Thursday, December 17, 2020

434. உதவியாளர்

சுகந்தி அந்த நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்ததும் முதலில் பணி புரிந்தது அஷோக்கின் உதவியாளராகத்தான். 

அந்த நிறுவனத்தில் ஒரு இளநிலை அதிகாரியாக இருந்த அஷோக்கின் துடிப்பான செயல்பாடும், சுகந்திக்கு வேலையில் இருந்த ஆர்வமும், திறமையும் விரைவிலேயே இருவருக்கும் இடையே ஒரு நெருக்கத்தை ஏற்படுத்தின.

சில மாதங்களுக்குப் பிறகு அதிகாரி-உதவியாளர் என்ற நிலையைத் தாண்டி தாங்கள் ஒருவருக்கொருவர் நெருக்கமாகி விட்டது இருவருக்குமே புரிந்தது. ஒருமுறை இருவரும் வெளியூருக்குச் சென்று ஒரு ஹோட்டலில் தங்கி விட்டு வரும் அளவுக்கு இருவருக்குள்ளும் புரிதலும் நம்பிக்கையும் ஏற்பட்டு விட்டது.

ஆயினும் அலுவலகத்தில் மற்ற யாருக்கும் தங்கள் நெருக்கம் தெரியாத அளவுக்கு இருவரும் கவனமாக நடந்து கொண்டனர்.

சுகந்தியைத் திருமணம் செய்து கொள்வதாக அஷோக் தன் பெற்றோர்களிடம் தெரிவித்தபோது, அவள் வேறு ஜாதி என்பதால் அவர்கள் அதற்கு ஒப்புக் கொள்ளவில்லை. 

தன் விருப்பத்துக்கு விரோதமாக அஷோக் சுகந்தியைத் திருமணம் செய்து கொண்டால் தான் தற்கொலை செய்து கொள்வேன் என்று அவன் அம்மா மிரட்டியபோது அஷோக் பெற்றோர்களிடம் பணிந்து விட்டான். 

தான் சுகந்தியிடம் எல்லை மீறிப் பழகி விட்டதைத் தன் பெற்றோர்களிடம் சொல்லும் துணிவு அவனுக்கு இல்லை.

தயக்கத்துடன் தன் பெற்றோரின் எதிர்ப்பை அஷோக் சுகந்தியிடம் கூறியபோது, "நீங்க என்ன முடிவு செஞ்சிருக்கீங்க?" என்றாள் சுகந்தி அமைதியாக.

"என்னை மன்னிச்சுடு சுகந்தி. என் அம்மாவை மீறி என்னால எதுவும் செய்ய முடியாது" என்றான் அஷோக் குரல் எழும்பாமல்.

சுகந்தி அவன் முகத்தை ஒரு முறை உற்றுப் பார்த்து விட்டு அங்கிருந்து அகன்றாள்.

அதற்குப் பிறகு அவள் ஆர்வம் இல்லாத, கடமைக்காக வேலை செய்யும் ஒரு ஊழியராக மட்டும் நடந்து கொண்டாள். தானே முனைப்பு எடுத்து பல வேலைகளைச் செய்தவள் அவன் சொல்வதை மட்டும் செய்வது என்று தன் வழக்கத்தை மாற்றிக் கொண்டாள்.

சில மாதங்களுக்குப் பிறகு அந்த நிறுவனத்தின் பொது மேலாளரின் உதவியாளர் வேலையை விட்டுப் போய் விட்டதால் அவருக்கு ஒரு அனுபவம் உள்ள உதவியாளர் தேவைப்பட்டபோது, அஷோக் பர்சனல் மானேஜரிடம் சுகந்தி திறமையானவள் என்று கூறி அவளைப் பொது மேலாளரின் உதவியாளராக நியமிக்க வைத்தான். 

புதிய பொறுப்புக்குச் சென்றபோது சுகந்தி அஷோக்கிடம் சொல்லிக் கொள்ளக் கூட இல்லை சுகந்தி. அவன்தான் அவள் நியமனத்துக்குக் காரணம் என்பது அவளுக்குத் தெரிந்திருக்குமா என்பது அவனுக்குத் தெரியவில்லை. ஆனால் அவள் தன்னிடம் பணி செய்வதை விட்டு விட்டு  வேறு பொறுப்புக்குப் போனது அஷோக்குக்கு நிம்மதியாக இருந்தது. 

இனி காலப்போக்கில் எல்லாம் சரியாகி விடும் என்று நினைத்தான் அஷோக். 

அதிர்ஷ்ட வசமாக சுகந்திக்கு விரைவிலேயே திருமணம் நிச்சயமாகி விட்டது. அலுவலகத்தில் எல்லோருக்கும் திருமண அழைப்புக் கொடுத்தது போல் அவனுக்கும் கொடுத்தாள் சுகந்தி. அவனும் மற்ற ஊழியர்களுடன் அவள் திருமணத்துக்குச் சென்று கூட்டத்தோடு நின்று விட்டு வந்தான்.

அதற்குப் பிறகு அவனுக்குத் திருமணம் நிச்சயமாகியது. அவன் திருமணம் வெளியூரில் நடந்ததால், அலுவலகத்தில் அவனுக்கு நெருக்கமான நண்பர்கள் சிலரைத் தவிர வேறு யாரும் அவன் திருமணத்துக்கு வரவில்லை. சுகந்தியும் வரவில்லை.

