Wednesday, November 18, 2020

430. வீட்டுக்காரரின் யோசனை

வாடகைப் பணத்தைக் கொடுத்த பிறகு தயங்கி நின்ற அன்புவைப் பார்த்து, "என்ன?" என்றார். சிவானந்தம்.

"வீட்டைக் காலி பண்றேன் சார்" என்றான் அன்பு.

"ஏன்? கல்யாணம் ஆகப் போகுதா? வேற வீடு பாத்துக்கிட்டுப் போகப் போறியா?" என்றார் சிவானந்தம். 

"இல்லை சார்! வேலையை விட்டுட்டேன். வேற வேலை எப்ப கிடைக்கும்னு தெரியல. அதனால வாடகை ஒழுங்காக் கொடுக்க முடியுமான்னு தெரியல. அதனால வேற வேலை கிடைக்கிற வரை கொஞ்ச நாள் யாராவது நண்பர்களோட தங்கிக்கலாம்னு இருக்கேன்" என்றான் அன்பு தயக்கத்துடன்.

"உள்ளே வா!" என்று அவனை உள்ளே அழைத்து சோஃபாவில் உட்காரச் சொன்ன சிவானந்தம், "உன்னைப் பத்தி எனக்கு அதிகமாத் தெரியாது. மாசாமாசம் முதல் வாரத்தில வாடகைப் பணத்தைக் கொடுத்துடுவ. அதனால எனக்கு உன் மேல நல்ல அபிப்பிராயம் உண்டு. அதனால என்னால ஏதாவது உதவி செய்ய முடியுமான்னு பாக்கறேன். ஏன் வேலையை விட்ட?" என்றார்.

"என் முலாளியோட கொஞ்சம் மனஸ்பாபம். அதான் வேலையை விட்டுட்டேன்" என்றான் அன்பு சுருக்கமாக.

"நீ ஒரு கம்பெனியில மெஷின் ஆப்பரேட்டரா இருக்கறதா சொல்லி இருக்கே. உன் முதலாளியோட என்ன மனஸ்தாபம்? எங்கிட்ட சொல்லலாம்னா சொல்லு."

அன்பு ஒரு நிமிஷம் தயங்கி விட்டு, "ஒரு எஞ்சினியரிங் தொழிற்சாலையில நான் மெஷின் ஆப்பரேட்டரா இருந்தேன். பல தொழிற்சாலைகளுக்குப் பலவிதமான பாகங்கள் தயாரிக்க எங்களுக்கு ஆர்டர்கள் வரும். அதுக்கெல்லாம் நிறைய டூல்கள் டிசைன் பண்ணித் தயாரிச்சு அவற்றை வச்சுத்தான் அந்த பாகங்களைத் தயாரிக்கணும்.

"எங்க கம்பெனியில ஒரு எஞ்சினியர் இருந்தாரு. அவர்தான் டூல் எல்லாம் டிசைன் பண்ணுவார். அவர் வேலையை விட்டுப் போயிட்டார். அவர் டிசைன் பண்ணும்போது அவர் பக்கத்தில இருந்து பாத்து நானும் கொஞ்சம் கத்துக்கிட்டேன். அவரு போனப்பறம் நானே டிசைன் பண்ணிப் பாத்தேன். நல்லா வந்தது. என் முதலாளிக்கு ரொம்ப சந்தோஷம்.

"வேற எஞ்சினியரை வேலைக்கு எடுக்காம என்னையே டிசைன் பண்ணச் சொன்னாரு. ஆறு மாசம் பாத்துட்டு நான் தொடர்ந்து நல்லா செஞ்சா எனக்கு சம்பளம் அதிகமாக் கொடுக்கறேன்னாரு. ஆனா ஒரு வருஷம் ஆகியும் அவர் சொன்ன அளவுக்கு சம்பளம் கொடுக்கல. என் சம்பளத்தை ஒப்புக்குக் கொஞ்சம்தான் அதிகப்படுத்தினாரு. அதனாலதான் நான் வேலையை விட்டுட்டேன்."

"அவரு உன்னைப் போகாதேன்னு தடுக்கலியா?"

"போகாதேன்னு சொன்னாரு. ஆனா சம்பளம் அதிகமாக் கொடுக்க மாட்டேன்னுட்டாரு. 'நீ படிக்காதவன்தானே, என் கம்பெனியிலதானே வேலை கத்துக்கிட்ட? இப்ப நான் கொடுக்கறதே அதிகம்'னு சொல்லிட்டாரு."

ஒரு நிமிடம் யோசனை செய்த சிவானந்தம், "சரி. இப்ப எங்கே வேலை தேடப்போற?" என்றார்.

"இதே மாதிரி நிறைய கம்பெனி இருக்கே, அதில ஏதாவது ஒரு கம்பெனியில வேலை கிடைக்குமான்னு பாக்கணும்" என்றான்.

