Sunday, June 25, 2023

724. சொன்னபடி ஏன் செய்யவில்லை?

பேராசிரியர் மருதமுத்துவைத் தன் அறைக்கு அழைத்தார், கல்லூரியில் அவன் பணி செய்யும் துறையின் தலைவரான கருணாகரன்.

"மருதமுத்து! இந்தச் சின்ன வயசில, இப்படி ஒரு நேஷனல் செமினார்ல பேச உங்களுக்கு வாய்ப்புக் கிடைச்சிருக்கறது பெரிய விஷயம். இதுக்குக் காரணம் உங்களோட பிரேக்த்ரூ ரிஸர்ச்தான். செமினார் நம்ம கல்லூரியில நடந்தாலும், பல பெரிய கல்லூரிகளிலேந்து பேராசிரியர்கள் வருவாங்க. சில பேர் தங்களோட அறிவையும், அனுபவத்தையும் பயன்படுத்திக் கண்டபடி கேள்விகள் கேட்டு, செமினார்ல பேசறவங்களைக் குழப்பி மட்டம் தட்டறதுக்காகவே வருவாங்க. கேள்விகளைக் கடைசியில வச்சுக்க சொல்லி, நான் முன்னாலேயே அறிவிச்சுடறேன். ஆனாலும், நீங்க பேசும்போது சில பேர் குறுக்கிட்டுக் கேள்வி கேட்கத்தான் செய்வாங்க. நீங்க பேசும்போது அப்படி யாராவது கேள்வி கேட்டா, கேள்விகளுக்குக் கடைசியில பதில் சொல்றதா சொல்லிடுங்க. கடைசியில, நேரம் இல்லேன்னு சொல்லி நான் செமினாரை முடிச்சுடறேன். சரியா?" என்றார் கருணாகரன்.

மருதமுத்து தலையாட்டினார்.

"நான் அவ்வளவு தூரம் சொல்லியும், நீங்க ஏன் கேள்விகளை அனுமதிச்சீங்க? அதைத் தவிர, சில பேராசிரியர்களை மேடைக்கு அழைச்சு, அவங்க சொல்ல வந்த விஷயத்தை விளக்க வேறு சொன்னீங்க!" என்றார் கருணாகரன், சற்றுக் கோபத்துடன்.

"சார்! அவங்க கேள்வி கேட்டதால, சில விஷயங்களை என்னால இன்னும் தெளிவா விளக்க முடிஞ்சது. நிறையப் படிச்ச அனுபவம் உள்ளவங்க மேடையேறிப் பேசி, தாங்க சொல்ல வந்த விஷயங்களை விளக்கினதால, என்னால புதுசா பல விஷயங்களைத் தெரிஞ்சுக்க முடிஞ்சுது!" என்றான் மருதமுத்து.

"நான் சொன்ன முறையைப் பின்பற்றலையேங்கறதுக்காகத்தான் கேட்டேன். ஆனா, நீங்க சொல்ற காரணங்கள் சரியாத்தான் இருக்கு. செமினார் முடிஞ்சதும் எல்லாருமே திருப்தியா இருந்த மாதிரிதான் இருந்தது. நீங்களும் உங்களைப் பத்தின ஒரு நல்ல மதிப்பை எல்லார் மனசிலேயும் உருவாக்கிட்டீங்க. பாராட்டுக்கள்!" என்றார் கருணாகரன், புன்னகையுடன்.

பொருட்பால்
அமைச்சியல்
அதிகாரம் 73 
அவையஞ்சாமை

குறள் 724:
கற்றார்முன் கற்ற செலச்சொல்லித் தாம்கற்ற
மிக்காருள் மிக்க கொளல்.

பொருள்:
கற்றவரின் முன் தான் கற்றவற்றை அவருடைய மனதில் பதியுமாறு சொல்லி, அதிகம் கற்றவரிடமிருந்து மேலும் கற்க வேண்டும்.

Read 'The Professor's Defiance' the English version of this story by the same author.

குறள் 723
அறத்துப்பால்                                                           காமத்துப்பால் 

Saturday, June 24, 2023

723. பாதியில் முடிந்த பேச்சு!

"இன்று நம் சங்கத்தின் ஆண்டுவிழாக் கூட்டத்தில் கலந்து கொண்டு சிறப்புரையாற்ற இருப்பவரைப் பற்றி நான் எந்த ஒரு அறிமுகமும் செய்யத் தேவையில்லை. நீங்கள் அனைவரும் அவரை நன்கு அறிவீர்கள்!" என்று கூறி அமர்ந்தார் மன்றத்தின் செயலாளர்.

பேச்சாளர் எழுந்து ஒலிபெருக்கியின் முன் வந்து நின்றார். முகத்தில் ஒரு சிரிப்பை வரவழைத்துக் கொண்டு பேச ஆரம்பித்தார்.

