தன் அறைத்தோழன் பாஸ்கர் இரண்டு நாட்களாக அறைக்கு இரவில் மிகவும் தாமதமாக வருவதை கிரி கவனித்தான்.
இரவில் தாமதமாக வந்ததால், காலையில் தாமதமாக எழுந்து, உணவு விடுதிக்குப் போய்க் காலை உணவு அருந்தக் கூட நேரமில்லாமல் அவசர அவசரமாக வகுப்புக்குச் சென்றான் பாஸ்கர்.
அவர்கள் கல்லூரியில், வகுப்புக்கு வராததைக் கடும் குற்றமாகக் கருதி தண்டனை அளிப்பதுடன், பெற்றோர்களை அழைத்து எச்சரிக்கை செய்யும் நடைமுறை உண்டு என்பதால், வகுப்பைத் தவற விட மாணவர்கள் அஞ்சுவார்கள்.
அன்று மாலை வகுப்புகள் முடிந்து விடுதி அறைக்கு வந்ததும், "ரெண்டு நாளா ராத்திரி லேட்டா வந்தியே, என்ன விஷயம்?" என்று பாஸ்கரிடம் கேட்டான் கிரி.
பாஸ்கர் சற்றுத் தயங்கி விட்டு, "ராஜேஷ் ரூமுக்குப் போயிருந்தேன்" என்றான்.
"அவ்வளவு நேரம் அங்கே என்ன செய்யற?"
"அங்கே நாலஞ்சு பேர் வருவாங்க. சும்மா பேசிக்கிட்டிருப்போம். பேசிக்கிட்டே இருந்ததில, நேரம் போறதே தெரியல. அதனால லேட் ஆயிடுச்சு!" என்றான் பாஸ்கர்.
பாஸ்கர் எதையோ மறைக்கிறான் என்று கிரிக்குத் தோன்றியது.
"ராத்திரி லேட்டா வரதனால, காலையில லேட்டா எழுந்து, பிரேக்ஃபாஸ்ட் சாப்பிடக் கூட நேரமில்லாம போயிடுச்சு பாரு!" என்றான் கிரி.
"இனிமேல் சீக்கிரம் வந்துடறேன்!" என்று பாஸ்கர் கூறியபோது, அவன் ராஜேஷின் அறைக்குத் தொடர்ந்து போகப் போகிறான் என்று கிரிக்குப் புரிந்தது. 'அரட்டை அடிப்பதற்காக அங்கே தினமும் போக வேண்டுமா என்ன?' என்று நினைத்துக் கொண்டான் கிரி.
ஓரிரு நாட்களில், வேறு சில நண்பர்கள் மூலம் கிரிக்கு ஒரு உண்மை தெரிந்தது. ராஜேஷின் அறையில், சில மாணவர்கள் தினமும் பணம் வைத்துச் சீட்டாடுவதாகவும், யாருக்கும் தெரியக் கூடாது என்பதற்காக, அறையை உள்ளே தாளிட்டுக் கொள்வதாகவும் சிலர் பேசிக் கொண்டனர்.
பாஸ்கரிடம் கிரி இதைப் பற்றிக் கேட்டபோது, பாஸ்கர் அதை ஒப்புக் கொண்டான். "யார்கிட்டேயும் சொல்லிடாதே!" என்றான்.
"பாஸ்கர்! இது ஒரு கெட்ட பழக்கம், அதோட, சட்ட விரோதம். வார்டனுக்குத் தெரிஞ்சா, ஹாஸ்டலை விட்டு மட்டுமல்ல, காலேஜை விட்டே அனுப்பிடுவாங்க!" என்றான் கிரி.
"அதெல்லாம் நடக்காது. எத்தனையோ ரூம்ல இது மாதிரி நடக்குது. யாராவது கதவைத் தட்டினாலே, சீட்டுகளையெல்லாம் கலைச்சு உள்ள வச்சுட்டுத்தான் கதவைத் திறப்போம். அதோட, காசு வச்சு ஆடினோம்னு நிரூபிக்க முடியாது" என்றான் பாஸ்கர்.
"சரி. இதை எதுக்கு நீ விளையாடணும்?"
"சும்மா ஒரு திரில்லுக்குத்தான்!" என்றான் பாஸ்கர்.
நாளாக ஆக, சீட்டாட்டத்தில் பாஸ்கரின் ஈடுபாடு அதிகமாகிக் கொண்டிருந்தது. இரவு நெடுநேரம் கண்விழித்ததால், மாலை வேளைகளில் தூங்கினான். பாடப் புத்தகங்களைப் படிக்கவே அவனுக்கு நேரம் கிடைக்கவில்லை.
அவ்வப்போது வைக்கப்படும் வகுப்புத் தேர்வுகளில், பாஸ்கரின் மதிப்பெண்கள் குறைந்தன.
"எப்பவும் நீ அதிக மார்க் வாங்கறவன், இப்ப ஃபெயில் மார்க் வாங்கிக்கிட்டிருக்கே. இந்த சீட்டாட்டத்தை விட்டுடு. பழையபடி ஒழுங்கா இரு!" என்றான் கிரி.
"இதெல்லாம் கிளாஸ் டெஸ்ட்தானே! ஆனுவல் எக்ஸாமுக்கு நல்லாப் படிச்சு, நல்ல மார்க் வாங்கிடுவேன்!" என்றார் பாஸ்கர்.
ஆனால் ஆண்டுத் தேர்விலும், மூன்று பாடங்களில் ஃபெயில் ஆகி விட்டான் பாஸ்கர்.
தோல்வியுற்ற பாடத் தேர்வுகளை செப்டம்பரில் மீண்டும் எழுதுவதற்காக, இரவில் கண் விழித்துப் படித்துக் கொண்டிருந்தான் பாஸ்கர், கிரி அவனுடன் இருந்து அவனுக்கு உதவிக் கொண்டிருந்தான்.
"நான்தான் சீட்டாட்ட வெறியில புத்தி கெட்டுப் போய், சரியாப் படிக்காம ஃபெயில் ஆயிட்டு, செப்டம்பர் பரீட்சைக்குத் தயார் பண்ணிக்கிட்டிருக்கேன். நீ எதுக்குக் கண் முழிச்சுக்கிட்டு என்னோட உக்காந்திருக்க? உனக்கென்ன தலையெழுத்தா?" என்றான் பாஸ்கர், கிரியிடம்.
"என்னால முடிஞ்ச அளவுக்கு உனக்கு உதவி செய்யத்தான்!" என்றான் கிரி.
பொருட்பால்
நட்பியல்
அதிகாரம் 79
நட்பு
குறள் 787:
அழிவி னவைநீக்கி ஆறுய்த்து அழிவின்கண்
அல்லல் உழப்பதாம் நட்பு.
No comments:
Post a Comment