Wednesday, February 10, 2021

451. தலை தப்பியது!

கோபு அந்த நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்தபோது அவனுக்கு முதலில் நெருக்கமானவன் தாமோதரன்தான். 

தாமோதரன் இரண்டு வருடம் முன்பே அந்த நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்திருந்ததால் கோபுவுக்கு சீனியர் என்றாலும், கோபுவைத் தனக்குச் சமமானவன் போலவே கருதி அவனிடம் நெருங்கிப் பழகினான்.

ஒரு நாள் தாமோதரன் கோபுவிடம், "நீ சஞ்சய்கிட்ட ரொம்ப நெருக்கமாப் பழகற போல இருக்கு. அவன் அவ்வளவு நல்லவன் இல்ல. கொஞ்சம் விலகியே இரு!" என்றான்.

"நல்லவன் இல்லேன்னு எப்படிச் சொல்றே?" என்றான் கோபு.

"என்னால விவரமாச் சொல்ல முடியாது. அவன் எல்லார்கிட்டேயும் ரொம்ப நட்பா இருக்கற மாதிரி காட்டிப்பான். ஆனா அவன்கிட்ட நெருங்கிப் பழகினா, நம்மகிட்ட அட்வான்ட்டேஜ் எடுத்துப்பான்."

"அட்வான்ட்டேஜ்னா? கடன் கேப்பானா?" என்றான் கோபு சிரித்தபடி.

"இது சிரிக்கிற விஷயம் இல்ல. நான் உன் நன்மைக்காகத்தான் சொல்றேன். கடன் வாங்கிட்டுத் திருப்பிக் கொடுக்கலைன்னா பொருள் நஷ்டம் மட்டும்தான் ஆகும். ஆனா அவனால பெரிய கேடுகள்ளாம் விளையும். அவனால பாதிக்கப்பட்ட சில பேர் எங்கிட்ட சொல்லி இருக்காங்க. 

"அவனைப் பாத்ததிலேந்தே எனக்கு அவன் மேல நல்ல அபிப்பிராயம் இல்ல. அதனால நான் அவங்கிட்டேந்து ஒதுங்கியே இருக்கேன். 

"மேலதிகாரிகள் கிட்டல்லாம் தனக்குச் செல்வாக்கு இருக்கற மாதிரி பேசுவான். அதை நம்பி இந்த ஆஃபீஸ்ல சில பேர் அவன்கிட்ட பயந்து நடந்துக்கறாங்க. அதைத் தனக்கு சாதகமாப் பயன்படுத்திக்கிட்டு தான் ஒரு சக்தி வாய்ந்த நபர்ங்கற மாதிரி ஆட்டம் போட்டுக்கிட்டிருக்கான். 

"என்னை மாதிரி சில பேர் அவனைப் பத்திப் புரிஞ்சுக்கிட்டு அவன்கிட்டேந்து விலகி இருக்கோம். நீயும் அப்படி இருக்கறதுதான் உனக்கு நல்லது" என்றான் தாமோதரன்.

கோபு தனக்குள் சிரித்துக் கொண்டு மௌனமாக இருந்தான். தாமோதரன் பற்றி சஞ்சய் தன்னிடம் கூறி இருந்தது உண்மைதான் என்பது போல்தான் தாமோதரனின் பேச்சு இருந்ததாக கோபுவுக்குத் தோன்றியது.

தான் எச்சரித்த பிறகும் கோபு சஞ்சயுடன் நெருக்கமாக இருப்பதை தாமோதரன் கவனித்தான். ஆயினும் அதற்குப் பிறகு கோபுவிடம் அவன் இது பற்றிப் பேசவில்லை.

சில மாதங்களுக்குப் பிறகு ஒரு நாள், கோபு தாமோதரனிடம் வந்து, "தாமோதரா! உங்கிட்ட கொஞ்சம் தனியாப் பேசணும்!" என்றான்.

அலுவலகம் முடிந்ததும் இருவரும் ஒரு ஓட்டலுக்குச் சென்று ஓரமாக இருந்த ஒரு மேஜையில் அமர்ந்து கொண்டனர்.

"தாமோதரா! நீ ஆரம்பத்திலேயே சஞ்சயைப் பத்தி எங்கிட்ட எச்சரிச்சே. ஆனா நான் அதை அலட்சியம் பண்ணினேன். அதுக்காக நீ என்னை மன்னிக்கணும். இப்பதான் அவனைப் பத்தி எனக்கு நல்லாப் புரிஞ்சது" என்றான் கோபு.

"என்ன நடந்தது?" என்றான் தாமோதரன்.

"நேத்து ஆஃபீஸ் முடிஞ்சதும் சஞ்சய் சினிமாவுக்குப் போகலாம்னு கூப்பிட்டான். போற வழியில அவன் தங்கை வீட்டுக்குப் போய் அவளைப் பாத்துட்டுப் போகலாம்னு சொன்னான். அவளுக்கு உடம்பு சரியால்லாம இருந்ததாம். 

"அவ வீட்டுக்குப் போனப்ப அவ சாதாரணமாத்தான் இருந்தா. அவ காப்பி போட்டுட்டு வரேன்னு சொல்லிட்டு உள்ளே போனா. சஞ்சய் யாருக்கோ ஃபோன் பண்ணிப் பாத்துட்டு சிக்னல் கிடைக்கலேன்னு வெளியே போனான். 

"அவன் வெளியில போனதும் அந்தப் பொண்ணு உள்ளேந்து வந்து என்னைக் கட்டிப் பிடிச்சுக்கப் பாத்தா. நான் திமிறிக்கிட்டு வெளியில ஓடினேன். அப்ப விட்டு வாசல்ல ஃபோனை வச்சுக்கிட்டு ஃபோட்டோ எடுக்கற மாதிரி சஞ்சய் நின்னுக்கிட்டிருந்தான். 

"அப்பதான் எனக்குப் புரிஞ்சுது. அவ அவன் தங்கையே இல்ல. அவளை எங்கிட்ட நெருக்கமா நடந்துக்க வச்சு வன் அதை வெளியிலேந்து வீடியோ எடுத்து என்னை பிளாக்மெயில் பண்ண முயற்சி பண்ணி இருக்கான். நல்லவேளையா நான் தப்பிச்சு ஓடி வந்துட்டேன்!" என்றான் கோபு படபடப்புடன்.

"இது மாதிரி நம்ம ஆஃபீஸ்ல வேற சிலருக்கு நடந்திருக்கு. அதையெல்லாம் உங்கிட்ட விளக்கமாச் சொல்ல வேண்டாம்னு நினைச்சுத்தான் உனக்கு ஒரு கோடி காட்டிட்டுப் பொதுவா உன்னை எச்சரிக்கை செஞ்சேன். ஆனா அப்ப நான் சொன்னதை நீ நம்பல!" என்றான் தாமோதரன், குற்றம் சாட்டுவது போல்.