ஒரு சில விநாடிகளிலேயே அவருடைய பேச்சில் தடுமாற்றம் ஏற்பட்டது. கைக்குட்டையை எடுத்து முகத்தைத் துடைத்துக் கொண்டார். 

மறுபடியும் ஒரு புன்னகையை வரவழைத்துக் கொண்டு பேச்சைத் தொடர்ந்தார் அவர். அடுத்த சில விநாடிகளில் மீண்டும் அவருடைய பேச்சில் தடுமாற்றம் ஏற்பட்டது.

இரண்டு நிமிடங்களில் தன் பேச்சை முடித்துக் கொண்டு அமர்ந்தார் அவர்.

"மேஜர் சண்முகம் அவர்களுக்கு உடல்நிலை சரியில்லாததால், அவரால் நீண்ட நேரம் பேச முடியவில்லை. இன்னொரு சந்தர்ப்பத்தில் அவர் நம்மிடையே விரிவாகப் பேசுவார்!" என்று அறிவித்தார் செயலாளர்.

அவையில் அமர்ந்திருந்த தனராஜ், தன் பக்கத்தில் அமர்ந்திருந்த தன் நண்பன் பாபுவிடம், "செகரட்டரி சமாளிக்கறாரு. மைக் முன்னே வந்து நின்னதும், மேஜர் நர்வஸ் ஆயிட்டாரு. சமாளிச்சுப் பாத்தாரு முடியல, பாவம்!" என்றான்.

"என்னப்பா இது? கார்கில் போரில ரொம்ப வீரமாப் போராடித் தன் உயிரைப் பத்திக் கவலைப்படாம பல தீரச் செயல்களைச் செஞ்சவரு. அரசாங்கத்தில அவருக்கு நிறைய விருதுகள் எல்லாம் கொடுத்திருக்காங்க. அப்படிப்பட்ட வீரர் நமக்கு முன்னால பேச பயப்படறார்னா ஆச்சரியமா இருக்கே!" என்றான் பாபு.

"என்ன செய்யறது? பத்து பேருக்கு முன்னால மேடையில நின்னு பேசற தைரியம் சில பேருக்குத்தான் வரும்!" என்றான் தனராஜ்.

பொருட்பால்
அமைச்சியல்
அதிகாரம் 73 
அவையஞ்சாமை

குறள் 723:
பகையகத்துச் சாவார் எளியர் அரியர்
அவையகத்து அஞ்சா தவர்.

பொருள்:
பகைவர் உள்ள போர்க்களத்தில் மரணத்துக்கு அஞ்சாமல் சென்று போரிடத் துணிந்தவர் உலகத்தில் பலர் உண்டு, கற்றவரின் அவைக்களத்தில் பேச வல்லவர் சிலரே.

Read 'A 'Major' Embarrassment' the English version of this story by the same author.

குறள் 722
அறத்துப்பால்                                                           காமத்துப்பால் 

722. கற்றவர் அவையில்...

"அந்த கோச்சிங் இன்ஸ்டிட்யூட்ல வேலைக்காக இன்டர்வியூவுக்குப் போயிட்டு வந்தியே, என்ன ஆச்சு?" என்றான் மணவாளன், தன் நண்பன் யோகியிடம்.

"அங்கே வகுப்பு நடத்தற சீனியர்கள் மாணவர்கள் மாதிரி வகுப்பில உக்காந்திருப்பாங்களாம். அவங்களுக்கு நான் கிளாஸ் எடுக்கணுமாம்!" என்றான் யோகி, எரிச்சலுடன்.

"எடுக்க வேண்டியதுதானே?"

"சரி, எடுக்கலாம்னுதான் முயற்சி செஞ்சேன். ஆனா, அந்தப் பெரிசுங்கள்ளாம் வகுப்பில உக்காந்துக்கிட்டு, அவங்க ஏதோ மாணவர்கள் மாதிரி சந்தேகம் கேக்கறது, விளக்கினா, 'புரியல. மறுபடி விளக்க முடியுமா?' ன்னு கேக்கறது இப்படியெல்லாம் பண்ணி என்னை ரொம்ப டார்ச்சர் பண்ணினாங்க. போங்கடா, நீங்களும், உங்க வேலையும்னுட்டு வந்துட்டேன்!"

"அப்படியா?" என்றான் மணவாளன், யோசித்தபடி

"நீ யோசிக்கறதைப் பாத்தா, நீயும் போய் முயற்சி பண்ணலாமான்னு யோசிக்கற மாதிரி இருக்கே?" என்றான் யோகி.

"ஆமாம். முயற்சி பண்ணிப் பாக்கலாம்னு நினைக்கறேன்!" என்றான் மணவாளன்.

