Saturday, December 19, 2020

436. மகனே கேள்!

"என்னடா இது புதுசா, சூயிங்கம் மெல்ற பழக்கம்?" என்றாள் அபிராமி. 

"பழக்கமெல்லாம் இல்ல. எப்பவாவதுதாம்மா!" என்றான் அவள் மகன் சுரேன்.

"காலேஜிலேந்து வரப்ப வாயில சூயிங்கத்தோடதான் வரே. வேற எங்கேயாவது வெளியில போயிட்டு வந்தாலும் வாயில சூயிங்கம் இருக்கறதைப் பாக்கறேன். எப்பவாவதுங்கற!"

"இல்லம்மா. கடையில ஏதாவது வாங்கினா சில சமயம் சில்லறை இல்லேன்னுட்டு சூயிங்கத்தைக் கொடுத்துடுவாங்க. அதை வாயில போட்டு மென்னுக்கிட்டு வருவேன். அதைப் பாத்துட்டு சொல்ற!" என்றான் சுரேன்.

"அப்படி அடிக்கடி கடைக்குப் போறியா என்ன?" என்று ஆரம்பித்த அபிராமி, "சரி, சரி. பழக்கமாயிடப் போகுதேன்னு சொன்னேன்" என்று சொல்லி முடித்துக் கொண்டாள்.

"என்னங்க, சுரேன் சிகரெட் குடிக்கப் பழகிக்கிட்டிருப்பானோன்னு சந்தேகமா இருக்கு!" என்றாள் அபிராமி, தன் கணவனிடம்.

"எப்படிச் சொல்ற? அவங்கிட்ட சிகரெட் வாசனை வந்ததா என்ன?" என்றான் சோமு.

"வெளியிலேந்து வீட்டுக்கு வரப்பல்லாம் வாயில சூயிங்கத்தோட வரான். சிகரெட் குடிச்சுட்டு அந்த வாசனையை மறைக்கத்தான் சூயிங்கம் மெல்லறான்னு நினைக்கறேன்."

"அது எப்படி உனக்குத் தெரியும்? நீ அப்படிப் பண்ணி இருக்கியா என்ன?" என்றான் சோமு சிரித்துக் கொண்டே.

"நம்ம பையனுக்கு சிகரெட் பழக்கம் வந்துடக் கூடாதேங்கற கவலையில நான் சொல்றேன். உங்களுக்கு இது விளையாட்டா இருக்கா? அந்தக் காலத்தில என் தம்பி இப்படித்தான் பண்ணுவான். அவன் சிகரெட் பிடிக்கறான்னு  எங்க வீட்டில கண்டு பிடிக்கவே ரொம்ப காலம் ஆயிடுச்சு. அதுக்கப்பறம் அவனை அந்தப் பழக்கத்திலேந்து விடுவிக்க முடியல. ஒரு செயின் ஸ்மோக்கரா ஆகி இன்னிக்கும் அவன் நிறைய சிகரெட் பிடிச்சுக்கிட்டுத்தான் இருக்கான். அவன் கதி நம்ம பையனுக்கு வரக் கூடாது. நீங்க அவன் சிகரெட் பிடிக்கறானான்னு கண்டுபிடிச்சு, அவங்கிட்ட பேசி அவனை இந்தப் பழக்கத்திலேந்து விடுவியுங்க!" என்று பொரிந்து தள்ளினாள் அபிராமி.

தற்குப் பிறகு இரண்டு மூன்று முறை "சுரேன்கிட்ட பேசினீங்களா?" என்று கணவனிடம் கேட்டாள் அபிராமி. 

அவள் முதல்முறை கேட்டபோது, "நீ நினைச்சது சரிதான். அவனுக்கு சிகரெட் பழக்கம் இருக்கறது உண்மைதான். நான் அவங்கிட்ட பேசறேன்" என்று பதில் கூறிய சோமு, அதற்குப் பிறகு அவள் கேட்டபோதெல்லாம், "இன்னும் பேசலை. பேசறேன்" என்றே சொல்லிக் கொண்டிருந்தார்.

இரண்டு வாரங்களுக்குப் பிறகு ஒரு நாள், "அபிராமி. சுரேன்கிட்ட பேசிட்டேன். சிகரெட் பிடிக்கறதை விடச் சொல்லிப் பக்குவமாச் சொல்லி, பழக்கத்தை எப்படி விடறதுங்கறதுக்கு சில யோசனைகளும் சொல்லி இருக்கேன். விட்டுடுவான்னு நினைக்கறேன். நான் தொடர்ந்து கவனிச்சு அவனை விட வைக்கறேன்" என்றார் சோமு.

"நான் உங்ககிட்ட சொல்லி பத்துப் பதினைஞ்சு நாள் ஆயிடுச்சே! இப்பதான் அவங்கிட்ட பேசினீங்களா?" என்றாள் அபிராமி.

ஒரு நிமிடம் மௌனமாக இருந்த சோமு, "அபிராமி! எங்கிட்டயும் ஒரு கெட்ட பழக்கம் இருந்தது. ஒவ்வொரு ஞாயித்துக்கிழமையும் நான் என் நண்பர்களோட காசு வச்சு சீட்டாடுவேன். யாருக்கும் அதிக நஷ்டம் வரக் கூடாதுங்கறதுக்காக பத்து ரூபா, இருபது ரூபான்னு வச்சுத்தான் விளையாடுவோம். ரொம்ப நாளா அதை விட்டுடணும்னு முயற்சி பண்ணினேன். முடியல. ஞாயித்துக்கிழமை வந்தா வெறி பிடிச்ச மாதிரி அங்கே போயிடுவேன். சும்மா நண்பர்களைப் பாத்துப் பேசிட்டு வரதாத்தான் உங்கிட்ட சொல்லியிருக்கேன்.

"பையனோட தப்பைக் கண்டிச்சுத் திருத்தணும்னா முதல்ல எங்கிட்ட தப்பு இருக்கக் கூடாதுன்னு நினைச்சேன். இந்த ரெண்டு வாரமா ஞாயித்துக்கிழமை அங்கே போகாம என்னைக் கட்டுப்படுத்திக்கிட்டிருந்தேன். அதனால என்னால இந்தப் பழக்கத்தை விட முடியும்னு உறுதிப்படுத்திக்கிட்டு அப்புறம்தான் சுரேன்கிட்ட பேசினேன்" என்றார், மனைவியின் முகத்தைச் சங்கடத்துடன் பார்த்தபடி. 

பொருட்பால்
அரசியல் இயல்
அதிகாரம் 44
குற்றங்கடிதல்  
குறள் 436:
தன்குற்றம் நீக்கிப் பிறர்குற்றங் காண்கிற்பின்
என்குற்ற மாகும் இறைக்கு.

பொருள்:
ஒரு அரசன் முதலில் தன் குற்றத்தைக் கண்டறிந்து அதைப் போக்கி விட்டு, அதற்குப் பிறகு மற்றவர்களின் குற்றத்தைப் பார்த்தால் அவனுக்கு என்ன குற்றம் வந்து விடும்?

அறத்துப்பால்                                                                                      காமத்துப்பால்

No comments:

Post a Comment

1060. ஏன் உதவவில்லை?

"யார்கிட்ட உதவி கேக்கறதுன்னே தெரியல!" என்றான் பரந்தாமன். "யார்கிட்டயாவது கேட்டுத்தானே ஆகணும்? இன்னும் ரெண்டு நாளைக்குள்ள பணம்...