முகுந்தன் அலுவலகத்துக்குக் கிளம்பும் முன் வழக்கம் போல் தன் தந்தையின் அறைக்குச் சென்று படுக்கையில் படுத்திருந்த அவரைப் பார்த்து, "ராத்திரி நல்லாத் தூங்கினீங்களாப்பா?" என்றான்.
"ம்...ம்.." என்றார் ரத்தினசபாபதி, தூக்கம் வராமல் தான் படும் அவதியை மகனிடம் சொல்லி அவனை வருத்தப்படுத்துவானேன் என்ற எண்ணத்துடன்.
"சரி, வரேன். ஆஃபீசிலேந்து ராத்திரி வந்ததும் பாக்கறேன்" என்று சொல்லி விடை பெற்றான் முகுந்தன்.
முகுந்தன் அறையை விட்டு வெளியேறியதும், "எவ்வளவு உத்தமமான பிள்ளையைப் பெற்றிருக்கிறேன்! சிப்பியிலிருந்து முத்து பிறந்தது போல் எனக்கு இவன் வந்து பிறந்திருக்கிறனே!" என்று நெகிழ்ச்சியுடன் நினைத்துக் கொண்டார் ரத்தினசபாபதி.
ரத்தினசபாபதி வசதியான குடும்பத்தில் பிறந்தவர். அதுவே அவருக்கு வாழ்க்கையைப் பற்றிய ஒரு கவலையற்ற மனப்பான்மையை உருவாக்கி, அவர் மனத்தைப் பல தவறான திசைகளிலும் செலுத்தியது.
படிப்பில் அக்கறை காட்டாமல் நண்பர்களுடன் ஊர் சுற்றுவதில் துவங்கிய அலட்சிய மனப்போக்கு குடி, சூதாட்டம் போன்ற பழக்கங்களுக்கும் இட்டுச் சென்றது.
ஒருபுறம் சரியான படிப்பும், வேலையும் இல்லாத நிலையில், மறுபுறம் அவருடைய தீய பழக்கங்களால் அவர் குடும்பச் சொத்து வேகமாகக் கரைந்தது.
தான் போகும் பாதை தவறென்று உணர்ந்து அவர் தன்னை மாற்றிக் கொள்ள முயன்றபோது, அவருடைய பெற்றோர்கள் மறைந்து விட்டனர். குடும்பச் சொத்தும் பெரும்பாலும் கரைந்து விட்டது.
ஒரே மகன் முகுந்தனைக் கூடச் சரியாக வளர்க்க முடியாத நிலை.
ஆயினும் முகுந்தன் சிறு வயதிலேயே தந்தையைப் பற்றியும், தன் குடும்பத்தின் நிலையையையும் நன்கு அறிந்து கொண்டவனாக மிகவும் பொறுப்புடன் நடந்து கொள்ள ஆரம்பித்தான்.
தந்தை செய்த தவறுகளை கவனமாகத் தவிர்ப்பது போல் அமைந்தன அவன் பழக்கங்களும் செயல்களும். எந்த ஒரு தீய பழக்கத்துக்கோ, ஆடம்பரச் செலவுகளுக்கோ இடம் கொடுக்காமல் மிகவும் கவனமாக இருந்து, அதிகம் படிக்க வசதியில்லாத நிலையில் தன் படிப்புக்கேற்ற ஒரு சிறிய வேலையில் சேர்ந்து தன் கடின உழைப்பாலும், நேர்மையான செயல்பாடுகளாலும் வாழ்க்கையில் ஓரளவுக்கு நல்ல நிலைமைக்கும் வந்து விட்டான்.
தந்தையிடம் கடுமையாக ஒரு சொல் பேசியதில்லை. தாய் மறைந்த பிறகு, தந்தைக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டபோது அவரை அன்புடனும், அக்கறையுடனும் கவனித்துக் கொண்டான்.