"என் முட்டாள்தனம்தான்! நீ எங்கிட்ட அவனைப்பத்தி அப்படிச் சொல்லுவேன்னு அவன் எங்கிட்ட முன்னாடியே சொல்லி இருந்தான். அவன் சொன்ன மாதிரியே நீ சொன்னதும் நான் அவன் சொன்னது சரியா இருக்குன்னு நினைச்சேன்!"

"நான் எதுக்கு அவனைப் பத்தி உங்கிட்ட தப்பா சொல்லணும்னு நீ யோசிக்கலியா?" என்றான் தாமோதரன், சற்றே கோபத்துடன்.

"தாமோதரா! மறுபடி நீ என்னை மன்னிக்கணும். நீ இந்த ஆபீஸ்ல வேலைக்குச் சேர்ந்த புதுசில ஒரு லேடி ஸ்டாஃப்கிட்ட தப்பா ஏதோ பேசிட்டதாகவும், அவங்க அதை எம் டிகிட்ட புகார் செய்யப் போனப்ப, சஞ்சய் அவங்களைச் சமாதானப்படுத்தி உன்னை அவங்ககிட்ட மன்னிப்புக் கேக்க வச்சதாகவும், அவன் உனக்கு நல்லதுதான் செஞ்சான்னாலும், உன்னை அந்தப் பெண்கிட்ட மன்னிப்புக் கேக்க வச்சதுக்காக நீ அவன்கிட்ட கோபமா இருக்கறதாகவும் அவன் எங்கிட்ட சொன்னான்."

"அடப்பாவி! கதையை மாத்திட்டானே! லேடி ஸ்டாஃப்கிட்ட தப்பாப் பேசினவன் அவன். அவனை மன்னிப்புக் கேக்க வச்சு அந்தப் பொண்ணை எம் டிகிட்ட போகாம தடுத்து அவன் வேலையைக் காப்பாத்தினவன் நான். அவனை அப்ப காப்பத்தினதுதான் அவன் விஷயத்தில நான் செஞ்ச ஒரே தப்பு!" என்றான் தாமோதரன்.

பொருட்பால்
அரசியல் இயல்
அதிகாரம் 46 
 சிற்றினஞ்சேராமை  
குறள் 451
சிற்றினம் அஞ்சும் பெருமை சிறுமைதான்
சுற்றமாச் சூழ்ந்து விடும்.

பொருள்:
தீய குணம் உள்ளோரொடு சேரப் பெரியோர் அஞ்சுவர்; சிறியாரோ அவர்களைத் தம் உறவாகவே கருதிப் பழகுவர்.

Read 'A Friend Indeed!' the English version of this story by the same author.
அறத்துப்பால்                                                                                       காமத்துப்பால்

Thursday, January 28, 2021

450. தந்தையின் நண்பர்

"இங்க பாருங்க சார்! என் அப்பா உங்களைத் தன் நண்பர்ங்கறதுக்காக ஏகப்பட்ட சம்பளம் கொடுத்து இந்த ஆஃபீஸ்ல உட்கார வச்சிருந்தாரு. இப்ப அவர் போய்ச் சேந்துட்டாரு. அதனால உங்களுக்கு இங்க வேலை இல்லை!"

சசீதரனின் கடுமையான சொற்களைக் கேட்டு அந்த அலுவலகத்திலிருந்த அனைவரும் அதிர்ச்சியில் உறைந்தனர்.

நண்டபாணி புன்னகையுடன், "ரொம்ப நன்றிப்பா!" என்று சொல்லி விட்டுத் தன் பையை எடுத்துக் கொண்டு அங்கிருந்து வெளியேறினார்.

அன்று மாலை அந்த நிறுவனத்தின் பொது மேலாளர் திருச்செல்வத்தைத் தன் அறைக்கு அழைத்த சசீதரன், நிர்வாகத்தில் தான் செய்ய விரும்பிய மாறுதல்களைப் பற்றி அவரிடம் விவரித்தான்.

"சரி சார்! நீங்க சொன்னதையெல்லாம் செஞ்சுடலாம். ஆனா நீங்க தப்பா நினைக்கலேன்னா ஒரு விஷயம்!" என்றார் திருச்செல்வம், தயக்கத்துடன்.

"சொல்லுங்க!" என்றான் சசீதரன்.

"தண்டபாணி சாரைப் பத்தி...."

"நீங்க என்ன சொல்லப் போறீங்கன்னு தெரியும். அவர் என் அப்பா இந்த நிறுவனத்தை ஆரம்பிச்சதிலிருந்தே அவரோட இருந்திருக்காரு. என் அப்பா அவர்கிட்ட யோசனை கேக்காம எதையும் செஞ்சதில்ல. அந்த நிறுவனம் இவ்வளவு பெரிசா வளர்ந்ததுக்கு அவரும் ஒரு முக்கியக் காரணம்... இதெல்லாம்தானே?"

"சார்! எல்லாம் தெரிஞ்சுமா?"

"இந்தப் புராணத்தையெல்லாம் எங்கப்பாகிட்டயே நிறையக் கேட்டிருக்கேன். எஸ்! இதெல்லாம் புராணம் மாதிரி வெறும் சென்ட்டிமென்ட்தான். எங்கப்பா தன்னோட பணத்தைப் போட்டு ஆரம்பிச்ச இந்த நிறுவனத்தில இவரு ஒட்டுண்ணி மாதிரி ஒட்டிக்கிட்டு, தான்தான் எல்லாத்தையும் செய்யற மாதிரி ஒரு பிம்பத்தை உருவாக்கி இருக்காரு. என் அப்பாவோட அறையில அவருக்கு எதிர்ல உக்காந்து அரட்டை அடைச்சுக்கிட்டு அவர் செஞ்சதையெல்லாம் தான் சொல்லித்தான் அவர் செஞ்சதா அவரை நம்ப வச்சு இத்தனை வருஷமா அவரை ஏமாத்திக்கிட்டு வந்திருக்காரு. என் அப்பா அவர்கிட்ட ஏமாந்திருக்கலாம். நான் ஏமாறத் தயாராயில்ல!" என்றான் சசீதரன் ஆவேசமாக.

"சார்! நீங்க நினைக்கிற மாதிரி இல்ல. தண்டபாணி சார் உங்கப்பாவுக்கு ஒரு பெரிய பலமா இருந்தாரு. நானே நிறைய சமயங்கள்ள பாத்திருக்கேன்..."

