"கங்கிராட்ஸ்! இந்தத் தொகுதியில போட்டி போட உனக்கு டிக்கட் கிடைச்சிருக்கறது பெரிய விஷயம். இந்தத் தொகுதியில உங்க கட்சிக்கு நல்ல வாய்ப்பு இருக்கறதால, இந்தத் தொகுதியில தன்னோட மகனுக்கு சீட் வாங்கிக் கொடுக்க மாநிலத் தலைவர் ரொம்ப முயற்சி பண்ணினாரு. அதையும் மீறி, மேலிடத்தில உனக்கு சீட் கொடுத்திருக்காங்க!" என்றான் அருணன்.
"எனக்கே ஆச்சரியமாத்தான் இருக்கு! நான் முயற்சி செஞ்சதே மாநிலத் தலைவருக்குப் பிடிக்கல. தன் மகனுக்கு டிக்கட் கொடுத்துடுவாங்கன்னு அவர் ரொம்ப நம்பிக்கையா இருந்தாரு. இப்ப, என் மேல ரொம்ப ஆத்திரமா இருப்பாருன்னு நினைக்கிறேன்!" என்றான் சந்திரன்.
"ஜாக்கிரதையா இருந்துக்க. எதையாவது செஞ்சு, உன் காலை வாரிடப் போறாரு!"
"அப்படியெல்லாம் நடக்காது என்னைத் தோற்கடிக்க அவர் ஏதாவது செஞ்சா, நிச்சயமா ஜெயிக்க வேண்டியல தொகுதியில கட்சி தோற்றதுக்கு அவரைத்தான் குற்றம் சொல்லுவாங்க. அவர் பதவிக்கே ஆபத்து வந்துடும். அதனால, என்னோட வெற்றிக்கு உழைக்கறதைத் தவிர, அவருக்கு வேற வழி இல்லை!" என்றான் சந்திரன்.
"என் நண்பனான நீ அரசியலில் இருக்கேங்கறதைத் தவிர, எனக்கும் அரசியலுக்கும் எந்தத் தொடர்பும் கிடையாது. ஆனா, அரசியல்வாதிங்ககிட்ட ரொம்ப எச்சரிக்கையா இருக்கணும்னு மட்டும் எனக்குத் தெரியும்!" என்றான் அருணன்.
"அடப்பாவி! அப்படின்னா, எங்கிட்ட நீ எப்பவுமே எச்சரிக்கையாத்தான் நடந்துக்கிட்டிருக்கியா?"
சந்திரன் வேட்புமனு தாக்கல் செய்யப் போனபோது, அருணனும் அவனுடன் சென்றான்.
"வேட்புமனுவில எல்லா விவரங்களையும் சரியாப் பூர்த்தி பண்ணி, தேவையான டாகுமென்ட்களையெல்லாம் கொடுத்திருக்கியா? ஏதாவது சின்னத் தவறு இருந்தா கூட, வேட்புமனுவை நிராகரிச்சுடுவாங்க" என்றான் அருணன்.
"அரசியல்ல ஆர்வம் இல்லேன்னு சொல்லிக்கிட்டு, ஏதோ பல தேர்தல்கள்ள வேட்புமனு தாக்கின அனுபவம் உள்ளவன் மாதிரி பேசறே! கவலைப்படாதே! இதுக்குன்னு சில நிபுணர்கள் கட்சியில இருக்காங்க. அவங்க எல்லாத்தையும் சரிபார்த்துட்டாங்க" என்றான் சந்திரன்.
"குட்!" என்றான் அருணன், "ஆமாம், உன் கட்சியோட மாநிலத் தலைவரும் வந்திருக்காரு போலருக்கே. அவர் பக்கத்தில ஒத்தரு வேட்புமனுவோட நிக்கறாரே, அவர் யாரு?" என்றான்.
"அவர் டம்மி காண்டிடேட்."
"அப்படின்னா?"
"ஏண்டா, அரசியல்ல ஆர்வம் இல்லேங்கறதுக்காக, இப்படி ஒரு டம்மியா இருக்கணுமா? எல்லா அரசியல் கட்சிகளுமே, தங்களோட அதிகாரபூர்வ வேட்பாளரைத் தவிர, ஒரு மாற்று வேட்பாளரையும் மனுத் தாக்கல் செய்ய வைப்பாங்க. ஏதாவது ஒரு காரணத்துக்காக வேட்பாளரோட மனு ரிஜக்ட் ஆயிடுச்சுன்னா, மாற்று வேட்பாளர் கட்சியோட வேட்பாளரா ஆயிடுவாரு. அநேகமா, அது மாதிரி நடக்காது. அதனாலதான் அவரை டம்மி வேட்பாளர்னு சொல்லுவாங்க!" என்று விளக்கினான் சந்திரன்.