"'யாம் பெற்ற துன்பம் பெற வேண்டாம் இந்த வையகம்'னுதான் நான் நினைக்கறேன். நீயே போய் மாட்டிக்க விரும்பினா, நான் என்ன பண்றது?"

"கங்கிராசுலேஷன்ஸ், மிஸ்டர் மணவாளன். எங்க தேர்வாளர்கள் உங்களைத் தேர்ந்தெடுத்திருக்காங்க!" என்றார் கோச்சிங் நிறுவனத்தின் இயக்குனர்.

"நன்றி சார்!" என்றான் மணவாளன்.

"இங்கே ஆசிரியர்களா இருக்கறவங்க சிறந்த கல்வி அறிவு உள்ளவங்களா இருக்கணும்னு நாங்க நினைக்கறோம். அதனாலதான், இங்கே வேலைக்குச் சேர விரும்பறவங்களை எங்க சீனியர் ஃபெகல்டி உறுப்பினர்களுக்கு வகுப்பு எடுக்கணும்னு சொல்றோம். 

"வகுப்பில உக்காந்திருக்கற சீனியர் ஆசிரியர்கள் அதிகக் கல்வி அறிவு உள்ளவங்கங்கறதால, சில கூர்மையான கேள்விகளைக் கேப்பாங்க. அதோட வகுப்பு நடத்தறவர் சொல்றது சராசரிக்குக் கீழான மாணவர்களுக்கும் புரியுமான்னு பாப்பாங்க. அது மாதிரி மாணவர்களுக்கு எந்த விதமான சந்தேகங்கள் வரும்னு அவங்க நிலையிலே இருந்து யோசிச்சுக் கேள்வி கேப்பாங்க. 

"இந்தச் சவால்களையெல்லாம் வெற்றிகரமா சமாளிச்சு வகுப்பு எடுக்கறவங்களைத்தான் நாங்க தேர்ந்தெடுப்போம். அது மாதிரி வெற்றி பெறுகிறவங்க ரொம்பக் கொஞ்சம்தான். அதில நீங்க ஒத்தரா இருக்கீங்க. கல்வி கற்றவர்கள் பல பேர் இருக்காங்க. அவங்களுக்குள்ள சிறந்தவர்கள்ள நீங்களும் ஒத்தர்னு நீங்க பெருமைப்படலாம்!" 

இயக்குனர் கூறியதைக் கேட்டபோது, மணவாளனுக்குப் பெருமையாக இருந்தது.

பொருட்பால்
அமைச்சியல்
அதிகாரம் 73 
அவையஞ்சாமை

குறள் 722:
கற்றாருள் கற்றார் எனப்படுவர் கற்றார்முன்
கற்ற செலச்சொல்லு வார்.

பொருள்:
கற்றவர் முன், தாம் கற்றவற்றை, அவருடைய மனத்தில் பதியுமாறு சொல்ல வல்லவர், கற்றவர்களுக்குள் நன்கு கற்றவர் என்று மதித்துச் சொல்லப்படுவார்.

Read 'A Class for the Erudite' the English version of this story by the same author.

குறள் 721
அறத்துப்பால்                                                           காமத்துப்பால் 

Friday, June 23, 2023

721. தேதியை மாற்றியது ஏன்?

ஒரு பொது நிகழ்ச்சியில், ராம்குமாரைச் சந்தித்தான் செல்வரத்தினம் .

செல்வரத்தினம் 'அசோசியேஷன் ஆஃப் ஃபைனான்ஸ் புரொஃபஷனல்ஸ்' என்ற பெயர் கொண்ட நிதித்துறை வல்லுனர்களுக்கான ஒரு கூட்டமைப்பின் செயலர்.

ஒரு பெரிய நிறுவனத்தின் நிதித்துறையில் ஒரு மூத்த அதிகாரியாக இருந்த ராம்குமார், நிதித்துறை சார்ந்த ஆய்வுக் கட்டுரைகளை சில பொருளாதாரப் பத்திரிகைகளில் எழுதி இருக்கிறான் என்பதை அறிந்ததும், செல்வரத்தினம், "அப்படின்னா, எங்க அசோசியேஷன்ல நீங்க வந்து ஏதாவது ஒரு தலைப்பில பேசலாமே!" என்றார்.

"உங்க அசோசியேஷன் உறுப்பினர்கள் எல்லாரும் இந்தத் துறையில நிறைய அனுபவம் உள்ளவங்களா இருப்பாங்க. அவங்ககிட்ட நான் எதைப் பத்திப் பேச முடியும்?" என்றான் ராம்குமார்.