"நாம வேற விஷயத்தைப் பேசலாமா?"

"என்ன சார் நடக்குது? இந்த அஞ்சு வருஷமா நான் எத்தனையோ புது விஷயங்கள்ளாம் செஞ்சு இந்த நிறுவனத்தைப் பெரிய லெவலுக்குக் கொண்டு போக முயற்சி செஞ்சுக்கிட்டிருக்கேன். ஆனா நாம பின்னாலதான் போய்க்கிட்டிருக்கோம். நம்ம நிறுவனத்தோட சரித்திரத்திலேயே முதல் தடவையா நமக்கு நஷ்டம் ஏற்பட்டிருக்கு. நமக்கு காம்பெடிஷன் கூட அதிகமா இல்ல. ஆடிட்டர் சிரிக்கிறாரு. 'எப்படிப்பா இவ்வளவு வேகமா கம்பெனியை சறுக்க வச்சே!'ன்னு என்னைக் கிண்டல் பண்றாரு. நீங்கள்ளாம் என்ன பண்றீங்கன்னே தெரியல!"

திருச்செல்வம் மௌனமாக இருந்தார்.

'நமக்கு அதிக காம்பெடிஷன் இல்லதான். நாங்கள்ளாம் நல்லாத்தான் வேலை செய்யறோம். நீங்களும் புதுசாப் பல விஷயங்களைச் செய்யறீங்கதான். ஆனா ஒரு நல்ல வழிகாட்டியா இருந்தவரை அலட்சியமாத் தூக்கி எறிஞ்சுட்டீங்களே, அதோட விளைவுகள்தான் இவை' என்று அவர் தன் மனதுக்குள் கூறிக் கொண்டது சசீதரனுக்குக் கேட்டிருக்காதுதான்.

பொருட்பால்
அரசியல் இயல்
அதிகாரம் 45 
 பெரியாரைத் துணைக்கோடல்  
குறள் 450
பல்லார் பகைகொளலிற் பத்தடுத்த தீமைத்தே
நல்லார் தொடர்கை விடல்.

பொருள்:
நல்லவராகிய பெரியோரின் தொடர்பைக் கைவிடுதல் பலருடைய பகையைத் தேடிக் கொள்வதை விடப் பத்து மடங்கு தீமை உடையதாகும்.

Read 'Sasidharan's Plans' the English version of this story by the same author.
அறத்துப்பால்                                                                           காமத்துப்பால்

449. ராணியின் யோசனை

"இன்று சபையில் ஏதாவது வழக்கு இருக்கிறதா?" என்றார் மன்னர் தாசரதி.

"ஒரு வழக்கு இருக்கிறது அரசே!" என்றார் அமைச்சர்.

"என்ன வழக்கு?"

"ஒரு வியாபாரி பலரிடமும் கடன் வாங்கி அவற்றைத் திருப்பிக் கொடுக்கவில்லை. கடன் கொடுத்தவர்கள் அவர் மீது புகார் கொடுத்திருக்கிறார்கள்."

"ஏன் கடனைத் திருப்பிக் கொடுக்கவில்லையாம்?"

"அவர் முதல் எதுவும் போடாமல், பொருட்களைப் பெரிய வியாபாரிகளிடமிருந்து கடனுக்குக் கொள்முதல் செய்து வியாபாரம் செய்திருக்கிறார். அன்றாடச் செலவுகளுக்குக் கூடக் கடன் வாங்கிச் செலவு செய்திருக்கிறார். 

"வட்டிச் செலவே அதிகம் ஆனதால், வியாபாரத்தில் லாபம் கிடைக்காமல் நஷ்டம் அடைந்து கொண்டே வந்திருக்கிறார். ஒரு கட்டத்தில் வியாபாரத்தை நடத்த முடியாமல் மூடி விட்டார். கடன்காரர்களுக்குக் கொடுக்கப் பணம் இல்லை. 

"அவரிடம் வேலை செய்த ஊழியர்களுக்குக் கூட மூன்று மாதங்களாக ஊதியம் கொடுக்கவில்லையாம். அவர் சொத்துக்களைப் பறிமுதல் செய்து கடன்காரர்களுக்குக் கொடுக்கலாமென்றால், அவரிடம் சொத்து எதுவும் இல்லை."

"முதல் இல்லாமல் வியாபாரம் செய்து லாபம் சம்பாதிக்கலாமென்று நினைத்த அவன் ஒரு வடிகட்டின முட்டாளாகாத்தான் இருக்க வேண்டும்.  நீங்களே அவனை விசாரித்துக் கடுமையான தண்டனை கொடுங்கள். அவனிடம் சொத்துக்கள் இல்லாததால், கடன் கொடுத்தவர்களுக்கோ, ஊழியர்களுக்கோ நம்மால் உதவ முடியாது என்று சொல்லி விடுங்கள்."

அமைச்சருக்கு உத்தரவிட்டு விட்டு அந்தப்புரத்துக்குச் சென்று விட்டார் அரசர் தாசரதி.

"நீங்கள் வழக்கு பற்றி அமைச்சரிடம் பேசிக் கொண்டிருந்ததை உப்பரிகையிலிருந்து கேட்டேன்" என்றாள் மகாராணி வனவாணி.

"என்ன செய்வது? முதல் இல்லாமலே வியாபாரம் நடத்தும் முட்டாள்கள் இருக்கும் காலத்தில் நாம் வாழ்கிறோம்!" என்றார் மன்னர், சலித்துக் கொண்டே.

"பல நாட்களாகவே உங்களிடம் ஒன்று கேட்க வேண்டுமென்று நினைத்தேன். உங்கள் தந்தை உங்களுக்கு ஏன் தாசரதி என்று பெயர் வைத்தார்?"

"ராமனின் தந்தையான தசரதரின் வழி வந்தவன் என்ற பொருள்படும்படி எனக்குப் பெயரிட்டிருக்கிறார் என் தந்தை. தசரத சக்கரவர்த்தியைப் போல் ஒரு பேரரசனாக நான் விளங்க வேண்டும் என்பது அவர் அவா!"

"சொல்கிறேனே என்று தவறாக நினைக்காதீர்கள். உங்கள் தந்தை காலத்தில் இருந்த நாட்டின் பரப்பு உங்கள் காலத்தில் குறுகி விட்டதே!"

"என்ன செய்வது? சில சிற்றரசர்கள் கலகம் செய்து நம் நாட்டிலிருந்து பிரிந்து தங்கள் பகுதிகளைத் தனி நாடுகளாக அறிவித்து விட்டார்கள்."

"இன்னும் சில சிற்றரசர்கள் கூடக் குழப்பம் விளைவித்துக் கொண்டிருப்பதாகச் சொன்னீர்களே!"

