Thursday, January 21, 2021

444. விழா நாயகன்

"சார்! நமக்குப் பரிசு வழங்கற விழா அடுத்த வாரம் இருக்கு. அது விஷயமா அரசாங்கத்திலேந்து அதிகாரி ஃபோன் பண்ணினாரு. எல்லா ஏற்பாடுகளும் தயாரா இருக்காம்" என்றார் நிறுவனத்தின் மானேஜர் ரகுபதி.

"சரி. விழாவை வெப்காஸ்ட் பண்ணணும். அதுக்கு அவங்ககிட்ட அனுமதி கேட்டு ஈமெயில் அனுப்பிடுங்க" என்றான் நிர்வாக இயக்குநர் கஜேந்திரன்.

"சார்! இது அரசாங்கம் ஏற்பாடு செஞ்சிருக்கற விழா. வெப்காஸ்டுக்கெல்லாம் அவங்க ஒத்துக்க மாட்டாங்க."

"நீங்க மெயில் அனுப்பிட்டு உங்ககிட்ட பேசின அதிகாரிக்கு ஃபோன் பண்ணிச் சொல்லுங்க. அவர் ஒத்துக்கலேன்னா ஃபோனை எங்கிட்ட கொடுங்க"

சில நிமிடங்கள் கழித்து கஜேந்திரனின் அறைக்கு வந்த ரகுபதி, "சார்! வெப்காஸ்டுக்கு ஒத்துக்க மாட்டாங்களாம். அதிகாரி லைன்ல இருக்காரு" என்றார்.

தன் அறையில் இருந்த தொலைபேசியை எடுத்துப் பேசிய கஜேந்திரன்,"சார்! வெப்காஸ்டை எங்க செலவில நாங்களே ஏற்பாடு செஞ்சுக்கறோம். உங்ககிட்ட அனுமதி மட்டும்தான் கேக்கறோம்... பாலிசி இஷ்யூவா? சார்! வெப்காஸ்டுக்கு அனுமதி கொடுத்தீங்கன்னாதான் நான் விழாவில வந்து பரிசு வாங்கிப்பேன். நீங்க செகரெட்டரி கிட்ட பேசி அனுமதி வாங்கப் பாருங்க" என்று சொல்லி ஃபோனை வைத்து விட்டான்.

வெப்காஸ்டுக்கு அனுமதி கொடுப்பதாக இரண்டு நாட்கள் கழித்து மின்னஞ்சல் மூலம் செய்தி வந்தது.

சிறந்த தொழிலதிபர் என்ற விருதைப் பெற்றுக் கொண்டு கஜேந்திரன் பேசினான்:

"இந்த விருது எனக்குக் கிடைச்சிருக்கறதை நான் ஒரு கௌரவமா நினைக்கறேன். இந்த விருதுக்கு என்னைத் தேர்ந்தெடுத்த அரசாங்கத்துக்கும் தேர்வுக்குழுவுக்கும் என் மனமார்ந்த நன்றி.

"பொதுவா இது மாதிரி விருதுகளை வாங்கும்போது 'இதற்கு நான் தகுதியானவன் இல்லை. ஆயினும் அடக்கத்தோட இதை வாங்கிக்கறேன்'னு சொல்லுவாங்க. பொதுவா இது ஒரு மரியாதைக்காக அல்லது பண்பாட்டுக்காகச் சொல்றதுதான். ஆனா என் விஷயத்தில நான் உண்மையாவே அப்படித்தான் சொல்லணும். ஏன்னா, இந்த விருதைப் பெறுகிற அளவுக்கு என் நிறுவனம் வளர்ச்சி அடைஞ்சதுக்கு ஒரு முக்கியமான காரணம் இருக்கு.

"இந்த நிறுவனத்தை நான் ஆரம்பிக்கல. இந்தத் தொழிலை ஆரம்பிச்சு நடத்தின திருமுருகன் என்பவர்கிட்ட இருந்து பத்து வருஷம் முன்னால நான் இதை வாங்கினேன். ஒரு புதிய பொருளைத் தன்னோட உழைப்பாலேயும் திறமையாலேயும் உருவாக்கி அதைத் தயாரிச்சு விற்பனை செஞ்சுக்கிட்டிருந்தார் அவர்.

"பொருளாதாரப் பிரச்னைகளால, அவரோட தொழிலை அவரால தொடர்ந்து நடத்த முடியல. பல பேர் மிகக் குறைவான விலைக்கு அந்த நிறுவனத்தை வாங்க முயற்சி செஞ்சபோது, அதோட மதிப்பை உணர்ந்த நான் அதை ஒரு நல்ல விலை கொடுத்து வாங்கிக்கிட்டேன்.

"நிறுவனத்தை நான் வாங்கினப்பறம், தான் உட்கார்ந்திருந்த நாற்காலியை மட்டும் தன் வீட்டுக்கு எடுத்துக்கிட்டுப் போகத் திருமுருகன் விரும்பினார். நான் சொன்னேன். 'உங்க நாற்காலி மட்டுமில்ல, உங்களோட அறையையும் நீங்க எடுத்துக்கணும். அதாவது நீங்க உங்க அறையில உங்க நாற்காலியிலேயே உக்காந்துக்கிட்டு இந்த நிறுவனத்துக்கு ஆலோசகரா எனக்கு வழிகாட்டியா இருக்கணும்!'

"அவரு என் வேண்டுகோளை ஏத்துக்கிட்டு பத்து வருஷமா என்னையும் என் நிறுவனத்தையும் வழி நடத்திக்கிட்டிருக்காரு. என் நிறுவனத்தோட வளர்ச்சிக்கு அவரோட ஆலோசனைகளாலும், வழிகாட்டுதலும்தான் காரணம். இந்த விருது அவருக்குத்தான் சேரணும். நிறுவனம் என் பேரில இருக்கறாதால எனக்குக் கிடைச்சிருக்கு!