"உங்களுக்கு பிராக்டிகல் நாலட்ஜ் இருக்கு. அகாடமிக்காகவும் ஆய்வுக் கட்டுரைகள் எல்லாம் எழுதி இருக்கீங்க. நிச்சயமா, உங்களால பல பயனுள்ள விஷயங்களைப் பகிர்ந்துக்க முடியும்!" என்று செல்வரத்தினம் உறுதியாகக் கூறியதும், ராம்குமார் தயக்கத்துடன் ஒப்புக் கொண்டான்.

"அடுத்த வாரத்தில ஒரு தேதியை நிர்ணயிச்சு, ரெண்டு நாள்ள உங்களுக்கு ஃபோன் பண்றேன். தயாரா இருங்க!" என்றார் செல்வரத்தினம்.

"என்ன தலைப்பில பேசணும்?"

ஒரு நிமிஷம் யோசித்த செல்வரத்தினம், "இப்ப நிதி நிறுவனங்கள் தொடர்பா நிறைய மாறுதல்கள் செஞ்சு புதுசா ஒரு சட்டம் கொண்டு வந்திருக்காங்களே, அதைப் பத்திப் பேசுங்களேன்."

"சரி" என்று தலையாட்டிய ராம்குமார், "உங்க உறுப்பினர்கள் பற்றி ஒரு புரொஃபைலை எனக்கு அனுப்ப முடியுமா? அவங்க பின்னணி பத்தித் தெரிஞ்சா, அதுக்கு ஏத்தாப்பல என் பேச்சைத் தயார் செஞ்சுப்பேன்" என்றான்.

"வேற ஒரு நோக்கத்துக்காக அப்படிப்பட்ட ஒரு புரொஃபைல் தயார் பண்ணினேன். அதை உங்களுக்கு மின்னஞ்சல்ல அனுப்பிடறேன்" என்றார் செல்வரத்தினம்.

ரண்டு நாட்களுக்குப் பிறகு, செல்வரத்தினம் ராம்குரைத் தொலைபேசியில் அழைத்து, அவன் பேச வேண்டிய தேதியைத் தெரிவித்தார்.

"சார், தேதியை ஒரு வாரம் தள்ளிப்போட முடியுமா?" என்றான் ராம்குமார்.

"ஏன்?"

"என் ஆஃபீஸ்ல ஒரு முக்கியமான வேலை வந்துடுச்சு. அடுத்த வாரம் முழுக்க எனக்கு நிறைய வேலை இருக்கும்."

"சரி. நான் இன்னும் கூட்டத்தோட தேதியை உறுப்பினர்களுக்கு அறிவிக்கல. 14-ஆம் தேதிக்கு பதிலா, 21-ஆம் தேதி வச்சுக்கலாமா?" என்றார் செல்வரத்தினம்.

"சரி சார்!" என்றான் ராம்குமார்.

"ராம்குமார்! உங்க பேச்சு ரொம்பப் பிரமாதமா அமைஞ்சு போச்சு. எல்லாரும் ரொம்பப் பாராட்டினாங்க" என்றார் செல்வரத்தினம், தொலைபேசியில்.

"நன்றி சார். நான் பேசி முடிச்சப்புறம், அரங்கத்திலேயே பல பேர் எங்கிட்ட வந்து தங்களோட பாராட்டுகளைத் தெரிவிச்சங்க. இந்த வாய்ப்புக்கு நான் உங்களுக்குத்தான் நன்றி சொல்லணும்."

"ஆமாம். ஏன் தேதியை ஒரு வாரம் தள்ளிப் போடச் சொன்னீங்க?" என்றார் செல்வரத்தினம், திடீரென்று.

"அதான் சொன்னேனே சார்..."

"ஆஃபீஸ்ல திடீர்னு வேலை வந்துடுச்சுன்னு சொன்னீங்க. அது காரணமா இருக்காதுன்னு நினைக்கிறேன். போன வாரம் தற்செயலா உங்க ஆஃபீஸ் பக்கம் போனப்ப, உங்களைப் பாக்கலாம்னு உங்க ஆஃபீசுக்குப் போனேன். நீங்க லீவுன்னு சொன்னாங்க. ஆஃபீஸ்ல முக்கியமான வேலை இருக்கச்சே, எப்படி லீவு போட முடியும்? சொல்லுங்க!"

