒத்தரு வேட்புமனுவோட நிக்கறாரே, அவர் யாரு?" என்றான்.

"அவர் டம்மி காண்டிடேட்."

"அப்படின்னா?"

"ஏண்டா, அரசியல்ல ஆர்வம் இல்லேங்கறதுக்காக, இப்படி ஒரு டம்மியா இருக்கணுமா? எல்லா அரசியல் கட்சிகளுமே, தங்களோட அதிகாரபூர்வ வேட்பாளரைத் தவிர, ஒரு மாற்று வேட்பாளரையும் மனுத் தாக்கல் செய்ய வைப்பாங்க. ஏதாவது ஒரு காரணத்துக்காக வேட்பாளரோட மனு ரிஜக்ட் ஆயிடுச்சுன்னா, மாற்று வேட்பாளர் கட்சியோட வேட்பாளரா ஆயிடுவாரு. அநேகமா, அது மாதிரி நடக்காது. அதனாலதான் அவரை டம்மி வேட்பாளர்னு சொல்லுவாங்க!" என்று விளக்கினான் சந்திரன்.

"ஓ!" என்ற அருணன், "உன் வேட்புமனுக் காகிதங்களை எங்கிட்ட கொடு. நீ ஏன் அதை சுமந்துக்கிட்டு நிக்கற? ஆஃபீசர் இன்னும் வரல. அவர் வந்தப்புறம், எங்கிட்டேந்து வாங்கி, அவர்கிட்ட கொடு. அப்பதான் கெத்தா இருக்கும்!" என்றான்.

"எப்படி ஐயா நடந்தது இது? சந்திரனோட வேட்புமனு ரிஜக்ட் ஆகி, டம்மி வேட்பாளரா இருக்கிற என்னோட ஆளு வேட்பாளரா ஆகணுங்கறதுக்காகத்தானே, அவன் வேட்புமனுவில ஒரு இடத்தில கையெழுத்து வாங்காம வைக்கச் சொன்னேன்? ஆனா, அவனோட வேட்புமனுவை ஏத்துக்கிட்டாங்களே! வேட்புமனு பரிசீலனையின்போது அங்கே இருந்த நம்ம ஆளு, எல்லா இடத்திலேயும் கையெழுத்து இருக்குன்னு சொல்றானே!" என்றார் மாநிலத் தலைவர், கோபத்துடன்.

"இல்லீங்க. ஒரு இடத்தில கையெழுத்து வாங்காமதான் விட்டிருந்தேன். சந்திரன் வேட்புமனுவைக் கையில எடுத்துக்கிட்டுப் போனப்ப, அதில ஒரு கையெழுத்து இல்லாமதான் இருந்தது. அவர் எப்ப அந்த இடத்தில கையெழுத்துப் போட்டார்னே தெரியல. அங்கே கையெழுத்து விட்டுப் போனதே அவருக்குத் தெரிஞ்சிருக்காது" என்ற அந்தக் கட்சியின் வேட்புமனு நிபுணர், சற்று யோசித்து விட்டு, "ஆனா அவரோட நின்னுக்கிட்டிருந்த ஒரு ஆளு - அவர் நம்ம கட்சி ஆளு இல்ல, சந்திரனோட நண்பாரா இருப்பார்னு நினைக்கிறேன் - சந்தரன்கிட்டேந்து வேட்புமனுக் காகிதங்களை வாங்கி, அதைப் புரட்டிப் பாத்துக்கிட்டிருந்தாரு!" என்றார், தயக்கத்துடன்.

"அவர் என்ன செஞ்சிருக்கப் போறாரு? சரி, இனிமே என்ன செய்ய முடியும்? என் திட்டமெல்லாம் பாழாப் போயிடுச்சு!" என்றார் மாநிலத் தலைவர், கோபத்துடனும், இயலாமையுடனும்.

"கங்கிராட்ஸ்! உன் வேட்புமனுவை ஏத்துக்கிட்டாங்க. அடுத்த நிலைக்குப் போயிட்ட!" என்றான் அருணன்.

"ஆமாம், அன்னிக்கே கேக்கணும்னு நினைச்சேன். வேட்புமனு தாக்கல் செய்யறப்ப, எங்கிட்டேந்து வேட்புமனுவை வாங்கிக்கிட்டு எங்கேயோ வெளியில போனியே, எதுக்கு?" என்றான் சந்திரன்.

