"உங்களுக்குத்தான் நாகராஜனைப் பிடிக்கலியே, பின்னே ஏன் அவரோட நட்பை விட மாட்டேங்கறீங்க?" என்றாள் சாரதா.
"எனக்கு நாகராஜனைப் பிடிக்கலேங்கறது சரியில்ல. அவன் குணத்துக்கும் என் குணத்துக்கும் ஒத்து வராது. அவ்வளவுதான். நான் எல்லா விஷயத்திலேயும் நேர்மையான அணுகுமுறையைக் கடைப்பிடிக்கணும்னு நினைக்கிறவன். அவன் சின்ன விஷங்களுக்குக் கூடக் குறுக்கு வழியைத் தேடறவன். எலக்டிரிக் டிரெயினுக்கு டிக்கட் வாங்க கியூவில நாலு பேர் நிப்பாங்க. கியூவில நின்னு டிக்கட் வாங்க ரெண்டு மூணு நிமிஷம் ஆகும். ஆனா அவன் கியூவில நிக்காம, கியூவில முதல்ல நிக்கறவர்கிட்ட பணத்தைக் கொடுத்துத் தனக்கும் சேர்த்து டிக்கட் வாங்கச் சொல்லுவான். ஏண்டா இப்படிப் பண்றேன்னு கேட்டா, 'கியூ எல்லாம் முட்டாள்களுக்குத்தான். புத்திசாலிகள் வேற வழியை யோசிக்கணும்'னு பெரிய வியூக வகுப்பாளர் மாதிரி பேசுவான். அவன் கூட நான் எங்கேயாவது போறப்ப, இப்படியெல்லாம் அவன் செய்யறதை என்னால ஏத்துக்க முடியறது இல்ல!" என்று விளக்கினான் சங்கர்.
"அப்ப, அவரோட நட்பை விட்டொழிக்க வேண்டியதுதானே?"
"அதுக்கு சந்தர்ப்பம் பாத்துக்கிட்டிருக்கேன். அது அநேகமா கிடைச்சுடுச்சுன்னு நினைக்கறேன்" என்ற சங்கர், "எனக்கு ஒரு வேலை இருக்கு. கொஞ்சம் வெளியில போயிட்டு வந்துடறேன்" என்று மனைவியிடம் சொல்லி விட்டுக் கிளம்பினான்.
இரண்டு மணி நேரம் கழித்து வீட்டுக்குத் திரும்பிய சங்கரைப் பார்த்து, "எங்கே போயிட்டு வந்தீங்க?" என்றாள் சாரதா.
"மாசிலாமணின்னு ஒரு தொழிலதிபர் இருக்காரு. அவர் ஒரு பண்புள்ள மனிதர். என் நண்பன் தண்டபாணிக்கு அவர் தூரத்து உறவு. அவர்கிட்ட நட்பு ஏற்படுத்திக்கணும்னு நினைச்சேன். அதுக்கான வாய்ப்பு கிடைக்கல" என்றான் சங்கர்.
"ஏன், தண்டபாணி மூலமா அவரை சந்திச்சிருக்கலாமே!" என்றாள் சாரதா.
"தண்டபாணிக்கு அவர் தூரத்து உறவுதாங்கறதால, அவனே அவரை சாதாரணமாப் போய்ப் பாக்கத் தயங்குவான். அப்படியே அவனோட போய் அவரை ஒரு தடவை நான் பார்த்தாலும், அவர்கிட்ட நெருக்கமா ஆக முடியாதே?"
"அதனால?"
"தற்செயலா ஒரு சந்தர்ப்பம் கிடைச்சது. அவர் ராஜாஜிகிட்ட ரொம்ப மதிப்பு வச்சிருக்கறவர். ராஜாஜி எழுதின கட்டுரைகளைத் தொகுத்து 'சத்யமேவ ஜயதே'ன்னு புத்தகமாப் போட்டிருக்காங்க."
"ஆமாம், உங்ககிட்ட கூட அந்தப் புத்தகங்கள் ரெண்டு மூணு பகுதியா இருக்கு போலருக்கே!"
