Tuesday, July 12, 2022

799. கண் மூடும் வேளையிலும்!

புருஷோத்தமன் படுத்த படுக்கையாகி இரண்டு மாதங்கள் ஆகி விட்டன. 

ஒரு மாதம் மருத்துவமனையில் சிகிச்சை அளித்த பிறகு, "இனிமே எந்த முன்னேற்றமும் ஏற்படாது. வீட்டுக்கு அழைச்சுக்கிட்டுப் போயிடுங்க. எவ்வளவு நாள் இருப்பார்னு சொல்ல முடியாது" என்று மருத்துவர்கள் கைவிரித்து விட்டனர்.

பருஷோத்தமனை வீட்டுக்கு அழைத்து வந்த பிறகு, அவர் மனைவி சரஸ்வதி, அவர் படுக்க வைக்கப்பட்டிருந்த கட்டிலுக்கு அருகிலேயே அமர்ந்திருந்தாள்.

புருஷோத்தமன் பெரும்பாலும் நினைவில்லாமல்தான் இருப்பார். அவ்வப்போது கண் விழிப்பார். கண் விழித்த பின், சில மணி நேரம் நல்ல நினைவுடன் மனைவியிடம் பேசிக் கொண்டிருப்பார். 

அவர்கள் திருமண வாழ்க்கை, குடும்ப நிகழ்வுகள் என்று பலவற்றைப் பற்றி நினைவு கூர்ந்து பேசுவார். அப்போதெல்லாம், அவர் முகத்தில் ஒரு மலர்ச்சி தெரியும்.

திருமணமாகிச் சிறிது காலத்துக்கெல்லாம், புருஷோத்தமன், தான் பார்த்துக் கொண்டிருந்த வேலையை விட்டு விட்டு, சொந்தத் தொழில் துவக்கினார். 

புருஷோத்தமனின் தாய், அவருடைய நண்பர்கள் சிலர், சரஸ்வதி உட்படப் பலர் எச்சரித்தும், புருஷோத்தமன் துணிச்சலாகச் சொந்தத் தொழில் முயற்சியில் இறங்கினார்.

அனைவரும் எச்சரித்தபடியே, இரண்டு மூன்று வருடங்களுக்கு புருஷோத்தமன் தன் தொழிலில் பல சவால்களைச் சந்தித்தார். சேமிப்பு அத்தனையும் கரைந்து விட்டது. 

குடும்பச் செலவுக்கே பணம் போதாத நிலை ஏற்பட்டது. ஆயினும், யாரிடமும் கடன் கேட்பதில்லை என்று புருஷோத்தமன் உறுதியாக இருந்தார்.

கணவனும் மனைவியும் எப்படியோ பல்லைக் கடித்துக் கொணடு நிலைமையைச் சமாளித்தார்கள்.

பிறகு, சிறிது சிறிதாக நிலை மாறி, அவர் தொழிலில் முன்னேற்றம் ஏற்பட்டு, ஓரிரு வருடங்களில் தொழில் பெரிதாக வளர்ந்து விட்டது, வசதியான வாழ்க்கையும் அமைந்தது.

அந்த நாட்களைப் பற்றிப் பேசும்போது, புருஷோத்தமனிடம் வருத்தம் இருக்காது, பெருமிதம்தான் இருக்கும். பெரும் சவால்களைச் சமாளித்து வெற்றி அடைந்து விட்ட பெருமிதம்!

சில சமயம், அவர்கள் மகன் முகுந்தனும் அருகில் அமர்ந்து, தன் தந்தை கூறுவற்றைக் கேட்டுக் கொண்டிருப்பான். 

புருஷோத்தமன் ஒரு விஷயத்தைப் பற்றி நினைவுகூரும்போது, அது பற்றிய விவரங்களை சரஸ்வதி விவரமாக மகனிடம் கூறுவாள். புருஷோத்தமன் அவள் கூறுவதை ரசித்துக் கேட்டுத் தலையாட்டி மகிழ்வார்.

ருநாள், புருஷோத்தமன் தன் தொழில் முயற்சியின்போது ஏற்பட்ட சவால்களைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தபோது, திடீரென்று அவர் முகத்தில் ஒரு மாறுதல் ஏற்பட்டது. 

முகத்தில் இருந்த மகிழ்ச்சியும், பெருமிதமும் மறைந்து, சோகமும், ஏமாற்றமும் குடிகொண்டன. "ரமணி, ரமணி" என்று முணுமுணுத்து விட்டுப் பிறகு கண்களை மூடிக் கொண்டார்.