"கொஞ்ச நாளா அவர் உடல்நிலை பாதிக்கப்பட்டு வீட்டில இருக்காரு. அதனால அவரால இந்த விழாவில கலந்துக்க முடியல. ஆனாலும் அவர் இந்த விழாவைப் பாக்கணுங்கறதுக்காகத்தான் இதை வெப்காஸ்ட் பண்ண அரசாங்கத்துக்கிட்ட அனுமதி வாங்கினேன். 

"இப்ப இந்த விருதை நான் என்னோட வழிகாட்டியான திருமுருகன் அவர்களுக்கு அர்ப்பணிக்கிறேன். தன் வீட்டில் இருந்தபடி இதைப் பார்த்துக் கொண்டிருக்கும் அவருடைய வாழ்த்துக்களையும் ஆசிகளையும் வேண்டுகிறேன்."

கஜேந்திரனின் பேச்சையும், அதைத் தொடர்ந்து எழுந்த பெரிய கரவொலியையும் படுக்கையில் படுத்தபடி பார்த்துக் கொண்டிருந்த திருமுருகனின் கண்களில் நீர் துளிர்த்தது.

பொருட்பால்
அரசியல் இயல்
அதிகாரம் 45 
 பெரியாரைத் துணைக்கோடல்  

குறள் 444:
தம்மிற் பெரியார் தமரா ஒழுகுதல்
வன்மையு ளெல்லாந் தலை.

பொருள்:
அறிவு முதலியவற்றால் தம்மைக் காட்டிலும் சிறந்த பெரியோர்களைத் தமக்கு உரியவராகக் கொண்டு, அவர் காட்டும் வழியில் நடப்பது, வலிமையுள் எல்லாம் முதன்மையானதாகும்.

Read 'The Award' the English version of this story by the same author.
  அறத்துப்பால்                                                                        காமத்துப்பால்

442. துணை

"எல்லாரும் குழந்தைகள் இல்லையேன்னு ஏங்குவாங்க. நீ பெரியவங்க இல்லையேன்னு வருத்தப்படறியே!" என்றான் பிரபாகர்.

"என் அப்பா பல வருஷங்களுக்கு முன்னேயே இறந்துட்டாரு. நமக்குக் கல்யாணம் ஆகிக் கொஞ்ச நாள்ள என் அம்மாவும் இறந்துட்டாங்க. உங்க அப்பா அம்மாவும் ரொம்ப நாள் முன்னாலேயே போய்ச் சேந்துட்டாங்க. 

"கடவுள் புண்ணியத்தில நமக்கு ஒரு பையன் பிறந்திருக்கான். நீங்க நல்ல வேலையில இருக்கீங்க. நமக்கு எந்தக் குறையும் இல்லதான். ஆனா, சின்னதும்,பெரிசுமா, நமக்கு ஏதாவது பிரச்னை வந்துக்கிட்டே இருக்கே! அதையெல்லாம் சமாளிக்கறதுக்குள்ள நாம திணறிப் போயிடறோம், இல்ல? 

"வீட்டில யாராவது பெரியவங்க இருந்தா, இது மாதிரி பிரச்னைகளை சமாளிக்க அவங்க சரியானபடி வழிகாட்டுவாங்க. குழந்தையை சரியா வளக்கறதுக்கும், அவங்க வழிகாட்டுதல் பயனுள்ளதா இருக்கும். அதனாலதான், வீட்டில பெரியவங்க யாராவது இருந்தா, நல்லா இருக்கும்னு நினைக்கறேன்" என்றாள் சியாமளா.

"குழந்தையைப் பாத்துக்கறது உனக்குக் கஷ்டமா இருந்தா, ஒரு ஆயாவை வச்சுக்கலாம்."

"நான் விரும்பறது அது இல்ல. நமக்கு வழி காட்டவும், ஆலோசனை சொல்லவும் வீட்டில பெரியவங்க யாராவது இருந்தா, நல்லா இருக்கும்னுதான் நினைச்சேன். சில குடும்பங்கள்ள பெரியவங்க இருக்கறதைப் பாத்தா எனக்கு நம்ம வீட்டில அது மாதிரி இல்லையேன்னு ஏமாத்தமா இருக்கு."

"நீ சொல்றது ஆச்சரியமா இருக்கு. பல குடும்பங்கள்ள பெரியவங்களை ஒரு சுமையா நினைக்கறாங்க. பெரியவங்களை முதியோர் விடுதியில கொண்டு விட்டுட்டு, தாங்கள், தங்கள் பிள்ளைகள்னு இருக்கணும்னு நினைக்கறவங்கதான் அதிகம்."

"அது உண்மைதான். பெரியவங்களோட அருமை அவங்களுக்குப் புரியலேன்னுதான் நினைக்கறேன்."

"நீ நினைக்கறது சரியா இருக்கலாம். ஆனா, குழந்தைகளைத் தத்து எடுக்கற மாதிரி, பெரியவங்களைத் தத்து எடுக்க முடியாதே!" என்றான் பிரபாகர்.

"அது சரிதான்!" என்றாள் சியாமளா.

இரண்டு நாட்கள் கழித்து, பிரபாகர் சியாமளாவிடம் சொன்னான்:
"சியாமளா! நீ சொன்னதைப் பத்தி யோசிச்சுக்கிட்டிருந்தேன். வீட்டில பெரியவங்க யாராவது இருக்கறது நல்லதுதான்னு எனக்கும் தோணுது. நமக்கு ஏதாவது பிரச்னைன்னா, அவங்களாலதான் நமக்கு வழிகாட்ட முடியும்."

"அது மட்டும் இல்ல.பெரியவங்க வழிகாட்டல் இருந்தா, நாம தப்புப் பண்ண மாட்டோம். அதனால நமக்குப் பிரச்னைகள் வரதையும் நம்மால தவிர்க்க முடியும்'" என்றாள் சியாமளா.