"ஆமாம். அதோட நாலு பகுதியும் எங்கிட்ட இருக்கு. ஆனா, மாசிலாமணிக்கு ஒரு வால்யூம் கிடைக்கலையாம். ஒரு திருமணத்தில அவர் இதை யார்கிட்டயோ சொல்லிக்கிட்டிருந்ததை தண்டபாணி கேட்டிருக்கான். அதை அவன் எங்கிட்ட சொன்னான். அந்த வால்யூம் எங்கிட்ட இருக்குன்னு சொல்லி, அதை அவங்கிட்ட கொடுத்து, மாசிலாமணிகிட்ட கொடுக்கச் சொன்னேன். அவன் அதைக் கொடுத்ததும், அவர் என்னைப் பாக்கணும்னு சொல்லி இருக்காரு. இப்ப அவரைத்தான் பாத்துப் பேசிட்டு வந்தேன். 'நம்ம ரெண்டு பேருக்கும் ஒத்த கருத்துக்கள் நிறைய இருக்கு. அதனால, நாம அடிக்கடி சந்திச்சுப் பேசலாம்' னுஅவர் சொன்னாரு. அதனால, அவரோட நட்பு கிடைக்கணுங்கற என்னோட விருப்பம் நிறைவேறிடுச்சு!"
"பரவாயில்லையே!"
"அதோட, இன்னொரு விஷயம். நாகராஜனோட நட்பை விட்டொழிக்கணும்னு நீ சொல்லிக்கிட்டிருப்ப இல்ல?"
"ஆமாம். அதுக்கு ஏதோ சந்தர்ப்பம் கிடைச்சிருக்குன்னு சொன்னீங்களே!"
"ஆமாம். அவன் எங்கிட்ட பத்தாயிரம் ரூபாய் கடன் கேட்டான். அதை அவனுக்கு கூகுள் பே-ல அனுப்பிட்டேன்"
"என்னங்க இது? அவர் குறுக்கு வழியில போறவர்னு நீங்கதானே சொன்னீங்க? அவர் பணத்தை ஒழுங்கா திருப்பித் தருவாரா?"
"நிச்சயமாத் திருப்பித் தர மாட்டான்! ஏன்னா, அவன் வேற சில நண்பர்கள்கிட்ட ஆயிரம், ரெண்டாயிரம்னு வாங்கினதையே திருப்பித் தரல. அவங்க ஃபோன் பண்ணினா, ஃபோனை எடுக்கறதில்லையாம்!" என்றான் சங்கர், சிரித்தபடி.
"பின்னே ஏன் அவருக்குப் பணம் கொடுத்தீங்க?" என்றாள் சரதா, சற்றுக் கோபத்துடன்.
"இனிமே அவன் என்னைப் பாக்க வர மாட்டான். ஃபோன் கூடப் பண்ண மாட்டான். அவன் நட்பை விட்டொழிக்க, இதை விட சிறந்த வழி வேற என்ன இருக்க முடியும்?"
"அதுக்காக, பத்தாயிரம் ரூபா நஷ்டப்படணுமா?"
"நான் என்னோட புத்தகங்களை யாருக்கும் இரவல் கூடக் கொடுக்க மாட்டேன்னு உனக்குத் தெரியும். ஆனா, மாசிலாமணியோட நட்பைப் பெறணுங்கறதுக்காக, நானே வலுவில ஒரு புத்தகத்தைக் கொடுத்து, அதன் மூலமா அவர் நட்பைத் தேடிக்கிட்டேன். அதே மாதிரி, நாகராஜனோட நட்பை விட்டொழிக்க, பத்தாயிரம் ரூபா போனாலும் பரவாயில்லேன்னு அவனுக்குக் கடன் கொடுத்தேன். ஒண்ணு நமக்குக் கிடைக்கறதுக்கு நாம ஒரு விலை கொடுக்கிற மாதிரி, ஒண்ணை விட்டொழிக்கவும் சில சமயம் நாம ஒரு விலை கொடுக்க வேண்டி இருக்கு!" என்றான் சங்கர்.
பொருட்பால்
நட்பியல்
அதிகாரம் 80
நட்பாராய்தல்
குறள் 800:
மருவுக மாசற்றார் கேண்மைஒன் றீத்தும்
ஒருவுக ஒப்பிலார் நட்பு.
No comments:
Post a Comment