இறுதியாகப் பேசிய புலவர் செந்தில்நாதன், "பேச்சாளர்களுக்கு நிறைய வாய்ப்புகள் வரும். ஆனா, எல்லா வாய்ப்புகளையும் ஏற்றுக் கொள்ளக் கூடாது. கற்றவர்கள், அல்லது பேச்சாளர் சொல்வதைக் கேட்க ஆர்வமுள்ளவர்கள் ஆகியோர் உள்ள அவையில் மட்டுமே பேச வேண்டும். அறிவற்றவர்கள் அல்லது சிறுமதி படைத்தவர்கள் நிறைந்த அவைகளில் பேச வாய்ப்புக் கிடைத்தால், அந்த வாய்ப்பை உடனே நிராகரிக்க வேண்டும். இந்த இளம் பேச்சாளருக்கு நான் கூற விரும்பும் அறிவுரை இதுதான்!" என்றார்.
நிகழ்ச்சி முடிந்ததும், "என்ன செந்தில், இப்படி ஒரு அறிவுரையைச் சொல்லி இருக்கீங்க? எந்த வாய்ப்பு வருதோ, அதைப் பயன்படுத்திக்கிட்டாத்தானே, ஒரு இளம் பேச்சாளருக்குப் பெயரும் புகழும் கிடைக்கும்?" என்றார் செந்தில்நாதனின் நீண்ட நாள் நண்பரான கோகுல்.
"என் இளம் வயசில நானும் அப்படி நினைச்சுத்தான் எல்லா வாய்ப்புகளையும் ஏத்துக்கிட்டேன், கோகுல்! ஆனா, ஆர்வம் இல்லாதவங்க மத்தியில பேசினா மனச்சோர்வுதான் வரும்னு புரிஞ்சுக்கிட்டேன். அப்புறம்தான், அது மாதிரி கூட்டங்கள்ள பேசறதைத் தவிர்க்க ஆரம்பிச்சேன்!"
"பேச்சாளருக்கு மனச்சோர்வு ஏற்படும்படி என்ன நடக்கும்?"
"நல்ல ஆடியன்ஸா இருந்தா, பேசறதை ஆர்வத்தோட கேட்பாங்க. நான் பேசற விஷயம் சில பேருக்கு சுவாரசியமா இல்லேன்னாலும், அவங்க கூட ஒரு மரியாதைக்காக மௌனமா கேட்டுக்கிட்டிருப்பாங்க. மோசமான ஆடியன்ஸ்னா, தங்களுக்கு ஆர்வம் இல்லைங்கறதை வெளிப்படையாக் காட்டிப்பாங்க. சோம்பல் முறிப்பாங்க. இருப்புக் கொள்ளாத மாதிரி உடம்பை அசைச்சுக்கிட்டே இருப்பாங்க. பக்கத்தில இருக்கறவங்ககிட்ட பேசுவாங்க. சில சமயம், பேச்சாளரைக் கேலி செஞ்சு பேசற மாதிரி, பேச்சாளர் முகத்தைப் பாத்துக்கிட்டே, பக்கத்தில இருக்கறவங்ககிட்ட சிரிச்சுக்கிட்டே ஏதாவது சொல்லுவாங்க. எல்லாத்துக்கும் மேல, ஆர்வமாக் கேக்கறவங்களையும் கேக்க விடாம, ஏதாவது கவனத் திருப்பல்களை செஞ்சுக்கிட்டிருப்பாங்க. இப்ப செல்ஃபோன் வேற இருக்கு. கேக்கணுமா?"
"உங்களை மாதிரி சிறந்த பேச்சாளருக்குக் கூட இப்படிப்பட்ட அனுபவங்கள் நேர்ந்திருக்கா?" என்றார் கோகுல், வியப்புடன்.
"நான் சொன்னது எல்லாமே என் கூட்டங்கள்ள நடந்த விஷயங்களைத்தான்!" என்றார் செந்தில்நாதன், சிரித்தபடி.
"ஆச்சரியமா இருக்கே!? நானே உங்களைப் பல கூட்டங்களுக்குப் பேச அழைச்சிருக்கேன். சில சமயம், நேரம் இல்லை, உடல்நிலை சரியில்லைன்னு சொல்லி, சில அழைப்புகளை நீங்க ஏத்துக்கலை. அதுக்கெல்லம் இதுதான் காரணமா?" என்றார் கோகுல்.
"கோகுல், நீங்க என் நண்பர்!" என்று சொல்லிச் சிரித்தார் செந்தில்நாதன். 'நீங்க ஏற்பாடு செய்த பல கூட்டங்களில்தான் எனக்கு அப்படிப்பட்ட அனுபவம் ஏற்பட்டிருக்கிறதுங்கறதை, என் நண்பரான உங்ககிட்ட எப்படிச் சொல்ல முடியும்?' என்று மனதில் நினைத்துக் கொண்டே.
பொருட்பால்
அமைச்சியல்
அதிகாரம் 72
அவையறிதல்
குறள் 719:
புல்லவையுள் பொச்சாந்தும் சொல்லற்க நல்லவையுள்
நன்குசலச் சொல்லு வார்.
பொருள்:
நல்லோர் நிறைந்த அவையில் மனத்தில் பதியும்படி கருத்துக்களை சொல்லும் வல்லமை பெற்றவர்கள், அறிவற்ற சிறியோர் உள்ள அவையில் மறந்தும் பேச வேண்டாம்.
No comments:
Post a Comment