"ஆமாம். இன்னும் சில பகுதிகள் கூட நம்மிடமிருந்து பிரிந்து தனி நாடுகளாகி விடுமோ என்று எனக்குக் கவலையாகத்தான் இருக்கிறது" என்றார் மன்னர், கவலையுடன்.

"இதற்கெல்லாம் என்ன காரணம் என்று யோசித்தீர்களா?" என்றாள் மகாராணி.

"நான் வலுவற்றவன் என்று சொல்லிக் காட்டுகிறாயா?" என்றார் மன்னர், கோபத்துடன்.

"இல்லை அரசே! இது உங்கள் வலிமையைப் பற்றிய விஷயம் இல்லை. உங்களுக்கு வலிமை இருக்கிறது. ஆனால் அந்த வலிமையைத் தாங்கிப் பிடிக்கக் கூடிய அடித்தளம் இல்லை."

"என்ன சொல்கிறாய் வனவாணி?"

"உங்கள் தந்தை நீங்கள் தசரதரைப் போல் விளங்க வேண்டுமென்று விரும்பினார். தசரதரின் பெருமைக்குக் காரணம் அவருடைய வலிமை மட்டுமல்ல, அவருக்கு உறுதுணையாக இருந்து ஆலோசனை கூறி வழிநடத்த வசிஷ்டர் என்ற பெரிய அறிஞர் அவர் அவையில் இருந்ததும்தான்."

தாசரதி மௌனமாக இருந்தார்.

"உங்களுக்கும் சந்திரசூடர் என்ற ஒரு அறிஞர் அமைச்சராக இருந்தார். ஏதோ ஒரு கோபத்தில் நீங்கள் அவரைக் கடிந்து கொண்டதால் அவர் நம் நாட்டை விட்டே போய் விட்டார். சிந்தித்துப் பாருங்கள். அவர் உங்களுடன் இருந்த காலத்திலும் ஒரு சில சிற்றரசர்கள் பிரச்னை செய்யவில்லையா? அவர் அவர்களைத் திறமையாகச் சமாளித்து, அவர்கள் தொடர்ந்து உங்களுக்கு ஆதரவாகச் செயல்படச் செய்யவில்லையா? இப்போதும் - வேறு சில சிற்றரசர்கள்  பிரிந்து போன பிறகும் - அவர்கள் உங்களுக்கு ஆதரவாகத்தானே இருக்கிறார்கள்? 

"சந்திரசூடர் எங்கே இருக்கிறார் என்பது உங்களுக்குத் தெரியாமல் இருக்காது. ஒரு நல்ல தூதரை அனுப்பியோ அல்லது நீங்களே நேரில் சென்றோ அழைத்தால் அவர் நிச்சயம் திரும்பி வருவார். நீங்கள் இழந்தவற்றைக் கூட உங்களால் திரும்பப் பெற முடியும்."

தாசரதி யோசனையில் ஆழ்ந்தார். 

பொருட்பால்
அரசியல் இயல்
அதிகாரம் 45 
 பெரியாரைத் துணைக்கோடல்  
குறள் 449
முதலிலார்க்கு ஊதிய மில்லை மதலையாஞ்
சார்பிலார்க் கில்லை நிலை.

பொருள்:
முதல் இல்லாத வணிகர்க்கு வணிகத்திலிருந்து வரக் கூடிய வருமானம் கிடைக்காது, அது போல் தம்மைத் தாங்கிக் காப்பாற்றும் துணை இல்லாத அரசனுக்கு நிலையான அரசாட்சி இல்லை.

Read 'The Queen's Suggestion' the English version of this story by the same author.

அறத்துப்பால்                                                                                       காமத்துப்பால்

Wednesday, January 27, 2021

448. முன்கூட்டியே தேர்தல்

"ஜனநாயகத்தை அழிக்கறதுக்கு ரொம்ப வலுவான கருவி எது தெரியுமா?"

"எது?"

"ஜனநாயகம்தான்!"

"எப்படிச் சொல்றே?"

"நம்ம மஹேந்திரா ஜனநாயக முறையிலதானே நம்ம நாட்டோட ஜனாதிபதி ஆனாரு? இப்ப எப்படி ஜனநாயகத்தை அழிச்சுக்கிட்டிருக்காரு பார்!"

"ஜனநாயகத்தை அழிச்சுக்கிட்டிருக்காருன்னு எப்படிச் சொல்றே? நம்ம நாட்டில மக்கள் மன்றம், பத்திரிகைகள், மத்த ஊடகங்கள் எல்லாம் இயங்கிக்கிட்டுத்தானே இருக்கு?"

"இயங்கிக்கிட்டுத்தான் இருக்கு - மஹேந்திராவோட விருப்பத்தின்படி! மக்கள் மன்றத்தில அரசாங்கத்தை எதிர்த்துக் குரல் கொடுக்க எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பயப்படறாங்க. 

"அப்படி யாராவது பேசினா, அடுத்த நாளே அவர் வீட்டில வருமான வரி சோதனை நடக்குது. ஏகப்பட்ட பணமும் ஆவணங்களும் கைப்பற்றப்பட்டதா செய்தி வருது. அப்புறம் அவர் வழிக்கு வந்துடறாரு. வருமான வரிச் சோதனை மேல நடவடிக்கை எதுவும் எடுக்கப்படறதில்ல!

"ஊடகங்கைளை எடுத்துக்கிட்டா, அரசாங்கத்துக்கு எதிரா கருத்து சொல்ற சானல்கள் கொஞ்ச நாள்ள தங்களோட போக்கை மாத்திக்கிட்டு, அரசாங்கத்துக்குத் துதி பாட ஆரம்பிச்சுடறாங்க. திடீர்னு ஏன் அவங்க தங்களோட கருத்தை மாத்திக்கிட்டாங்கங்கறது அவங்களுக்கும் அரசாங்கத்துக்கும்தான் வெளிச்சம்! 

"அரசாங்கத்துக்கு எதிரா கருத்து சொல்ற ஊடக ஆசிரியர்கள், செய்தியாளர்கள் எல்லாம் காரணமே இல்லாம நீக்கப்படறாங்க, இல்லை, பதவி விலகறாங்க.

"சமூக ஊடகங்ள்ள அரசாங்கத்தை ஆதரிக்கறவங்க எழுதற அவதூறுக் கருத்துக்கள், பொய்யான தகவல்கள் மேல எந்த நடவடிக்கையும் எடுக்கப்படறதில்ல. 