"நீங்க அனுப்பின உங்க அசோசியேஷன் உறுப்பினர்களோட புரொஃபைலைப் பார்த்தேன். உங்க உறுப்பினர்கள்ள சார்ட்டர்ட் அக்கவுன்டன்ட்ஸ், காஸ்ட் அக்கவுன்டன்ட்ஸ் எல்லாம் இருக்காங்க. அவங்கள்ள பல பேருக்கு நிதி நிறுவனங்கள் பற்றின சட்டத்தில அறிவிக்கப்பட்டிருக்கிற மாறுதல்கள் பற்றி நல்லாவே தெரிஞ்சிருக்கும். அதனால, நான் அந்த சட்டத்தைப் பத்தி சொல்ற விஷயங்கள்ள ஒரு சின்னத் தப்பு இருந்தா கூட, அவங்க கண்டுபிடிச்சுடுவாங்க. அதனாலதான், ஒரு சின்னப் பிழை கூட இல்லாம பேசணும், அதுக்கு இன்னும் கொஞ்சம் நேரம் எடுத்துக்கிட்டு என் பேச்சைத் தயாரிக்கணும்னு நினைச்சேன்!" என்றான் ராம்குமார், சற்று சங்கடத்துடன்.

"ஏதோ நமக்குத் தெரிஞ்ச அளவில பேசிட்டுப் போகலாம்னு நினைக்காம, ஒரு சின்னத் தப்பு கூட வரக் கூடாதுங்கறதுக்காக, நேரம் எடுத்துக்கிட்டு விரிவா உங்க பேச்சை தயார் பண்ணி இருக்கீங்க. நீங்க ஆஃபீசுக்கு லீவு போட்டது கூட இந்தப் பேச்சைத் தயாரிக்கறதுக்காகத்தான் இருக்கும்னு நினைக்கிறேன். உங்களோட சின்சியரிடி, கமிட்மென்ட் இதையெல்லாம் நான் ரொம்பப் பாராட்டறேன்" என்றார் செல்வரத்தினம், உண்மையான உணர்வுடன்.

பொருட்பால்
அமைச்சியல்
அதிகாரம் 73 
அவையஞ்சாமை

குறள் 721:
வகையறிந்து வல்லவை வாய்சோரார் சொல்லின்
தொகையறிந்த தூய்மை யவர்.

பொருள்:
சொற்களை அளவறிந்து உரைத்திடும் தூயவர்கள், அவையிலிருப்போரின் வகையறியும் ஆற்றல் உடையவராயிருப்பின், பிழை நேருமாறு பேச மாட்டார்கள்.

Read 'Why Did Ramkumar Lie?' the English version of this story by the same author.

குறள் 720
அறத்துப்பால்                                                           காமத்துப்பால் 

Thursday, June 22, 2023

720. மனமகிழ் மன்றம்!

ஒரு பேச்சாளர் என்ற முறையில் திருச்சிற்றம்பலத்துக்குப் பல அமைப்புகளிலிருந்தும் அழைப்பு வரும். அதுபோல்தான், அந்த மனமகிழ் மன்றத்திலிருந்தும் வந்தது.

மனமகிழ் மன்றம் என்ற பெயர் இருந்ததால், நகைச்சுவைத் தலைப்பில் பேசுவதுதான் பொருத்தமாக இருக்கும் என்று நினைத்து, 'புகழ் என்னும் போதை' என்ற தலைப்பில், நகைச்சுவையுடன் கூறிய ஒரு உரையைத் தயார் செய்து கொண்டு போனார் திருச்சிற்றம்பலம்.

சொற்பொழிவு முடிந்து திருச்சிற்றம்பலம் வீட்டுக்குள் நுழைந்ததும், அவர் மனைவி வானதி, "ஏன் ரொம்ப சோர்வா இருக்கீங்க? உடம்பு சரியில்லையா?" என்றாள்.

"அதெல்லாம் ஒண்ணுமில்லை" என்று கூறிக் கொண்டே சாய்வு நாற்காலியில் சாய்ந்து கொண்டார் திருச்சிற்றம்பலம். 

"ஜுரம் இருக்கா என்ன?" என்றபடியே அவர் நெற்றியைத் தொட்டுப் பார்த்தாள் வானதி.

"அதெல்லாம் ஒண்ணுமில்ல. ஏதோ பேசக் கூப்பிட்டாங்களேன்னு போனேன். இவ்வளவு மட்டமான ஒரு கூட்டத்தை நான் பாத்ததில்ல!" என்றார் திருச்சிற்றம்பலம்.

"ஏன்? என்ன ஆச்சு?"

"அது உறுப்பினர்கள் வந்து குடிச்சிட்டு, அரட்டை அடிச்சுட்டு, சீட்டாடிட்டுப் போற கிளப். அந்த செகரெட்டரி ஏதோ நல்ல எண்ணத்தில ஒரு சொற்பொழிவை ஏற்பாடு பண்ணிட்டாரு. கூட்டம் முடிஞ்சப்பறம்தான் மது சப்ளைன்னு சொல்லிட்டாரு போலருக்கு. கூட்டத்துக்கு வந்த அத்தனை பேரும் கூட்டம் ஆரம்பிச்ச உடனேயே கைக்கடிகாரத்தைப் பார்க்க ஆரம்பிச்சுட்டாங்க. 

