பேச்சாளர் எழுந்து ஒலிபெருக்கியின் முன் வந்து நின்றார். முகத்தில் ஒரு சிரிப்பை வரவழைத்துக் கொண்டு பேச ஆரம்பித்தார்.
ஒரு சில விநாடிகளிலேயே அவருடைய பேச்சில் தடுமாற்றம் ஏற்பட்டது. கைக்குட்டையை எடுத்து முகத்தைத் துடைத்துக் கொண்டார்.
மறுபடியும் ஒரு புன்னகையை வரவழைத்துக் கொண்டு பேச்சைத் தொடர்ந்தார் அவர். அடுத்த சில விநாடிகளில் மீண்டும் அவருடைய பேச்சில் தடுமாற்றம் ஏற்பட்டது.
இரண்டு நிமிடங்களில் தன் பேச்சை முடித்துக் கொண்டு அமர்ந்தார் அவர்.
"மேஜர் சண்முகம் அவர்களுக்கு உடல்நிலை சரியில்லாததால், அவரால் நீண்ட நேரம் பேச முடியவில்லை. இன்னொரு சந்தர்ப்பத்தில் அவர் நம்மிடையே விரிவாகப் பேசுவார்!" என்று அறிவித்தார் செயலாளர்.
அவையில் அமர்ந்திருந்த தனராஜ், தன் பக்கத்தில் அமர்ந்திருந்த தன் நண்பன் பாபுவிடம், "செகரட்டரி சமாளிக்கறாரு. மைக் முன்னே வந்து நின்னதும், மேஜர் நர்வஸ் ஆயிட்டாரு. சமாளிச்சுப் பாத்தாரு முடியல, பாவம்!" என்றான்.
"என்னப்பா இது? கார்கில் போரில ரொம்ப வீரமாப் போராடித் தன் உயிரைப் பத்திக் கவலைப்படாம பல தீரச் செயல்களைச் செஞ்சவரு. அரசாங்கத்தில அவருக்கு நிறைய விருதுகள் எல்லாம் கொடுத்திருக்காங்க. அப்படிப்பட்ட வீரர் நமக்கு முன்னால பேச பயப்படறார்னா ஆச்சரியமா இருக்கே!" என்றான் பாபு.
"என்ன செய்யறது? பத்து பேருக்கு முன்னால மேடையில நின்னு பேசற தைரியம் சில பேருக்குத்தான் வரும்!" என்றான் தனராஜ்.
பொருட்பால்
அமைச்சியல்
அதிகாரம் 73
அவையஞ்சாமை
குறள் 723:
பகையகத்துச் சாவார் எளியர் அரியர்
அவையகத்து அஞ்சா தவர்.
பொருள்:
பகைவர் உள்ள போர்க்களத்தில் மரணத்துக்கு அஞ்சாமல் சென்று போரிடத் துணிந்தவர் உலகத்தில் பலர் உண்டு, கற்றவரின் அவைக்களத்தில் பேச வல்லவர் சிலரே.
No comments:
Post a Comment