"என் நண்பன் சேகர் இப்ப அமெரிக்கால இருக்கான். அவன் அங்கேயே செட்டில் ஆயிட்டான். அவன் அப்பா இந்த ஊர்ல தனியாத்தான் இருக்காரு. அவருக்கு அமெரிக்காவுக்குப் போயிட்டு வரதில விருப்பமில்ல. அவர்  ரொம்ப நல்ல மனுஷன். படிச்சவர். அனுபவசாலி. அவர்கிட்ட நான் நிறைய தடவை பேசி இருக்கேன். அவரை எல்லாருக்குமே பிடிக்கும்.

"நாம அவரைப் போய்ப் பாப்போம். உனக்கு அவரைப் பிடிச்சிருந்தா, அவரும் சேகரும் சம்மதிச்சா, அவரை நமக்குத் துணையா நம்ம வீட்டில வச்சுக்கலாம். என்ன சொல்ற?"

"நிச்சயமா. எனக்கு அவரைப் பிடிக்காம போகாது. அவரும், உங்க நண்பரும் சம்மதிச்சா, அதை நம்ம அதிர்ஷ்டம்னுதான் நினைப்பேன்!" என்றாள் சியாமளா, மகிழ்ச்சியுடன். 

பொருட்பால்
அரசியல் இயல்
அதிகாரம் 45 
 பெரியாரைத் துணைக்கோடல்  
குறள் 442
உற்றநோய் நீக்கி உறாஅமை முற்காக்கும்
பெற்றியார்ப் பேணிக் கொளல்.

பொருள்:
வந்துள்ள துன்பத்தை நீக்கி, இனித் துன்பம் வராதபடி முன்னதாகவே காக்க வல்ல தன்மையுடையவரைப் போற்றி நட்புக் கொள்ள வேண்டும்.

Read 'Companion' the English version of this story by the same author.
அறத்துப்பால்                                                                             காமத்துப்பால்

Wednesday, January 20, 2021

443. கௌரவ ஆலோசகர்

ராஜகோபால் மாநில முதல்வர் என்றாலும் அவரை யாரும் முதல்வர் என்று அழைப்பதில்லை, பெரியவர் என்றுதான் அழைப்பார்கள் - அவருடைய கட்சிக்காரர்கள், பொதுமக்கள், ஊடகங்கள், பிற கட்சித் தலைவர்கள் என்று எல்லோருமே.

எதிர்க்கட்சித் தலைவர் செல்லக்கண்ணு கூட அரசாங்கத்தைத் தாக்கிப் பேசும்போது, 'பெரியவர் ஆட்சியில் ஊழல் மலிந்து விட்டது,' 'பெரியவரின்  ஆட்சியில் மக்கள் மிகவும் துன்பப்படுகிறார்கள்' என்றுதான் பேசுவார்.

பெரியவர் என்ற அடைமொழி ராஜகோபாலின் வயதுக்காக மட்டும் அவருக்குக் கொடுக்கப்படவில்லை. 

அவரது ஐம்பதாவது வயதிலேயே 'பெரியவர்' என்று அவர் அழைக்கப்படத் துவங்கி சிறிது காலத்தில் அது அவரது பெயராகவே நிலைபெற்று விட்டது. இதற்குக் காரணம் அவருடைய கண்ணியமான நடத்தை, நாகரிகமான பேச்சு, அறிவுக் கூர்மை மற்றும் பணிவான அணுகுமுறை.

அவரை அரசியல்ரீதியாக எதிர்த்தவர்களும் அவரைப் பெரியவர் என்று குறிப்பிடத் தயங்கியதில்லை. 'ஒரு மனிதராகப் பெரியவரை நாங்கள் பெரிதும் மதிக்கிறோம். ஆனால் அரசியல்ரீதியாக அவரை எதிர்க்கிறோம்' என்றுதான் மாற்றுக் கட்சியினர் கூறுவார்கள்.

மற்ற பல அரசியல் தலைவர்களைப் போலவே ராஜகோபாலும் அரசியலில் வெற்றி தோல்விகளைச் சந்தித்து வந்தார்.

திடீரென்று மாநில முதல்வராக இருந்த ராஜகோபாலின் உடல்நிலையில் பெரும் பாதிப்பு ஏற்பட்டதால் அவர் முதல்வர் பதவியிலிருந்து விலகினார். சிகிச்சைக்குப் பின் அவர் உடல்நிலை தேறிய பிறகும் அவர் மீண்டும் பதவிக்கு வர விரும்பவில்லை. தீவிர அரசியலில் ஈடுபடாமல், வீட்டிலேயே இருந்தபடி ஓய்வெடுத்துக் கொண்டிருந்தார்.

முக்கியமான பிரச்னைகள் குறித்துக் கருத்துத் தெரிவிப்பதைத் தவிர அரசியலில் அவர் அதிகம் பங்கு கொள்ளவில்லை. 

அவருக்குப் பின் முதல்வரான அவர் கட்சியைச் சேர்ந்த நம்பி ராஜகோபாலைச் சந்திப்பதிலோ, அவரிடம் ஆலோசனை பெறுவதிலோ ஆர்வம் காட்டவில்லை.

மாநிலச் சட்டமன்றத்துக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டது. 

தேர்தலில் தான் போட்டியிடப் போவதில்லை என்று ராஜகோபால் அறிவித்து விட்டார். ஆயினும், தேர்தலில் அவர் கட்சி வெற்றி பெற்றால் ராஜகோபாலை முதல்வராகும்படி அவர் கட்சி கேட்டுக் கொள்ளும் என்ற எதிர்பார்ப்பு பலரிடமும் இருந்தது. 

ஆனால் தேர்தலில் அவர் கட்சி வெற்றி பெறவில்லை. செல்லக்கண்ணு தலைமையிலான கட்சிதான் வெற்றி பெற்றது.

செல்லக்கண்ணு முதல்வராகப் பதவி ஏற்றதும் ராஜகோபாலின் வீட்டுக்குச் சென்று அவரைச் சந்தித்தார். சந்தித்து விட்டு வந்ததும் ராஜகோபாலின் வீட்டு வாசலில் ஊடகங்களைச் சந்தித்தார்.

