"என்ன ஆச்சு? உடம்பு சரியில்லையா?" என்றாள் அவன் மனைவி திலகா.
"ஒண்ணுமில்லை" என்றான் தினகரன்.
ஆனால், அவனிடம் ஒரு சோர்வு இருந்ததை திலகா கவனித்தாள்.
இரவு உணவு முடிந்ததும், "என்ன ஆச்சு? எங்கிட்ட சொல்லலாம் இல்ல?" என்றாள் திலகா.
"எங்க கம்பெனியை ஒரு பெரிய குரூப் வாங்கி இருக்கு. அவங்க நிறைய மாற்றங்களைச் செய்வாங்க. இப்ப வேலை செய்யற பல பேரை வேலையை விட்டு அனுப்பிட்டு, வேற ஆளுங்களைப் போடுவாங்கன்னு ஆஃபீஸ்ல எல்லாரும் பேசிக்கறாங்க. இதுக்கு முன்னால சில கம்பெனிகளை வாங்கினப்ப, அவங்க இப்படி செஞ்சிருக்காங்க. அதனால, நாங்க எல்லாருமே எங்க வேலை போயிடுமோங்கற பயத்தில இருக்கோம்" என்றான் தினகரன்.
"அப்படி நடந்தா பாத்துக்கலாம். அதுக்கு, இப்பவே ஏன் கவலைப்படறீங்க? போய் நல்லாத் தூங்குங்க. காலையில எழுந்ததும் மனசு தெளிஞ்சுடும்" என்றாள் திலகா.
நள்ளிரவில் திடீரென்று ஏதோ அலறல் சத்தம் கேட்டுத் திலகா திடுக்கிட்டு எழுந்தாள். தினகரன் இரண்டு கைகளாலும் தலையை அழுத்திப் பிடித்தபடி அமர்ந்திருந்தான்.
"என்ன ஆச்சு? நீங்களா கத்தினீங்க? கனவு ஏதாவது கண்டீங்களா?" என்றாள் திலகா.
"கனவு இல்லை திலகா, நினைவு. நமக்குக் கல்யாணம் ஆன சில மாசங்கள்ள, எனக்கு வேலை போச்சே, அது நினைவுக்கு வந்தது" என்றான் தினகரன், பதட்டத்துடன்.
"அதுதான், அப்புறம் வேற நல்ல வேலை கிடைச்சுடுச்சே! அதை இப்ப ஏன் நினைக்கிறீங்க?" என்றாள் திலகா, ஆதரவுடன் அவன் கைகளைப் பற்றியபடி.
"அப்ப நீ கர்ப்பமா இருந்த. கர்ப்பிணிப் பெண்ணுக்கு ஒழுங்கா சாப்பாடு போட முடியுமோன்னு பயந்து, உன்னை உன் அம்மா வீட்டுக்கு அனுப்பிட்டேன். குழந்தை பொறந்து ஆறு மாசம் கழிச்சு, எனக்கு வேற வேலை கிடைச்சப்பறம்தான், உன்னை அழைச்சுக்கிட்டு வந்தேன். அந்த ஒரு வருஷத்தில நான் பட்ட கஷ்டங்களை உங்கிட்ட சொல்லல. அதுவும் குழந்தை பிறந்து சந்தோஷமா இருக்க வேண்டிய நேரத்தில, கஷ்ட காலத்தைப் பத்திப் பேச வேண்டாம்னு நினைச்சேன். அப்ப நான் பட்ட கஷ்டங்கள் கொஞ்ச நஞ்சம் இல்ல. எவ்வளவோ நாள் சாப்பிடாம இருந்திருக்கேன். டீ குடிக்கக் கூட காசு இல்லாம இருந்திருக்கேன். இப்ப எனக்கு வேலை போச்சுன்னா, மறுபடி அந்த வறுமையான நிலை வந்துடுமோன்னு நினைச்சப்பதான், என்னை அறியாமயே கத்திட்டேன். அப்ப, வறுமையை நான் தனியா அனுபவிச்சேன். இப்ப, நீயும், நம்ம பொண்ணும் சேர்ந்து இல்ல கஷ்டப்படணும்?" என்றான் தினகரன், உணர்ச்சிப் பெருக்குடன்.
"கவலைப்படாதீங்க. அப்படியெல்லாம் நடக்காது" என்றாள் திலகா, கணவனின் தோளில் ஆறுதலாகத் தன் கையை வைத்து.
பொருட்பால்
குடியியல்
அதிகாரம் 105
நல்குரவு (வறுமை)
குறள் 1048:
இன்றும் வருவது கொல்லோ நெருநலும்
கொன்றது போலும் நிரப்பு..