Sunday, December 13, 2020

431. நால்வர்

"என்னோட எம் பி ஏ பிராஜக்டுக்காக ஒரு வித்தியாசமான தலைப்பை எடுத்துக்கிட்டிருக்கேன் அப்பா!" என்றான் மனோகர்.

"அப்படியா? என்ன அது?" என்றார் அவன் தந்தை குணசீலன். 

அவர் அதிகம் படித்திருக்காவிட்டாலும், அறிவுக் கூர்மை மிகுந்தவர், வாழ்க்கையின் உண்மைகளை அனுபவம் மூலம் நன்கு கற்றவர் என்பதால், மனோகர் அவரிடம் தன் படிப்பு தொடர்பான விஷயங்களைப் பகிர்ந்து கொள்வது உண்டு.

"வாழ்க்கையில வெற்றி பெற்ற நாலு பேரோட வாழ்க்கையை எடுத்துக்கிட்டு அவங்க வெற்றி அடைஞ்சதுக்கான காரணங்கள் என்னென்னங்கறதைப் பற்றி ஒரு ஆராய்ச்சிக் கட்டுரை எழுதப் போறேன்."

"நல்ல யோசனையாத்தான் படுது. உன் கைடு இதுக்கு ஒத்துக்கிட்டாரா?"

"ஒத்துக்கிட்டாரு. அவரும் இது ஒரு நல்ல யோசனைன்னுதான் சொன்னாரு. அந்த நாலு பேர் யாருங்கறதைத் தேர்ந்தெடுத்து அவர் கிட்ட சொல்லி அவரோட ஒப்புதலையும் வாங்கிட்டேன். அவரே அந்த நாலு பேர்கிட்டயும் பேசி அவங்க சம்மதத்தையும் வாங்கிட்டாரு. அவங்க எனக்கு நேரம் ஒதுக்கி நான் கேட்கிற விவரங்களைக் கொடுக்க ஒத்துக்கிட்டாங்க" என்றான் மனோகர் உற்சாகத்துடன்.

"நல்லது. நல்லாப் பண்ணு!" என்றார் குணசீலன்.

மூன்று மாதங்களுக்குப் பிறகு மனோகர் தந்தையிடம், "அப்பா! என் பிராஜக்டை முடிச்சுட்டேன். கைடும் அப்ரூவ் பண்ணிட்டாரு" என்றான்.

"ரொம்ப நல்லது. அந்த நாலு பேரு யாருன்னு எங்கிட்ட சொல்லலாம்னா சொல்லு" என்றார் குணசீலன்.

"முதல்ல நான் உங்கிட்ட பிராஜக்டைப் பத்தி சொன்னப்பவே, அந்த நாலு பேரு யாருன்னு கேப்பேன்னு நினைச்சேன்."

"வேணும்னுதான் கேக்கல. அவங்க யாருன்னு தெரிஞ்சா அவங்களைப் பத்தி என்னோட கருத்து எதையாவது நான் சொல்லி அது உன்னோட அணுகுமுறையை பாதிக்கக் கூடாதுன்னுதான் கேக்கல. இப்ப சொல்லு. தெரிஞ்சுக்கறேன்."

"விஞ்ஞானி தாமோதரன், தொழிலதிபர் முத்து, தன் படிப்பாலயும், அறிவுத்திறனாலயும் ஒரு பெரிய நிறுவனத்தோட தலைமைப் பொறுப்புக்கு வந்த மணிவண்ணன், அதிகம் படிக்காம, கீழ் நிலையில வேலைக்குச் சேர்ந்து உயர் பதவிக்கு வந்த முருகையன் இவங்கதான் அந்த நாலு பேரு."

"நல்ல தேர்வுதான். வெவ்வேறு பின்னணியிலேந்து வெவ்வேறு விதங்கள்ள உயர்ந்த நிலையை அடைஞ்சவங்க."

"அவங்களைச் சந்தித்துப் பேசி அவங்க அனுபவங்களைக் கேட்டு அவங்களோட சிறப்புகள், முயற்சிகள், அவங்க எடுத்த முக்கியமான முடிவுகள், வாழ்க்கையைப் பத்தின அவங்க சிந்தனை, அணுகுமுறை, அவங்களோட வெற்றிகள், தோல்விகள், அவங்க செஞ்ச தவறுகள், சந்திச்ச சவால்கள், எடுத்த ரிஸ்க்குகள், அவங்க மதித்துப் பின்பற்றுகிற கோட்பாடுகள், மத்தவங்களோட செயல்படும்போது அவங்க பின்பற்றின அணுகுமுறைகள்னு பல அருமையான, பயனுள்ள விஷயங்களை நான் தெரிஞ்சுக்கிட்டது எனக்கு நிறைய உற்சாகத்தையும், ஊக்கத்தையும் கொடுத்திருக்கு, நான் நிறையக் கத்துக்கிட்டிருக்கேன். எதிர்காலத்தில இது எனக்கு நிறைய உதவும்னு நினைக்கறேன்!" என்றான்  மனோகர் பெருமிதத்துடன்.

