Wednesday, July 13, 2022

609. மகன் கேட்ட கேள்வி!

"ஏம்ப்பா, என்னோட படிக்கிற எல்லாப் பையங்களோட அப்பாவும் வேலைக்குப் போறாங்க. நீ மட்டும் ஏன் போகல?"

ஐந்தாம் வகுப்பு படிக்கும் மகன் கேட்ட கேள்வி, தங்கப்பனுக்கு ஆச்சரியமளிக்கவில்லை, ஆனால் எரிச்சலூட்டியது.

"முதல்ல, என்னோட அம்மா கேட்டாங்க. அப்புறம், உன்னோட அம்மா கேட்டா. இப்ப, நீ கேக்கறியா?" என்றான் தங்கப்பன், எரிச்சலுடன்.

"பையன்கிட்ட ஏன் எரிஞ்ச விழறீங்க? நீங்க வேலைக்குப் போகாம இருக்கறதைப் பத்தி, ஊர்ல எல்லாரும்தான் பேசறாங்க!" என்றாள் அவன் மனைவி சுமங்கலி.

"எனக்குப் பரம்பரை சொத்து இருக்கு. நான் எதுக்கு வேலைக்குப் போகணும்?"

"பரம்பரை சொத்து உங்கப்பாவுக்கும் தானே இருந்தது? ஆனா, அவர் வீட்டில உக்காந்துக்கிட்டிருக்கலியே! வயல், தோட்டம்னு அலைஞ்சு எல்லாத்தையும் பாத்துக்கிட்டு, சொத்தைப் பெருக்கி, உங்களுக்கு விட்டுட்டுப் போனாரே!"

"அவருக்கு அது பிடிச்சிருந்தது. வேலை செய்யறது எனக்குப் பிடிக்கல. வீட்டில உக்காந்துக்கிட்டிருக்கறதுதான் எனக்குப் பிடிச்சிருக்கு!"

"நான் கூட வசதியான குடும்பத்திலேந்து வந்தவதான். அதுக்காக சமையல் வேலை செய்ய மாட்டேன்னு நான் சும்மா இருந்தா எப்படி இருக்கும்?" என்றாள் சுமங்கலி, கோபத்துடன்.

"இருந்துட்டுப் போயேன். சமையலுக்கு ஆள் வச்சுக்க முடியாதா நம்மால?" என்றான் தங்கப்பன், சிரித்தபடி.

"பள்ளிக்கூடத்தில எல்லாரும் உன் அப்பா என்ன வேலை பாக்கறாருன்னு கேக்கறாங்க. நான் என்ன சொல்றது?" என்றான் சிறுவன், விடாமல்.

"என் அப்பாதான் எல்லாருக்கும் வேலை கொடுக்கறாருன்னு சொல்லு!" என்றான் தங்கப்பன்.

"என்னவோ போங்க! எல்லாரும் உங்கப்பாவைப் பத்திப் பெருமையாப் பேசிட்டு, அவரோட பையன் இப்படி இருக்காரேன்னு என் காது படவே பேசிக்கறப்ப, எனக்கு ரொம்ப அவமானமா இருக்கு!" என்றபடியே உள்ளே சென்றாள் சுமங்கலி, யார் என்ன சொன்னாலும், தன் கணவன் மாறப் போவதில்லை என்ற விரக்தியுடன்.

"ரெண்டு மூணு நாளா எங்கேயோ வெளியில போயிட்டு வரீங்களே, என்ன விஷயம்?" என்றாள் சுமங்கலி.

"ஒரு வியாபாரம் ஆரம்பிக்கலாம்னு இருக்கேன்!" என்றான் தங்கப்பன் புன்சிரிப்புடன்.

"வியாபாரமா, என்ன வியாபாரம்?" என்றாள் சுமங்கலி, வியப்புடன்.

"நெல் வியாபாரம்தான். நம்ம ஊர்லயும், சுத்தி இருக்கிற ஊர்களிலேயும் உள்ள சின்னச் சின்ன விவசாயிகள்கிட்டல்லாம் நெல்லை வாங்கி, டவுன்ல இருக்கற பெரிய வியாபாரிங்ககிட்ட விக்கறது. அதுக்காக, மாட்டு வண்டிகள், கூலி ஆட்கள் எல்லாம் ஏற்பாடு பண்ணத்தான் வெளியில போயிட்டு வந்தேன். வர வெள்ளிக்கிழமை அன்னிக்கு பூஜை போட்டுட்டு, வியாபாரத்தை ஆரம்பிக்க வேண்டியதுதான்!" என்றான் தங்கப்பன், உற்சாகத்துடன்.

"உண்மையாவா? எப்படிங்க, திடீர்னு இப்படி ஒரு முடிவை எடுத்தீங்க?" என்றாள் சுமங்கலி, வாய் நிறைய சிரிப்புடன்.

"இத்தனை வருஷமா, என்னோட அம்மாவும், நீயும், இன்னும் பல பேரும் சொல்லி இருக்கீங்க. அப்பல்லாம் எனக்கு அது உறைக்கல. ஆனா, உன்னோட அப்பா என்ன செய்யறார்னு கூடப் படிக்கிற பையன்கள்ளாம் கேட்டா என்ன சொல்றதுன்னு நம்ம பையன் கேட்டது, என் மனசை உறுத்திக்கிட்டே இருந்தது. என் அப்பா எல்லாருக்கும் வேலை கொடுக்கறார்னு சொல்லுன்னு, அன்னிக்கு அவங்கிட்ட ஒப்புக்கு ஒரு பதிலைச் சொன்னேன். அப்படியே செஞ்சா என்னன்னு தோணிச்சு. அப்புறம் யோசிச்சு, இந்தத் தொழில்தான் எனக்கு ஒத்து வரும்னு இதைத் தேர்ந்தெடுத்தேன். தொழிலை ஆரம்பிக்கறதுக்கான எல்லா ஏற்பாடும் பண்ணிட்டு, உங்கிட்ட சொல்லலாம்னு நினைச்சேன்."

"ரொம்பப் பெருமையா இருக்குங்க!"

"ஆனா, ஒரு பிரச்னைதான்" என்றான் தங்கப்பன்.

"என்ன பிரச்னை?" என்றாள் சுமங்கலி, கவலையுடன்.

