செல்வரத்தினம் 'அசோசியேஷன் ஆஃப் ஃபினான்ஷியல் புரொஃபஷனல்ஸ்' என்ற பெயர் கொண்ட நிதித்துறை வல்லுனர்களுக்கான ஒரு கூட்டமைப்பின் செயலர்.
ஒரு பெரிய நிறுவனத்தின் நிதித்துறையில் ஒரு மூத்த அதிகாரியாக இருந்த ராம்குமார், நிதித்துறை சார்ந்த ஆய்வுக் கட்டுரைகளை சில பொருளாதாரப் பத்திரிகைகளில் எழுதி இருக்கிறான் என்பதை அறிந்ததும், செல்வரத்தினம், "அப்படின்னா, எங்க அசோசியேஷன்ல நீங்க வந்து ஏதாவது ஒரு தலைப்பில பேசலாமே!" என்றார்.
"உங்க அசோசியேஷன் உறுப்பினர்கள் எல்லாரும் இந்தத் துறையில நிறைய அனுபவம் உள்ளவங்களா இருப்பாங்க. அவங்ககிட்ட நான் எதைப் பத்திப் பேச முடியும்?" என்றான் ராம்குமார்.
"உங்களுக்கு பிராக்டிகல் நாலட்ஜ் இருக்கு. அகாடமிக்காகவும் ஆய்வுக் கட்டுரைகள் எல்லாம் எழுதி இருக்கீங்க. நிச்சயமா, உங்களால பல பயனுள்ள விஷயங்களைப் பகிர்ந்துக்க முடியும்!" என்று செல்வரத்தினம் உறுதியாகக் கூறியதும், ராம்குமார் தயக்கத்துடன் ஒப்புக் கொண்டான்.
"அடுத்த வாரத்தில ஒரு தேதியை நிர்ணயிச்சு, ரெண்டு நாள்ள உங்களுக்கு ஃபோன் பண்றேன். தயாரா இருங்க!" என்றார் செல்வரத்தினம்.
"என்ன தலைப்பில பேசணும்?"
ஒரு நிமிஷம் யோசித்த செல்வரத்தினம், "இப்ப நிதி நிறுவனங்கள் தொடர்பா நிறைய மாறுதல்கள் செஞ்சு புதுசா ஒரு சட்டம் கொண்டு வந்திருக்காங்களே, அதைப் பத்திப் பேசுங்களேன்."
"சரி" என்று தலையாட்டிய ராம்குமார், "உங்க உறுப்பினர்கள் பற்றி ஒரு புரொஃபைலை எனக்கு அனுப்ப முடியுமா? அவங்க பின்னணி பத்தித் தெரிஞ்சா, அதுக்கு ஏத்தாப்பல என் பேச்சைத் தயார் செஞ்சுப்பேன்" என்றான்.
"வேற ஒரு நோக்கத்துக்காக அப்படிப்பட்ட ஒரு புரொஃபைல் தயார் பண்ணினேன். அதை உங்களுக்கு மின்னஞ்சல்ல அனுப்பிடறேன்" என்றார் செல்வரத்தினம்.
இரண்டு நாட்களுக்குப் பிறகு, செல்வரத்தினம் ராம்குரைத் தொலைபேசியில் அழைத்து, அவன் பேச வேண்டிய தேதியைத் தெரிவித்தார்.
"சார், தேதியை ஒரு வாரம் தள்ளிப்போட முடியுமா?" என்றான் ராம்குமார்.
"ஏன்?"
"என் ஆஃபீஸ்ல ஒரு முக்கியமான வேலை வந்துடுச்சு. அடுத்த வாரம் முழுக்க எனக்கு நிறைய வேலை இருக்கும்."
"சரி. நான் இன்னும் கூட்டத்தோட தேதியை உறுப்பினர்களுக்கு அறிவிக்கல. 14-ஆம் தேதிக்கு பதிலா, 21-ஆம் தேதி வச்சுக்கலாமா?" என்றார் செல்வரத்தினம்.
"சரி சார்!" என்றான் ராம்குமார்.