"இது மாதிரி இன்னொரு கம்பெனிக்கு வேலைக்குப் போனா, அங்கேயும் இதே மாதிரிதான் நடக்கும். நான் ஒண்ணு சொல்றேன். அதை முயற்சி பண்ணிப் பாரு. இந்த டூல் டிசைன் பண்றதை ஒரு தொழில் மாதிரி செய். இந்தத் தேவை இருக்கற கம்பெனிகளுக்குப் போய் உன்னை ஒரு டூல் டிசைன் எக்ஸ்பர்ட்னு சொல்லி குறிப்பிட்ட சில வேலைகளுக்கு டூல் டிசைன் பண்ற வாய்ப்பு கிடைக்குமான்னு பாரு. பல கம்பெனிகளுக்கு தனித் தனியான ஜாப்களுக்கு டூல் டிசைன் பண்ணி அதுக்கு ஒரு ரேட் சொல்லிப் பணம் வாங்கிக்க. உன்கிட்ட திறமை இருக்கறதால, உனக்கு நிச்சயமா வாய்ப்புகள் கிடைக்கும். கொஞ்ச நாள்ள உனக்குன்னு ஒரு பேர், இமேஜ் எல்லாம் கிடைச்சப்பறம் வருமானமும் நிறைய வரும். எந்த ஒரு கம்பெனியையும் நம்பி இருக்க வேண்டாம்" என்றார் சிவானந்தம்.

அன்பு தயங்கினான். 

"நீ சொன்னதிலேந்து உனக்கு இந்த வேலேயில ஒரு சிறப்பான அறிவு இருக்குன்னு எனக்குத் தோணுது. ஒரு மாசம் வேலை தேடாம இதை முயற்சி செஞ்சு பாரு. வீட்டை இப்ப நீ காலி செய்ய வேண்டாம். வாடகையைக் கூட நான் அப்புறம் வாங்கிக்கறேன். ஒரு மாசத்தில உனக்கு வாய்ப்பு எதுவும் வரலேன்னா அப்புறம் காலி பண்ணலாம்."

டுத்த மாதம் வாடகைப் பணம் கொடுப்பதற்காக சிவானந்ததைப் பார்க்க வந்த அன்பு, "சார்! நீங்க சொன்னபடி முயற்சி பண்ணினதில எனக்கு வாய்ப்புகள் கிடைக்க ஆரம்பிச்சிருக்கு. ரெண்டு மூணு வேலை செஞ்சு கொடுத்திலேயே, நான் வாங்கின சம்பளத்துக்கு அதிகமா சம்பாதிச்சுட்டேன். இன்னும் நிறைய வாய்ப்புகள் வரும்னு நம்பிக்கை இருக்கு, உங்களுக்குத்தான் நான் நன்றி சொல்லணும்" என்றான்.

"நீ சொன்னதிலேந்து உனக்கு உன் தொழில்ல நல்ல அறிவு இருக்கன்னு நான் புரிஞ்சுக்கிட்டேன். இந்த மாதிரி அறிவு இருக்கறவங்களால நிச்சயமா சாதிக்க முடியும்கறது என்னோட நம்பிக்கை. அதனாலதான் உன்னை என்கரேஜ் பண்ணினேன். அது சரி. உன் பழைய முதலாளி எப்படி இருக்காரு? ஏதாவது தெரியுமா?" என்றார் சிவானந்தம்.

"அவரு எனக்கு ஃபோன் பண்ணி என்னை மறுபடி வந்து வேலையில சேரச் சொன்னாரு. நான் கேக்கற சம்பளத்தைக் கொடுக்கறேன்னு சொன்னாரு. ஆனா நான் இப்ப சம்பளத்துக்கு வேலை செய்யல, சொந்தமாத் தொழில் செய்யறேன், எனக்கு சில வாடிக்கையாளர்கள் இருக்காங்கன்னு சொன்னேன். அவரு கோவிச்சுக்கிட்டு ஃபோனை வச்சுட்டாரு!" என்றான் அன்பு சிரித்தபடி. 

பொருட்பால் 
அரசியல் இயல்
அதிகாரம் 43
அறிவுடைமை 
குறள் 430:
அறிவுடையார் எல்லா முடையார் அறிவிலார்
என்னுடைய ரேனும் இலர்.

பொருள்:
அறிவுடையவர் (வேறொன்றும் இல்லாதிருப்பினும்) எல்லாம் உடையவரே ஆவர், அறிவில்லாதவர் வேறு என்ன உடையவராக இருப்பினும் ஒன்றும் இல்லாதவரே ஆவர்.
அறத்துப்பால்                                                                                      காமத்துப்பால்

No comments:

Post a Comment

1060. ஏன் உதவவில்லை?

"யார்கிட்ட உதவி கேக்கறதுன்னே தெரியல!" என்றான் பரந்தாமன். "யார்கிட்டயாவது கேட்டுத்தானே ஆகணும்? இன்னும் ரெண்டு நாளைக்குள்ள பணம்...