"இந்த வியாபாரம் வருஷத்தில நாலஞ்சு மாசம்தான் நடக்கும். மத்த நாட்கள்ள என்ன செய்யறதுன்னு தெரியல!"

"அவ்வளவுதானா? எப்ப ஒரு தொழில் செய்யறதுன்னு இறங்கிட்டீங்களோ, அப்புறம் உங்களால சும்மா இருக்க முடியாது. வேற ஏதாவது செய்வீங்க. இனிமே உங்களை சோம்பேறின்னோ, நல்ல குடும்பத்தில பிறந்துட்டு இப்படி இருக்காரேன்னோ, யாரும் பழிச்சுப் பேச மாட்டாங்க. எனக்கு அது போதும்!" என்றாள் சுமங்கலி, மனத்திருப்தியுடன்.

பொருட்பால்
அரசியல் இயல்

அதிகாரம் 61
மடியின்மை (சோம்பலின்மை)

குறள் 609:
குடியாண்மை யுள்வந்த குற்றம் ஒருவன்
மடியாண்மை மாற்றக் கெடும்.

பொருள்:
ஒருவன் தான் சோம்பலால் ஆளப்படும் தன்மையை மாற்றிவிட்டால், அவனுடைய குடியிலும் ஆண்மையிலும் வந்த குற்றம் தீர்ந்து விடும்.

      அறத்துப்பால்                                                            காமத்துப்பால்

Tuesday, July 12, 2022

799. கண் மூடும் வேளையிலும்!

புருஷோத்தமன் படுத்த படுக்கையாகி இரண்டு மாதங்கள் ஆகி விட்டன. 

ஒரு மாதம் மருத்துவமனையில் சிகிச்சை அளித்த பிறகு, "இனிமே எந்த முன்னேற்றமும் ஏற்படாது. வீட்டுக்கு அழைச்சுக்கிட்டுப் போயிடுங்க. எவ்வளவு நாள் இருப்பார்னு சொல்ல முடியாது" என்று மருத்துவர்கள் கைவிரித்து விட்டனர்.

பருஷோத்தமனை வீட்டுக்கு அழைத்து வந்த பிறகு, அவர் மனைவி சரஸ்வதி, அவர் படுக்க வைக்கப்பட்டிருந்த கட்டிலுக்கு அருகிலேயே அமர்ந்திருந்தாள்.

புருஷோத்தமன் பெரும்பாலும் நினைவில்லாமல்தான் இருப்பார். அவ்வப்போது கண் விழிப்பார். கண் விழித்த பின், சில மணி நேரம் நல்ல நினைவுடன் மனைவியிடம் பேசிக் கொண்டிருப்பார். 

அவர்கள் திருமண வாழ்க்கை, குடும்ப நிகழ்வுகள் என்று பலவற்றைப் பற்றி நினைவு கூர்ந்து பேசுவார். அப்போதெல்லாம், அவர் முகத்தில் ஒரு மலர்ச்சி தெரியும்.

திருமணமாகிச் சிறிது காலத்துக்கெல்லாம், புருஷோத்தமன், தான் பார்த்துக் கொண்டிருந்த வேலையை விட்டு விட்டு, சொந்தத் தொழில் துவக்கினார். 

புருஷோத்தமனின் தாய், அவருடைய நண்பர்கள் சிலர், சரஸ்வதி உட்படப் பலர் எச்சரித்தும், புருஷோத்தமன் துணிச்சலாகச் சொந்தத் தொழில் முயற்சியில் இறங்கினார்.

அனைவரும் எச்சரித்தபடியே, இரண்டு மூன்று வருடங்களுக்கு புருஷோத்தமன் தன் தொழிலில் பல சவால்களைச் சந்தித்தார். சேமிப்பு அத்தனையும் கரைந்து விட்டது. 

குடும்பச் செலவுக்கே பணம் போதாத நிலை ஏற்பட்டது. ஆயினும், யாரிடமும் கடன் கேட்பதில்லை என்று புருஷோத்தமன் உறுதியாக இருந்தார்.

கணவனும் மனைவியும் எப்படியோ பல்லைக் கடித்துக் கொணடு நிலைமையைச் சமாளித்தார்கள்.

பிறகு, சிறிது சிறிதாக நிலை மாறி, அவர் தொழிலில் முன்னேற்றம் ஏற்பட்டு, ஓரிரு வருடங்களில் தொழில் பெரிதாக வளர்ந்து விட்டது, வசதியான வாழ்க்கையும் அமைந்தது.

அந்த நாட்களைப் பற்றிப் பேசும்போது, புருஷோத்தமனிடம் வருத்தம் இருக்காது, பெருமிதம்தான் இருக்கும். பெரும் சவால்களைச் சமாளித்து வெற்றி அடைந்து விட்ட பெருமிதம்!

சில சமயம், அவர்கள் மகன் முகுந்தனும் அருகில் அமர்ந்து, தன் தந்தை கூறுவற்றைக் கேட்டுக் கொண்டிருப்பான். 

புருஷோத்தமன் ஒரு விஷயத்தைப் பற்றி நினைவுகூரும்போது, அது பற்றிய விவரங்களை சரஸ்வதி விவரமாக மகனிடம் கூறுவாள். புருஷோத்தமன் அவள் கூறுவதை ரசித்துக் கேட்டுத் தலையாட்டி மகிழ்வார்.

ருநாள், புருஷோத்தமன் தன் தொழில் முயற்சியின்போது ஏற்பட்ட சவால்களைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தபோது, திடீரென்று அவர் முகத்தில் ஒரு மாறுதல் ஏற்பட்டது. 

முகத்தில் இருந்த மகிழ்ச்சியும், பெருமிதமும் மறைந்து, சோகமும், ஏமாற்றமும் குடிகொண்டன. "ரமணி, ரமணி" என்று முணுமுணுத்து விட்டுப் பிறகு கண்களை மூடிக் கொண்டார்.

"யாரும்மா ரமணி?" என்றான், அருகில் அமர்ந்து தந்தை பேசியதைக் கேட்டுக் கொண்டிருந்த முகுந்தன்.