"ஓ!" என்ற அருணன், "உன் வேட்புமனுக் காகிதங்களை எங்கிட்ட கொடு. நீ ஏன் அதை சுமந்துக்கிட்டு நிக்கற? ஆஃபீசர் இன்னும் வரல. அவர் வந்தப்புறம், எங்கிட்டேந்து வாங்கி, அவர்கிட்ட கொடு. அப்பதான் கெத்தா இருக்கும்!" என்றான்.
"எப்படி ஐயா நடந்தது இது? சந்திரனோட வேட்புமனு ரிஜக்ட் ஆகி, டம்மி வேட்பாளரா இருக்கிற என்னோட ஆளு வேட்பாளரா ஆகணுங்கறதுக்காகத்தானே, அவன் வேட்புமனுவில ஒரு இடத்தில கையெழுத்து வாங்காம வைக்கச் சொன்னேன்? ஆனா, அவனோட வேட்புமனுவை ஏத்துக்கிட்டாங்களே! வேட்புமனு பரிசீலனையின்போது அங்கே இருந்த நம்ம ஆளு, எல்லா இடத்திலேயும் கையெழுத்து இருக்குன்னு சொல்றானே!" என்றார் மாநிலத் தலைவர், கோபத்துடன்.
"இல்லீங்க. ஒரு இடத்தில கையெழுத்து வாங்காமதான் விட்டிருந்தேன். சந்திரன் வேட்புமனுவைக் கையில எடுத்துக்கிட்டுப் போனப்ப, அதில ஒரு கையெழுத்து இல்லாமதான் இருந்தது. அவர் எப்ப அந்த இடத்தில கையெழுத்துப் போட்டார்னே தெரியல. அங்கே கையெழுத்து விட்டுப் போனதே அவருக்குத் தெரிஞ்சிருக்காது" என்ற அந்தக் கட்சியின் வேட்புமனு நிபுணர், சற்று யோசித்து விட்டு, "ஆனா அவரோட நின்னுக்கிட்டிருந்த ஒரு ஆளு - அவர் நம்ம கட்சி ஆளு இல்ல, சந்திரனோட நண்பாரா இருப்பார்னு நினைக்கிறேன் - சந்தரன்கிட்டேந்து வேட்புமனுக் காகிதங்களை வாங்கி, அதைப் புரட்டிப் பாத்துக்கிட்டிருந்தாரு!" என்றார், தயக்கத்துடன்.
"அவர் என்ன செஞ்சிருக்கப் போறாரு? சரி, இனிமே என்ன செய்ய முடியும்? என் திட்டமெல்லாம் பாழாப் போயிடுச்சு!" என்றார் மாநிலத் தலைவர், கோபத்துடனும், இயலாமையுடனும்.
"கங்கிராட்ஸ்! உன் வேட்புமனுவை ஏத்துக்கிட்டாங்க. அடுத்த நிலைக்குப் போயிட்ட!" என்றான் அருணன்.
"ஆமாம், அன்னிக்கே கேக்கணும்னு நினைச்சேன். வேட்புமனு தாக்கல் செய்யறப்ப, எங்கிட்டேந்து வேட்புமனுவை வாங்கிக்கிட்டு எங்கேயோ வெளியில போனியே, எதுக்கு?" என்றான் சந்திரன்.
"ரெஸ்ட் ரூமுக்குப் போனேன்!"
"அதுக்கு ஏன் வேட்புமனுவைக் கையில எடுத்துக்கிட்டுப் போகணும்? எங்கிட்ட கொடுத்துட்டுப் போயிருக்கலாமே!"
சற்று நேரம் மௌனமாக இருந்த அருணன், "உன் வேட்புமனுவை நிராகரிக்க ஒரு சதி நடந்திருக்கு. ஆனா, அது உனக்குத் தெரியல, கொஞ்சம் ஏமாந்திருந்தா, உன் மனு நிராகரிக்கப்பட்டு, டம்மி வேட்பாளர் நிஜ வேட்பாளரா ஆகி இருப்பாரு! டம்மி வேட்பாளர் உன் கட்சியோட மாநிலத் தலைவரோட ஆளா இருப்பார்னு நினைக்கிறேன். மாநிலத் தலைவர்தான் இந்த சதியைப் பண்ணி இருக்கணும்!" என்றான்.
"எனக்கு எதுவுமே புரியலியே!"