"ரெஸ்ட் ரூமுக்குப் போனேன்!"

"அதுக்கு ஏன் வேட்புமனுவைக் கையில எடுத்துக்கிட்டுப் போகணும்? எங்கிட்ட கொடுத்துட்டுப் போயிருக்கலாமே!"

சற்று நேரம் மௌனமாக இருந்த அருணன், "உன் வேட்புமனுவை நிராகரிக்க ஒரு சதி நடந்திருக்கு. ஆனா, அது உனக்குத் தெரியல, கொஞ்சம் ஏமாந்திருந்தா, உன் மனு நிராகரிக்கப்பட்டு, டம்மி வேட்பாளர் நிஜ வேட்பாளரா ஆகி இருப்பாரு! டம்மி வேட்பாளர் உன் கட்சியோட மாநிலத் தலைவரோட ஆளா இருப்பார்னு நினைக்கிறேன். மாநிலத் தலைவர்தான் இந்த சதியைப் பண்ணி இருக்கணும்!" என்றான்.

"எனக்கு எதுவுமே புரியலியே!"

"நீ மாற்று வேட்பாளரைப் பத்தி சொன்னதும் எனக்கு ஒரு சந்தேகம் வந்தது. மாற்று வேட்பாளருக்குப் பக்கத்தில மாநிலத் தலைவர் நினனுக்கிட்டிருந்ததால, அவர் அவரோட ஆளா இருப்பார்னு நினைச்சேன். வெளியில போய், வேட்பு மனுத் தாள்களை ஒவ்வொண்ணாப் பாத்தேன். அதில ஒரு இடத்தில வேட்பாளரின் கையொப்பம்னு இருந்தது. ஆனா, அங்கே உன் கையெழுத்து இல்லை. அங்கே கையெழுத்துப் போடணும்னு காட்டறதுக்காக, முதல்ல யாரோ  பென்சிலால X -ன்னு மார்க் பண்ணிட்டு, அப்புறம் அதை அழிச்சிருக்காங்க. அதனால, வேணும்னுதான் இப்படிப் பண்ணி இருக்காங்கன்னு தெரிஞ்சது. எனக்கு என்ன செய்யறதுன்னு தெரியல. உங்கிட்ட சொல்லிக் கையெழுத்துப் போடச் சொல்லாலாம்னா, அது எல்லாருக்கும் தெரிஞ்சுடும். அது தேவையில்லைன்னு சொல்லி உன்னைக் குழப்பினாலும் குழப்புவாங்க. அதோட, ரிடர்னிங் ஆஃபீசர் வந்துட்டார்னா, வேட்புமனுவை சீக்கிரம் தாக்கல் செய்யணும்னு அவசரப்படுத்தி, அந்தக் குறைபாட்டோடயே உன்னை வேட்புமனு தாக்கல் செய்ய வச்சுடுவாங்க. அதனால..." 

"அதனால?"

"மற்ற இடங்கள்ள இருந்த உன் கையெழுத்தைப் பாத்து, விட்டுப் போன இடத்தில உன் கையெழுத்தை நானே போட்டுட்டேன்!"

"அடப்பாவி! ஃபோர்ஜரி பண்ணி இருக்கியே! உண்மை தெரிஞ்சா, நீ ஜெயிலுக்குப் போயிருப்பியே!"

"இது உன் கையெழுத்து இல்லேன்னு நீ சொன்னா, அப்பதான் அது ஃபோர்ஜரி ஆகும்! வேட்புமனு பரிசீலனையின்போது அங்கே இருந்த மாநிலத் தலைவரோட ஆட்கள் யாருக்கும் தலைவர் செஞ்ச காரியம் தெரிஞ்சிருக்காது. அதை அவர ரகசியமாத்தானே வச்சுக்கிட்டிருந்திருப்பாரு? அப்படியே தெரிஞ்சிருந்தாலும், 'இது எங்க கட்சி வேட்பாளரோட கையெழுத்து இல்ல, அதனால, அந்த வேட்புமனுவை நிராகரிக்கணும்'னு அவங்க எப்படி சொல்லுவாங்க? அதனால திருடனுக்குத் தேள் கொட்டின மாதிரி பேசாம இருந்திருப்பாங்க. அப்படியே சொன்னாலும், அது என் கையெழுத்து இல்லேன்னு சொல்லி, உன் வேட்புமனு நிராகரிக்கப்பட நீயே காரணமா இருந்திருக்க மாட்டேன்னு நினைக்கிறேன்!" என்றான் அருணன், சிரித்தபடி.