"ரமணின்னு உன் அப்பாவுக்கு ஒரு நண்பர் இருந்தார். அவரைத் தன்னோட நெருங்கின நண்பன்னு உன் அப்பா நினைச்சாரு. ரமணி அடிக்கடி நம் வீட்டுக்கு வருவாரு. அப்பாவும் அவரும் ரொம்ப நேரம் பேசிக்கிட்டிருப்பாங்க. ஆனா, உன் அப்பா கஷ்டமான நிலையில இருந்தப்ப, அவர் நம்ம வீட்டுப் பக்கமே வரல. அப்ப, ஃபோன் வசதி எல்லாம் கிடையாது.

"ஒருநாள், உன் அப்பா ரமணியைப் பாக்க அவர் வீட்டுக்குப் போயிருந்தாரு. தன்னோட கஷ்டங்களைப் பத்தி நண்பன்கிட்ட பேசினா ஆறுதலா இருக்கும்னு நினைச்சுத்தான் போனாரு. 

"அப்பா அவர் வீட்டுக்குப் போனப்ப, ரமணி வீட்டில இல்லேன்னு அவர் மனைவி அப்பாகிட்ட சொன்னாங்க. ஆனா உங்கப்பா வந்ததைப் பாத்ததும், முன் அறையிலிருந்த ரமணி அவசரமா எழுந்து உள்ளே போனதை உன் அப்பா பாத்துட்டாரு. 

"தான் ஏதோ கடன் கேக்கப் போறோம்னு நினைச்சுத்தான் ரமணி அப்படிப் பண்ணி இருப்பார்னு உன் அப்பாவுக்குப் புரிஞ்சுடுச்சு. 

"தனக்கு நெருக்கமா இருந்த நண்பன்கிட்ட தன்னோட கவலைகளைச் சொல்லி ஆறுதல் தேடலாம்னு வந்தப்ப, அந்த நண்பன் அப்படி நடந்துக்கிட்டது உன் அப்பாவுக்குப் பெரிய அதிர்ச்சியா அமைஞ்சுடுச்சு. 

"இத்தனை வருஷமா, எத்தனையோ தடவை உங்கப்பா எங்கிட்ட இதைச் சொல்லி மாய்ஞ்சு போயிருக்காரு. அதை மறந்துடுங்கன்னு நான் எத்தனையோ தடவை சொல்லி இருக்கேன். 

"இப்ப திடீர்னு அது அவருக்கு ஞாபகம் வந்து தொலைச்சிருக்கு! பாரேன், சந்தோஷமாப் பேசிக்கிட்டிருந்தவரோட முகம், ஒரு நொடியில எப்படி மாறிப் போயிடுச்சுன்னு!"

மகனிடம் விவரங்களைக் கூறி விட்டு, சரஸ்வதி கணவனின் முகத்தைப் பார்த்தாள். சற்றுமுன் மலர்ந்திருந்த முகத்தில், ஒரு வாட்டம் வந்து குடிபுகுந்திருந்தது. 

புருஷோத்தமனின் கண்கள் மூடி இருந்ததால், ரமணியைப் பற்றி சரஸ்வதி மகனிடம் கூறியதை அவர் கேட்டாரா, அல்லது நினைவு இழந்து விட்டாரா என்று சரஸ்வதிக்குத் தெரியவில்லை.

அதற்குப் பிறகு, புருஷோத்தமன் கண்களைத் திறக்கவே இல்லை. 

பொருட்பால்
நட்பியல்
அதிகாரம் 80
நட்பாராய்தல் 

குறள் 799:
கெடுங்காலைக் கைவிடுவார் கேண்மை அடுங்காலை
உள்ளினும் உள்ளஞ் சுடும்.

பொருள்: 
கேடு வரும் காலத்தில் கைவிட்டு ஒதுங்குகின்றவரின் நட்பைப் பற்றி, எமன் உயிரை எடுத்துச் செல்லும் காலத்தில் நினைத்தாலும், நினைத்த உள்ளத்தை அது வருத்தும்.
       அறத்துப்பால்                                                                       காமத்துப்பால்

Monday, July 11, 2022

798. வீட்டுக்கு வந்த நண்பன்

நீண்ட நாட்களுக்குப் பிறகு, எதிர்பாராமல் தன் வீட்டுக்கு வந்த தன் நண்பன் ஆனந்தைப் பார்த்ததும், ரகுவுக்கு வியப்பையும் மீறி ஒருவித சோர்வு ஏற்பட்டது.

"வா!" என்றான் ரகு, உற்சாகமில்லாமல்.

 இதுவே ஆறு மாதங்களுக்கு முன்பென்றால், நண்பனை "வாடா!" என்று வரவேற்று, அவன் கையைப் பிடித்து உள்ளே அழைத்து வந்திருப்பான்.

வீட்டுக்கு வந்த நணபனை "உட்கார்!" என்று சொல்லக் கூட ரகுவுக்கு மனமில்லை. ஆனந்த் தானே சோஃபாவில் உட்கார்ந்தான்.

"நடக்கக் கூடாததெல்லாம் நடந்துடுச்சு. நல்ல வேளையா, எல்லாம் நல்லபடியா முடிஞ்சுடுச்சு!" என்றான் ஆனந்த்.

நல்லபடியாக முடிந்து விட்டதா? 

அலுவலகத்தில் யாரோ செய்த மோசடிக்கான பழி தன் மேல் விழுந்து, தான் அதற்காகக் கைது செய்யப்பட்டு, ஜாமீன் கிடைக்காமல் மூன்று மாதம் சிறையில் இருந்து விட்டு, பணி இடைநீக்கம் செய்யப்பட்டு, போலீஸ் விசாரணையில் உண்மைக் குற்றவாளி கண்டுபிடிக்கப்பட்ட பிறகு, தன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு விலக்கிக் கொள்ளப்பட்டுத் தான் மீண்டும் வேலையில் சேர்த்துக் கொள்ளப்பட்டதை நல்லபடியாக முடிந்து விட்டது என்று கடந்து போக முடியுமா?

சற்று நேரம் ஏதோ பேசிக் கொண்டிருந்து விட்டு, ஆனந்த் கிளம்பிச் சென்றான்.

கிளம்பும் சமயத்தில், "உன் மனைவி எங்கே? எங்கேயாவது வெளியில போயிருக்காங்களா என்ன?" என்றான் ஆனந்த்.

"உள்ளே ஏதாவது வேலையா இருப்பா" என்றான் ராமு, சுருக்கமாக.

