Monday, June 6, 2022

790. நண்பனே, நண்பனே!

"எனக்கும், என் ஆருயிர் நண்பர் சேதுபதிக்கும் இடையே இருக்கும் நட்பு மிக ஆழமானது. ஒருமுறை நான் கைது செய்யப்பட்டபோது, அவர் எனக்காகக் கடவுளிடம் வேண்டி, ஒருநாள் முழுவதும் உணவு உட்கொள்ளாமல் விரதம் இருந்து, பூஜை அறையில் அமர்ந்திருந்தார். அதுபோல், அவர் உடல்நலம் இல்லாமல் மருத்துவமனையில் இருந்தபோது, நான் பூஜை செய்யவில்லை. ஏனெனில், எனக்குக் கடவுள் நம்பிக்கை இல்லை! ஆனால், ஒருநாள் முழுவதும் காப்பி, டீ கூட அருந்தாமல் மருத்துவமனையில் அமர்ந்திருந்தேன். இதுதான் எங்கள் இருவருக்கிடையே உள்ள நட்பு!"

தலைவர் பேசியதும், கூட்டம் கைதட்டி ஆர்ப்பரித்துக் குதூகலித்தது.

தொலைக்காட்சியில் இதைப் பார்த்துக் கொண்டிருந்த சங்கர், "என்ன இது? நட்புங்கறது ரொம்ப பர்சனாலான விஷயம். அதை இப்படியா கொச்சைப்படுத்தறது?" என்றான், தன் மனைவி வசந்தியிடம்.

"அவர் உங்களுக்குப் பிடிச்ச தலைவராச்சே! அவர் பேச்சையே தப்புன்னு சொல்றீங்க!" என்றாள் வசந்தி.

"அதுக்காக, அவர் சொல்ற எல்லாத்தையும் நான் சரின்னு ஒத்துக்க முடியாது."

"ஏன், ஒத்தர் தன் நண்பர்கிட்ட தனக்கு எவ்வளவு அன்பு இருக்கு, தன்கிட்ட தன் நண்பருக்கு எவ்வளவு அன்பு இருக்குன்னு சொல்லக் கூடாதா?"

"ஒத்தரை தன் நெருங்கிய நண்பர்னு சொன்னா போதாதா? எவ்வளவு நெருக்கம்கறதை விவரமா சொன்னா, அது அந்த நட்போட சிறப்பையே குறைக்கிற மாதிரி எனக்குப் படுது!" 

"இருக்கறதைச் சொன்னா, அது எப்படித் தப்பாகும்?" என்றாள் வசந்தி.

"எங்கிட்ட ஏதாவது நல்ல விஷயம் இருந்தா, அதை இன்னொருத்தர் சொன்னா, அது நல்லா இருக்கும். என்னோட சிறப்பைப் பத்தி நானே சொன்னா, கேக்கறவங்களுக்கு அது அருவருப்பாத்தானே இருக்கும்? அது மாதிரிதான் இதுன்னு நினைக்கிறேன்" என்ற சங்கர், சற்றுத் தயங்கி விட்டு, "கணவன் மனைவி உறவுக்கும் இது பொருந்தும்னு நினைக்கிறேன். தன் கணவன் தனக்காக என்னவெல்லாம் செய்வான்னு ஒரு மனைவியோ, தன் மனைவி தனக்கு என்னவெல்லாம் செய்வான்னு ஒரு கணவனோ சொல்றதைக் கேக்கறப்ப, இவங்களுக்குள்ள உண்மையான அன்பு இல்லையோ, அப்படி இருக்கிற மாதிரி காட்டிக்கத்தான் இப்படியெல்லாம் பேசறாங்களோன்னு எனக்குத் தோணும்!" என்றான்.

"நீங்க சொல்றது சரிதாங்க. எனக்குக் கூட அப்படித் தோணி இருக்கு!" என்றாள் வசந்தி.

ந்தத் திருமண நிகழ்ச்சியில், பலர் ஒன்று கூடி இருந்தனர். சங்கர் தன் நண்பர்கள் சிலருடன் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தான். வசந்தி சற்றுத் தள்ளி அமர்ந்து, வேறு சிலருடன் பேசிக் கொண்டிருந்தாள்.

சங்கரின் நண்பன் மணி, தங்கள் இருவருக்கும் இடையே இருக்கும் நட்பைப் பற்றி மற்றவர்களிடம் சொல்லிக் கொண்டிருந்தான்.

"சங்கரும் நானும் சின்ன வயசிலேந்தே ரொம்ப நெருக்கம். எனக்கு பம்பாயில வேலை கிடைச்சப்ப, சங்கரை விட்டுப் பிரியணுமேங்கறதுக்காக அந்த வேலைக்குப் போக வேண்டாம்னே முதல்ல முடிவு செஞ்சுட்டேன். அப்புறம், என் அப்பா வற்புறுத்திச் சொன்னதாலதான் போனேன். இப்பவும், அவனை அடிக்கடி பாக்க முடியலியேன்னு எனக்கு வருத்தம் உண்டு. வீட்டில அடிக்கடி அவனைப் பத்திப் பேசுவேன். என் மனைவி கூட அலுத்துப்பா. சங்கரும் என்னை மிஸ் பண்ணி இருப்பான்னு நினைக்கிறேன். இல்லையாடா, சங்கர்?" என்றபடியே சங்கரைப் பார்த்தான் மணி.

சங்கர் சிரிக்காமல் இலேசாகத் தலையாட்டினான்.

இந்தப் பேச்சு காதில் விழுந்ததும், வசந்தி புன்னகையுடன் சங்கரைத் திரும்பிப் பார்த்தாள். சங்கரும் அவளைத் திரும்பிப் பார்த்து, இலேசாகப் புன்னகை செய்தான்.

பொருட்பால்
நட்பியல்
அதிகாரம் 79
நட்பு 

குறள் 790:
இனையர் இவரெமக்கு இன்னம்யாம் என்று
புனையினும் புல்லென்னும் நட்பு.

பொருள்: 
இவர் எமக்கு இத்தனை அன்பு உடையவர்; நாமும் இவர்க்கு இப்படியே என்று ஒருவரை ஒருவர் அலங்காரமாகப் பாராட்டிச் சொன்னாலும், நட்பு அற்பமானதாகப் போய் விடும்.
       அறத்துப்பால்                                                                       காமத்துப்பால்

No comments:

Post a Comment

1080. 'தன்மானத் தலைவரி'ன் திடீர் முடிவு!

தன் அரசியல் வாழ்க்கையின் துவக்கத்தில் இரண்டு மூன்று கட்சிகளில் இருந்து விட்டு, அங்கு தனக்கு உரிய மதிப்புக் கிடைக்கவில்லை என்பதால், 'மக்க...