"நீ செஞ்சது பெரிய உதவி. ஆனா, எவ்வளவு ரிஸ்க் எடுத்திருக்கே!" என்று தன் நண்பனின் கைகளைப் பற்றிக் கொண்டு கூறிய சந்திரன், "ஆனா எனக்கு இப்பவும் ஒரு விஷயம் புரியல!" என்றான்.

"என்ன புரியல?"

"நீ ரொம்ப நேர்மையானவன். ஒரு சின்னத் தப்புக் கூடப் பண்ண மாட்டே. ஆனா, நீ எப்படி இதை செஞ்சே?"

"தெரியல, சந்திரா! உனக்கு ஒரு தீங்கு நடக்கப் போகுதுன்னு தெரிஞ்சது. அதை எப்படியாவது தடுக்கணும்னு நினைச்சேன். இந்த ஒரு வழிதான் இருந்ததாத் தோணிச்சு. அதனால அதை செஞ்சேன். வேற எதைப் பத்தியும் நான் யோசிக்கலேன்னு நினைக்கிறேன்!" என்றான் அருணன்.

பொருட்பால்
நட்பியல்
அதிகாரம் 79
நட்பு 

குறள் 788:
உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே
இடுக்கண் களைவதாம் நட்பு.

பொருள்: 
அணிந்திருக்கும் உடை உடலை விட்டு நழுவும்போது, கைகள் உடனடியாகச் செயல்பட்டு அதனைச் சரிசெய்வது போல், நண்பனுக்குத் துன்பம் வரும்போது, அப்போதே சென்று துன்பத்தைக் களைவது நட்பு.
       அறத்துப்பால்                                                                       காமத்துப்பால்

787. இரவினில் ஆட்டம், பகலினில் தூக்கம்!

தன் அறைத்தோழன் பாஸ்கர் இரண்டு நாட்களாக அறைக்கு இரவில் மிகவும் தாமதமாக வருவதை கிரி கவனித்தான். 

இரவில் தாமதமாக வந்ததால், காலையில் தாமதமாக எழுந்து, உணவு விடுதிக்குப் போய்க் காலை உணவு அருந்தக் கூட நேரமில்லாமல் அவசர அவசரமாக வகுப்புக்குச் சென்றான் பாஸ்கர். 

அவர்கள் கல்லூரியில், வகுப்புக்கு வராததைக் கடும் குற்றமாகக் கருதி தண்டனை அளிப்பதுடன், பெற்றோர்களை அழைத்து எச்சரிக்கை செய்யும் நடைமுறை உண்டு என்பதால், வகுப்பைத் தவற விட மாணவர்கள் அஞ்சுவார்கள்.

அன்று மாலை வகுப்புகள் முடிந்து விடுதி அறைக்கு வந்ததும், "ரெண்டு நாளா ராத்திரி லேட்டா வந்தியே, என்ன விஷயம்?" என்று பாஸ்கரிடம் கேட்டான் கிரி.

பாஸ்கர் சற்றுத் தயங்கி விட்டு, "ராஜேஷ் ரூமுக்குப் போயிருந்தேன்" என்றான்.

"அவ்வளவு நேரம் அங்கே என்ன செய்யற?"

"அங்கே நாலஞ்சு பேர் வருவாங்க. சும்மா பேசிக்கிட்டிருப்போம். பேசிக்கிட்டே இருந்ததில, நேரம் போறதே தெரியல. அதனால லேட் ஆயிடுச்சு!" என்றான் பாஸ்கர்.

பாஸ்கர் எதையோ மறைக்கிறான் என்று கிரிக்குத் தோன்றியது. 

"ராத்திரி லேட்டா வரதனால, காலையில லேட்டா எழுந்து, பிரேக்ஃபாஸ்ட் சாப்பிடக் கூட நேரமில்லாம போயிடுச்சு பாரு!" என்றான் கிரி.