"நான் பாட்டுக்கு மேடையில பேசிக்கிட்டிருக்கேன். அவங்க தங்களுக்குள்ள பேசிக்கறாங்க. செகரட்டரி எவ்வளவோ தடவை சொல்லியும் அவங்க கேக்கல. நான் நகைச்சுவையாப் பேசிக்கிட்டிருக்கேன். ஆனா, அதை யாரும் ரசிச்ச மாதிரி தெரியல. ஏதோ இங்கே ஒரு மூலையில, அங்கே ஒரு மூலையிலன்னு சில பேர்தான் என் பேச்சைக் கேட்டாங்க. 

"நான் வேற 'புகழ் என்னும் போதை'ன்னு தலைப்பு வச்சிட்டேனா, ஒத்தர் எழுந்து கேக்கறாரு, 'ஏன் சார், புகழ் போதையிலேயும் விஸ்கி போதை அளவுக்கு கிக் இருக்குமா?'ன்னு! ஒரு மணி நேரம் பேசத் தயார் பண்ணிக்கிட்டுப் போனவன், அரை மணி நேரத்தில முடிச்சுட்டேன். 

"நான் கிளம்பறப்ப, உறுப்பினர்கள் அது மாதிரி நடந்துக்கிட்டதுக்காக செகரட்டரி எங்கிட்ட வருத்தம் தெரிவிச்சாரு. 'முதல் தடவையா எங்க மன்றத்தில ஒரு பேச்சு ஏற்பாடு செஞ்சோம், அது இப்படி ஆயிடுச்சே'ன்னு வருத்தப்பட்டாரு. 'இதுவே முதலும், கடைசியுமா இருக்கட்டும். இனிமே யாரையும் கூப்பிட்டுப் பேசச் சொல்லாதீங்க!'ன்னு சொல்லிட்டு வந்தேன். நல்ல விருந்து தயார் பண்ணிக்கிட்டுப் போய், அழுக்கான முற்றத்தில கொட்டிட்டு வந்த மாதிரி இருக்கு!" என்று புலம்பினார் திருச்சிற்றம்பலம்.

பொருட்பால்
அமைச்சியல்
அதிகாரம் 72 
அவையறிதல்

குறள் 720:
அங்கணத்துள் உக்க அமிழ்தற்றால் தங்கணத்தார்
அல்லார்முன் கோட்டி கொளல்.

பொருள்:
தன் இனத்தார் அல்லாதவரின் கூட்டத்தின் முன் ஒரு பொருளைப் பற்றிப் பேசுதல், தூய்மையில்லாத முற்றத்தில் சிந்திய அமிழ்தம் போன்றது.

Read 'A Speaker's Experience' the English version of this story by the same author.

குறள் 719
அறத்துப்பால்                                                           காமத்துப்பால் 

Wednesday, June 21, 2023

719. இளம் பேச்சாளருக்கு ஒரு அறிவுரை!

இலக்கிய விழாவில் சிறப்பாகப் பேசிய அந்த இளம் பேச்சாளரைப் பாராட்டிப் பலரும் பேசினர்.

இறுதியாகப் பேசிய புலவர் செந்தில்நாதன், "பேச்சாளர்களுக்கு நிறைய வாய்ப்புகள் வரும். ஆனா, எல்லா வாய்ப்புகளையும் ஏற்றுக் கொள்ளக் கூடாது. கற்றவர்கள், அல்லது பேச்சாளர் சொல்வதைக் கேட்க ஆர்வமுள்ளவர்கள் ஆகியோர் உள்ள அவையில் மட்டுமே பேச வேண்டும். அறிவற்றவர்கள் அல்லது சிறுமதி படைத்தவர்கள் நிறைந்த அவைகளில் பேச வாய்ப்புக் கிடைத்தால், அந்த வாய்ப்பை உடனே நிராகரிக்க வேண்டும். இந்த இளம் பேச்சாளருக்கு நான் கூற விரும்பும் அறிவுரை இதுதான்!" என்றார்.

நிகழ்ச்சி முடிந்ததும், "என்ன செந்தில், இப்படி ஒரு அறிவுரையைச் சொல்லி இருக்கீங்க? எந்த வாய்ப்பு வருதோ, அதைப் பயன்படுத்திக்கிட்டாத்தானே, ஒரு இளம் பேச்சாளருக்குப் பெயரும் புகழும் கிடைக்கும்?" என்றார் செந்தில்நாதனின் நீண்ட நாள் நண்பரான கோகுல்.