"ஆனா அரசாங்கத்தோட செயல்பாடுகளைக் குறை சொல்லி யாராவது கருத்துச் சொன்னா, அவங்க மேல அவதூறு வழக்கு, கைதுன்னெல்லாம் நடவடிக்கை பாயுது. அதோட ஆளுங்கட்சி உறுப்பினர்களோட வன்முறையையும் அவங்க எதிர்கொள்ள வேண்டி இருக்கு. 

"அதனால, இந்த அரசாங்கத்துக்கு எதிரான கருத்துக்களே வெளிப்படறதில்லை. நீதிமன்றங்கள் கூட இந்த அரசாங்கத்தோட தவறுகளைக் கண்டிக்கறதில்ல. 

"உன்னை மாதிரி பல பேர் நடக்கறது எதையும் பார்க்காம கண்ணை மூடிக்கிட்டு, 'எல்லாம் சரியாத்தானே இருக்கு?'ன்னு சொல்லிக்கிட்டிருக்காங்க. இதுதான் நம் நாட்டோட பரிதாபமான நிலைமை!"

"நீ இப்ப எங்கிட்ட இந்த அரசாங்கத்தைக் குறை சொல்லிப் பேசிக்கிட்டிருக்கியே! இது ஜனநாயகத்துக்கான அடையாளம் இல்லையா?"

"யப்பா! நீ என் நண்பன்கறதால உங்கிட்ட தைரியமா சொல்லிக்கிட்டிருக்கேன். நான் இப்படிப் பேசினேன்னு தயவு செஞ்சு நீ யார்கிட்டயும் சொல்லி வைக்காதே! அவங்க வேற யார்கிட்டயாவது சொல்லி, இந்த அரசாங்கத்தோட அடிமை சேவகர்கள் யார் காதுக்காவது இது போச்சுன்னா, அவ்வளவுதான்! என்னை தேசத்துரோகின்னு சொல்லி, உள்ள தள்ளிடுவாங்க."

ஜனாதிபதி மஹேந்திரா தன் அரசாங்கத்தின் மூத்த அதிகாரிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டார்.

"அடுத்த வருஷம்தான் தேர்தல் நடக்கணும். ஆனா, ஒரு வருஷம் முன்னாலேயே தேர்தலை நடத்திடலாம்னு நினைக்கிறேன். நாட்டில நிலைமை எப்படி இருக்கு?"

"மக்கள் எல்லோரும் ரொம்ப மகிழ்ச்சியா இருக்காங்க. யாருக்கும் எந்தக் குறையும் இல்ல. எல்லோருமே உங்களுக்குத்தான் ஓட்டுப் போடுவாங்க" என்றார் உளவுத்துறையின் மூத்த அதிகாரி.

"அப்படின்னா, உடனே தேர்தலை வச்சுடறேன். அடுத்த வருஷம் நிலைமை எப்படி இருக்குமோ, தெரியல!" என்றார் மஹேந்திரா.

"என்னையா இப்படி ஆயிடுச்சு? உளவுத்துறை அதிகாரிங்கள்ளாம் சொன்னதை வச்சுத்தானே தேர்தலை வச்சேன்? இல்லேன்னா, இன்னொரு வருஷம் பதவியில இருந்திருக்கலாமே!" என்றார் மஹேந்திரா, தன் கட்சியின் மூத்த தலைவர்களிடம்.

"அரசாங்கத்தின் மேல இருக்கற பயத்தால, மக்கள் வெளிப்படையா குறை எதுவும் சொல்லாம, தங்களோட கோபத்தை வாக்குச் சீட்டு மூலமா வெளிப்படுத்திட்டாங்க. 

"அரசாங்கத்தை விமரிசனம் பண்ணினவங்களையெல்லாம் மொத்தமா ஒழிச்சுட்டீங்க. அதனால, உங்ககிட்ட உண்மை நிலவரத்தை எடுத்துச் சொல்லவே ஆள் இல்லாம போயிட்டாங்க. 

"உளவுத்துறை அதிகாரிகள் உங்ககிட்ட உண்மை நிலவரத்தைச் சொன்னாங்களோ, இல்ல கசப்பான உண்மையைச் சொன்னா உங்களுக்குப் பிடிக்காதுங்கற பயத்தில, உங்களை சந்தோஷப்படுத்தறதுக்காகப் பொய்யான தகவல்களைச் சொன்னாங்களோ! 

"உங்களோட தன்னிச்சையான செயல்பாடுகளால, மக்கள்  ஜனாதிபதி தேர்தல்ல உங்களைப் படுதோல்வி அடைய வச்சதும் இல்லாம, மக்கள் மன்றத் தேர்தல்லே நம்ம கட்சிக்கு அஞ்சு இடங்களை மட்டுமே கொடுத்து, நம்ம கட்சியையும் துடைச்சு எடுத்துட்டாங்க. புது அரசாங்கத்தில உங்க மேல வழக்குப் போட்டு, உங்களுக்கு தண்டனை வாங்கிக் கொடுக்கப் பார்ப்பாங்க. நம்ம கட்சிகிட்டேந்து உங்களுக்கு எந்த ஆதரவையும் எதிர்பாக்காதீங்க. கட்சியில எல்லாருமே உங்க மேல கோபமாத்தான் இருக்காங்க - என்னையும் சேர்த்து!" என்று பொரிந்து தள்ளினார் கட்சியின் மூத்த தலைவர் ஒருவர். 

பொருட்பால்
அரசியல் இயல்
அதிகாரம் 45 
 பெரியாரைத் துணைக்கோடல்  

குறள் 448:
இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்
கெடுப்பா ரிலானுங் கெடும்.

பொருள்:
கடிந்து அறிவுரை கூறும் பெரியாரின் துணை இல்லாத அரசன், தன்னைக் காக்க யாரும் இல்லாதவனாக, தன்னைக் கெடுக்கும் பகைவர் எவரும் இல்லாவிட்டாலும், கெடுவான்.

Read 'Advancing the Elections' the English version of this story by the same author.
    
  அறத்துப்பால்                                                        காமத்துப்பால்

Monday, January 25, 2021

447. உங்களைப் போல் ஒருவர்!

"உனக்கு அறிவிருக்காடா? ஒரு சின்னப் பையன் செய்யற வேலையா இது?"

15 வயதில் நான் திருட்டு 'தம்' பிடித்ததைத் தெரிந்து கொண்டு என் தாத்தா என்னைக் கடிந்து சொன்னது இது.

"ஏதோ சின்னப்பையன் தெரியாம செஞ்சுட்டான். அப்பா அம்மா இல்லாத பிள்ளையை இப்படியா திட்டுவாங்க?" என்றாள் என் பாட்டி. சொல்லும்போதே அவர் கண்களில் துளிர்ந்த கண்ணீரை என்னால் பார்க்க முடிந்தது.

