Sunday, June 5, 2022

595. அப்பா சொன்ன அறிவுரை!

அந்தக் கல்லூரியின் ஆண்டு விழாவுக்கான சிறப்பு விருந்தினர் தொழிலதிபர் ஆறுமுகம் பேசத் தொடங்கினார்:

"நான் பள்ளிப் படிப்பையே முடிக்காதவன். படிக்க வசதி இல்லாததால, அஞ்சாவது வகுப்போட என் படிப்பு நின்னு போச்சு. கல்லூரியில படிக்கிற உங்களுக்கு நான் சொல்றதுக்கு என்ன இருக்குன்னு தெரியல. கல்லூரி நிர்வாகம் என்னைக் கூப்பிட்டப்ப அவங்க கூப்பிட்டதுக்கு மரியாதை கொடுக்கணும்னுதான் வந்தேன்.

"என் அப்பா எனக்கு சில விஷயங்களை சொல்லிக் கொடுத்திருக்காரு. அதையெல்லாம் உங்ககிட்ட பகிர்ந்துக்கலாம்னு நினைக்கிறேன். என் அப்பாவும் அதிகம் படிக்காதவர்தான். அதனால அவர் எனக்கு சொல்லிக் கொடுத்த விஷயங்கள் உங்களுக்கு எந்த அளவுக்குப் பயன்படும்னு தெரியல.ஆனா எங்கிட்ட சொல்றதுக்கு வேற விஷயம் இல்லையே!

"எங்க ஊர்ல ஒரு குளம் இருக்கும். அதுல தாமரை, அல்லி இன்னும் சில வகை நீர்ப்பூக்கள் இருக்கும். நீர்ப்பூக்களை நீங்க கவனிச்சீங்கன்னா, பூக்கள் எல்லாம் நீர்மட்டத்தில மிதக்கும். அவற்றோட தண்டு தண்ணிக்குள்ள இருக்கும். சில சமயம் ஒரு சிறு பகுதி வெளியில தெரியும்.

"குளத்தில சில சமயம் தண்ணி அதிகமா இருக்கும், சில சமயம் குறைவா இருக்கும். ஆனா தண்ணி அளவு எப்படி இருந்தாலும், பூ தண்ணிக்கு மேலேயும், தண்டு தண்ணிக்குள்ளேயும் இருக்கும். எனக்கு அது ஆச்சரியமா இருக்கும். குளத்தில அஞ்சு அடி தண்ணி இருந்ததுன்னு வச்சுக்கங்க, அப்ப தண்ணிக்குள்ள இருக்கற தண்டும் கிட்டத்தட்ட அஞ்சு அடிநீளம் இருக்கும் இல்லையா?

"தண்ணி அளவு மூணு அடியாக் குறையுதுன்னு வச்சுப்போம். அஞ்சு அடி நீளம் இருந்த தண்டுல இப்ப மூணு அடிதானே தண்ணிக்குள்ளே இருக்கு, மீதி ரெண்டு அடி தண்ணிக்கு மேலே வெளியே நீட்டிக்கிட்டிருக்கணும் இல்ல? ஏன் அப்படி இல்லேனு எனக்குப் புரியல. இதை என் அப்பாகிட்ட கேட்டேன். அவரு சொன்னாரு. 'தண்ணி மட்டம் எந்த அளவுக்கு இருக்கோ அந்த அளவுக்குத்தான் தண்டோட நீளம் இருக்கும். தண்ணி மட்டம் மேலே போச்சுன்னா தண்டு வளர்ந்து தண்ணி மட்டம் அளவுக்கு வரும். தண்ணி மட்டம் குறைஞ்சுடுச்சுன்னா தண்டு நீளம் தண்ணி மட்டம் அளவுக்கு சுருங்கிடும்.' அது ஏன் அப்படி நான் கேட்டதுக்கு, அதுதான் இயற்கையோட விதின்னு சொன்னாரு.

"பந்தைத் தூக்கிப் போட்டு விளையாடச் சொல்லுவாரு. முதல்ல பக்கத்தில ஒரு இடத்தைக் காட்டி அது மட்டும் தூக்கிப் போடச் சொல்லுவாரு. அஞ்சாறு தடவை தூக்கிப் போட்டப்புறம், தூரமா ஒரு இடத்தைக் காட்டி அங்கே போடச் சொல்லுவாரு. அவ்வளவு தூரம் போட முடியாதேன்னு நான் சொன்னா, 'அவ்வளவு தூரம் போடணும்னு மனசுக்குள்ள தீர்மானிச்சுக்கிட்டு, முயற்சி செஞ்சு போடு'ம்பாரு.

"முதல் தடவை என்னால பந்தை அவ்வளவு தூரம் போட முடியாது. 'பரவாயில்ல, முன்னை போட்ட தூரத்தை விட அதிகமாப் போட்டிருக்க, இல்ல? முயற்சி பண்ணிக்கிட்டிருந்தே இருந்தா முடியும்'னு சொல்லுவாரு. அவர் சொன்னபடியே முயற்சி செஞ்சதில என்னால அந்த தூரம் போட முடிஞ்சது. அது மட்டும் இல்ல. அதுக்கப்புறம் முயற்சி செஞ்சு இன்னும் அதிக தூரமும் போட முடிஞ்சது.