"உன்னோட கல்வியை உன் வாழ்க்கைக்குப் பயனுள்ளதா ஆக்கிக்கிட்டது நல்ல விஷயம். சரி. அவங்ககிட்ட கத்துக்கிட்டது உனக்கு வாழ்க்கையில பயன்படும்னு நீ சொன்னதால கேக்கறேன். இந்த நாலு பேர்ல யாரையாவது ஒரு ரோல் மாடலா எடுத்துக்கணும்னா யாரை எடுத்துப்ப?" என்றார் குணசீலன்.

"அப்பா! உண்மையில, நானே இதைப் பத்தி யோசிச்சிருக்கேன். வெவ்வேறு சமயங்கள்ள இந்த நாலு பேரையுமே பின்பத்தணும்னு தோணி இருக்கு. ஆனா நான் அவங்ககிட்ட நெருக்கமாப் பழகினதாலயும், அவங்ககிட்ட வேலை செய்யறவங்ககிட்ட பேசினதிலேயும் எனக்கு சில நெகடிவான விஷயங்கள் தெரிய வந்தது. என்  ரிப்போர்ட்ல இது வராது, வரவும் முடியாது. ஆனா என் மனசில அது உறுத்திக்கிட்டிருந்தது. அதுவும் நீ இந்தக் கேள்வியைக் கேட்டதால சொல்றேன்.

"தாமோதரன் பெண்கள் கிட்ட தவறா நடந்துக்கறவர்னு ஒரு கருத்து இருக்கு. அதில ஓரளவுக்காவது உண்மை இருக்கும்னுதான் எனக்குப் படுது. 

"மணிவண்ணன் ரொம்ப கோபக்காரர்.அவருகிட்ட எல்லாருமே பயந்து பயந்துதான் பேசறாங்க. எங்கிட்ட கூட சில சமயம் எரிஞ்சு விழுந்தாரு. அவரு கிட்ட கேள்வி கேக்கறப்ப நான் பயந்துகிட்டேதான் கேட்டேன். 

"முருகையன் கீழ்நிலையிலேந்து உயர்ந்து மேல வந்ததால தன்னைப் பத்தி அவருக்கு ஒரு ஆணவம் இருந்ததைப் பாத்தேன். 

"இந்தக் குறைகள் எதுவுமே இல்லாதவர் முத்துதான். அதனால அவரைத்தான் நான் ரோல் மாடலா  எடுத்துப்பேன்.  அவரை மாதிரி தொழிலதிபரா வரணும்னு நான் நினைக்காட்டலும் எந்த விதமான வாழ்க்கையை நான் தேர்ந்தெடுத்தாலும் அவரை ரோல்  மாடலா வச்சுக்கிட்டா நிச்சயமா மேன்மை அடையலாம்கறது  என்னோட கருத்து" என்றான் மனோகர்.

"நாலு பேரைப் பாத்துக் கத்துக்கணும்னு சொல்லுவாங்க. அந்த நாலு பேர்லயும் யார் உயர்ந்தவங்கன்னு பாத்து அவங்ககிட்டேந்து கத்துக்கறதுதான் சிறப்பு" என்றார் குணசிலன், மகனின் கருத்தை ஆதரித்தவராக.

பொருட்பால்
அரசியல் இயல்
அதிகாரம் 44
குற்றங்கடிதல்  
குறள் 431:
செருக்குஞ் சினமும் சிறுமையும் இல்லார்
பெருக்கம் பெருமித நீர்த்து.

பொருள்:
செருக்கு, சினம், காமம் ஆகியவை இல்லாதவனுடைய வாழ்வில் ஏற்படும் மேன்மை பெருமைக்குரியது.
அறத்துப்பால்                                                                                      காமத்துப்பால்

No comments:

Post a Comment

1056. உள்ளிருந்து வந்த உதவி!

"வாங்க. எங்கே இவ்வளவு நாள் கழிச்சு?" என்று வரவேற்றார்பரமசிவம். தயங்கிக் கொண்டே பரமசிவத்தின் வீட்டுக்குள் நுழைந்த பாலன் "சும்ம...