"ராம்குமார்! உங்க பேச்சு ரொம்பப் பிரமாதமா அமைஞ்சு போச்சு. எல்லாரும் ரொம்பப் பாராட்டினாங்க" என்றார் செல்வரத்தினம், தொலைபேசியில்.
"நன்றி சார். நான் பேசி முடிச்சப்புறம், அரங்கத்திலேயே பல பேர் எங்கிட்ட வந்து தங்களோட பாராட்டுகளைத் தெரிவிச்சங்க. இந்த வாய்ப்புக்கு நான் உங்களுக்குத்தான் நன்றி சொல்லணும்."
"ஆமாம். ஏன் தேதியை ஒரு வாரம் தள்ளிப் போடச் சொன்னீங்க?" என்றார் செல்வரத்தினம், திடீரென்று.
"அதான் சொன்னேனே சார்..."
"ஆஃபீஸ்ல திடீர்னு வேலை வந்துடுச்சுன்னு சொன்னீங்க. அது காரணமா இருக்காதுன்னு நினைக்கிறேன். போன வாரம் தற்செயலா உங்க ஆஃபீஸ் பக்கம் போனப்ப, உங்களைப் பாக்கலாம்னு உங்க ஆஃபீசுக்குப் போனேன். நீங்க லீவுன்னு சொன்னாங்க. ஆஃபீஸ்ல முக்கியமான வேலை இருக்கச்சே, எப்படி லீவு போட முடியும்? சொல்லுங்க!"
"நீங்க அனுப்பின உங்க அசோசியேஷன் உறுப்பினர்களோட புரொஃபைலைப் பார்த்தேன். உங்க உறுப்பினர்கள்ள சார்ட்டர்ட் அக்கவுன்டன்ட்ஸ், காஸ்ட் அக்கவுன்டன்ட்ஸ் எல்லாம் இருக்காங்க. அவங்கள்ள பல பேருக்கு நிதி நிறுவனங்கள் பற்றின சட்டத்தில அறிவிக்கப்பட்டிருக்கிற மாறுதல்கள் பற்றி நல்லாவே தெரிஞ்சிருக்கும். அதனால, நான் அந்த சட்டத்தைப் பத்தி சொல்ற விஷயங்கள்ள ஒரு சின்னத் தப்பு இருந்தா கூட, அவங்க கண்டுபிடிச்சுடுவாங்க. அதனாலதான், ஒரு சின்னப் பிழை கூட இல்லாம பேசணும், அதுக்கு இன்னும் கொஞ்சம் நேரம் எடுத்துக்கிட்டு என் பேச்சைத் தயாரிக்கணும்னு நினைச்சேன்!" என்றான் ராம்குமார், சற்று சங்கடத்துடன்.
"ஏதோ நமக்குத் தெரிஞ்ச அளவில பேசிட்டுப் போகலாம்னு நினைக்காம, ஒரு சின்னத் தப்பு கூட வரக் கூடாதுங்கறதுக்காக, நேரம் எடுத்துக்கிட்டு விரிவா உங்க பேச்சை தயார் பண்ணி இருக்கீங்க. நீங்க ஆஃபீசுக்கு லீவு போட்டது கூட இந்தப் பேச்சைத் தயாரிக்கறதுக்காகத்தான் இருக்கும்னு நினைக்கிறேன். உங்களோட சின்சியரிடி, கமிட்மென்ட் இதையெல்லாம் நான் ரொம்பப் பாராட்டறேன்" என்றார் செல்வரத்தினம், உண்மையான உணர்வுடன்.
பொருட்பால்
அமைச்சியல்
அதிகாரம் 73
அவையஞ்சாமை
குறள் 721:
வகையறிந்து வல்லவை வாய்சோரார் சொல்லின்
தொகையறிந்த தூய்மை யவர்.
பொருள்:
சொற்களை அளவறிந்து உரைத்திடும் தூயவர்கள், அவையிலிருப்போரின் வகையறியும் ஆற்றல் உடையவராயிருப்பின், பிழை நேருமாறு பேச மாட்டார்கள்.
No comments:
Post a Comment