"எதிர்க்கட்சியைச் சேர்ந்த பெரியவரை நீங்கள் சந்தித்ததற்கு அரசியல் ரீதியான காரணங்கள் உண்டா?" என்று கேட்டார் ஒரு நிருபர்.

"அரசியல்ரீதியான காரணங்கள் இல்லை, ஆனால் அரசுரீதியான காரணம் உண்டு!" என்றார் செல்லக்கண்ணு, புன்னகையுடன்.

"அப்படியென்றால்...?"

"எங்கள் அரசுக்கு ஒரு கௌரவ ஆலோசகராக இருக்கும்படி பெரியவரைக் கேட்டுக் கொண்டேன். அவரும் சம்மதித்திருக்கிறார். "

"எதிர்க்கட்சியைச் சேர்ந்தவரான பெரியவரை நீங்கள் ஆலோசகராக வைத்துக் கொள்ளக் காரணம் என்ன? கடந்த காலங்களில் அவரை நீங்கள் கடுமையாக விமரிசித்திருக்கிறீர்களே!"

"அவரை விமர்சிக்கவில்லை. அவர் அரசியலைத்தான் விமர்சித்திருக்கிறோம். அவர் இப்போது தீவிர அரசியலில் இல்லை. பெரியவரின் அறிவும் அனுபவமும் ஆற்றலும் நம் மாநில நலனுக்குப் பயன்பட வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்துக்காகத்தான் அரசியல் வேறுபாடுகளைக் கடந்து அவரது துணையை நாடி இருக்கிறோம். இது எங்கள் ஆட்சிக்கும் மாநிலத்தின் வளர்ச்சிக்கும் நன்மை தரும் என்று நம்புகிறேன்" என்றார் செல்லக்கண்ணு.

பொருட்பால்
அரசியல் இயல்
அதிகாரம் 45 
 பெரியாரைத் துணைக்கோடல்  

குறள் 443:
அரியவற்று ளெல்லாம் அரிதே பெரியாரைப்
பேணித் தமராக் கொளல். 

பொருள்:
பெரியாரைப் போற்றி தமக்குச் சுற்றத்தாராக்கிக் கொள்ளுதல் பெறத்தக்க அரிய பேறுகள் எல்லாவற்றிலும் அருமையானதாகும்.

Read 'The Patriarch' the English version of this story by the same author.
அறத்துப்பால்                                                                                        காமத்துப்பால்

441. தூரத்து உறவு

ஒரு திருமணத்தில்தான் ராஜீவ் முதலில் சுப்புவைச் சந்தித்தான்.

அவன் அப்பாவுடன் அவர் பேசிக் கொண்டிருந்ததை கவனித்தான். அவர் அகன்றதும் தந்தையிடம் "அவர் யாருப்பா?" என்றான்.

"அவன் சுப்பு. என்னோட தூரத்து உறவு. அவன் அப்பாவும் என் அப்பாவும் கஸின்கள்" என்றார் அவர்.

சற்று நேரத்துக்குப் பிறகு திருமண மண்டபத்தில் ராஜீவ் அமர்ந்திருந்தபோது, தன் பக்கத்தில் சுப்பு அமர்ந்திருந்ததை கவனித்து அவன் அவருக்கு வணக்கம் சொன்னான். அவர் அவனைத் தெரியும் என்ற பாவனையில் புன்னகை செய்தார்.

சாப்பாட்டுக்குப் பிறகு சற்று நடந்து விட்டு வரலாம் என்று ராஜீவ் மண்டபத்துக்கு வெளியே வந்தபோது, அவர் வாசலில் நின்று கொண்டிருப்பதைப் பார்த்து அவர் அருகில் போய் நின்றான்.

"சாப்பிட்டாச்சா?" என்றார் சுப்பு.

"ஆச்சு" என்ற ராஜீவ், "நீங்க?" என்றான்.

"பொதுவா, கல்யாணங்கள்ள, நான் கடைசியாத்தான் சாப்பிடுவேன்!" என்றார் சுப்பு.

"ஏன் அப்படி?"

"எனக்கு முக்கியமான வேலை எதுவும் இல்லை. அவசரமாக் கிளம்பணும்னு நினைக்கக்கறவங்க, பசி பொறுக்காதவங்க, லேட்டா சாப்பிட்டா விருந்தில சில அயிட்டங்கள் தீர்ந்து போயிடுமோன்னு பயந்து முதலிலேயே சாப்பிடணும்னு அவசரப்படறவங்க இவங்கள்ளாம் சாப்பிட்டப்பறம் மெதுவா சாப்பிட்டுக்கலாம்னுதான்!" என்றார் அவர் சிரித்தபடி.

அவர் சொன்னதைக் கேட்டபோது, அவர் உண்மையாகவே அத்தகைய மனப்பான்மை கொண்டவர் என்றும், ஒப்புக்காகப் பேசுபவர் இல்லை என்றும் ராஜீவுக்குத் தோன்றியது.

சற்று நேரம் அவரிடம் ராஜீவ் பொதுவாகப் பேசி விட்டு, "போய் சாப்பிடுங்க சார்! லேட் ஆயிடுச்சு" என்றான், உண்மையான அக்கறையுடன்.

"பொதுவா நான் சாப்பிடப் போறப்ப பந்தி முடிஞ்சு சமையல் வேலை செய்யறவங்களும், பரிமாறவறங்களும்தான் சாப்பிட்டுக்கிட்டிருப்பாங்க. போய் சாப்பிடறேன்" என்று கிளம்பியவர், திரும்பி, "நான் சார் இல்ல. உனக்கு சித்தப்பா முறை!" என்றார் சிரித்தபடி. 

அவர் சென்றதும், அங்கு வந்த அவன் தந்தை, "அவன்கிட்ட என்ன பேசிக்கிட்டிருந்த?" என்றார்.

"சும்மாத்தான்."