'தாத்தாவோட சொத்தையெல்லாம் அழிச்சு என்னையும், அம்மாவையும் வறுமையான வாழ்க்கை வாழ வேண்டிய நிலைக்குத் தள்ளிட்டீங்களே!' என்று ஒரு நாள் தன்னிடம் அவன் கேட்பான் என்று அவர் பயந்து கொண்டிருந்தார். ஆனால் அவன் அப்படிச் செய்யவில்லை.
ஞாயிற்றுக்கிழமை முகுந்தன் வீட்டில் இருந்தபோது, ரத்தனசபாபதி அவனை அழைத்துத் தன் அருகில் உட்காரச் சொன்னார்.
"முகுந்தா நான் இன்னும் எவ்வளவு நாள் இருப்பேனோ தெரியாது. உங்கிட்ட ஒரு விஷயம் சொல்லணும்னு ரொம்ப நாளா நினைச்சுக்கிட்டிருக்கேன். அதைச் சொல்லிடறேன்... நீ குணத்திலேயும், பழக்கங்களிலேயும் எனக்கு நேர்மாறா இருக்கே. நீ எல்லா விதத்திலேயும் சரியா இருக்க. ஆனா இன்னும் ஒரு விஷயத்தை நீ செஞ்சா நல்லா இருக்கும்னு எனக்குத் தோணுது" என்று சொல்லி நிறுத்தினார் ரத்தினசபாபதி.
"சொல்லுங்கப்பா!" என்றான் முகுந்தான்.
"நான் இந்த உலகத்தை விட்டுப் போனப்பறம் எனக்கு என்ன கதி கிடைக்குமோ தெரியாது. ஆனா உன்னோட நல்ல மனசுக்கும் குணத்துக்கும் உனக்கு நல்ல கதிதான் கிடைக்கும். சாவைப் பத்திப் பேசறேனேன்னு நினைக்காதே. நான் உயிரோட இருக்கறப்பதானே நான் சொல்ல நினைக்கற விஷயங்களைப் பேச முடியும்? எனக்கு இருந்த மாதிரி கெட்ட சகவாசம்லாம் உனக்கு இல்ல. அது ரொம்ப நல்ல விஷயம்தான். ஆனா நீ யாரோடயுமே சேராம ஒதுங்கி இருக்கற மாதிரி எனக்குத் தோணுது. சரிதானா?"
"ஆமாம்ப்பா. எனக்கு நண்பர்கள்னு யாரும் இல்ல. வீட்டிலேந்து வேலைக்குப் போறது, வேலை முடிஞ்சா வீடுன்னுதான் இருக்கேன். அதுதான் எனக்குப் பிடிச்சிருக்கு."
"நல்லதுதான். ஆனா நாம நல்லவங்களா இருக்கறதோட, நல்லவங்க சில பேரோடயாவது நெருக்கமாவும் இருக்கணும். அப்பதான் நம்மகிட்ட இருக்கற நல்லதை நிலைநிறுத்திக்க முடியும். இப்படியெல்லாம் யோசனை சொல்ல எனக்கு என்ன யோக்கியதை இருக்குன்னு நினைக்காதே. பெரியவங்க சொல்லி நான் தெரிஞ்சுக்கிட்டதைத்தான் சொல்றேன். நான் அதன்படி எல்லாம் நடக்கலைங்கறது வேற விஷயம்."
"இல்லப்பா. நான் அப்படி நினைக்கல. நீங்க சொல்லுங்க" என்றான் முகுந்தன்.
"அதனால, சமூக சேவையில ஈடுபட்டிருக்கறவங்க, ஆன்மீகத்தில இருக்கறவங்க இது மாதிரி சில நல்ல சிந்தனையும், நடத்தையும் இருக்கற சில பேர்கிட்ட நெருக்கமா இரு. அது உனக்கு நல்லதைக் கொடுக்கும்" என்றார் ரத்தினசபாபதி, மகன் தான் சொன்னதை மனதில் கொண்டு செயல்படுவான் என்ற நம்பிக்கையுடன்.
அரசியல் இயல்