தேர்வுக்குழுவின் நான்கு உறுப்பினர்களும் தங்களுக்குள் பேசிக் கொண்டனர்.
"நாம நாலு பேர் இருக்கோம். ஷார்ட்லிஸ்ட் ஆனவங்களும் நாலு பேர் இருக்காங்க. நாம நாலு பேரும் ஆளுக்கு ஒத்தரைத் தேர்ந்தெடுத்தா எப்படி இருக்கும்?" என்றார் தேர்வுக்குழுவின் தலைவர் பத்மநாபன், வேடிக்கையாக.
"அப்படி நடந்தா, தலைவரான உங்க தேர்வை நாங்க மூணு பேரும் ஏத்துக்க வேண்டியதுதான்!" என்றார் செல்வகுமார் என்ற உறுப்பினர்.
"நோ, நோ! என்னோட தேர்வை எல்லாரும் ஏத்துகணுங்கறதை நான் ஏத்துக்க மாட்டேன்!" என்றார் பத்மநாபன்.
"சும்மா சொன்னேன் சார்!" என்றார் செல்வகுமார்.
"ஒரு தடவை எல்லாரையும் இன்டர்வியூ பண்ணியாச்சு. மறுபடி ஒவ்வொத்தர்கிட்டேயும் புதுசா எதைக் கேக்க முடியும்" என்றார் சூர்யகாந்த் என்ற உறுப்பினர்.
"எனக்கு ஒரு யோசனை தோணுது. நாலு பேரோட கல்வி அறிவு, திறமைகள், மென்ட்டல் ஆட்டிட்யூட் எல்லாத்தையும் நாம அசெஸ் பண்ணிட்டோம். நாலு பேரும் கிட்டத்தட்ட சமமான நிலையிலதான் இருக்காங்க. கற்ற கல்வியைப் பயன்படுத்தறது இந்த வேலைக்கு ரொம்ப முக்கியம். அதனால ஒவ்வொத்தரும் தான் கத்துக்கிட்டதை எப்படி அப்ளை பண்ணப் போறாருங்கறதைத்தான் நாம முக்கியமாப் பார்க்கணும். அதனால, அவங்க கற்ற கல்வி தொடர்பா ஒரு தலைப்பைக் கொடுத்து அந்தத் தலைப்பைப் பற்றி ஒவ்வொத்தரையும் அஞ்சு நிமிஷம் விளக்கச் சொல்லுவோம். யார் சிறப்பா விளக்கறாங்களோ, அவங்களைத் தேர்ந்தெடுப்போம். ஏன்னா, ஒத்தர் தான் கத்துக்கிட்ட விஷயத்தை எந்த அளவுக்கு சரியான வார்த்தைகளைப் பயன்படுத்தி, தெளிவா விளக்கறாரோ, அந்த அளவுக்கு அவரோட கல்வி சிறப்பானதுன்னுதானே பொருள்?" என்றார் சேகர் என்ற நான்காவது உறுப்பினர்.
"எக்ஸலன்ட் சஜஷன்!" என்றார் பத்மநாபன்.
செல்வகுமாரும், சூர்யகாந்த்தும் அதை ஆமோதிக்கும் விதமாகத் தலையசைத்தனர்.
பொருட்பால்
அமைச்சியல்
அதிகாரம் 72
அவையறிதல்
குறள் 717:
கற்றறிந்தார் கல்வி விளங்கும் கசடறச்
சொல்தெரிதல் வல்லார் அகத்து.
பொருள்:
ஒருவர் கற்றுத் தேர்ந்த கல்வியின் பெருமை அவர் பிழையற்ற சொற்களைத் தேர்ந்தெடுத்துப் பேசுவதில் வெளிப்படும்.
No comments:
Post a Comment