"என் இளம் வயசில நானும் அப்படி நினைச்சுத்தான் எல்லா வாய்ப்புகளையும் ஏத்துக்கிட்டேன், கோகுல்! ஆனா, ஆர்வம் இல்லாதவங்க மத்தியில பேசினா மனச்சோர்வுதான் வரும்னு புரிஞ்சுக்கிட்டேன். அப்புறம்தான், அது மாதிரி கூட்டங்கள்ள பேசறதைத் தவிர்க்க ஆரம்பிச்சேன்!"

"பேச்சாளருக்கு மனச்சோர்வு ஏற்படும்படி என்ன நடக்கும்?"

"நல்ல ஆடியன்ஸா இருந்தா, பேசறதை ஆர்வத்தோட கேட்பாங்க. நான் பேசற விஷயம் சில பேருக்கு சுவாரசியமா இல்லேன்னாலும், அவங்க கூட ஒரு மரியாதைக்காக மௌனமா கேட்டுக்கிட்டிருப்பாங்க. மோசமான ஆடியன்ஸ்னா, தங்களுக்கு ஆர்வம் இல்லைங்கறதை வெளிப்படையாக் காட்டிப்பாங்க. சோம்பல் முறிப்பாங்க. இருப்புக் கொள்ளாத மாதிரி உடம்பை அசைச்சுக்கிட்டே இருப்பாங்க. பக்கத்தில இருக்கறவங்ககிட்ட பேசுவாங்க. சில சமயம், பேச்சாளரைக் கேலி செஞ்சு பேசற மாதிரி, பேச்சாளர் முகத்தைப் பாத்துக்கிட்டே, பக்கத்தில இருக்கறவங்ககிட்ட சிரிச்சுக்கிட்டே ஏதாவது சொல்லுவாங்க. எல்லாத்துக்கும் மேல, ஆர்வமாக் கேக்கறவங்களையும் கேக்க விடாம, ஏதாவது கவனத் திருப்பல்களை செஞ்சுக்கிட்டிருப்பாங்க. இப்ப செல்ஃபோன் வேற இருக்கு. கேக்கணுமா?"

"உங்களை மாதிரி சிறந்த பேச்சாளருக்குக் கூட இப்படிப்பட்ட அனுபவங்கள் நேர்ந்திருக்கா?" என்றார் கோகுல், வியப்புடன்.

"நான் சொன்னது எல்லாமே என் கூட்டங்கள்ள நடந்த விஷயங்களைத்தான்!" என்றார் செந்தில்நாதன், சிரித்தபடி.

"ஆச்சரியமா இருக்கே!? நானே உங்களைப் பல கூட்டங்களுக்குப் பேச அழைச்சிருக்கேன். சில சமயம், நேரம் இல்லை, உடல்நிலை சரியில்லைன்னு சொல்லி, சில அழைப்புகளை நீங்க ஏத்துக்கலை. அதுக்கெல்லாம் இதுதான் காரணமா?" என்றார் கோகுல்.

"கோகுல், நீங்க என் நண்பர்!" என்று சொல்லிச் சிரித்தார் செந்தில்நாதன். 'நீங்க ஏற்பாடு செய்த பல கூட்டங்களில்தான் எனக்கு அப்படிப்பட்ட அனுபவம் ஏற்பட்டிருக்கிறதுங்கறதை, என் நண்பரான உங்ககிட்ட எப்படிச் சொல்ல முடியும்?' என்று மனதில் நினைத்துக் கொண்டே.

பொருட்பால்
அமைச்சியல்
அதிகாரம் 72 
அவையறிதல்

குறள் 719:
புல்லவையுள் பொச்சாந்தும் சொல்லற்க நல்லவையுள்
நன்குசலச் சொல்லு வார்.

பொருள்:
நல்லோர் நிறைந்த அவையில் மனத்தில் பதியும்படி கருத்துக்களை சொல்லும் வல்லமை பெற்றவர்கள், அறிவற்ற சிறியோர் உள்ள அவையில் மறந்தும் பேச வேண்டாம்.

Read 'An Advice to a Budding Speaker' the English version of this story by the same author.

குறள் 718
அறத்துப்பால்                                                           காமத்துப்பால் 

718. மாலை நேர வகுப்புகள்

ஆறுமுகம் பள்ளியிலிருந்து வீட்டுக்கு வரும்போது மாலை மணி 7 ஆகி விட்டது.

"ஏங்க இவ்வளவு நேரமாயிடுச்சு?" என்றாள் அவர் மனைவி மேகலா.

