சற்குரு மேடையிலிருந்து இறங்கியதும், சிலர் அவன் கையைப் பிடித்து, "நல்லா இருந்தது!" என்றனர். ஆனால், அவை ஒப்புக்குக் கூறப்பட்ட வார்த்தைகளாக அவனுக்குத் தோன்றின.
கூட்டம் சிறிது கலைந்ததும், அவன் நண்பன் குலசேகரன் அவன் அருகில் வந்து, "உன் பிரசன்டேஷன் நல்லாத்தான் இருந்தது. ஆனா, சில பேர் கண்டபடி கேள்வி கேட்டு உன்னைக் குழப்பிட்டாங்க!" என்றான்.
"ரொம்ப கஷ்டப்பட்டு என் பேச்சைத் தயாரிச்சுக்கிட்டு வந்தேன். ஒரு சின்னத் தப்புக் கூட வரக் கூடாதுன்னு ரொம்ப கவனமா இருந்தேன். ஆனா, சில பேர் பொருத்தமில்லாத கேள்விகள் எல்லாம் கேட்டாங்க. சில கேள்விகளுக்கெல்லாம் எனக்கு என்ன பதில் சொல்றதுன்னே தெரியல. கடைசியில பாத்தா, என் பிரசன்டேஷன் முழுமையாக இல்லாத மாதிரி ஒரு இம்ப்ரஷன் ஏற்பட்டுடுச்சு. அதான் எனக்கு வருத்தமா இருக்கு" என்றான் சற்குரு, சற்று வருத்தத்துடன்.
சற்றுத் தொலைவிலிருந்து அவர்கள் பேச்சைக் கேட்டுக் கொண்டிருந்த ஒரு முதியவர், சற்குருவின் அருகில் வந்து, "உங்களுக்கு ஆட்சேபணை இல்லேன்னா, நான் ஒண்ணு சொல்லலாமா?" என்றார்.
"நிச்சயமா சார்!" என்றான் சற்குரு.
"வாங்க, இங்கேயே ஒரு ஓரமா உக்காந்து பேசலாம்!" என்றார் அவர்.
மூவரும் அமர்ந்ததும், "நான் ஒரு சாதாண மனுஷன்தான். நிறைய கூட்டங்களுக்கும், கருத்தரங்கங்களுக்கும் போறவன் என்கிற முறையில, நான் கவனிச்ச விஷயங்கள் அடிப்படையில சில கருத்துக்களைச் சொல்றேன். இன்னிக்கு உங்களோட பிரசன்டேஷன் ரொம்ப அற்புதமா இருந்தது. பொதுவா, இது மாதிரி கருத்தரங்களுக்கெல்லாம் பேச்சாளரைக் கேள்வி கேட்டு மடக்கறதுக்குன்னே சில பேர் வருவாங்க. அப்படிப்பட்ட சில பேர்தான் இன்னிக்கு உங்களைக் கேள்விகள் கேட்டுக் குழப்பப் பாத்தாங்க. பல கேள்விகளுக்கு நீங்க சரியாத்தான் பதில் சொன்னீங்க. ஆனா, அவங்க தர்க்கரீதியா சில கேள்விகள் கேட்டு உங்களை மடக்கினாங்க. நீங்க அதுக்கெல்லாம் தர்க்கரீதியா பதில் சொல்லாம, நீங்க சொன்னதை இன்னும் விளக்கமாச் சொன்னீங்க. அதனால, நீங்க அவங்களோட கேள்விகளுக்கு சரியா பதில் சொல்லலைங்கற மாதிரி ஒரு இம்ப்ரஷன் உண்டாயிடுச்சு. ஏன், உங்களுக்கே நீங்க சொன்ன பதில்கள் திருப்தியா இருந்திருக்காதே?" என்றார் அவர்.
"ஆமாம்."
"மதக் கோட்பாடுகள் பற்றின விவாதங்கள்ள சங்கரர், ராமானுஜர் மாதிரி சில மதத் தலைவர்கள் மாற்று மதத் தலைவர்களைத் தோற்கடிச்சதாப் படிச்சிருக்கோம். தங்களோட மதக் கோட்பாடுகளை விளக்கறதோட, தர்க்கத்தையும் பயன்படுத்தித்தான் அவங்க விவாதங்கள்ள ஜெயிச்சிருக்காங்க. அதனால, இது போன்ற கருத்தரங்கள்ள வெற்றிகரமாச் செயல்படணும்னா, நீங்க பேசற விஷயத்தைப் பத்தின நுணுக்கமான அறிவைத் தவிர, தர்க்கரீதியான அணுகுமுறையைப் பயன்படுத்தவும் நீங்க தெரிஞ்சுக்கணும். அனுபவமுள்ள பேச்சாளர்கள் பங்கு பெறுகிற கருத்தரங்கள்ள, அவங்க எப்படி தர்க்க அறிவைப் பயன்படுத்திக் கேள்வி கேக்கறவங்களோட வாயை அடைக்கறாங்கங்கறதைப் பாத்துக் கத்துக்கிட்டீங்கன்னா, அந்தத் திறமை உங்களுக்கும் வந்துடும். உங்ககிட்ட நிறைய விஷயம் இருக்கு. வாழ்த்துக்கள்!"
சற்குருவின் கையைப் பிடித்துக் குலுக்கி விட்டு விடைபெற்றார் அவர்.
பொருட்பால்
அமைச்சியல்
அதிகாரம் 73
அவையஞ்சாமை
குறள் 725:
ஆற்றின் அளவறிந்து கற்க அவையஞ்சா
மாற்றங் கொடுத்தற் பொருட்டு.
பொருள்:
அவையில் பேசும்போது, குறுக்கீடுகளுக்கு அஞ்சாமல், மறுமொழி சொல்வதற்கு ஏற்ற வகையில், இலக்கணமும், தருக்கமெனப்படும் அளவைத் திறமும் கற்றிருக்க வேண்டும்.
No comments:
Post a Comment