"நாப்பது வயசு ஆகுதுங்கறீங்க. இதுவரையிலும் எந்த வேலைக்கும் போகலியா?"
நேர்முகத் தேர்வுக்கு வந்திருந்த அந்த நடுத்தர வயது மனிதரைப் பார்த்து, அந்த நிறுவனத்தின் மேலாளர் சண்முகம் வியப்புடன் கேட்டார்.
"இல்லை" என்றான் கேசவன், சுருக்கமாக.
"ஏன்?"
"குடும்பச் சூழ்நிலை."
"அப்படின்னா?"
"அப்பா படுத்த படுக்கையா இருந்தாரு. அம்மாவால எதுவும் முடியாது. அவங்களும் பலவீனமா இருந்தாங்க. நான்தான் வீட்டில எல்லாத்தையும் பாத்துக்கிட்டேன்."
"உங்க சகோதர, சகோதரிகள்?"
"அண்ணன் வெளியூருக்கு வேலைக்குப் போயிட்டான். தங்கச்சி கல்யாணம் ஆகிப் புகுந்த வீட்டுக்குப் போயிட்டா."
"நீங்க தனியா மாட்டிக்கிட்டீங்களாக்கும்!" என்று சற்று இரக்கப்படுவது போல் கூறிய சண்முகம், "ஆனா, நீங்க ஏன் பத்தாது வகுப்பு வரைக்கும் கூடப் படிக்கல?" என்றார், தொடர்ந்து.
"அதான் சொன்னேனே, சார்! நான் சின்னப் பையனா இருந்ததிலேந்தே, அப்பா அம்மாவை கவனிக்கிறதுதான் என் முழுநேர வேலையா இருந்தது!"
"சாரை உங்களுக்கு எப்படித் தெரியும்?"
"எங்கப்பாவோட நண்பர் ஒத்தர்தான் சார்கிட்ட என்னைப் பத்தி சொல்லி, எனக்கு அவரோட கம்பனியில வேலை போட்டுத் தரச் சொன்னாரு. சாரை வீட்டில போய்ப் பாத்தேன். அவர்தான் ஆஃபீசுக்குப் போய் மானேஜரைப் பாருன்னு சொன்னாரு!" என்றான் கேசவன்.
"இங்க பாருங்க, கேசவன்! இது ஒரு சின்ன கம்பெனி. இங்க பியூன் வேலைதான் காலி இருக்கு. சம்பளம் குறைச்சலாத்தான் இருக்கும்" என்றார் சண்முகம், சற்றுத் தயக்கத்துடன்.
"எந்த வேலையா இருந்தாலும் பரவாயில்ல சார்!"
"பியூன்னா, எல்லா வேலையையும் செய்யணும். ஆஃபீஸ்ல எல்லாருக்கும் டீ, காப்பி வாங்கிக்கிட்டு வரதிலேந்து, வெளியே பல இடங்களுக்குப் போறது வரை, நிறைய வேலை இருக்கும். எடுபிடி வேலை மாதிரிதான் இருக்கும். பொதுவா, நாங்க இந்த வேலைக்கு சின்னப் பையங்களைத்தான் எடுப்போம். அவங்கதான் கௌரவம் பாக்காம, எல்லா வேலையும் செய்வாங்க. நீங்க வயசில கொஞ்சம் பெரியவரா வேற இருக்கீங்க..."
"அதனால பரவாயில்ல, சார்."
"சரி" என்ற சண்முகம், பக்கத்து அறையில் ஏதோ அரவம் கேட்டதும், "முதலாளி வந்துட்டாரு போலருக்கு. நான் அவர்கிட்ட ஒரு வார்த்தை சொல்லிட்டு வந்துடறேன்" என்று எழுந்து பக்கத்து அறைக்குப் போனார்.
பக்கத்து அறைக்குள் அவர்கள் பேசிக் கொண்டது, கேசவனுக்கு நன்றாகக் காதில் விழுந்தது.
அவன் காதில் விழுந்து விடக் கூடாதே என்பது போல், மானேஜர் சண்முகம் சற்று மெல்லிய குரலில் பேசியதாகத் தோன்றியது. ஆனால் இயல்பிலேயே உரத்த குரல் கொண்ட முதலாளி, மெதுவாகப் பேச முயற்சி செய்யவில்லை.
முதலாளியிடமிருந்து பெரிய சிரிப்புச் சத்தம் கேட்டது.
"அப்படியா சொன்னான்? அவங்க அப்பா அம்மா போய்ப் பல வருஷங்கள் ஆயிடுச்சு. இத்தனை வருஷமா சோம்பேறியா சுத்திக்கிட்டு, அவங்க சம்பாதிச்சு வச்ச சொத்தையெல்லாம் அழிச்சுட்டு, இப்ப வேற வழியில்லாம நாப்பது வயசில வேலைக்கு வரான்.
"கல்யாணம் ஆகிக் குழந்தை கூட இருக்கே! குடும்பத்தைக் காப்பாத்தணுமே! எவ்வளவோ வருஷமா பெண்டாட்டி சொல்லியும், வேலைக்கு முயற்சி பண்ணல. சின்ன வயசில ஒழுங்காப் படிக்கவும் இல்ல. இப்ப, அப்பா அம்மா மேல பழி போடறான்!
"என் நண்பர் அவன் அப்பாவோட குடும்ப நண்பர். அவர் எல்லாத்தையும் எங்கிட்ட விவரமா சொன்னாரு. அவர் கூட எவ்வளவோ சொல்லியும், அவன் இத்தனை வருஷமா வேலைக்குப் போகல. அவன் மனைவி, குழந்தை மேல இரக்கப்பட்டுத்தான், அவனுக்கு வேலை கொடுக்கச் சொல்லி அவர் எங்கிட்ட சொன்னாரு. அடிப்படையில அவன் ஒரு சோம்பேறி. வேலையிலேயும் சோம்பேறித்தனமாத்தான் இருப்பான். ஸ்டிரிக்டா இருங்க!"
முதலாளியின் பேச்சு கேசவனின் காதுகள் வழியே உள்ளே புகுந்து, அவன் இதயத்தைத் துளைத்தது. முன்பின் தெரியாதவர்களிடமிருந்து இப்படிப்பட்ட சொற்களைக் கேட்க வேண்டிய நிலைமையை நினைத்து, அவமானத்தால் அவன் உடல் குறுகியது
பொருட்பால்
அரசியல் இயல்
அதிகாரம் 61
மடியின்மை (சோம்பலின்மை)
குறள் 607:
இடிபுரிந்து எள்ளுஞ்சொல் கேட்பர் மடிபுரிந்து
மாண்ட உஞற்றி லவர்.
பொருள்:
சோம்பலை விரும்பி மேற்கொண்டு, சிறந்த முயற்சி இல்லாதவராய் வாழ்கின்றவர், பிறர் இடித்துக் கூறி இகழ்கின்ற சொல்லைக் கேட்கும் நிலையை அடைவர்.
No comments:
Post a Comment