ஆனந்த் கிளம்பிச் சென்றதும், உள்ளிருந்து வந்த ரகுவின் மனைவி சாந்தா, "எங்கே அவர்? போயிட்டாரா? உங்களுக்கு சோதனையான காலத்தில, நமக்கு அதிகம் பழக்கமில்லாத சில பேர் கூட வந்து நமக்கு ஆறுதல் சொன்னாங்க? நண்பன்னு சொல்லிட்டு இத்தனை வருஷமா பழகின இவர் எட்டிக் கூடப் பாக்கல. ஒரு ஃபோன் பண்ணிக் கூட  ஆறுதல் சொல்லல. இப்ப எல்லாம் சரியானப்பறம், மறுபடி வந்து ஒட்டிக்கப் பாக்கறாரு. அதனாலதான், வீட்டுக்கு வந்தவருக்கு ஒரு காப்பி கூடக் கொடுக்காம நான் உள்ளேயே இருந்துட்டேன். அவர் மூஞ்சியைப் பாக்கவே எனக்குப் பிடிக்கல?" என்றாள், கோபம் கொப்பளிக்கும் குரலில்.

"நான் மட்டும் அவன் மூஞ்சியை இனிமே ஏன் பாக்கப் போறேன்? நான் அவன்கிட்ட அலட்சியமா நடந்துக்கிட்டது, நீ உள்ளேயிருந்து வெளியே வராமல் இருந்தது இதையெல்லாம் வச்சே அவனுக்குப் புரிஞ்சிருக்கும், அவன் கூட இனிமே நான் நட்பு வச்சுக்க மாட்டேன்னு. அவனை விடு. நடந்ததையெல்லாம் நினைச்சா, எனக்கு மனசு ஆறல, எனக்கு இப்படி ஒரு அநியாயம் நடந்துடுச்சேன்னு" என்றான் ரகு.

"இதையெல்லாம் கொஞ்சம் கொஞ்சமா மறக்கப் பாக்கணுங்க. முயற்சி செஞ்சா, கொஞ்ச நாள்ள இந்த அனுபவத்தோட நினைவெல்லாம் தேஞ்சு போயிடும். ஆனந்த் மாதிரி ஆட்களோட நட்பை உதறின மாதிரி, இது மாதிரி அனுபவங்களோட நினைவையும் விட்டொழிச்சாத்தான், நம்மால சந்தோஷமா இருக்க முடியும்" என்றாள் சாந்தா.

பொருட்பால்
நட்பியல்
அதிகாரம் 80
நட்பாராய்தல் 

குறள் 798:
உள்ளற்க உள்ளம் சிறுகுவ கொள்ளற்க
அல்லற்கண் ஆற்றறுப்பார் நட்பு.

பொருள்: 
ஊக்கம் குறைவதற்குக் காரணமான செயல்களை எண்ணாமலிருக்க வேண்டும், அதுபோல், துன்பம் வந்த போது கைவிடுகின்றவரின் நட்பைக் கொள்ளாதிருக்க வேண்டும்.
       அறத்துப்பால்                                                                       காமத்துப்பால்

608. ஏன் இந்த நிலை?

"ஏண்டா, செல்வம் என்டர்பிரைசஸ் கொடுக்க வேண்டிய பணத்தை வசூல் பண்ணச் சொன்னேனே, வசூல் பண்ணினியா, இல்லையா?" என்றான் கோபாலசாமி.

"இல்லீங்க! தினம் போய் கேட்டுக்கிட்டுத்தான் இருக்கேன். அவர் நாளைக்கு நாளைக்குன்னு இழுத்தடிச்சுக்கிட்டே இருக்காரு!" என்றான் வேல்முருகன்.

"நீ ஒரு சோம்பேறியாச்சே! அவங்க சொன்ன நேரத்துக்குப் போயிருக்க மாட்டே! சம்பளம் கொடுக்க இன்னும் நாலு நாள்தான் இருக்கு. அதுக்குள்ள நீ அந்தப் பணத்தை வசூலிக்கலேன்னா, உனக்கு இந்த மாசம் சம்பளம் கிடையாது!"

முகத்தில் வழிந்த வியர்வையைத் துடைத்துக் கொண்டு முதலாளியின் அறையிலிருந்து வெளியே வந்த வேல்முருகனைப் பச்சாதாபத்துடன் பார்த்தார் அக்கவுன்டன்ட் குணசீலன்.

சற்று நேரத்தில், வேல்முருகன் வாடிக்கையாளர்களிடமிருந்து பணம் வசூலிக்க வெளியே கிளம்பி விட்டான்.

வேல்முருகன் வெளியே சென்றதும், "பாவம்! பெரிய இடத்துப் பிள்ளை! இவர்கிட்ட அடிமைப் பொழைப்புப் பொழைக்கணும்னு அவனுக்குத் தலையெழுத்து!" என்றார் குணசீலன், தன் அருகிலிருந்த ஊழியன் சபாபதியிடம்.

"பெரிய இடத்துப் பிள்ளையா?" என்றான் சபாபதி, வியப்புடன்.

"ஆமாம். வேல்முருகனோட அப்பா அவங்க ஊர்ல ஒரு பெரிய மனுஷர். ஊர்ல அவருக்கு ரொம்ப மரியாதை உண்டு. வேல்முருகன் அவருக்கு ஒரே பையன். அவர் போனப்பறம், வேல்முருகன் வேலைக்குப் போகாம, வெட்டியா வீட்டில உக்காந்து பொழுதைக் கழிச்சுக்கிட்டிருந்தான். அவன் அம்மாவும் இறந்தப்பறம், அவனுக்கு புத்தி சொல்ல யாரும் இல்ல. அப்பா விட்டுட்டுப் போன சொத்து கரைஞ்சுக்கிட்டே இருந்தது அவனுக்குத் தெரியல. கல்யாணம் ஆகிக் குடும்பமும் ஏற்பட்டப்பறம்தான், குடும்பம் நடத்தவே பணம் இல்லேங்கற நிலைமை வந்தது அவனுக்குப் புரிஞ்சுது"

"நிறைய சொத்து இருந்த்துன்னு சொன்னீங்களே!"

"எவ்வளவு சொத்து இருந்தா என்ன? சம்பாதிக்காம, சொத்தை வித்துத் தின்னுக்கிட்டிருந்தா, சொத்து எவ்வளவு வேகமாக் கரையுங்கறது அந்த நிலைமையை அனுபவிச்சங்களுக்குத்தான் தெரியும். நீங்க அனுபவிச்சிருக்கீங்களான்னு கேக்காதே! இந்த அனுபவம் பல பேருக்கு ஏற்பட்டதை நான் பாத்திருக்கேன்!" என்றார் குணசீலன்.