"அப்பா அம்மா இல்லாததாலதான் நான் அவனைக் கண்டிச்சு வளர்க்க வேண்டி இருக்கு. டேய், இன்னொரு தடவை நீ சிகரெட் குடிச்சேன்னா உனக்குச் சோறு கிடையாது. நீ சிகரெட்டையே சாப்பாடா வச்சுக்க வேண்டியதுதான்!" என்றார் தாத்தா, கடுமை சற்றும் குறையாமல்.

என் சிகரெட் பழக்கம் அன்றே முளையிலேயே கிள்ளி எறியப்பட்டது.

"என்னங்க? சின்ன வயசிலியே உங்க அப்பா அம்ம இறந்துட்டதால, உங்களை  உங்க தாத்தா பாட்டி வளர்த்திருக்கறதால நீங்க அவங்ககிட்ட அன்போடயும் மரியாதையோடயும் இருக்கறது சரிதான். 

"இப்ப உங்க தாத்தாவுக்கு எண்பது வயசாகுது, உங்களுக்கு முப்பது வயசாகுது. இப்பவும் எல்லா விஷயத்திலேயும் அவர்கிட்ட யோசனை கேக்கறீங்க. 

"நீங்க செய்யறது தப்புன்னு நினைச்சா ஏதோ சின்னப் பையனைத் திட்டற மாதிரி அவர் உங்களைக் கடுமையாப் பேசறாரு. நீங்க சந்தோஷமா அவர் திட்டறதைக் கேட்டுக்கிட்டிருக்கீங்க! 

"எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு. நம்ம அஞ்சு வயசுப் பையன் கூட 'ஏம்மா அப்பாவோட தாத்தா அப்பாவைத் திட்டறாரு?'ன்னு கேக்கறான். நீங்க அவர்கிட்ட அதிகமாப் பேச்சு வச்சுக்காம இருக்கறது நல்லதுன்னு நினைக்கிறேன்" என்றாள் என் மனைவி.

"சின்ன வயசிலேந்து என் தாத்தா என்னைக் கண்டிச்சு வளர்த்ததாலதான் நான் வாழ்க்கையில முன்னுக்கு வந்திருக்கேன். இப்ப சொந்தமாத் தொழில் செய்யற அளவுக்கு வந்திருக்கேன். 

"என் தொழிலைப் பத்தி தாத்தாவுக்கு எதுவும் தெரியாட்டாக் கூட, முக்கியமான விஷயங்களை அவர்கிட்ட கேட்டுக்கிட்டுத்தான் செய்வேன். 

என் தொழிலைப் பத்தின நுணுக்கங்கள் தாத்தாவுக்குத் தெரியாட்டாலும் நல்லது கெட்டது அவருக்குத் தெரியும். நான் செய்யறது தப்புன்னா அவர் என்னைக் கண்டிக்கத் தயங்க மாட்டாரு. 

"ஏன், நான் கல்லூரியில படிச்சப்ப காதல்ங்கற மாயையில மாட்டிக்க இருந்தேன். தாத்தாதான் அந்த வயசில என்னால வாழ்க்கையைப் பத்தி சரியா முடிவு எடுக்க முடியாதுன்னு சொல்லி என்னை வழிப்படுத்தினாரு. அதனாலதான் உன்னை மாதிரி அருமையான மனைவி எனக்குக் கிடைச்சிருக்கே! 

"தாத்தாவுக்கு வயசாயிடுச்சு, இன்னும் எத்தனை காலத்துக்கு அவரோட வழிகாட்டல் எனக்குக் கிடைக்கும்னு தெரியல. அவர் காலத்துக்கப்புறம், நான் தப்பு வழியில போனா, என்னைக் கண்டிச்சு வழி நடத்த வேற யார் கிடைப்பாங்க என்பதுதான் என் கவலை!" 

பொருட்பால்
அரசியல் இயல்
அதிகாரம் 45 
 பெரியாரைத் துணைக்கோடல்  
குறள் 447
இடிக்குந் துணையாரை யாள்வரை யாரே
கெடுக்குந் தகைமை யவர்.

பொருள்:
கடிந்து அறிவுரை கூறவல்ல பெரியாரின் துணை கொண்டு நடப்பவரைக் கெடுக்கும் ஆற்றல் உள்ளவர் எவர் இருக்கின்றனர்?

Read 'A Guide Called Grandfather' the English version of this story by the same author.
அறத்துப்பால்                                                                                       காமத்துப்பால்

Sunday, January 24, 2021

446. அமைச்சரவைக் கூட்டம்

தேர்தல் முடிந்து முதலமைச்சராகப் பதவியேற்ற குணசீலன் அமைச்சரவை அமைப்பது பற்றிக் கட்சியின் தலைவர் குமரவேலுடன் கலந்தாலோசித்துக் கொண்டிருந்தார்.

"இந்தத் தடவை நாம இவ்வளவு பெரிய வெற்றி பெற்றதுக்கு முழுக்க முழுக்க உங்களோட பிரசாரமும் வியூகங்களும்தான் காரணம். அதனால மந்திரி சபையை உங்க விருப்பபடி அமைச்சுக்கங்க. நான் யாரையும் சிபாரிசு செய்யப் போறதில்ல!" என்றார் குமரவேல்.

"நன்றி ஐயா! உங்க வழிகாட்டலும், ஊக்கமும்தான் எனக்கு உந்துதலா இருந்தது. இதை நான் மனசாரச் சொல்றேன்" என்றார் குணசீலன்.

"தெரியும் குணா. போன தடவை நீங்க முதல் தடவையா முதலமைச்சரா இருந்தபோது மற்ற தலைவர்கள் உங்களுக்குக் கொடுத்த அழுத்தங்கள், தொந்தரவுகள், அவங்க செஞ்ச தவறுகள் இதனால் எல்லாம்தான் நாம போன தடவை தோத்தோம். நானும் அவங்களைக் கட்டுப்படுத்தத் தவறிட்டேன். இந்தத் தடவை அந்த மாதிரி நடக்கக் கூடாதுங்கறதுக்காகத்தான் நீங்க முழு அளவு சுதந்திரத்தோட செயல்படணும்னு நினைக்கறேன்."

"அதுக்கு அமைச்சர்களை சரியாத் தேர்ந்தெடுத்தா மட்டும் போதாது. நான் ஒரு யோசனை வச்சிருக்கேன். அதைச் செயல்படுத்த உங்க அனுமதி வேணும்."

"சொல்லுங்க."

குணசீலன் சொல்லி முடித்ததும், "அருமையான யோசனை. அப்படியே செய்யுங்க. என்னோட முழு ஆதரவும் உங்களுக்கு உண்டு" என்றார் குமரவேல் உற்சாகமாக.