"அவன் ஒரு உதவாக்கரை. சரியான வேலை கூடக் கிடையாது. எங்க குடும்பத்திலேயே அவன் ஒரு மிஸ்ஃபிட்!" என்றார் அவன் தந்தை.

ஆயினும் சுப்புவிடம் சற்று நேரம் பேசியதிலேயே, அவர் ஒரு நல்ல மனிதர், அறிவுள்ளவர் என்ற எண்ணம் ராஜீவுக்கு ஏற்பட்டது. அதனால் திருமண வீட்டிலிருந்து கிளம்புமுன் சுப்புவின் விலாசத்தை வாங்கிக் கொண்டான் ராஜீவ், அவரும் அவனிடம், "நேரம் கிடைக்கறப்ப வீட்டுக்கு வா!" என்று அழைப்பு விடுத்தார்.

அதற்குப் பிறகு, மாதம் ஒருமுறையாவது சுப்புவின் வீட்டுக்குச் சென்று அவருடன் சற்று நேரம் பேசி விட்டு வருவது என்ற பழக்கத்தை ராஜீவ் ஏற்படுத்திக் கொண்டான். அவன் அப்பா கூட, "அவங்கிட்ட என்ன இருக்குன்னு அவனைப் போய்ப் பாத்துட்டு வர?" என்று ஓரிரு முறை அவனிடம் கேட்டார்.

"அவர்கிட்ட பேசிக்கிட்டிருந்தா எனக்கு சந்தோஷமா இருக்கு. அவர் பேச்சைக் கேட்டா அவருக்குத் தெரியாத விஷயமே இல்லையோன்னு தோணும். அவரோட கருத்துக்களும் ரொம்ப ஆழமாகவும், நியாயமாகவும் இருக்கு" என்றான் ராஜீவ்.

திருமணம் ஆன பிறகு, அவன் மனைவியும் அடிக்கடி அவனிடம் கேட்பாள்: "என்னங்க, அவரை நீங்க அடிக்கடி பாத்துட்டு வரது நம்ம வசதிக்கும் அந்தஸ்துக்கும்  பொருத்தமாவா இருக்கு?" 

"நம்மகிட்ட இருக்கற வசதியும் அந்தஸ்தும் அவர்கிட்ட இல்லாம இருக்கலாம். ஆனா அவரை மாதிரி ஒரு பெரியவர்கிட்ட எனக்குக் கிடைக்கிற அறிவுக்கும், அருளுக்கும் நம்மால மதிப்புப் போடக் கூட முடியாது!" என்றான் ராஜீவ் ஒருமுறை.

"என்னவோ! அவர்கிட்ட என்ன இருக்குன்னு நீங்க அவரைத் தேடிப் போறீங்கன்னு எனக்குப் புரியலை."

'என் அப்பா சொன்ன அதே வார்த்தைகள்! அந்த உயர்ந்த மனிதருடைய கருத்துக்களையும் ஆலோசனையையும் பின்பற்றி என் வாழ்க்கையில் நான் பல முக்கியமான முடிவுகளை எடுத்ததையும், அவை என் வாழ்க்கையைச் செம்மைப் படுத்தியதையும் அப்பாவிடமும், இவளிடமும் சொன்னால் இவர்கள் புரிந்து கொள்ளவா போகிறார்கள்?' என்று நினைத்துக் கொண்டான் ராஜீவ்.

பொருட்பால்
அரசியல் இயல்
அதிகாரம் 45 
 பெரியாரைத் துணைக்கோடல்  
குறள் 441
அறனறிந்து மூத்த அறிவுடையார் கேண்மை
திறனறிந்து தேர்ந்து கொளல்.

பொருள்:
அறன் அறிந்தவர்களாக உள்ள அறிவிற் சிறந்தவர்களின் நட்பின் பெருமையை உணர்ந்து அதைத் தேர்வு செய்ய வேண்டும்.

Read 'A Distant Relative' the English version of this story by the same author.
அறத்துப்பால்                                                                                      காமத்துப்பால்

Sunday, January 17, 2021

440. ராஜ(சேகரின்) தந்திரம்!

செந்தில்குமாரின் வளர்ச்சி அவனை அறிந்தவர்களிடையே வியப்பை ஏற்படுத்தியது என்றால், அவனைப் போன்ற சிறு மற்றும் நடுத்தரத் தொழில் அதிபர்களிடையே பொறாமையையும், அதனால் விளைந்த ஒருவகை விரோத மனப்பான்மையையும் வளர்த்து விட்டிருந்தது.

தொழிலதிபர் ராஜசேகர் தன் நண்பர் சோமசுந்தரத்துடன் கிளப்பில் பேசிக் கொண்டிருந்தபோது சொன்னார்.

"இந்தத் தொழிற்பேட்டை ஆரம்பிச்சதிலேந்தே நாம இங்கே நம்ம தொழில்களை நடத்திக்கிட்டு வரோம். 

"மின் தட்டுப்பாடு, மூலப்பொருள் கிடைக்காதது, தொழிலாளர் பிரச்னை, பெரிய நிறுவனங்களோட போட்டி, கடன் கொடுத்த வங்கிகள் கொடுக்கற தொல்லை, முன்னே விற்பனை வரி, இப்ப ஜி எஸ் டி ன்னு கழுத்தை நெறிக்கிற தொல்லைகள் இத்தனையோடயும் போராடிக்கிட்டு நாம எப்படியோ நம்ம தொழில்களை நடத்திக்கிட்டு வரோம். 

"இவன் திடீர்னு வந்து நஷ்டத்தில நடக்கற ஒரு தொழிற்சாலையைக் குறைஞ்ச விலைக்கு வாங்கி,ரெண்டு வருஷத்தில அதை லாபம் ஈட்டற நிறுவனமா மாத்திட்டானே, அது எப்படிய்யா?" 

"அதான் எனக்கும் புரியல. அம்பானி மாதிரி இல்ல வளந்துக்கிட்டிருக்கான்! விட்டா நம்மளை எல்லாம் கபளீகரம் பண்ணிடுவான் போல இருக்கே!" என்றார் சோமசுந்தரம்.

