Wednesday, June 21, 2023

718. மாலை நேர வகுப்புகள்

ஆறுமுகம் பள்ளியிலிருந்து வீட்டுக்கு வரும்போது மாலை மணி 7 ஆகி விட்டது.

"ஏங்க இவ்வளவு நேரமாயிடுச்சு?" என்றாள் அவர் மனைவி மேகலா.

"படிப்பில பின் தங்கி இருக்கற மாணவங்களுக்காக ஸ்பெஷல் கிளாஸ் ஆரம்பிச்சிருக்காங்க. இனிமே தினமும் இந்த நேரத்துக்குத்தான் வீட்டுக்கு வர முடியும். சரி. கொஞ்சம் காப்பி இருந்தா கொடு. மரத்தடியில எல்லாரும் காத்துக்கிட்டிருப்பாங்க"

காப்பியுடன் வந்த மேகலா, "ஏங்க தினமும் லேட்டாகும்னு சொல்றீங்க. இந்த மாலை நேர வகுப்புகளை நிறுத்திக்கலாமே!" என்றாள்.

"நான் திரும்பி வந்தப்பறம் இதைப் பத்திப் பேசலாம்" என்றபடியே காப்பியை அவசரமாகக் குடித்து விட்டுக் கிளம்பினார் ஆறுமுகம்.

ரவு 8 மணிக்கு மேல் வீடு திரும்பியதும் இரவு உணவை முடித்துக் கொண்டு கூடத்தில் வந்து அமர்ந்தார் ஆறுமுகம்.

"காலையிலேந்து சாயந்திரம் வரைக்கும் பள்ளிக்கூடத்தில வகுப்புகள் எடுக்கறீங்க. அப்புறம் சாயந்திரம் ஒரு மணி நேரம் ஆத்தங்கரை மரத்தடியில உக்காந்துக்கிட்டு சின்னவங்க, பெரியவங்கன்னு வயசு வித்தியாசம் பாக்காம ஊர்ல நிறைய பேரைக் கூப்பிட்டு வச்சுக்கிட்டு வகுப்பு எடுக்கறீங்க. இப்ப பள்ளிக்கூடத்தில ஒரு மணி நேரம் கூடுதலா வகுப்பு நடத்த வேண்டி இருக்கு. இந்த உபதேச வகுப்புகளை நிறுத்திக்கலாமே!" என்றாள் மேகலா அவர் அருகில் வந்து அமர்ந்தபடியே.

"மேகலா! நான் பண்றது உபதேசம் இல்லை. வாழ்க்கையைப் பத்தின பல உண்மைகள், இயற்கையோட இசைந்து வாழறது, நல்ல பண்புகளைக் கடைப்பிடிக்கிறதுன்னு எனக்குத் தெரிஞ்ச பல விஷயங்களை எடுத்துச் சொல்றேன். சின்னவங்க, பெரியவங்கன்னு பல பேரும் வந்து அதை ஆர்வமாக் கேட்டுக்கறாங்க. இந்த விஷயங்களை நான் பள்ளிக்கூடத்தில சொல்ல முயற்சி செஞ்சப்ப, அங்கே இருந்த மாணவர்கள் எல்லாம், 'இதெல்லாம் வேண்டாம் சார்! பரீட்சைக்குத் தேவையானதை மட்டும் சொல்லிக் கொடுங்க'ன்னு சொல்லிட்டாங்க.ஆனா படிச்சவங்க, படிக்காதவங்க, பெரியவங்க, சின்னவங்கன்னு ஊர்ல பல பேரு நான் சொல்ற விஷயங்களோட முக்கியத்துவத்தைப் புரிஞ்சுக்கிட்டு, அதையெல்லாம் ஆர்வமாக் கேட்டு அதையெல்லாம் வாழ்க்கையில கடைப்பிடிக்க ஆர்வமா இருக்காங்க. அதனாலதான் அவங்ககிட்ட பேசறதை நான் விரும்பறேன். செடி வளருவதைப் பாத்தா நாம இன்னும் ஆர்வமா அதுக்குத் தண்ணி ஊத்துவோம் இல்ல அது மாதிரிதான். எனக்குக் கிடைக்கிற  நேரம் குறைஞ்சுட்டாலும் இந்த மாலை நேர வகுப்புகளை நான் நிறுத்த விரும்பல!" என்றார் ஆறுமுகம்.

பொருட்பால்
அரசியல் இயல்
அதிகாரம் 72 
அவையறிதல்

குறள் 718:
உணர்வ துடையார்முன் சொல்லல் வளர்வதன்
பாத்தியுள் நீர்சொரிந் தற்று.

பொருள்:
உணர்ந்து கொள்ளக்கூடிய ஆற்றல் உள்ளவர்களின் முன்னிலையில் பேசுதல், வளரக் கூடிய பயிர் உள்ள பாத்தியில் நீர் பாய்ச்சுவது போலப் பயன் விளைக்கும்.

அறத்துப்பால்                                                           காமத்துப்பால் 

No comments:

Post a Comment

1060. ஏன் உதவவில்லை?

"யார்கிட்ட உதவி கேக்கறதுன்னே தெரியல!" என்றான் பரந்தாமன். "யார்கிட்டயாவது கேட்டுத்தானே ஆகணும்? இன்னும் ரெண்டு நாளைக்குள்ள பணம்...