அமைச்சரவையின் முதல் கூட்டம் துவங்கியது.

"என்ன தலைவரே, இப்படிப் பண்ணிட்டீங்க?" என்றார் மூத்த அமைச்சர் அரசகுமார்.

"என்ன பண்ணிட்டேன்?" என்றார் குணசீலன், சிரித்துக் கொண்டே.

"நாங்க 30 பேரு அமைச்சரா இருக்கோம். ஆனா உங்களுக்குன்னு ஆறு சிறப்புச் செயலாளர்களை நியமிச்சிருக்கீங்க. ஐந்து அமைச்சர்களுக்கு ஒத்தர்னு பிரிச்சு எல்லா ஃபைல்களையும் நாங்க அவங்களுக்கு அனுப்பி ஒப்புதல் வாங்கணும்னு ஒரு நடைமுறையைக் கொண்டு வந்திருக்கீங்க. இது என்ன கேபினட்டுக்கு மேல ஒரு சூப்பர் கேபினட் மாதிரி இல்ல இருக்கு?" என்றார் அரசகுமார், சற்றுக் கோபமாக.

"அதோட இது அரசியல் சட்டத்துக்கு முரணானதுன்னு நினைக்கிறேன்" என்றார் கமலநாதன் என்ற அமைச்சர். அவர் படித்தவர், விவரம் அறிந்தவர் என்று கருதப்படுபவர்.

"இதில அரசியல் சட்டத்துக்கு முரணானது எதுவும் இல்ல. முதலமைச்சர் தனக்கு சிறப்புச் செயலாளர்களா யாரை வேணும்னா நியமிச்சுக்கலாம். ஃபைல்கள்ள அவங்க கையெழுத்துப் போட மாட்டாங்க. அவங்க கருத்துக்களை எழுதி எனக்கு அனுப்புவாங்க. நான்தான் ஃபைல்கள்ள  என்னோட ஒப்புதலோடயோ அல்லது வேற முடிவோடயோ திருப்பி அனுப்புவேன்" என்று கமலநாதனுக்கு முதலில் பதில் கூறிய குணசீலன், அரசகுமாரிடம் திரும்பினார்.

"அண்ணே! போன தடவை நம்ம ஆட்சியில நிறையத் தவறுகள் நடந்துடுச்சு. அதனாலதான் நாம தோத்துட்டோம். இந்த முறை அப்படி நடக்காம, நம்ம ஆட்சி மக்களுக்கு நல்லதை மட்டுமே செய்யறதா, குறைகள் இல்லாததா இருக்கணும்னு கட்சித் தலைவர் எங்கிட்ட சொல்லி இருக்காரு.

"நீங்கள்ளாம் தப்பு பண்ணக் கூடியவங்கன்னு நான் சொல்லல. தெரியாம கூடத் தவறுகள் நடக்காலாம். நான் நியமிச்சிருக்கறவங்க விஷயம் தெரிஞ்சவங்க, நேர்மையானவங்க, சமூக அக்கறை உள்ளவங்க. அவங்க ஆலோசனை உங்களுக்குக் கூட உபயோகமாத்தான் இருக்கும். அமைச்சர்ங்கறத்துக்கான உங்க அந்தஸ்து, கௌரவம் இதுக்கெல்லாம் எந்தக் குறையும் வராம இருக்கற அளவுக்குத்தான் நான் இந்த ஏற்பாட்டை செஞ்சிருக்கேன். கொஞ்ச நாள் ஆனா, அவங்க ஆலோசனைகளும், வழிகாட்டலும் நமக்கு எவ்வளவு பயனுள்ளதா இருக்கும்னு நீங்களே புரிஞ்சுப்பீங்க."

அனைவரும் அமைதியாக இருந்தனர்.

அனைவரையும் ஒருமுறை கண்களைச் சுற்றிப் பார்த்த குணசீலன், "உங்கள்ள யாருக்காவது இந்த ஏற்பாடு பிடிக்கலேன்னா, நீங்க அமைச்சரவையிலேந்து விலகிக்கலாம்!" என்றார் சிரித்தபடி.

பொருட்பால்
அரசியல் இயல்
அதிகாரம் 45 
 பெரியாரைத் துணைக்கோடல்  

குறள் 446:
தக்கா ரினத்தனாய்த் தானொழுக வல்லானைச்
செற்றார் செயக்கிடந்த தில்.

பொருள்:
தக்க பெரியாரின் கூட்டத்தில் உள்ளவனவாய் நடக்கவல்ல ஒருவனுக்கு, அவனுடைய பகைவர் செய்யக் கூடிய தீங்கு ஒன்றும் இல்லை.

Read 'The Cabinet Meeting' the English version of this story by the same author.
  அறத்துப்பால்                                                                         காமத்துப்பால்

Saturday, January 23, 2021

445. முதல்வருடன் ஒரு சந்திப்பு

பத்திரிகையாளர் கிளப்பில் குழுக்களாக அமர்ந்து பேசிக் கொண்டிருந்தவர்கள் அனைவரும் பேசிக் கொண்டிருந்தது நடந்து முடிந்திருந்த சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் பற்றியும், கதிர்வேலன் புதிய முதல்வராகப் பதவியேற்றுக் கொண்டது பற்றியும்தான்.

சங்கரமணியும் அவருடைய பத்திரிகை உலக நண்பர் குழந்தைசாமியும் ஒரு மேஜையில் எதிரெதிரே அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர்.

"நீங்க யாரைத் தீவிரமா எதிர்த்து எழுதிக்கிட்டிருந்தீங்களோ அவ தேர்தல்ல ஜெயிச்சு பதவிக்கு வந்துட்டாரு. இன்னும் அஞ்சு வருஷத்துக்கு அவர்தான் முதலமைச்சர். மத்தியில ஆள்ற கட்சியோடயும் அவரு நட்பா இருக்காரு. நீங்க என்ன செய்யப் போறீங்க?" என்றார் குழந்தைசாமி.

"செய்யறதுக்கு என்ன இருக்கு? தொடர்ந்து என் கருத்துக்களைச் சொல்லிக்கிட்டிருப்பேன். அரசாங்கத்திலேந்து எனக்கு நிறையத் தொந்தரவுகள் வரலாம். நாட்டு நலனுக்கு எதிரா எழுதினேன்னு சொல்லி வழக்குப் போடலாம், சிறையில அடைக்கலாம். எல்லாத்துக்கும் தயாராத்தான் இருக்கேன்!" என்றார் சங்கரமணி.