அதற்குப் பிறகு சுகந்தியும் அஷோக்கும் சந்தித்துக் கொள்ளும் வாய்ப்பு அதிகம் ஏற்படவில்லை. அவன் ஒரு இளநிலை அதிகாரி என்பதால் பொது மேலாளரின் அறைக்குச் சென்று அவரைப் பார்க்க வேண்டிய அவசியம் அவனுக்கு இல்லை.

எப்போதாவது அலுவலகத்தில் எங்காவது இருவரும் சந்தித்துக் கொள்ள நேர்ந்தால், இருவரும் எதுவும் பேசிக் கொண்டதில்லை. சில சமயம் அவர்கள் பார்வை ஒரு சில விநாடிகள் சந்தித்தால், அஷோக் அவள் முகத்தை நேரே பார்க்க முடியாமல் பார்வையைத் திருப்பிக் கொள்வான்.

சில ஆண்டுகள் கடந்து விட்டன. குற்ற உணர்விலிருந்து தான் பெருமளவு விடுபட்டு விட்டதாக அஷோக்குக்குத் தோன்றியது..

பொது மேலாளர்கள் இரண்டு மூன்று பேர் மாறி விட்டாலும், பொது மேலாளரின் உதவியாளராக சுகந்தி தொடர்ந்தாள். தன் திறமையாலும், உழைப்பாலும் எல்லாப் பொது மேலாளர்களிடமும் அவள் நல்ல பெயர் வாங்கி இருந்தாள் என்று அவன் அறிந்து கொண்டான். ஏதோ ஒரு விதத்தில் அவளுக்குத் தான் நன்மை செய்து விட்டதாக அவன் நினைத்துக் கொண்டான்.

"என்னடா இப்படி ஆயிடுச்சு? ப்ரொமோஷன் லிஸ்டில உன் பெயர் இல்லாததைப் பாத்து ஆஃபீஸ்ல எல்லாரும் ஆச்சரியப்படறாங்க!" என்றான் அஷோக்கின் அலுவலக நண்பன் ரமேஷ்

"என்ன செய்யறது? எம் டி யோட விருப்பம்தானே! அவர்தானே லிஸ்டை ஃபைனலைஸ் பண்ணி இருக்காரு?" என்றான் அஷோக் ஏமாற்றத்தை மறைத்துக் கொண்டு.

"ஜி எம்தான் உன்னை ரெகமண்ட் பண்ணி இருக்க மாட்டார்னு நினைக்கறேன், அவர் வந்து கொஞ்ச நாள்தானே ஆகுது? உன்னைப் பத்தி அவருக்கு சரியாத் தெரியல. அவரைச் சுத்தி வந்து காக்கா பிடிக்கற ஆளுங்களை ரெகமண்ட் பண்ணிட்டு உன்னை விட்டுட்டாரு!"

"சேச்சே! எம் டிக்கே நம்ம ஒவ்வொத்தரைப் பத்தியும் நல்லாத் தெரியுமே! ஜி எம் சொல்றபடி அவரு ஏன் செய்யப் போறாரு?" 

"அப்படிச் சொல்லாதே! உயர் பதவியில இருக்கறவங்க யாருமே தங்களுக்கு அடுத்தாப்பல இருக்கறவங்க பேச்சுக்கு மதிப்பு கொடுப்பாங்க..."

தங்களுக்கு அடுத்தாப்பல இருக்கறவங்க பேச்சுக்கு மதிப்பு கொடுப்பாங்க! அப்படின்னா...? அஷோக்குக்கு ஏதோ பொறி தட்டியது. புதிதாக வந்திருக்கும் பொது மேலாளர் ஒரு வேளை தன் உதவியாளர் சுகந்தியின் பேச்சைக் கேட்டுத் தன்னை ஒதுக்கி இருப்பரோ?

'தன்னை ஏமாற்றியதற்கு அவனைப் பழி வாங்குவதற்காக சுகந்தி ஜி எம்மிடம் என்னைப் பற்றி ஏதாவது தவறாகச் சொல்லி என் வாய்ப்பைப் பறித்திருப்பாளோ?'

தன் மனதில் எழுந்த கேள்விக்கு அஷோக்குக்கு விடை தெரியவில்லை.

பொருட்பால்
அரசியல் இயல்
அதிகாரம் 44
குற்றங்கடிதல்  
குறள் 434:
குற்றமே காக்க பொருளாகக் குற்றமே
அற்றந் தரூஉம் பகை.

பொருள்:
குற்றம் அழிவை உண்டாக்கும் பகையாக அமைந்து விடும் என்பதால் ஒருவன் குற்றம் செய்யாமல் தன்னைக் காத்துக் கொள்வதையே நோக்கமாகக் கொள்ள வேண்டும்.
அறத்துப்பால்                                                                                      காமத்துப்பால்

No comments:

Post a Comment

1060. ஏன் உதவவில்லை?

"யார்கிட்ட உதவி கேக்கறதுன்னே தெரியல!" என்றான் பரந்தாமன். "யார்கிட்டயாவது கேட்டுத்தானே ஆகணும்? இன்னும் ரெண்டு நாளைக்குள்ள பணம்...