"படிப்பில பின்தங்கி இருக்கற மாணவங்களுக்காக ஸ்பெஷல் கிளாஸ் ஆரம்பிச்சிருக்காங்க. இனிமே, தினமும் இந்த நேரத்துக்குத்தான் வீட்டுக்கு வர முடியும். சரி. கொஞ்சம் காப்பி இருந்தா கொடு. மரத்தடியில எல்லாரும் காத்துக்கிட்டிருப்பாங்க"

காப்பியுடன் வந்த மேகலா, "ஏங்க, தினமும் லேட்டாகும்னு சொல்றீங்க. இந்த மாலை நேர வகுப்புகளை நிறுத்திக்கலாமே!" என்றாள்.

"நான் திரும்பி வந்தப்பறம் இதைப் பத்திப் பேசலாம்" என்றபடியே காப்பியை அவசரமாகக் குடித்து விட்டுக் கிளம்பினார் ஆறுமுகம்.

ரவு 8 மணிக்கு மேல் வீடு திரும்பியதும், இரவு உணவை முடித்துக் கொண்டு கூடத்தில் வந்து அமர்ந்தார் ஆறுமுகம்.

"காலையிலேந்து சாயந்திரம் வரைக்கும் பள்ளிக்கூடத்தில வகுப்புகள் எடுக்கறீங்க. அப்புறம், சாயந்திரம் ஒரு மணி நேரம் ஆத்தங்கரை மரத்தடியில உக்காந்துக்கிட்டு, சின்னவங்க, பெரியவங்கன்னு வயசு வித்தியாசம் பாக்காம ஊர்ல நிறைய பேரைக் கூப்பிட்டு வச்சுக்கிட்டு வகுப்பு எடுக்கறீங்க. இப்ப, பள்ளிக்கூடத்தில ஒரு மணி நேரம் கூடுதலா வகுப்பு நடத்த வேண்டி இருக்கு. இந்த உபதேச வகுப்புகளை நிறுத்திக்கலாமே!" என்றாள் மேகலா, அவர் அருகில் வந்து அமர்ந்தபடியே.

"மேகலா! நான் பண்றது உபதேசம் இல்லை. வாழ்க்கையைப் பத்தின பல உண்மைகள், இயற்கையோட இசைந்து வாழறது, நல்ல பண்புகளைக் கடைப்பிடிக்கிறதுன்னு எனக்குத் தெரிஞ்ச பல விஷயங்களை எடுத்துச் சொல்றேன். சின்னவங்க, பெரியவங்கன்னு பல பேரும் வந்து அதை ஆர்வமாக் கேட்டுக்கறாங்க. இந்த விஷயங்களை நான் பள்ளிக்கூடத்தில சொல்ல முயற்சி செஞ்சப்ப, அங்கே இருந்த மாணவர்கள், 'இதெல்லாம் வேண்டாம் சார்! பரீட்சைக்குத் தேவையானதை மட்டும் சொல்லிக் கொடுங்க'ன்னு சொல்லிட்டாங்க. ஆனா, படிச்சவங்க, படிக்காதவங்க, பெரியவங்க, சின்னவங்கன்னு ஊர்ல பல பேர் நான் சொல்ற விஷயங்களோட முக்கியத்துவத்தைப் புரிஞ்சுக்கிட்டு, அதையெல்லாம் ஆர்வமாக் கேட்டு அதையெல்லாம் வாழ்க்கையில கடைப்பிடிக்க ஆர்வமா இருக்காங்க. அதனாலதான் அவங்ககிட்ட பேசறதை நான் விரும்பறேன். செடி வளருவதைப் பாத்தா நாம இன்னும் ஆர்வமா அதுக்குத் தண்ணி ஊத்துவோம் இல்ல, அது மாதிரிதான். எனக்குக் கிடைக்கிற  நேரம் குறைஞ்சுட்டாலும் இந்த மாலை நேர வகுப்புகளை நான் நிறுத்த விரும்பல!" என்றார் ஆறுமுகம்.

பொருட்பால்
அமைச்சியல்
அதிகாரம் 72 
அவையறிதல்

குறள் 718:
உணர்வ துடையார்முன் சொல்லல் வளர்வதன்
பாத்தியுள் நீர்சொரிந் தற்று.

பொருள்:
உணர்ந்து கொள்ளக் கூடிய ஆற்றல் உள்ளவர்களின் முன்னிலையில் பேசுதல், வளரக் கூடிய பயிர் உள்ள பாத்தியில் நீர் பாய்ச்சுவது போலப் பயன் விளைக்கும்.

Read 'The Riverbank Lectures' the English version of this story by the same author.

அறத்துப்பால்                                                           காமத்துப்பால் 

1080. 'தன்மானத் தலைவரி'ன் திடீர் முடிவு!

தன் அரசியல் வாழ்க்கையின் துவக்கத்தில் இரண்டு மூன்று கட்சிகளில் இருந்து விட்டு, அங்கு தனக்கு உரிய மதிப்புக் கிடைக்கவில்லை என்பதால், 'மக்க...