"இனிமேல் சீக்கிரம் வந்துடறேன்!" என்று பாஸ்கர் கூறியபோது, அவன் ராஜேஷின் அறைக்குத் தொடர்ந்து போகப் போகிறான் என்று கிரிக்குப் புரிந்தது. 'அரட்டை அடிப்பதற்காக அங்கே தினமும் போக வேண்டுமா என்ன?' என்று நினைத்துக் கொண்டான் கிரி.

ஓரிரு நாட்களில், வேறு சில நண்பர்கள் மூலம் கிரிக்கு ஒரு உண்மை தெரிந்தது. ராஜேஷின் அறையில், சில மாணவர்கள் தினமும் பணம் வைத்துச் சீட்டாடுவதாகவும், யாருக்கும் தெரியக் கூடாது என்பதற்காக, அறையை உள்ளே தாளிட்டுக் கொள்வதாகவும் சிலர் பேசிக் கொண்டனர்.

பாஸ்கரிடம் கிரி இதைப் பற்றிக் கேட்டபோது, பாஸ்கர் அதை ஒப்புக் கொண்டான். "யார்கிட்டேயும் சொல்லிடாதே!" என்றான்.

"பாஸ்கர்! இது ஒரு கெட்ட பழக்கம், அதோட, சட்ட விரோதம். வார்டனுக்குத் தெரிஞ்சா, ஹாஸ்டலை விட்டு மட்டுமல்ல, காலேஜை விட்டே அனுப்பிடுவாங்க!" என்றான் கிரி.

"அதெல்லாம் நடக்காது. எத்தனையோ ரூம்ல இது மாதிரி நடக்குது. யாராவது கதவைத் தட்டினாலே, சீட்டுகளையெல்லாம் கலைச்சு உள்ள வச்சுட்டுத்தான் கதவைத் திறப்போம். அதோட, காசு வச்சு ஆடினோம்னு நிரூபிக்க முடியாது" என்றான் பாஸ்கர்.

"சரி. இதை எதுக்கு நீ விளையாடணும்?"

"சும்மா ஒரு திரில்லுக்குத்தான்!" என்றான் பாஸ்கர்.

நாளாக ஆக, சீட்டாட்டத்தில் பாஸ்கரின் ஈடுபாடு அதிகமாகிக் கொண்டிருந்தது. இரவு நெடுநேரம் கண்விழித்ததால், மாலை வேளைகளில் தூங்கினான். பாடப் புத்தகங்களைப் படிக்கவே அவனுக்கு நேரம் கிடைக்கவில்லை.

அவ்வப்போது வைக்கப்படும் வகுப்புத் தேர்வுகளில், பாஸ்கரின் மதிப்பெண்கள் குறைந்தன. 

"எப்பவும் நீ அதிக மார்க் வாங்கறவன், இப்ப ஃபெயில் மார்க் வாங்கிக்கிட்டிருக்கே. இந்த சீட்டாட்டத்தை விட்டுடு. பழையபடி ஒழுங்கா இரு!" என்றான் கிரி.

"இதெல்லாம் கிளாஸ் டெஸ்ட்தானே! ஆனுவல் எக்ஸாமுக்கு நல்லாப் படிச்சு, நல்ல மார்க் வாங்கிடுவேன்!" என்றார் பாஸ்கர்.

ஆனால் ஆண்டுத் தேர்விலும், மூன்று பாடங்களில் ஃபெயில் ஆகி விட்டான் பாஸ்கர்.

தோல்வியுற்ற பாடத் தேர்வுகளை செப்டம்பரில் மீண்டும் எழுதுவதற்காக, இரவில் கண் விழித்துப் படித்துக் கொண்டிருந்தான் பாஸ்கர், கிரி அவனுடன் இருந்து அவனுக்கு உதவிக் கொண்டிருந்தான்.

"நான்தான் சீட்டாட்ட வெறியில புத்தி கெட்டுப் போய், சரியாப் படிக்காம ஃபெயில் ஆயிட்டு, செப்டம்பர் பரீட்சைக்குத் தயார் பண்ணிக்கிட்டிருக்கேன். நீ எதுக்குக் கண் முழிச்சுக்கிட்டு என்னோட உக்காந்திருக்க? உனக்கென்ன தலையெழுத்தா?" என்றான் பாஸ்கர், கிரியிடம்.