"என் அப்பா சொன்ன இந்த அறிவுரைகள்தான் என் வாழ்க்கையில எனக்கு அடிப்படையா அமைஞ்சது. உயர்ந்த லட்சியங்களை உருவாக்கிக்கிட்டு விடாமுயற்சியோட செயல்பட்டதாலதான் என்னால வாழ்க்கையில வெற்றி பெற முடிஞ்சதுன்னு நான் நம்பறேன். நான் உங்களுக்கு சொல்ல விரும்பறதும் இதுதான். உங்க லட்சியங்கள், உறுதி, உழைப்பு இவற்றோட அளவுக்குதான் உங்களோட உயர்வு இருக்கும், அதனால உயர்ந்த இலக்குகளை வகுத்துக்கிட்டு, அவற்றை அடையணுங்கற உறுதியோட சிறப்பா முயற்சி பண்ணுங்க. நிச்சயமா வெற்றி பெறுவீங்க!"

ஆறுமுகம் பேசி முடித்ததும், மாணவர்களிடையே பலத்த கரவொலி எழுந்தது. 

கரவொலி அடங்கியதும் ஒரு மாணவன் எழுந்து, "சார்! ஒரு கேள்வி. உங்கப்பா உங்களுக்குச் சொன்ன அறிவுரைகளைப் பத்தி சொன்னீங்க. உங்க அப்பா இதையெல்லாம் அவர் வாழ்க்கையில எந்த அளவுக்குப் பயன்படுத்தினார்னு சொல்ல முடியுமா?" என்றான்.

ஆறுமுகம் அந்த மாணவனை சற்று நேரம் உற்றுப் பார்த்து விட்டு, "தம்பி! உங்க புத்திசாலித்தனமான கேள்வியைப் பாராட்டறேன். உங்க கேள்விக்கு பதில் இந்த அறிவுரைகளை என் அப்பா அவரோட வாழ்க்கையில பயன்படுத்தல!" என்றார்.

ஒரு நிமிடம் அரங்கில் மௌனம் நிலவியது. 

ஆறுமுகம் தொடர்ந்து பேசினார்.

"எனக்கு அறிவுரை சொன்ன என் அப்பா தன் வாழ்க்கையில இதை ஏன் பயன்படுத்தலைங்கற சந்தேகம் உங்க எல்லாருக்கும் வரும். இந்த அறிவுரைகள் என் அப்பா சொன்னவை இல்லை. என் அப்பா முகமே எனக்கு நினைவில்ல. நான் குழந்தையா இருந்தப்பவே அவர் இறந்து போயிட்டாரு.

"இங்கே என்னைப் பேசக் கூப்பிட்டப்ப முதல்ல எனக்கு என்ன பேசறதுன்னு தெரியல. என் உதவியாளர்கிட்ட சொல்லி ஒரு பேச்சை எழுதிக் கொடுக்கச் சொல்லி அதைப் பேசிடலாமான்னு நினைச்சேன். என் தொழில் சம்பந்தப்பட்ட கூட்டங்கள்ள அப்படித்தான் செய்வேன். அப்புறம், வாழ்க்கையில நான் கத்துக்கிட்ட ஒண்ணு ரெண்டு விஷயங்களை எளிமையா சொன்னா உங்களுக்குப் பயனுள்ளதா இருக்குமேன்னு நினைச்சேன். அதையெல்லாம் என்னோட அறிவுரை மாதிரி சொன்னா வகுப்பில பாடம் எடுக்கற மாதிரி இருக்கும், அதனால என் அப்பா எனக்குச் சொன்ன மாதிரி ஒரு கதை மாதிரி சொன்னேன். இந்த உண்மையை இப்ப சொல்றதில தப்பு இல்லேன்னு நினைக்கிறேன். ஏன்னா நான் சொன்ன விஷயம் உங்க மனசல நல்லாப் பதிஞ்சுடுச்சுங்கறதை என் பேச்சை நீங்க ஆர்வமாக் கேட்டதிலேந்து புரிஞ்சுக்கிட்டேன்.நன்றி!"

இப்போது எழுந்த கரவொலி முன்பு எழுந்ததை விடப் பல மடங்கு அதிகமாக இருந்தது.

பொருட்பால்
அரசியல் இயல்
அதிகாரம் 60
ஊக்கமுடைமை

குறள் 595:
வெள்ளத் தனைய மலர்நீட்டம் மாந்தர்தம்
உள்ளத் தனையது உயர்வு.

பொருள்:
நீர்ப்பூக்களின் உயரம் (அவை மலர்ந்துள்ள குளத்தின்) நீர்மட்டத்தின் அளவே. இருக்கும். அது போல மக்களின் உயர்வும் அவர்களின் மன ஊக்கத்தின் அளவே..

               அறத்துப்பால்                                                            காமத்துப்பால்

No comments:

Post a Comment

1060. ஏன் உதவவில்லை?

"யார்கிட்ட உதவி கேக்கறதுன்னே தெரியல!" என்றான் பரந்தாமன். "யார்கிட்டயாவது கேட்டுத்தானே ஆகணும்? இன்னும் ரெண்டு நாளைக்குள்ள பணம்...