"அங்கே வகுப்பு நடத்தற சீனியர்கள் மாணவர்கள் மாதிரி வகுப்பில உக்காந்திருப்பாங்களாம். அவங்களுக்கு நான் கிளாஸ் எடுக்கணுமாம்!" என்றான் யோகி, எரிச்சலுடன்.
"எடுக்க வேண்டியதுதானே?"
"சரி, எடுக்கலாம்னுதான் முயற்சி செஞ்சேன். ஆனா, அந்தப் பெரிசுங்கள்ளாம் வகுப்பில உக்காந்துக்கிட்டு, அவங்க ஏதோ மாணவர்கள் மாதிரி சந்தேகம் கேக்கறது, விளக்கினா, 'புரியல. மறுபடி விளக்க முடியுமா?' ன்னு கேக்கறது இப்படியெல்லாம் பண்ணி என்னை ரொம்ப டார்ச்சர் பண்ணினாங்க. போங்கடா, நீங்களும், உங்க வேலையும்னுட்டு வந்துட்டேன்!"
"அப்படியா?" என்றான் மணவாளன், யோசித்தபடி
"நீ யோசிக்கறதைப் பாத்தா, நீயும் போய் முயற்சி பண்ணலாமான்னு யோசிக்கற மாதிரி இருக்கே?" என்றான் யோகி.
"ஆமாம். முயற்சி பண்ணிப் பாக்கலாம்னு நினைக்கறேன்!" என்றான் மணவாளன்.
"'யாம் பெற்ற துன்பம் பெற வேண்டாம் இந்த வையகம்'னுதான் நான் நினைக்கறேன். நீயே போய் மாட்டிக்க விரும்பினா, நான் என்ன பண்றது?"
"கங்கிராசுலேஷன்ஸ், மிஸ்டர் மணவாளன். எங்க தேர்வாளர்கள் உங்களைத் தேர்ந்தெடுத்திருக்காங்க!" என்றார் கோச்சிங் நிறுவனத்தின் இயக்குனர்.
"நன்றி சார்!" என்றான் மணவாளன்.
"இங்கே ஆசிரியர்களா இருக்கறவங்க சிறந்த கல்வி அறிவு உள்ளவங்களா இருக்கணும்னு நாங்க நினைக்கறோம். அதனாலதான், இங்கே வேலைக்குச் சேர விரும்பறவங்களை எங்க சீனியர் ஃபெகல்டி உறுப்பினர்களுக்கு வகுப்பு எடுக்கணும்னு சொல்றோம்.
"வகுப்பில உக்காந்திருக்கற சீனியர் ஆசிரியர்கள் அதிகக் கல்வி அறிவு உள்ளவங்கங்கறதால, சில கூர்மையான கேள்விகளைக் கேப்பாங்க. அதோட வகுப்பு நடத்தறவர் சொல்றது சராசரிக்குக் கீழான மாணவர்களுக்கும் புரியுமான்னு பாப்பாங்க. அது மாதிரி மாணவர்களுக்கு எந்த விதமான சந்தேகங்கள் வரும்னு அவங்க நிலையிலே இருந்து யோசிச்சுக் கேள்வி கேப்பாங்க.
"இந்தச் சவால்களையெல்லாம் வெற்றிகரமா சமாளிச்சு வகுப்பு எடுக்கறவங்களைத்தான் நாங்க தேர்ந்தெடுப்போம். அது மாதிரி வெற்றி பெறுகிறவங்க ரொம்பக் கொஞ்சம்தான். அதில நீங்க ஒத்தரா இருக்கீங்க. கல்வி கற்றவர்கள் பல பேர் இருக்காங்க. அவங்களுக்குள்ள சிறந்தவர்கள்ள நீங்களும் ஒத்தர்னு நீங்க பெருமைப்படலாம்!"
இயக்குனர் கூறியதைக் கேட்டபோது, மணவாளனுக்குப் பெருமையாக இருந்தது.
பொருட்பால்
அமைச்சியல்
அதிகாரம் 73
அவையஞ்சாமை
குறள் 722:
கற்றாருள் கற்றார் எனப்படுவர் கற்றார்முன்
கற்ற செலச்சொல்லு வார்.
பொருள்:
கற்றவர் முன், தாம் கற்றவற்றை, அவருடைய மனத்தில் பதியுமாறு சொல்ல வல்லவர், கற்றவர்களுக்குள் நன்கு கற்றவர் என்று மதித்துச் சொல்லப்படுவார்.
No comments:
Post a Comment