"என்னால முடிஞ்ச அளவுக்கு உனக்கு உதவி செய்யத்தான்!" என்றான் கிரி.

பொருட்பால்
நட்பியல்
அதிகாரம் 79
நட்பு 

குறள் 787:
அழிவி னவைநீக்கி ஆறுய்த்து அழிவின்கண்
அல்லல் உழப்பதாம் நட்பு.

பொருள்: 
அழிவு தரும் வழிகளில் நண்பன் சென்றால் தடுத்து, நல்ல வழியில் அவனைச் செலுத்தி, அவனுக்குக் கேடு வரும் என்றால், அதை அவனுடன் பகிர்வது நட்பு.
               அறத்துப்பால்                                                            காமத்துப்பால்

Tuesday, May 31, 2022

593. வீழ்ச்சிக்குப் பின்...

என் கல்லூரி நண்பன் செல்வத்தைப் பல வருடங்கள் கழித்துத் தற்செயலாகச் சந்தித்தேன்.

கல்லூரிப் படிப்பை முடித்ததும் எங்களில் பெரும்பாலோர் ஏதாவது ஒரு வேலை கிடைக்காதா என்று முனைந்து, ஏதோ ஒரு வேலையைத் தேடிக் கொண்டோம். 

ஆனால் செல்வம் மட்டும் சொந்தத் தொழில் துவங்கப் போவதாகச் சொல்லி, வேலைக்கே முயற்சி செய்யவில்லை.

"அவன் ஒரு ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்தவன். அவனைக் கல்லூரியில படிக்க வைக்கறதுக்கே, அவங்க அப்பா அம்மா ரொம்ப கஷ்டப்பட்டிருப்பாங்க. படிப்பை முடிச்சதும் ஏதோ ஒரு வேலைக்குப் போனா, அவங்க பெற்றோருக்கு உதவியா இருக்கும். அதை விட்டுட்டு சொந்தத் தொழில் ஆரம்பிக்கப் போறேன்னு இறங்கி இருக்கான். கையில கால் காசு இல்லாம எப்படித் தொழில் ஆரம்பிக்கப் போறான்னு புரியல!" என்று என் நண்பர்கள் சிலர் அப்போது விமரிசனம் செய்தார்கள்.

ஆனால் செல்வம் எப்படியோ சிறிய அளவில் ஒரு தொழிலைத் துவங்கி, நாளடைவில் பெரிய வளர்ச்சியும் பெற்று விட்டான்.

நான் கொல்கத்தாவில் வேலை செய்து வந்ததால், சென்னையில் தொழில் செய்து வந்த செல்வத்துடன் எனக்குத் தொடர்பு இல்லை. அவனைப் பற்றிய செய்தியெல்லாம் என் பிற நண்பர்கள் மூலம் கேட்டறிந்ததுதான்.

"முதல்ல எல்லாரும் அவனோட சொந்தத் தொழில் முயற்சி முட்டாள்தனமானதுன்னுதான் நினைச்சோம். ஆனா அவன் ஒரு தொழிலை ஆரம்பச்சதோட இல்லாம, அதை இந்த அளவுக்குப் பெரிசாக் கொண்டு வந்தது பிரமிப்பாத்தான் இருக்கு!" என்று சில நண்பர்கள் வியந்தனர்.

"நினைச்சதை முடிக்கணுங்கற அவனோட உறுதி, கடுமையான உழைப்பு, தடைகளை உடைச்சுக்கிட்டு மேல போறது இதெல்லாம்தான் அவன் வெற்றிக்குக் காரணம்!" என்று பலரும் கூறினர்.

நான் செல்வத்தின் வீட்டுக்குச் சென்றபோது, அவன் என்னை மிகவும் உற்சாகமாக வரவேற்றான். கல்லூரி நாட்கள் பற்றிப் பல விஷயங்களை நினைவு கூர்ந்து மகிழ்ச்சியுடன் பேசினான். கேலி, உற்சாகம், உல்லாசம் எல்லாம் கலந்து எங்கள் உரையாடல் இரண்டு கல்லூரி மாணவர்கள் பேசிக் கொள்வது போலவே இருந்தது.