"அப்புறம்?" என்றான் சபாபதி, கதை கேட்கும் ஆர்வத்துடன்.

"அப்புறம் என்ன? வேல்முருகன் வேலை தேட ஆரம்பிச்சான். எதுவும் கிடைக்கல. கடைசியில, நம்ம ஆள்கிட்ட வந்து மாட்டினான். இதில சோகம் என்னன்னா, நம்ம முதலாளியோட அப்பாவுக்கும், வேல்முருகனோட அப்பாவுக்கும் ஆகாது. இப்ப, தன் அப்பாவோட எதிரியோட பையன் வேல்முருகன் மேல இரக்கப்பட்டு, அவனுக்கு வேலை கொடுக்கற மாதிரி கொடுத்துட்டு, அவனை ஒரு அடிமை மாதிரி. நடத்தறாரு நம்ம முதலாளி. தன்னை விட வயசில பெரியவன்னு கூட பாக்காம, வேல்முருகனை வாடா போடான்னு பேசறதும், விரட்டறதும், கடுமையாப் பேசறதும், எனக்குப் பாக்கறதுக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு!" என்றார் குணசீலன்.

பொருட்பால்
அரசியல் இயல்

அதிகாரம் 61
மடியின்மை (சோம்பலின்மை)

குறள் 608:
மடிமை குடிமைக்கண் தங்கின்தன் ஒன்னார்க்கு
அடிமை புகுத்தி விடும்.

பொருள்:
நல்ல குடியில் பிறந்தவனிடம் 
சோம்பல் வந்து பொருந்தினால், அது அவனை அவனுடைய பகைவர்க்கு அடிமையாகுமாறு செய்து விடும்.

      அறத்துப்பால்                                                            காமத்துப்பால்

Thursday, July 7, 2022

797. நண்பனின் கோபம்!

"உங்கிட்ட எவ்வளவோ நல்ல விஷயம் இருக்கு. ஆனா, ஒரே ஒரு வேண்டாத விஷயமும் இருக்கு!" என்று நாகராஜனுக்கு நெருங்கியவர்கள் சிலர் அவனிடம் பலமுறை கூறி இருக்கிறார்கள்.

அவர்கள் குறிப்பிட்டது முரளியுடன் அவனுக்கு இருந்த நட்பைப் பற்றி.

அவன் மனைவி கமலா கூடக் கேட்டாள். "உங்களுக்கு இப்படிப்பட்ட சிநேகம் தேவைதானா?"

"ஏன் எல்லாரும் இப்படிச் சொல்றீங்கன்னே தெரியல! அவனுக்கு நான் ஏதோ ஒரு உதவி செஞ்சேன். அதுலேந்து அவன் எங்கிட்ட நட்பா இருக்கான். நானும் பதிலுக்கு அவனோட நட்பா இருக்கேன். இதில என்ன தப்பு?" என்றான் நாகராஜன், சற்றுக் கோபத்துடன்.

"அவர் தன்னை ஒரு பெரிய புத்திசாலின்னு நினைச்சுக்கிட்டு உங்களுக்கு நிறைய யோசனை சொல்றாரு. நீங்களும் அவர் பேச்சைக் கேட்டுச் சில காரியங்கள்ள இறங்கறீங்க. அதெல்லாம் தோல்வியிலதானே முடியுது?"

"முரளிக்கு சொந்தத் தொழில் செய்யணும்னு ஆர்வம் உண்டு. அவன் ஒரு வேலையில இருக்கான். ஆனா, சைடில சின்னதா ஏதாவது தொழில் செஞ்சுக்கிட்டிருப்பான். சில முயற்சிகள்ள என்னையும் சேந்துக்கச் சொல்லுவான். அவன் சொன்னதைக் கேட்டு சில தொழில்கள்ள ஈடுபட்டதால எனக்குக் கொஞ்சம் நஷ்டம் ஏற்பட்டிருக்குங்கறது உண்மைதான். அதுக்காக அவனை எப்படிக் குத்தம் சொல்ல முடியும்?"

"சொல்றேன்னு தப்பா நினைக்காதீங்க! காளான் வளக்கறதிலேந்து, ஈமுக் கோழிப் பண்ணையில முதலீடு செய்யற வரைக்கும், என்ன விளம்பரம் வந்தாலும் அத்தனையிலேயும் முதலீடு பண்ணலாம்னு உங்களுக்கு அவ யோசனை சொல்லி இருக்காரு. எத்தனையோ வியாபார விளம்பரம் வரும். அத்தனையையும் அவர் நம்பறாருன்னா, அவர் யோசிக்கிறதே இல்லேன்னுதானே அர்த்தம்? நல்ல வேளை, எல்லாத்திலேயும் முதலீடு பண்ண அவர்கிட்ட பணம் இல்ல. நீங்களும் சிலதிலதான் முதலீடு பண்ணினீங்க. எல்லாமே நஷ்டம்தான். எத்தனை பணம் போயிருக்கும்னு நினைச்சுப் பாத்தீங்களா? ஏதோ, நீங்க நிறைய சம்பாதிக்கிறீங்க. அதனால அந்த இழப்பெல்லாம் உங்களுக்குப் பெரிசாத் தோணல!" என்றாள் கமலா.

நாகராஜன் பதில் சொல்லவில்லை.

முரளியின் ஆலோசனைகளைக் கேட்பது தனக்கு இழப்புகளைத்தான் ஏற்படுத்தும் என்பதை நாகராஜனே காலப்போக்கில் உணர ஆரம்பித்து, அவன் ஆலோசனைகளைப் புறக்கணிக்க ஆரம்பித்தான்.

"பெரிய பண்ணை வச்சிருக்காங்க. ஒரு லட்சம் முதலீடு செஞ்சா, மாசா மாசம் பத்தாயிரம் ரூபா வருமானம் வரும்னு உத்தரவாதம் கொடுக்கறாங்க. சின்ன முதலீடு, பெரிய லாபம்!" என்றான் முரளி.

