"சார்! டெண்டருக்கு அப்ளை பண்ண இன்னிக்குத்தான் கடைசி நாள். டெண்டர் பேப்பர் எல்லாம் ரெடி பண்ணி உங்ககிட்ட கையெழுத்து வாங்கித் தயாரா வச்சிருக்கேன்" என்றார் மானேஜர் சுப்பையா.
"தெரியும். ஆனா, அதுக்கு அஞ்சு லட்சம் ரூபாய் செக்யூரிடி டெபாசிட் கட்டணும். நம்மகிட்ட பணம் இல்ல. பாங்க் ஓவர்டிராஃப்ட் லிமிட்டை ஏற்கெனவே தாண்டிட்டோம். அதனால, பாங்க்லயும் பணம் கிடைக்காது. பணத்துக்கு எங்கே போறது?" என்றான் ராஜவேல், பெருமூச்சுடன்.
"நாம அப்ளை பண்ணினா, கண்டிப்பா நமக்குத்தான் சார் கிடைக்கும். நம்மை விடக் குறைச்சலா யாராலயும் கோட் பண்ண முடியாது."
"அது எனக்குத் தெரியாதா? அதான் பணம் இல்லேன்னு சொல்றேனே? உங்களால ஏதாவது ஏற்பாடு பண்ண முடியுமா?" என்றான் ராஜவேல், எரிச்சலுடன்.
"சார்! நான் மாசச் சம்பளம் வாங்கறவன். என்னால அஞ்சாயிரம் ரூபா கூடப் புரட்ட முடியாது!"
"அப்ப, வாயை மூடிக்கிட்டுப் பேசாம இருங்க!"
மாலை ஐந்து மணிக்கு அலுவலகத்துக்கு வந்த ராஜவேலிடம், "சார்! உங்களுக்கு நிறைய தடவை ஃபோன் பண்ணினேன். ஆனா, நீங்க எடுக்கல!" என்றார் சுப்பையா.
"நீங்க டெண்டர் விஷயமாத்தான் ஃபோன் பண்றீங்கன்னு தெரியும். பணம் புரட்ட முடியாதுன்னு காலையிலேயே சொல்லிட்டேனே? அதனாலதான், ஃபோனை எடுக்கல."
"இல்லை, சார். பணம் கிடைச்சுடுச்சு. அதைச் சொல்லத்தான் உங்களுக்கு ஃபோன் பண்ணினேன். ஆனா, நீங்க எடுக்கல. டெண்டர் அப்ளிகேஷனை நேரிலேயே கொண்டு போய்க் கொடுத்துட்டேன்."
"ஓ! பணம் எப்படிக் கிடைச்சுது? நம்ம மேல இரக்கப்பட்டு பாங்க்ல கொடுத்தாங்களா?"
"பாங்க்ல கொடுக்கல சார்! உங்க நண்பர் பாலுதான் கொடுத்தார்."
"பாலுவா? அவனுக்கு எப்படித் தெரியும்?"
"மன்னிச்சுக்கங்க, சார்! என்னால ஏதாவது ஏற்பாடு பண்ண முடியுமான்னு நீங்க கேட்டது எனக்கு உறுத்திக்கிட்டே இருந்தது. உங்க நண்பர் பாலு இதுக்கு முன்னால சில தடவை உதவினது எனக்கு நினைவு வந்தது. அதனால, அவர்கிட்ட ஃபோன் பண்ணிக் கேட்டேன். அவர் கொஞ்சம் கூட யோசிக்கல. எந்த பேர்ல டிடி எடுக்கணும்னு கேட்டு, அஞ்சு லட்சம் ரூபாய்க்கு டிடி எடுத்து, அதை அவர் ஆஃபீஸ் பியூன் மூலமா கொடுத்தனுப்பிட்டாரு. டெண்டர் அப்ளிகேஷன் ரெடியா இருந்ததால, அதில டிடி விவரங்களை எழுதி இணைச்சு, டெண்டரை நானே நேரில போய்க் கொடுத்துட்டேன். நான் செஞ்சது தப்பா இருந்தா, மன்னிச்சுக்கங்க" என்றார் சுப்பையா.
"தப்புதான். நான் பாலுவோட பேசியே ரெண்டு மூணு மாசம் ஆச்சு. ஆனா, நீங்க செஞ்சது பெரிய நன்மையாச்சே! உங்களை எப்படி நான் குத்தம் சொல்ல முடியும்? சரி, நான் வரேன்" என்றபடியே கிளம்பினான் ராஜவேல்.
"சார்! சில லெட்டர்கள்ள கையெழுத்துப் போட வேண்டி இருக்கு."
"அதையெல்லாம் நாளைக்குப் பாத்துக்கலாம். முதல்ல, நான் பாலுவைப் போய்ப் பார்க்கணும்!" என்று எழுந்தான் ராஜவேல்.
"சாரிடா, பாலு! உங்கிட்ட கோவிச்சுக்கிட்டு, நான் ரெண்டு மூணு மாசமா உங்கிட்ட பேசவே இல்லை. ஆனா, நீ எனக்கு இவ்வளவு பெரிய உதவி செஞ்சிருக்க!" என்றான் ராஜவேல்.
"முட்டாள்தனமாப் பேசாதேடா! ஒரு நண்பனுக்கு உதவி செய்யறது எப்பவுமே செய்ய வேண்டிய விஷயம். நண்பர்களுக்குள்ள சண்டை போட்டுக்கறது, பேசாம இருக்கறது எல்லாம் தற்காலிகமான விஷயங்கள்தானே!" என்றான் பாலு.
"இனிமே நமக்குள்ள அதெல்லாம் தற்காலிகமாக் கூட நடக்காது. என்னை விட, என் மானேஜர் உன்னை நல்லா புரிஞ்சு வச்சுக்கிட்டிருக்காரு போல இருக்கு. அது சரி. உன் பிசினஸ்ல கூட நிறைய பிரச்னை இருக்குன்னு கேள்விப்பட்டேனே! எப்படி உடனே அஞ்ச லட்சம் ரூபா ரெடி பண்ணினே? உன் நிலைமை இப்ப சரியாயிடுச்சா?
"என் நிலைமை இன்னும் சரியாகல. இன்னும் மோசமாத்தான் போய்க்கிட்டிருக்கு. உன் மானேஜர் ஃபோன் பண்ணினதும், எப்படியாவது உனக்கு உதவி செய்யணும்னு தோணிச்சு. என் மனைவி அக்கவுன்ட்ல கொஞ்சம் பணம் இருந்தது. அதுவும் ஃபிக்ஸட் டெபாசிட்லதான் இருந்தது. அதை கான்சல் பண்ணித்தான் டிடி எடுத்துக் கொடுத்தேன். அது வேற பாங்க். அது என்னோட பாங்க்கா இருந்தா, நான் கொடுக்க வேண்டிய பணத்துக்காக அதை எடுத்துக்கிட்டிருப்பாங்க!" என்றான் பாலு, சிரித்தபடி.
நண்பனுக்கு நன்றி சொன்னால் அது வெறும் சம்பிரதாயமாக ஆகி விடுமே என்று நினைத்தபடி, நண்பனை பிரமிப்புடன் பார்த்தான் ராஜவேல்.
பொருட்பால்
நட்பியல்
அதிகாரம் 79
நட்பு
குறள் 789:
நட்பிற்கு வீற்றிருக்கை யாதெனின் கொட்பின்றி
ஒல்லும்வாய் ஊன்றும் நிலை.
No comments:
Post a Comment