செல்வத்தைச் சந்தித்து ஓரிரு நாட்களுக்குப் பிறகு, என் மற்றொரு நண்பன் சுந்தரைச் சந்தித்தேன். செல்வத்தைச் சந்தித்துப் பேசியதைப் பற்றி அவனிடம் கூறினேன்.

"அவன் அதே வீட்டிலேயா இருந்தான்? வீடு மாறி இருப்பானே?" என்றான் சுந்தர்.

"ஆமாம். ஆனா, வீடு மாறப் போறதா சொன்னான். சில பொருட்களை பேக் பண்ணி வச்சிருந்தான். அவன் குழந்தைகள் பாட்டி வீட்டுக்குப் போயிருந்தாங்க. ஃபர்னிச்சர் எதையும் காணோம். அதெல்லாம் முன்னாடியே புது வீட்டுக்குப் போயிடுச்சு போலருக்கு" என்றேன் நான்.

"அதையெல்லாம் வித்தாச்சு!"

"வித்தாச்சா, ஏன்?" என்றேன் நான், புரியாமல்.

"உங்கிட்ட அவன் விஷயத்தைச் சொல்லல போலருக்கு. அவனுக்கு பிசினஸ்ல பெரிய அடி. வீடு ஏலத்துக்கு வரப் போகுது. நகைகள், ஃபர்னிச்சர், இன்னும் மதிப்புள்ள பொருட்களையெல்லாம் வித்துட்டான். சின்னதா ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்திருக்கான். அங்கே குடி போகப் போறான். அதனாலதான், தற்போதைக்குக் குழந்தைகளை மாமனார் வீட்டுக்கு அனுப்பி இருக்கான் போல இருக்கு!" என்றான் சுந்தர்.

"அடப்பாவமே! எங்கிட்ட எதையுமே சொல்லியே? அவ்வளவு உற்சாகமாப் பேசிக்கிட்டிருந்தான்! அவன் மனைவிதான் கொஞ்சம் டல்லா இருக்கற மாதிரி இருந்தது. உடம்பு சரியில்லையோன்னு நினைச்சேன்."

"பல வருஷங்கள் கழிச்சு உன்னைப் பாக்கறதால, தன்னோட நிலைமை பத்தி இப்ப உங்கிட்ட சொல்ல வேண்டாம்னு நினைச்சிருப்பான். ஆனா, சீக்கிரமே வேற ஒரு தொழில் ஆரம்பிச்சுடுவேன்னு எங்கிட்ட சொன்னான். அவன் குரல்ல இருந்த உறுதியையும், அவனோட கடந்த கால செயல்பாடுகளையும் பாக்கறப்ப, அவன் மறுபடியும் ஒரு உயர்ந்த நிலைக்கு சீக்கிரமே வந்துடுவான்னு நினைக்கிறேன். எனக்கு அதில சந்தேகம் இல்லை!" என்றான் சுந்தர், உறுதியான குரலில்.  

பொருட்பால்
அரசியல் இயல்
அதிகாரம் 60
ஊக்கமுடைமை

குறள் 593:
ஆக்கம் இழந்தேமென்று அல்லாவார் ஊக்கம்
ஒருவந்தம் கைத்துடை யார்.

பொருள்:
ஊக்கத்தைத் தம் கைவசம் கொண்டவர், செல்வத்தை இழந்தாலும், இழந்து விட்டோமே என்று மனம் கலங்க மாட்டார்.

Read 'Meeting a Friend After A Long Time' the English version of this story by the same author.

               அறத்துப்பால்                                                            காமத்துப்பால்

Sunday, May 29, 2022

592. எப்படி இருந்த நான்...

தாமோதரனை மாலா திருமணம் செய்து கொண்டபோது, அவன் ஒரு சிறிய நிறுவனத்தில் ஒரு விற்பனைப் பிரதிநிதியாகத்தான் பணியாற்றிக் கொண்டிருந்தான். 

சில வருடங்கள் கழித்து, வேலையை விட்டு விட்டு, கமிஷன் அடிப்படையில் சில பொருட்களை வாங்கி விற்க ஆரம்பத்தான். 

வியாபாரம் வெற்றிகரமாக நடக்க ஆரம்பித்ததும், சிறு முதலீட்டில் பொருட்களை வாங்கி விற்க ஆரம்பித்தான்.