"அவ்வளவு பெரிய பண்ணை வச்சிருக்கறவங்க எதுக்கு மத்தவங்களை முதலீடு செய்யச் சொல்றாங்க? அவங்களுக்கு அத்தனை வருமானம் வருமா, சொன்னபடி பத்தாயிரம் ரூபா கொடுக்க முடியுமா இதெல்லாம் எப்படித் தெரியும்?" என்றான் நாகராஜன்.

"வீடியோ போட்டிருக்காங்க பாரு. 100 ஏக்கர் பண்ணை. தென்னை, வாழை, காய்கறிகள், பழங்கள்னு நிறையப் பயிர்கள் இருக்கு. தினமும் வியாபாரம் நடக்கும், லட்சக்கணக்கில ரொக்கமாவே வருமானம் வரும். சொன்னபடி நிச்சயமாக் கொடுத்துடுவாங்க. எங்கிட்ட ஒரு லட்ச ரூபா இல்ல. இருந்தா நானே முதலீடு பண்ணிடுவேன். நீ அம்பதாயிரம் கொண்டு வந்தா, ரெண்டு பேரும் சேர்ந்து ஒரு லட்சம் முதலீடு பண்ணலாம்!" என்றான் முரளி.

"என்னை விடுப்பா! நான் இனிமேயும் நஷ்டப்படத் தயாராயில்ல!" என்றான் நாகராஜன்.

"இனிமேயும்னா? என்னால ஏற்கெனவே உனக்கு நிறைய நஷ்டம் ஆயிட்ட மாதிரி பேசற!" என்றான் முரளி, சற்றுக் கோபத்துடன்.

"இல்லையா பின்னே?"

"உன்னோட நன்மைக்காக சில பிசினஸ் ஐடியாக்களை அப்பப்ப உங்கிட்ட சொல்லி இருக்கேன். பிசினஸ்னா, ரிஸ்க் இருக்கத்தான் செய்யும். நான் ஏதோ உனக்குக் கெடுதல் செஞ்சுட்ட மாதிரி பேசற! உன்னோட நட்பு வச்சுக்கிட்டதே தப்பு!" என்று சொன்னபடியே கோபமாக எழுந்து வெளியேறினான் முரளி.

உள்ளிருந்து அவர்கள் பேசியதைக் கேட்டுக் கொண்டிருந்த கமலா வெளியே வந்து, "கோவிச்சுக்கிட்டுப் போறாரே! மறுபடி வருவாரா, இல்ல, ஒரேயடியா நட்பை முறிச்சுப்பாரா?" என்றாள்.

"ஒருவேளை அவன் அப்படி செஞ்சா, அவன் மூலமா முதல் தடவையா லாபம் வந்ததா நினைச்சுக்க வேண்டியதுதான்!" என்றான் நாகராஜன், சிரித்தபடியே.

பொருட்பால்
நட்பியல்
அதிகாரம் 80
நட்பாராய்தல் 

குறள் 797:

ஊதியம் என்பது ஒருவற்குப் பேதையார்
கேண்மை ஒரீஇ விடல்.

பொருள்: 
ஒருவனுக்கு ஊதியம் என்று சொல்லப்படுவது,அறிவில்லாதவருடன் செய்து கொண்ட நட்பைக் கைவிடுதலாகும்.
       அறத்துப்பால்                                                                       காமத்துப்பால்

Tuesday, July 5, 2022

607. நாற்பது வயதில் ஒரு வேலை!

"நாப்பது வயசு ஆகுதுங்கறீங்க. இதுவரையிலும் எந்த வேலைக்கும் போகலியா?"

நேர்முகத் தேர்வுக்கு வந்திருந்த அந்த நடுத்தர வயது மனிதரைப் பார்த்து, அந்த நிறுவனத்தின் மேலாளர் சண்முகம் வியப்புடன் கேட்டார்.

"இல்லை" என்றான் கேசவன், சுருக்கமாக.

"ஏன்?"

"குடும்பச் சூழ்நிலை." 

"அப்படின்னா?"

"அப்பா படுத்த படுக்கையா இருந்தாரு. அம்மாவால எதுவும் முடியாது. அவங்களும் பலவீனமா இருந்தாங்க. நான்தான் வீட்டில எல்லாத்தையும் பாத்துக்கிட்டேன்."

"உங்க சகோதர, சகோதரிகள்?"

"அண்ணன் வெளியூருக்கு வேலைக்குப் போயிட்டான். தங்கச்சி கல்யாணம் ஆகிப் புகுந்த வீட்டுக்குப் போயிட்டா."

"நீங்க தனியா மாட்டிக்கிட்டீங்களாக்கும்!" என்று சற்று இரக்கப்படுவது போல் கூறிய சண்முகம், "ஆனா, நீங்க ஏன் பத்தாது வகுப்பு வரைக்கும் கூடப் படிக்கல?" என்றார், தொடர்ந்து.

"அதான் சொன்னேனே, சார்! நான் சின்னப் பையனா இருந்ததிலேந்தே, அப்பா அம்மாவை கவனிக்கிறதுதான் என் முழுநேர வேலையா இருந்தது!"

"சாரை உங்களுக்கு எப்படித் தெரியும்?"

"எங்கப்பாவோட நண்பர் ஒத்தர்தான் சார்கிட்ட என்னைப் பத்தி சொல்லி, எனக்கு அவரோட கம்பனியில வேலை போட்டுத் தரச் சொன்னாரு. சாரை வீட்டில போய்ப் பாத்தேன். அவர்தான் ஆஃபீசுக்குப் போய் மானேஜரைப் பாருன்னு சொன்னாரு!" என்றான் கேசவன்.

"இங்க பாருங்க, கேசவன்! இது ஒரு சின்ன கம்பெனி. இங்க பியூன் வேலைதான் காலி இருக்கு. சம்பளம் குறைச்சலாத்தான் இருக்கும்" என்றார் சண்முகம், சற்றுத் தயக்கத்துடன்.

"எந்த வேலையா இருந்தாலும் பரவாயில்ல சார்!"

"பியூன்னா, எல்லா வேலையையும் செய்யணும். ஆஃபீஸ்ல எல்லாருக்கும் டீ, காப்பி வாங்கிக்கிட்டு வரதிலேந்து, வெளியே பல இடங்களுக்குப் போறது வரை, நிறைய வேலை இருக்கும். எடுபிடி வேலை மாதிரிதான் இருக்கும். பொதுவா, நாங்க  இந்த வேலைக்கு சின்னப் பையங்களைத்தான் எடுப்போம். அவங்கதான் கௌரவம் பாக்காம, எல்லா வேலையும் செய்வாங்க. நீங்க வயசில கொஞ்சம் பெரியவரா வேற இருக்கீங்க..."