"நீ மாற்று வேட்பாளரைப் பத்தி சொன்னதும் எனக்கு ஒரு சந்தேகம் வந்தது. மாற்று வேட்பாளருக்குப் பக்கத்தில மாநிலத் தலைவர் நினனுக்கிட்டிருந்ததால, அவர் அவரோட ஆளா இருப்பார்னு நினைச்சேன். வெளியில போய், வேட்பு மனுத் தாள்களை ஒவ்வொண்ணாப் பாத்தேன். அதில ஒரு இடத்தில வேட்பாளரின் கையொப்பம்னு இருந்தது. ஆனா, அங்கே உன் கையெழுத்து இல்லை. அங்கே கையெழுத்துப் போடணும்னு காட்டறதுக்காக, முதல்ல யாரோ பென்சிலால X -ன்னு மார்க் பண்ணிட்டு, அப்புறம் அதை அழிச்சிருக்காங்க. அதனால, வேணும்னுதான் இப்படிப் பண்ணி இருக்காங்கன்னு தெரிஞ்சது. எனக்கு என்ன செய்யறதுன்னு தெரியல. உங்கிட்ட சொல்லிக் கையெழுத்துப் போடச் சொல்லாலாம்னா, அது எல்லாருக்கும் தெரிஞ்சுடும். அது தேவையில்லைன்னு சொல்லி உன்னைக் குழப்பினாலும் குழப்புவாங்க. அதோட, ரிடர்னிங் ஆஃபீசர் வந்துட்டார்னா, வேட்புமனுவை சீக்கிரம் தாக்கல் செய்யணும்னு அவசரப்படுத்தி, அந்தக் குறைபாட்டோடயே உன்னை வேட்புமனு தாக்கல் செய்ய வச்சுடுவாங்க. அதனால..."
"அதனால?"
"மற்ற இடங்கள்ள இருந்த உன் கையெழுத்தைப் பாத்து, விட்டுப் போன இடத்தில உன் கையெழுத்தை நானே போட்டுட்டேன்!"
"அடப்பாவி! ஃபோர்ஜரி பண்ணி இருக்கியே! உண்மை தெரிஞ்சா, நீ ஜெயிலுக்குப் போயிருப்பியே!"
"இது உன் கையெழுத்து இல்லேன்னு நீ சொன்னா, அப்பதான் அது ஃபோர்ஜரி ஆகும்! வேட்புமனு பரிசீலனையின்போது அங்கே இருந்த மாநிலத் தலைவரோட ஆட்கள் யாருக்கும் தலைவர் செஞ்ச காரியம் தெரிஞ்சிருக்காது. அதை அவர ரகசியமாத்தானே வச்சுக்கிட்டிருந்திருப்பாரு? அப்படியே தெரிஞ்சிருந்தாலும், 'இது எங்க கட்சி வேட்பாளரோட கையெழுத்து இல்ல, அதனால, அந்த வேட்புமனுவை நிராகரிக்கணும்'னு அவங்க எப்படி சொல்லுவாங்க? அதனால திருடனுக்குத் தேள் கொட்டின மாதிரி பேசாம இருந்திருப்பாங்க. அப்படியே சொன்னாலும், அது என் கையெழுத்து இல்லேன்னு சொல்லி, உன் வேட்புமனு நிராகரிக்கப்பட நீயே காரணமா இருந்திருக்க மாட்டேன்னு நினைக்கிறேன்!" என்றான் அருணன், சிரித்தபடி.
"நீ செஞ்சது பெரிய உதவி. ஆனா, எவ்வளவு ரிஸ்க் எடுத்திருக்கே!" என்று தன் நண்பனின் கைகளைப் பற்றிக் கொண்டு கூறிய சந்திரன், "ஆனா எனக்கு இப்பவும் ஒரு விஷயம் புரியல!" என்றான்.
"என்ன புரியல?"
"நீ ரொம்ப நேர்மையானவன். ஒரு சின்னத் தப்புக் கூடப் பண்ண மாட்டே. ஆனா, நீ எப்படி இதை செஞ்சே?"
"தெரியல, சந்திரா! உனக்கு ஒரு தீங்கு நடக்கப் போகுதுன்னு தெரிஞ்சது. அதை எப்படியாவது தடுக்கணும்னு நினைச்சேன். இந்த ஒரு வழிதான் இருந்ததாத் தோணிச்சு. அதனால அதை செஞ்சேன். வேற எதைப் பத்தியும் நான் யோசிக்கலேன்னு நினைக்கிறேன்!" என்றான் அருணன்.
பொருட்பால்
நட்பியல்
அதிகாரம் 79
நட்பு
குறள் 788:
உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே
இடுக்கண் களைவதாம் நட்பு.
பொருள்:
அணிந்திருக்கும் உடை உடலை விட்டு நழுவும்போது, கைகள் உடனடியாகச் செயல்பட்டு அதனைச் சரிசெய்வது போல், நண்பனுக்குத் துன்பம் வரும்போது, அப்போதே சென்று துன்பத்தைக் களைவது நட்பு.
No comments:
Post a Comment