"எதுக்கும் கொஞ்சம் அடக்கியே வாசிங்க. ஆட்சியில இருக்கறவங்களைப் பகைச்சுக்கிட்டு வாழறது ரொம்பக் கஷ்டம்" என்று குழந்தைசாமி சொல்லிக் கொண்டிருக்கும்போதே, அவர்கள் அமர்ந்திருந்த மேஜைக்கு அருகே வந்த செந்தில் என்ற பத்திரிகையாளர், சங்கரமணியிடம் குனிந்து, "சார்! உங்ககிட்ட ஒரு நிமிஷம் தனியாப் பேசணும்!" என்றார்.

இது காதில் விழுந்ததும் குழந்தைசாமி, "சரி. நாம அப்புறம் பாக்கலாம்" என்றபடியே எழுந்து நின்றார்.

"நீங்க இருங்க. சார் கிட்ட ஒரு சேதி சொல்லணும். அதைச் சொல்லிட்டுப் போயிடறேன். அப்புறம் நீங்க தொடர்ந்து பேசலாம்" என்று செந்தில் கூறியதும், சங்கரமணி எழுந்து சற்றுத் தள்ளிச் சென்று நின்றார். 

செந்தில் அவர் அருகில் சென்று ஏதோ சொல்லி விட்டு அங்கிருந்து சென்று விட்டார்.

சங்கரமணி மீண்டும் மேஜைக்கு வந்து குழந்தைசாமிக்கு எதிரே அமர்ந்தார்.

"இவரு கதிர்வேலனோட ஆளாச்சே! என்ன சொல்றாரு? எங்க ஆளு பதவிக்கு வந்துட்டாரு, ஜாக்கிரதைன்னு எச்சரிக்கிறாரா?" என்றார் குழந்தைசாமி.

"இல்லை. முதல்வர் என்னைப் பார்க்க விரும்பறாராம்!" என்றார் சங்கரமணி, யோசனையுடன்.

"பாத்துட்டு வாங்க. நேரில கூப்பிட்டு எச்சரிக்க விரும்பறாரோ என்னவோ! ஜாக்கிரதையாப் பேசுங்க. ரொம்ப மோசமான ஆளு அவரு. உங்களுக்குத் தெரியாதது இல்ல!" என்றார் குழந்தைசாமி, சற்றே கவலையான குரலில்.

முதல்வர் கதிர்வேலனை அவர் அலுவலகத்தில் சங்கரமணி சந்தித்தபோது, அறையில் வேறு யாரும் இல்லை.

"சொன்னா நம்புவீங்களோ என்னவோ, நீங்க எழுதறது அத்தனையும் உன்னிப்பாப் படிக்கறவன் நான்!" என்றார் கதிர்வேலன்.

'தெரியுமே! அதுக்கு பதிலா என்னைத் தரக்குறைவாத் தாக்கி உங்க கட்சிப் பத்திரிகையில உங்க ஆட்கள் எழுதறதையெல்லாம் நானும் படிப்பேன்!' என்று மனதுக்குள் நினைத்துக் கொண்ட சங்கரமணி, "நன்றி" என்றார் சுருக்கமாக.

"இப்ப நான் பதவிக்கு வந்திருக்கேன். நான் பதவியில இருக்கறதால என்னைச் சுத்தி இருக்கறவங்கல்லாம் நான் எதை விரும்பறேனோ அதைத்தான் எங்கிட்ட சொல்லுவாங்க. உண்மைகளைச் சொல்ல மாட்டாங்க. ஆனா நீங்க நாட்டில நடக்கற விஷயங்களை உன்னிப்பா கவனிச்சு எழுதறீங்க. சும்மா குத்தம் சொல்லணுங்கறத்துக்காக இல்லாம, உண்மைகளை மட்டும்தான் எழுதறீங்க.

"அரசியல்ரீதியா நீங்க என்னைக் குறை சொல்லி எழுதினப்ப எங்க கட்சிக்காரங்க உங்களைக் கடுமையா விமரிசனம் செஞ்சிருக்கலாம். ஆனா இப்ப நான் ஆட்சியில இருக்கறப்ப, நாட்டில என்ன நடக்குது, மக்கள் என்ன நினைக்கறாங்க மாதிரி உண்மைகளை அறிஞ்சுக்கணும்னு நினைக்கறேன். 

"என்னைச் சுத்தி இருக்கறவங்க, என்னை ஆதரிக்கிற பத்திரிகையாளர்கள் எல்லாம் எனக்கு பாதகமான விஷயங்களை என் பார்வைக்கே கொண்டு வர மாட்டாங்க. அதனால, நடக்கறதை உன்னிப்பா கவனிச்சு உண்மைகளைத் தயங்காம சொல்ற உங்களை என் ஊடக ஆலோசகரா வச்சுக்கணும்னு நினைக்கறேன்.

"நீங்க இப்ப எழுதற மாதிரியே சுதந்திரமா பத்திரிகைகள்ள எழுதிக்கிட்டிருக்கலாம். ஆனா எனக்குத் தெரிய வேண்டிய கசப்பான உண்மைகளை, மத்தவங்க எங்கிட்ட சொல்லத் தயங்கக் கூடிய விஷயங்களை நீங்க எனக்கு சொல்லிக்கிட்டிருக்கணும். இந்தப் பொறுப்பை நீங்க ஏத்துக்கணும்னு உங்களைக் கேட்டுக்கறேன்."

சங்கரமணி கதிர்வேலனை வியப்புடனும், ஒரு புதிய மரியாதையுடனும் பார்த்தார்.

பொருட்பால்
அரசியல் இயல்
அதிகாரம் 45 
 பெரியாரைத் துணைக்கோடல்  
குறள் 445
சூழ்வார்கண் ணாக ஒழுகலான் மன்னவன்
சூழ்வாரைச் சூழ்ந்து கொளல்.

பொருள்:
நம்மைச் சுற்றி இருந்து கொண்டு நடப்பவற்றைக் கண்டு எடுத்துரைக்கும் அறிஞரையே உலகம் கண்ணாகக் கொண்டு நடப்பதால், மன்னவனும் அத்தகையாரை ஆராய்ந்து நட்புக் கொள்ள வேண்டும்.

Read 'A Meeting with the Chief Minister' the English version of this story by the same author.

அறத்துப்பால்                                                                                காமத்துப்பால்

1080. 'தன்மானத் தலைவரி'ன் திடீர் முடிவு!

தன் அரசியல் வாழ்க்கையின் துவக்கத்தில் இரண்டு மூன்று கட்சிகளில் இருந்து விட்டு, அங்கு தனக்கு உரிய மதிப்புக் கிடைக்கவில்லை என்பதால், 'மக்க...