"அதனால பரவாயில்ல, சார்."

"சரி" என்ற சண்முகம், பக்கத்து அறையில் ஏதோ அரவம் கேட்டதும், "முதலாளி வந்துட்டாரு போலருக்கு. நான் அவர்கிட்ட ஒரு வார்த்தை சொல்லிட்டு வந்துடறேன்" என்று எழுந்து பக்கத்து அறைக்குப் போனார்.

பக்கத்து அறைக்குள் அவர்கள் பேசிக் கொண்டது, கேசவனுக்கு நன்றாகக் காதில் விழுந்தது. 

அவன் காதில் விழுந்து விடக் கூடாதே என்பது போல், மானேஜர் சண்முகம் சற்று மெல்லிய குரலில் பேசியதாகத் தோன்றியது. ஆனால் இயல்பிலேயே உரத்த குரல் கொண்ட முதலாளி, மெதுவாகப் பேச முயற்சி செய்யவில்லை.

முதலாளியிடமிருந்து பெரிய சிரிப்புச் சத்தம் கேட்டது.

"அப்படியா சொன்னான்? அவங்க அப்பா அம்மா போய்ப் பல வருஷங்கள் ஆயிடுச்சு. இத்தனை வருஷமா சோம்பேறியா சுத்திக்கிட்டு, அவங்க சம்பாதிச்சு வச்ச சொத்தையெல்லாம் அழிச்சுட்டு, இப்ப வேற வழியில்லாம நாப்பது வயசில வேலைக்கு வரான். 

"கல்யாணம் ஆகிக் குழந்தை கூட இருக்கே! குடும்பத்தைக் காப்பாத்தணுமே! எவ்வளவோ வருஷமா பெண்டாட்டி சொல்லியும், வேலைக்கு முயற்சி பண்ணல. சின்ன வயசில ஒழுங்காப் படிக்கவும் இல்ல. இப்ப, அப்பா அம்மா மேல பழி போடறான்!

"என் நண்பர் அவன் அப்பாவோட குடும்ப நண்பர். அவர் எல்லாத்தையும் எங்கிட்ட விவரமா சொன்னாரு. அவர் கூட எவ்வளவோ சொல்லியும், அவன் இத்தனை வருஷமா வேலைக்குப் போகல. அவன் மனைவி, குழந்தை மேல இரக்கப்பட்டுத்தான், அவனுக்கு வேலை கொடுக்கச் சொல்லி அவர் எங்கிட்ட சொன்னாரு. அடிப்படையில அவன் ஒரு சோம்பேறி. வேலையிலேயும் சோம்பேறித்தனமாத்தான் இருப்பான். ஸ்டிரிக்டா இருங்க!"

முதலாளியின் பேச்சு கேசவனின் காதுகள் வழியே உள்ளே புகுந்து, அவன் இதயத்தைத் துளைத்தது. முன்பின் தெரியாதவர்களிடமிருந்து இப்படிப்பட்ட சொற்களைக் கேட்க வேண்டிய நிலைமையை நினைத்து, அவமானத்தால் அவன் உடல் குறுகியது

பொருட்பால்
அரசியல் இயல்

அதிகாரம் 61
மடியின்மை (சோம்பலின்மை)

குறள் 607:
இடிபுரிந்து எள்ளுஞ்சொல் கேட்பர் மடிபுரிந்து
மாண்ட உஞற்றி லவர்.

பொருள்:
சோம்பலை விரும்பி மேற்கொண்டு, சிறந்த முயற்சி இல்லாதவராய் வாழ்கின்றவர், பிறர் இடித்துக் கூறி இகழ்கின்ற சொல்லைக் கேட்கும் நிலையை அடைவர்.

      அறத்துப்பால்                                                            காமத்துப்பால்

Saturday, July 2, 2022

796. முத்துசாமியின் 'டைம்லைன்'

"என்னடா இது? கம்பெனியிலே சீ ஈ ஓவா இருந்தப்ப இது மாதிரி சார்ட் எல்லாம் பயன்படுத்தி இருப்பே. இப்ப ரிடயர் ஆனப்பறமும் ஏதோ சார்ட் எல்லாம் போட்டுக்கிட்டிருக்கே!" என்றார் சாம்பசிவம்.

ஒரு தாளில் பென்சிலால் ஏதோ மும்முரமாக வரைந்து கொண்டிருந்த முத்துசாமி, சந்தடி இல்லாமல் பின்னால் வந்து நின்ற தன் நண்பனை அப்போதுதான் கவனித்தவராக, பென்சிலைக் கீழே வைத்து விட்டு, "வாடா! இப்படித்தான் பூனை மாதிரி சத்தமில்லாம பின்னால வந்து நின்னு என்னை பயமுறுத்தறதா?" என்றார், சிரித்துக் கொண்டே.

"எவ்வளவோ பெரிய சவால்களையெல்லாம் கொஞ்சம் கூட பயப்படாம சமாளிச்ச உன்னை யாராவது பயமுறுத்த முடியுமா என்ன? ஆனாலும், அறைக் கதவைத் திறந்து வச்சுக்கிட்டு, வாசலுக்கு முதுகைக் காட்டிக்கிட்டு உக்காந்துக்கிட்டிருந்தா, என்னை மாதிரி அப்பாவிக்கெல்லாம் கூட கொஞ்சம் பயமுறுத்திப் பாக்கலாமேன்னுதான் தோணும்!"

"நீயா அப்பாவி? உன்னைப் பாத்து எத்தனை பேரு 'அடப்பாவி!'ன்னு அலறி இருக்காங்கன்னு எனக்குத்தானே தெரியும்! காத்து வரதுக்காக் கதவைத் திறந்து வச்சிருக்கேன். கதவுப் பக்கம் பாத்து உக்காந்தா கிளேர் அடிக்கும். அதனாலதான், முதுகைக் காட்டிக்கிட்டு உக்காந்திருக்கேன். போதுமா?"