தாமோதரனின் படிப்படியான முயற்சிகள் அவனுக்கு வேகமான வளர்ச்சியை அளித்தன. தாமோதரன் இண்டஸ்டிரீஸ் என்ற பெயரில் ஒரு தொழிற்சாலையை நடத்தும் அளவுக்கு அவன் வளர்ச்சி உயர்ந்தது.

"நம்ம நிலைமைக்குத் தகுந்தாப்பல ஒரு சாதாரண இடத்திலதான் உனக்குக் கல்யாணம் செஞ்சு கொடுத்தோம். ஆனா, மாப்பிள்ளை இன்னிக்கு ஒரு தொழிலதிபரா இருக்காரு. உனக்கு நல்ல அதிர்ஷ்டம்தான்!" என்றார் மாலாவின் தந்தை. 

"அவளோட அதிர்ஷ்டம்தான் அவ புருஷனை இந்த அளவுக்கு உயர்த்தி இருக்கு!" என்றாள் அவள் அம்மா.

"அதிர்ஷ்டம்தான் காரணம்னா, அவரோட முயற்சிக்கு மதிப்பு இல்லையா?" என்றாள் மாலா.

"எப்படி புருஷனை விட்டுக் கொடுக்காம பேசறா பாரு! நீ இப்படி என்னிக்காவது எனக்கு ஆதரவாப் பேசி இருக்கியா?" என்று தன் மனைவியைச் சீண்டினார் அவள் அப்பா.

"'எப்படி இருந்த நான் எப்படி ஆயிட்டேன்'னு விவேக் ஒரு படத்தில சொல்லுவாரு. அது மாதிரி ஆயிடுச்சு என் நிலைமை!" என்றான் தாமோதரன்.

"ஏன் அப்படிச் சொல்றீங்க?" என்றாள் மாலா.

"இன்னும் என்ன ஆகணும்? கஷ்டப்பட்டுக் கொஞ்சம் கொஞ்சமா மேலே வந்தேன். இப்ப திடீர்னு ஒரு பெரிய நஷ்டம் வந்து எல்லாம் போயிடுச்சு. தொழிலையே இழுத்து மூட வேண்டிய நிலைமை வந்துடும் போலருக்கு. நம்மகிட்ட இருந்த எல்லாம் போயிடுச்சு."

"எல்லாம் போனா என்னங்க? கல்யாணம் ஆனதிலேந்து உங்ககிட்ட நான் பாக்கிற ரெண்டு விஷயங்கள் அப்படியேதானே இருக்கு?" என்றாள் மாலா.

"அது என்ன ரெண்டு விஷயம்?"

"உற்சாகம், விடாமுயற்சி. இந்த ரெண்டையும் வச்சுதானே நீங்க எல்லாத்தையும் சாதிச்சீங்க? அந்த ரெண்டும் உங்ககிட்ட இருக்கறப்ப நீங்க மறுபடியும் பல விஷயங்களை சாதிக்கலாமே!" என்றாள் மாலா.

"அந்த ரெண்டு விஷயங்கள் எங்கிட்ட இருக்கறதை எனக்கு ஞாபகப்படுத்த நீ இருக்கறப்ப என்னால நிச்சயம் சாதிக்க முடியங்கற நம்பிக்கை எனக்கு இப்ப வந்திருக்கு!" என்றான் தாமோதரன் உற்சாகத்துடன்.

பொருட்பால்
அரசியல் இயல்
அதிகாரம் 60
ஊக்கமுடைமை

குறள் 592:
உள்ளம் உடைமை உடைமை பொருளுடைமை
நில்லாது நீங்கி விடும்.

பொருள்:
ஒருவர்க்கு ஊக்கமுடைமையே நிலையான உடைமையாகும், மற்றப் பொருளுடைமை நிலைத்து நிற்காமல் நீங்கி விடக் கூடியவை.

Read 'After the Fall' the English version of this story by the same author.

               அறத்துப்பால்                                                            காமத்துப்பால்

1080. 'தன்மானத் தலைவரி'ன் திடீர் முடிவு!

தன் அரசியல் வாழ்க்கையின் துவக்கத்தில் இரண்டு மூன்று கட்சிகளில் இருந்து விட்டு, அங்கு தனக்கு உரிய மதிப்புக் கிடைக்கவில்லை என்பதால், 'மக்க...