"அவனை நெருக்கமா கவனிக்கச் சொல்லி நம்ம அசோசியேஷன் உறுப்பினர்கள் எல்லார்கிட்டயும் சொல்லி இருக்கேன். அவன் புதுசா ஏதோ தொழில் ஆரம்பிக்கப் போறான் போல இருக்கு. 

"அரசாங்கத்தில புதுசாத் துவங்கி இருக்கற தொழில் பேட்டையில நிலம் வாங்க அப்ளை பண்ணி இருக்கானாம். அங்கே நிலம் வாங்க நிறையப் போட்டி இருக்கு.

" சில நண்பர்களோட அரசியல் தொடர்புகளைப் பயன்படுத்தி அங்கே அரசாங்கம் அவனுக்கு நிலம் அலாட் பண்ணாம இருக்க முயற்சி பண்ணிக்கிட்டிருக்கேன்" என்றார் ராஜசேகர், சற்று ரகசியமான குரலில்.

"அப்படி ஏதாவது செஞ்சுதான் அவனை அடக்கி வைக்கணும்!" என்றார் சோமசுந்தரம், மகிழ்ச்சியுடன்.

சில நாட்களுக்குப் பிறகு சோமசுந்தரத்தைத் தொலைபேசியில் அழைத்த ராஜசேகர், "செந்தில்குமார் விஷயத்தில என் முயற்சி வெற்றி அடைஞ்சுடுச்சு. புதுத் தொழில் பேட்டையில நிலம் அலாட் ஆனவங்க பட்டியலை அரசாங்கம் வெளியிட்டிருக்கு. அவனுக்கு நிலம் அலாட். ஆகல!" என்றார் உற்சாகத்துடன்.

"நீங்க வேற! அவன் புதுத் தொழில் பேட்டையில நிலம் வாங்கப் போற மாதிரி நமக்குப் போக்குக் காட்டிட்டு, தன்னோட தொழிற்சாலைக்கு அடுத்தாப்பல இருக்கற நியூ எரா ப்ராடக்ட்ஸை விலைக்கு வாங்கிட்டான். உங்களுக்கு விஷயம் தெரியாதா?" என்றார் சோமசுந்தரம்.

"அது எப்படி? அது சுந்தரமூர்த்தியோட நிறுவனம். அது நஷ்டத்திலதான் போய்க்கிட்டிருக்கு. ஆனா செந்தில்கிட்ட விக்காதீங்கன்னு எல்லார்கிட்டயும் சொல்லி இருக்கமே! சுந்தரமூர்த்தி எப்படி வித்தாரு?" என்றார் ராஜசேகர், அதிர்ச்சியுடன்.

"நீங்க சொன்னா? அது பிரைவேட் லிமிடட் கம்பெனிங்கறதால அவன் புத்திசாலித்தனமா அதில 60% பங்கை மட்டும் வாங்கி இருக்கான். 'நீங்க வீட்டிலேயே ஓய்வா இருங்க, தொழிற்சாலையை நான் நடத்தறேன். நிறுவனத்தை லாபமா இயங்க வச்சப்பறம், உங்க பங்கா லாபத்தில 40% கிடைக்கும்'னு சொல்லி சுந்தரமூர்த்தியைச் சம்மதிக்க வச்சுட்டான். புதுத் தொழிற்பேட்டையில நிலம் கேட்டு அப்ளை பண்ணினது நம்ம கவனத்தைத் திசை திருப்பத்தான்!"

ராஜசேகரிடமிருந்து பதில் வரவில்லை. ஃபோன் ரிசீவரில் அவர் பெருமூச்சு மட்டும் உரக்கக் கேட்டது.

பொருட்பால்
அரசியல் இயல்
அதிகாரம் 44
குற்றங்கடிதல்  
குறள் 440:
காதல் காதல் அறியாமை உய்க்கிற்பின்
ஏதில ஏதிலார் நூல்.  

பொருள்:
தன் விருப்பம் பிறர்க்குத் தெரியாதபடி அதை நிறைவேற்றிக் கொள்ள வல்லவனாக ஒருவன்  இருந்தால், அவனை வஞ்சிக்கப் பகைவர்கள் செய்யும் சூழ்ச்சிகள் பலிக்காமல் போகும்.

Read 'Rajasekar's Strategy' the English version of this story by the same author.

அறத்துப்பால்                                                                     காமத்துப்பால்

Friday, January 15, 2021

439. மூத்த அதிகாரி

"எதுக்குப்பா என் கேபின்ல இன்னொரு மேஜை போடறே?" என்றார் சர்மா.

"ஏ.ஓ-தான் சார் போடச் சொன்னாரு. புதுசா ஒரு அதிகாரி வேலையில சேர்ந்திருக்காரு. அவருக்குத்தான்னு நினைக்கிறேன்" என்றான் பியூன் சபாபதி.

"அதுக்கு என் கேபின்தான் கிடைச்சுதா? நான் ஒரு சீனியர் ஆஃபீசர்ங்கற மரியாதை கூடத் தெரியலியே உங்க ஏ.ஓ-வுக்கு?" என்றார் சர்மா, கோபத்துடன்.

"சார்! ஏ.ஓ சொன்னதை நான் செய்யறேன். எனக்கென்ன தெரியும்? ஆனா, எல்லா கேபின்லேயும் ரெண்டு பேர் உக்காந்திருக்காங்களே!" என்றான் சபாபதி.

"இருந்தா? நான் எவ்வளவு சீனியர்? உங்க ஏ.ஓ-வை விட சீனியர் நான். அவன் தனி கேபின்லதானே உக்காந்திருக்கான்?"

"சார்! அவர் அட்மினிஸ்ட்ரேடிவ் ஆஃபீசர்!" என்றான் சபாபதி.

"இப்பவே அவனை இன்டர்காம்ல கூப்பிட்டுக் கிழி கிழின்னு கிழிக்கறேன் பார்!" என்ற சர்மா, உடனே இன்டர்காமில் சில எண்களை அழுத்தி ஏ.ஓ-விடம் ஆங்கிலத்தில் கோபமாகப் பேசினார்.  

