Tuesday, May 31, 2022

593. வீழ்ச்சிக்குப் பின்...

என் கல்லூரி நண்பன் செல்வத்தைப் பல வருடங்கள் கழித்துத் தற்செயலாகச் சந்தித்தேன்.

கல்லூரிப் படிப்பை முடித்ததும் எங்களில் பெரும்பாலோர் ஏதாவது ஒரு வேலை கிடைக்காதா என்று முனைந்து ஏதோ ஒரு வேலையைத் தேடிக் கொண்டோம். 

ஆனால் செல்வம் மட்டும் சொந்தத் தொழில் துவங்கப் போவதாகச் சொல்லி வேலைக்கே முயற்சி செய்யவில்லை.

"அவன் ஒரு ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்தவன். அவனைக் கல்லூரியில படிக்க வைக்கறதுக்கே அவங்க அப்பா அம்மா ரொம்ப கஷ்டப்பட்டிருப்பாங்க. படிப்பை முடிச்சதும் ஏதோ ஒரு வேலைக்குப் போனா அவங்க பெற்றோருக்கு உதவியா இருக்கும். அதை விட்டுட்டு சொந்தத் தொழில் ஆரம்பிக்கப் போறேன்னு இறங்கி இருக்கான். கையில கால் காசு இல்லாம எப்படித் தொழில் ஆரம்பிக்கப் போறான்னு புரியல!" என்று என் நண்பர்கள் சிலர் அப்போது விமரிசனம் செய்தார்கள்.

ஆனால் செல்வம் எப்படியோ சிறிய அளவில் ஒரு தொழிலைத் துவங்கி, நாளடைவில் பெரிய வளர்ச்சியும் பெற்று விட்டான்.

நான் கொல்கத்தாவில் வேலை செய்து வந்ததால், சென்னையில் தொழில் செய்து வந்த செல்வத்துடன் எனக்குத் தொடர்பு இல்லை. அவனைப் பற்றிய செய்தியெல்லாம் என் பிற நண்பர்கள் மூலம் கேட்டறிந்ததுதான்.

"முதல்ல எல்லாரும் அவனோட சொந்தத் தொழில் முயற்சி முட்டாள்தனமானதுன்னுதான் நினைச்சோம். ஆனா அவன் ஒரு தொழிலை ஆரம்பச்சதோட இல்லாம அதை இந்த அளவுக்குப் பெரிசாக் கொண்டு வந்தது பிரமிப்பாத்தான் இருக்கு!" என்று சில நண்பர்கள் வியந்தனர்.

"நினைச்சதை முடிக்கணுங்கற அவனோட உறுதி, கடுமையான உழைப்பு, தடைகளை உடைச்சுக்கிட்டு மேல போறது இதெல்லாம்தான் அவன் வெற்றிக்குக் காரணம்!" என்று பலரும் கூறினர்.

நான் செல்வத்தின் வீட்டுக்குச் சென்றபோது, அவன் என்னை மிகவும் உற்சாகமாக வரவேற்றான். கல்லூரி நாட்கள் பற்றிப் பல விஷயங்களை நினைவு கூர்ந்து மகிழ்ச்சியுடன் பேசினான். கேலி, உற்சாகம், உல்லாசம் எல்லாம் கலந்து எங்கள் உரையாடல் இரண்டு கல்லூரி மாணவர்கள் பேசிக் கொள்வது போலவே இருந்தது.

செல்வத்தைச் சந்தித்து ஓரிரு நாட்களுக்குப் பிறகு என் ரு நண்பன் சுந்தரைச் சந்தித்தேன். செல்வத்தைச் சந்தித்துப் பேசியதைப் பற்றி அவனிடம் கூறினேன்.

"அவன் அதே வீட்டிலேயா இருந்தான்? வீடு மாறி இருப்பானே?" என்றான் சுந்தர்.

"ஆமாம். ஆனா விடு மாறப் போறதா சொன்னான். சில பொருட்களை பேக் பண்ணி வச்சிருந்தான். அவன் குழந்தைகள் பாட்டி வீட்டுக்குப் போயிருந்தாங்க. ஃபர்னிச்சர் எதையும் காணோம். அதெல்லாம் முன்னாடியே புது வீட்டுக்குப் போயிடுச்சு போலருக்கு" என்றேன் நான்.

"அதையெல்லாம் வித்தாச்சு!"

"வித்தாச்சா, ஏன்?" என்றேன் நான் புரியாமல்.

"உங்கிட்ட அவன் விஷயத்தைச் சொல்லல போலருக்கு. அவனுக்கு பிசினஸ்ல பெரிய அடி. வீடு ஏலத்துக்கு வரப் போகுது. நகைகள், ஃபர்னிச்சர், இன்னும் மதிப்புள்ள பொருட்களையெல்லாம் வித்துட்டான். சின்னதா ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்திருக்கான். அங்கே குடி போகப் போறான். அதனாலதான் தற்போதைக்கு குழந்தைகளை மாமனார் வீட்டுக்கு அனுப்பி இருக்கான் போல இருக்கு!" என்றான் சுந்தர்.

"அடப்பாவமே! எங்கிட்ட எதையுமே சொல்லியே? அவ்வளவு உற்சாகமாப் பேசிக்கிட்டிருந்தான்! அவன் மனைவிதான் கொஞ்சம் டல்லா இருக்கற மாதிரி இருந்தது. உடம்பு சரியில்லையோன்னு நினைச்சேன்."

"பல வருஷங்கள் கழிச்சு உன்னைப் பாக்கறதால தன்னோட நிலைமை பத்தி இப்ப உங்கிட்ட சொல்ல வேண்டாம்னு நினைச்சிருப்பான். ஆனா, சீக்கிரமே வேற ஒரு தொழில் ஆரம்பிச்சுடுவேன்னு எங்கிட்ட சொன்ன். அவன் குரல்ல இருந்த உறுதியையும், அவனோட கடந்த கால செயல்பாடுகளையும் பாக்கறப்ப அவன் மறுபடியும் ஒரு உயர்ந்த நிலைக்கு சீக்கிரமே வந்துடுவான்னு நினைக்கிறேன். எனக்கு அதில சந்தேகம் இல்லை!" என்றான் சுந்தர், உறுதியான குரலில்.  

பொருட்பால்
அரசியல் இயல்
அதிகாரம் 60
ஊக்கமுடைமை

குறள் 593:
ஆக்கம் இழந்தேமென்று அல்லாவார் ஊக்கம்
ஒருவந்தம் கைத்துடை யார்.

பொருள்:
ஊக்கத்தைத் தம் கைவசம் கொண்டவர், செல்வத்தை இழந்தாலும், இழந்து விட்டோமே என்று மனம் கலங்க மாட்டார்.

               அறத்துப்பால்                                                            காமத்துப்பால்

No comments:

Post a Comment

1060. ஏன் உதவவில்லை?

"யார்கிட்ட உதவி கேக்கறதுன்னே தெரியல!" என்றான் பரந்தாமன். "யார்கிட்டயாவது கேட்டுத்தானே ஆகணும்? இன்னும் ரெண்டு நாளைக்குள்ள பணம்...