"கம்பெனி மீட்டிங்ல எல்லாம் பேசற மாதிரி, முக்கியமான கேள்வியை விட்டுட்டு மற்றதுக்கெல்லாம் பதில் சொல்ற! என்னவோ வரைஞ்சிக்கிட்டிருக்கியே என்னன்னு கேட்டேன்."

"அதுவா? என் வாழ்க்கையோட டைம்லைனைப் போட்டுக்கிட்டிருக்கேன்!"

"பிசினஸ்ல பயன்படுத்தற டூலையெல்லாம் சொந்த வாழ்க்கையில பயன்படுத்தற! எங்கே காட்டு!" என்று முத்துசாமியின் கையிலிருந்த தாளை வாங்கிப் பார்த்தார் சாம்பசிவம்.

சற்று நேரம் அதை உற்றுப் பார்த்தபின், "உன் வாழ்க்கையைப் பல கட்டங்களாப் பிரிச்சு, ஒவ்வுரு கட்டத்துக்கும் ஒரு லேபில் கொடுத்திருக்கே, 'ஆரம்ப அனுபவம்,' 'இயல்பான முன்னேற்றம்,' 'சவால்கள் நிறைந்த முன்னேற்றம்,' 'சோதனை மேல் சோதனை,' இன்னும் சில லேபில்கள். எதுக்கு இது?" என்றார்.

"சும்மாதான்! கம்பெனியில முந்தின வருஷ செயல்பாடுகளை ரிவியூ பண்ற மாதிரி, இதுவரையிலுமான என் வாழ்க்கையைப் பத்தி ஒரு ரிவியூ. கம்பெனியில, ரிவியூ அடிப்படையில எதிர்காலத்தில நம் செயல்பாடுகளை மாத்திக்கலாம். ஆனா, என் வாழ்க்கையில அப்படிச் செய்ய முடியாது. மீதி இருக்கிறது செயல்பாடுகள் இல்லாத வாழ்க்கைதானே? இது ஒரு போஸ்ட்மார்ட்டம்னு சொல்லலாம், அவ்வளவுதான்!" என்றார் முத்துசாமி.

முத்துசாமி பேசுவதைக் கேட்டுக் கொண்டே சார்ட்டைப் பார்த்துக் கொண்டிருந்த சாம்பசிவம், "இது என்ன? ஒவ்வொரு கட்டத்துக்கும் மார்க் போடற மாதிரி ஏதோ போட்டிருக்கியே!" என்றார்.

"ஆமாம். அது மதிப்பெண் மாதிரி ஒரு குறியீடுதான். டைம்லைன்ல இருக்கிற ஒவ்வொரு கட்டமும் எனக்கு எந்த விதத்தில வாழ்க்கையில எந்த அளவுக்குப் பயனுள்ளதா இருந்ததுங்கறதுக்கான மதிப்பெண் அது."

"சோதனை மேல் சோதனைங்கற கால கட்டத்துக்குத்தான் அதிகமா மார்க் கொடுத்திருக்கே! அது எப்படி உன் வாழ்க்கையில அதிகப் பயனுள்ள காலமா இருந்திருக்கும்?" என்றார் சாம்பசிவம், வியப்புடன்.

"நான் பல சவால்களையும், தோல்விகளையும், துன்பங்களையும் அனுபவிச்ச காலம் அது. அப்ப எனக்கு ஏராளமான நண்பர்கள் இருந்தாங்க. அவங்க எல்லாருமே எங்கிட்ட அன்பும், அக்கறையும் கொண்டவங்கன்னு நான் நம்பின காலம் அது. 

"ஆனா, என்னோட சோதனைக் காலத்தின்போதுதான், எந்தெந்த நண்பர்கள் எங்கிட்ட உண்மையான அக்கறை கொண்டிருந்தாங்க, எந்தெந்த நண்பர்கள் போலியா நட்புப் பாராட்டிட்டு, எனக்குக் கஷ்டம் வந்தப்ப, எங்கிட்டேந்து ஒதுங்க ஆரம்பிச்சாங்கன்னு எனக்குப் புரிஞ்சது. 

"என்னோட ரொம்ப நெருக்கமா இருந்ததா நான் நினைச்ச சில நண்பர்கள் எங்கிட்டேந்து விலகிப் போனாங்க. நான் அதிகம் நெருக்கம் இல்லைன்னு நினைச்ச சில நண்பர்கள் எனக்கு ஆதரவா என் பக்கத்தில நின்னபோது, அவங்க எங்கிட்ட எவ்வளவு அன்போடயும் அக்கறையோடயும் இருந்தாங்கங்கறதை அத்தனை காலமா புரிஞ்சுக்காம இருந்தது எனக்கு வெட்கமாகக் கூட இருந்தது.

 "என் உண்மையான நண்பர்கள் யாருங்கறதை எனக்குப் புரிய வச்சதை விட எனக்கு அதிகப் பயனுள்ள விஷயம் வேற எதுவா இருக்க முடியும்? அதனாலதான் அந்தக் காலத்தை அதிகப் பயனுள்ளதா நினைச்சு, அதுக்கு அதிக மார்க் கொடுத்திருக்கேன். உன்னை மாதிரி உண்மையான நண்பர்களை அன்னிக்குத்தான் என்னால அடையாளம் காண முடிஞ்சது. அதைக் கண்டுபிடிக்க எனக்கு உதவினதே அந்த சோதனைக் காலம்தானே!"

உணர்ச்சிப் பெருக்கில், முத்துசாமி தன் நண்பனின் கைகளைப் பிடித்துக் கொண்டார்.

பொருட்பால்
நட்பியல்
அதிகாரம் 80
நட்பாராய்தல் 

குறள் 796:
கேட்டினும் உண்டோர் உறுதி கிளைஞரை
நீட்டி அளப்பதோர் கோல்.

பொருள்: 
தீமை வந்தால் அதிலும் ஒரு நன்மை உண்டு. அந்தத் தீமைதான் நண்பர்கள் எப்படிப்பட்டவர்கள் என்று அளந்து காட்டும் கருவியாகிறது.
       அறத்துப்பால்                                                                       காமத்துப்பால்

1080. 'தன்மானத் தலைவரி'ன் திடீர் முடிவு!

தன் அரசியல் வாழ்க்கையின் துவக்கத்தில் இரண்டு மூன்று கட்சிகளில் இருந்து விட்டு, அங்கு தனக்கு உரிய மதிப்புக் கிடைக்கவில்லை என்பதால், 'மக்க...