"யாரும்மா ரமணி?" என்றான், அருகில் அமர்ந்து தந்தை பேசியதைக் கேட்டுக் கொண்டிருந்த முகுந்தன்.

"ரமணின்னு உன் அப்பாவுக்கு ஒரு நண்பர் இருந்தார். அவரைத் தன்னோட நெருங்கின நண்பன்னு உன் அப்பா நினைச்சாரு. ரமணி அடிக்கடி நம் வீட்டுக்கு வருவாரு. அப்பாவும் அவரும் ரொம்ப நேரம் பேசிக்கிட்டிருப்பாங்க. ஆனா, உன் அப்பா கஷ்டமான நிலையில இருந்தப்ப, அவர் நம்ம வீட்டுப் பக்கமே வரல. அப்ப, ஃபோன் வசதி எல்லாம் கிடையாது.

"ஒருநாள், உன் அப்பா ரமணியைப் பாக்க அவர் வீட்டுக்குப் போயிருந்தாரு. தன்னோட கஷ்டங்களைப் பத்தி நண்பன்கிட்ட பேசினா ஆறுதலா இருக்கும்னு நினைச்சுத்தான் போனாரு. 

"அப்பா அவர் வீட்டுக்குப் போனப்ப, ரமணி வீட்டில இல்லேன்னு அவர் மனைவி அப்பாகிட்ட சொன்னாங்க. ஆனா உங்கப்பா வந்ததைப் பாத்ததும், முன் அறையிலிருந்த ரமணி அவசரமா எழுந்து உள்ளே போனதை உன் அப்பா பாத்துட்டாரு. 

"தான் ஏதோ கடன் கேக்கப் போறோம்னு நினைச்சுத்தான் ரமணி அப்படிப் பண்ணி இருப்பார்னு உன் அப்பாவுக்குப் புரிஞ்சுடுச்சு. 

"தனக்கு நெருக்கமா இருந்த நண்பன்கிட்ட தன்னோட கவலைகளைச் சொல்லி ஆறுதல் தேடலாம்னு வந்தப்ப, அந்த நண்பன் அப்படி நடந்துக்கிட்டது உன் அப்பாவுக்குப் பெரிய அதிர்ச்சியா அமைஞ்சுடுச்சு. 

"இத்தனை வருஷமா, எத்தனையோ தடவை உங்கப்பா எங்கிட்ட இதைச் சொல்லி மாய்ஞ்சு போயிருக்காரு. அதை மறந்துடுங்கன்னு நான் எத்தனையோ தடவை சொல்லி இருக்கேன். 

"இப்ப திடீர்னு அது அவருக்கு ஞாபகம் வந்து தொலைச்சிருக்கு! பாரேன், சந்தோஷமாப் பேசிக்கிட்டிருந்தவரோட முகம், ஒரு நொடியில எப்படி மாறிப் போயிடுச்சுன்னு!"

மகனிடம் விவரங்களைக் கூறி விட்டு, சரஸ்வதி கணவனின் முகத்தைப் பார்த்தாள். சற்றுமுன் மலர்ந்திருந்த முகத்தில், ஒரு வாட்டம் வந்து குடிபுகுந்திருந்தது. 

புருஷோத்தமனின் கண்கள் மூடி இருந்ததால், ரமணியைப் பற்றி சரஸ்வதி மகனிடம் கூறியதை அவர் கேட்டாரா, அல்லது நினைவு இழந்து விட்டாரா என்று சரஸ்வதிக்குத் தெரியவில்லை.

அதற்குப் பிறகு, புருஷோத்தமன் கண்களைத் திறக்கவே இல்லை. 

பொருட்பால்
நட்பியல்
அதிகாரம் 80
நட்பாராய்தல் 

குறள் 799:
கெடுங்காலைக் கைவிடுவார் கேண்மை அடுங்காலை
உள்ளினும் உள்ளஞ் சுடும்.

பொருள்: 
கேடு வரும் காலத்தில் கைவிட்டு ஒதுங்குகின்றவரின் நட்பைப் பற்றி, எமன் உயிரை எடுத்துச் செல்லும் காலத்தில் நினைத்தாலும், நினைத்த உள்ளத்தை அது வருத்தும்.
       அறத்துப்பால்                                                                       காமத்துப்பால்

No comments:

Post a Comment

1080. 'தன்மானத் தலைவரி'ன் திடீர் முடிவு!

தன் அரசியல் வாழ்க்கையின் துவக்கத்தில் இரண்டு மூன்று கட்சிகளில் இருந்து விட்டு, அங்கு தனக்கு உரிய மதிப்புக் கிடைக்கவில்லை என்பதால், 'மக்க...