சபாபதிக்கு அவர் ஆங்கிலத்தில் பேசியது புரியவில்லை. பேசி முடித்ததும் சர்மா ஃபோனை அவனிடம் கொடுத்தார். 

"நீ மேஜையை வெளியில எடுத்துட்டு வந்து அங்கேயே வராந்தாவில ஒரு ஓரமா வச்சுடு. எங்கே போடறதுன்னு அப்புறம் சொல்றேன்" என்றார் ஏ.ஓ, பலவீனமான குரலில்.

சபாபதி தன்னுடன் வந்த ஆளுடன் மேஜையைத் தூக்கிக் கொண்டு வெளியில் சென்றபோது, "பாத்த இல்ல, என் பவரை? நான் போட்ட சத்தத்தில ஏ ஓ எப்படி பயந்துட்டான் பாரு!" என்றார் சர்மா, முகத்தில் வெற்றிப் பெருமிதத்துடன்.

அடுத்த நாள் காலையில் சர்மா அலுவலகத்துக்கு வந்தபோது, அவர் மேஜை மீது  ஒரு அலுவலக உத்தரவு இருந்தது. அன்றிலிருந்து அவர் கோவிந்த் என்ற மூத்த அதிகாரியின் கட்டுப்பாட்டில் பணி செய்ய வேண்டும் என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

அந்த அலுவலகத்தில் இது போன்ற மாறுதல்கள் அவ்வப்போது நடப்பதுண்டு. அவை அந்த அலுவலகத்தின் தலைமை அதிகாரியின் ஒப்புதலோடு செய்யப்படுபவை.

இன்டர்காமில் ஏ.ஓ-வை அழைத்த சர்மா, "எதுக்கு ஐயா என்னை இந்த கோவிந்த் கீழ போட்டிருக்கீங்க? யார் அவரு? அந்தப் பெயரையே நான் கேள்விப்பட்டதில்லையே! வேற எங்கேயிருந்தாவது மாற்றலாகி வந்திருக்காரா?" என்றார்.

"இந்த மாறுதல் எல்லாம் டைரக்டரோட அப்ருவல்படிதான் நடக்குதுன்னு உங்களுக்குத் தெரியுமே சர்மா!" என்றார் ஏ.ஓ.

"நீதானே இந்த மாறுதலையெல்லாம் செய்யற? நீ கொடுக்கற லிஸ்டை டைரக்டர் அப்படியே அப்ருவ் பண்றாரு. இது எல்லாருக்கும் தெரிஞ்சதுதானே! அது சரி கோவிந்த் யாருன்னு கேட்டேனே?"

"அவர் நம்ம ஆஃபீஸ்ல புதுசா சேர்ந்திருக்கற இளைஞர். யூ.பி.எஸ்.சி-யில தேர்வாகி நேரடியா உயர் பதவிக்கு வந்திருக்காரு. நேத்திக்குத்தான் ஜாயின் பண்ணினாரு. நம்ம ஆஃபீஸ்ல கேபின்கள் குறைவா இருக்குன்னு உங்களுக்குத் தெரியுமே! அவருக்கு உடனே கேபின் கொடுக்க முடியல. அதனாலதான், சீனியர் ஆஃபீசரான உங்க ரூம்ல அவருக்கு சீட் கொடுக்கலாம்னு பாத்தேன். நீங்க பெரிசா கத்தினதால, வேற ரூம்ல அவருக்கு மேஜை போட்டுட்டேன். நீங்க எங்கிட்ட ஃபோன்ல கத்தறப்ப அவர் எனக்கு முன்னாலதான் உக்காந்திருந்தாரு!" என்றார் ஏ.ஓ சிரித்துக் கொண்டே.

பொருட்பால்
அரசியல் இயல்
அதிகாரம் 44 
குற்றங்கடிதல்  
குறள் 439
வியவற்க எஞ்ஞான்றும் தன்னை நயவற்க
நன்றி பயவா வினை.

பொருள்:
எக்காலத்திலும் தன்னை மிக உயர்வாக எண்ணி வியந்து மதிக்கக் கூடாது, நன்மை தராத செயலைச் செய்ய விரும்பவும் கூடாது.

Read 'The Senior Officer' the English version of this story by the same author.


அறத்துப்பால்                                                                                      காமத்துப்பால்

Saturday, January 2, 2021

438. கம்பளிப் பின்னல் வேலை!

"நன்கொடை கேட்பவர்களுக்கும், விற்பனையாளர்களுக்கும் அனுமதி இல்லை."

ஒரு குடியிருப்பின் வெளிப்புறச் சுவரில் வைக்கப்பட்டிருந்த அறிவிப்புப் பலகையைக் காரில் சென்று கொண்டிருக்கும்போது பார்த்த செல்வநாயகம், டிரைவரிடம் சொல்லிக் காரை நிறுத்தச் சொல்லி விட்டு, காரில் தன் அருகில் அமர்ந்திருந்த தன் நிறுவனத்தின் நிர்வாகியிடம் அதைக் காட்டி, "நாளைக்கே நம்ம ஆஃபீசுக்கு வெளியில இப்படி ஒரு போர்டு வச்சுடுங்க. நன்கொடை, உதவின்னு கேட்டு வரவங்க தொல்லை தாங்கல. நம்ம ஆஃபீஸ் இருக்கற காம்பவுண்டுக்குள்ள நிறைய ஆஃபீஸ் இருக்கறதால கண்டவங்க உள்ள வந்துடறாங்க!" என்றார்.

யாருக்கும் எந்தப் பொருள் உதவியும் செய்யக் கூடாது என்ற கொள்கையை(!) உறுதியாகக் கடைப்பிடிப்பவர் செல்வநாயகம். தன் உறவினர்கள், நண்பர்கள், மனைவியின் உறவினர்கள் ஆகிய யாரும் தன்னிடம் எந்த உதவியும் கேட்பதை அவர் ஊக்குவிப்பதில்லை.

"அவங்க அவங்க அவங்களோட தேவைகளுக்கு சம்பாதிச்சு அதுக்குள்ள வாழ்ந்துக்கணும். மத்தவங்க கிட்ட உதவி கேக்கறதுங்கறது என்ன வழக்கம்?" என்பார், தன் மனைவியிடம்.

"போதுமான வருமானம் இல்லாதவங்க என்ன செய்வாங்க? கஷ்டப்படறவங்களுக்கு உதவி செய்யறதுதானே மனிதாபிமானம்?" என்று அவர் மனைவி விசாலாட்சி பலமுறை அவரிடம் வாதாடி இருக்கிறாள். ஆனால் செல்வநாயகம் தன் கருத்தை மாற்றிக் கொள்வதாக இல்லை.

"உங்க மனைவிங்கற முறையில உங்க பணத்தைச் செலவழிக்க எனக்கு உரிமை இல்லையா?" என்று ஒருமுறை விசாலாட்சி அவரிடம் கேட்டாள்.

"செலவழிக்க வேண்டாம்னு சொல்லல. ஆனா தானம் கொடுக்கறத்துக்கு அனுமதிக்க மாட்டேன்!" என்றார் செல்வநாயகம்.

அன்று செல்வநாயகம் மட்டும் வீட்டில் தனியாக இருந்தார். விசாலாட்சி எங்கோ வெளியே போயிருந்தாள்.

விசாலாட்சியைத் தேடிக் கொண்டு ஒரு சிறுவன் வந்தான்.

"அம்மா இல்லீங்களா ஐயா?" என்றான், அவரைப் பார்த்து. 

"யாருப்பா நீ?" என்றார் செல்வநாயகம், அவன் ஏழ்மைத் தோற்றத்தை கவனித்தவாறு.

"இல்ல... பள்ளிக்கூடப் புத்தகம் வாங்கப் பணம் கொடுக்கறதா அம்மா சொல்லி இருந்தாங்க!" என்றான் அவன், தயக்கத்துடன்.

"எவ்வளவு?"

"இருநூறு ரூபாய்."

அப்போது, வெளியே போயிருந்த விசாலாட்சி வந்து விட்டாள். தன் கைப்பையிலிருந்து இருநூறு ரூபாயை எடுத்து அவனிடம் கொடுத்து அனுப்பி விட்டு உள்ளே வந்தாள்.

சிறுவன் சென்ற பிறகு, "இது மாதிரி தான தர்மமெல்லாம் பண்ணக் கூடாதுன்னு சொல்லி இருக்கேன் இல்ல?" என்றார் செல்வநாயகம், கோபத்துடன்.

அவர் முகத்தை நிமிர்ந்து பார்த்த விசாலாட்சி, "உங்க பணத்திலேந்து கொடுக்கக் கூடாதுன்னு சொல்லி இருக்கீங்க. இது நான் சம்பாதிச்ச பணம்!" என்றாள்.

"நீ சம்பாதிச்சதா? எப்படி?"

"ஒரு கம்பெனிக்கு ஸ்வெட்டர் பின்னிக் கொடுக்கறேன். நூல் அவங்களே கொடுத்துடுவாங்க. ஊசி நூலை வச்சுக்கிட்டுக் கையாலயே பின்றதுதான் வேலை. ஒரு ஸ்வெட்டருக்கு இவ்வளவுன்னு கூலி மட்டும் கொடுப்பாங்க. நீங்க வீட்டில இல்லாத நேரத்தில முடிஞ்ச அளவுக்குப் பின்னுவேன். அதிகமா சம்பாதிக்க முடியாது. மாசத்துக்கு ஆயிரம் ரெண்டாயிரம் வரும். அதிலேந்து பக்கத்தில இருக்கற ஏழைப் பையங்க சில பேருக்குச் சிறிய அளவில உதவி செஞ்சுக்கிட்டு வரேன்."

"நான் வியாபாரம் பண்ணி லட்சக்கணக்கில சம்பாதிக்கறேன். ஆயிரம் ரெண்டாயிரத்துக்கு நீ கூலிக்கு வேலை செய்யணும்னு உனக்கென்ன தலையெழுத்தா?" என்றார் செல்வநாயகம், அதிர்ச்சியுடனும் கோபத்துடனும்.

"ஒத்தருக்கு ஒரு பைசாக் கொடுக்காம சுயநலமா வாழறது எனக்குப் பிடிக்கல. அதனால என்னால முடிஞ்ச இந்தச் சின்ன உதவிகளை செஞ்சுக்கிட்டு வரேன். தயவு செஞ்சு இதையும் செய்யக் கூடாதுன்னு என்னைத் தடுத்துடாதீங்க!" என்றாள் விசாலாட்சி, செல்வநாயகத்தைப் பார்த்துக் கைகூப்பியபடி.

பொருட்பால்
அரசியல் இயல்
அதிகாரம் 44
குற்றங்கடிதல்  
குறள் 438:
பற்றுள்ளம் என்னும் இவறன்மை எற்றுள்ளும்
எண்ணப் படுவதொன் றன்று.    

பொருள்:
பொருள் சேர்ப்பதில் பற்றுக் கொண்டு, எவருக்கும் எதுவும் ஈயாமல் வாழ்வது எல்லாக் குற்றங்களையும் விடத் தனிப் பெருங் குற்றமாகக் கருதப்படும்.

Read 'Knitting Jobs' the English version of this story by the same author.
அறத்துப்பால்                                                                                            காமத்துப்பால்

1080. 'தன்மானத் தலைவரி'ன் திடீர் முடிவு!

தன் அரசியல் வாழ்க்கையின் துவக்கத்தில் இரண்டு மூன்று கட்சிகளில் இருந்து விட்டு, அங்கு தனக்கு உரிய மதிப்புக் கிடைக்கவில்லை என்பதால், 'மக்க...