Saturday, February 10, 2024

1041. தங்கையின் வருகை

"என்னங்க, அரிசி இன்னும் ரெண்டு நாளைக்குத்தான் இருக்கு" என்றாள் தனம்.

பரமசிவம் மௌனமாகத் தலையாட்டினான். 

"கம்பெனியை மூடி ஆறு மாசம் ஆச்சு. அதுக்கு அஞ்சாறு மாசம் முன்னாலேந்தே உங்களுக்கு சம்பளம் வரலை. இத்தனை நாள் சமாளிச்சதே பெரிய விஷயம். பிள்ளைங்களை பிரைவேட் ஸ்கூல்லேந்து எடுத்து, கவர்ன்மென்ட் ஸ்கூல்ல போட்டுட்டோம். காலையில பட்டினியாதான் ஸ்கூலுக்குப் போறாங்க. ஸ்கூல்ல அவங்களுக்கு மதிய உணவு கிடைக்குது. இருந்தாலும், ராத்திரி அவங்களுக்கு ஏதாவது கொடுக்க வேண்டாமா? நாம வேணும்னா பட்டினி கிடக்கலாம். குழந்தைங்க பசி தாங்குவாங்களா?"

"என்ன செய்யறது? கடன் வாங்கி இத்தனை நாள் ஓட்டியாச்சு. இனிமே, கடன் வாங்கறதுக்கும் வழியில்ல. வேற வேலையும் கிடைக்க மாட்டேங்குது. கூலி வேலை செய்யறவங்களா இருந்தாலாவது, ஏதாவது வேலை கிடைக்கும். என்னை மாதிரி ஆஃபீஸ் வேலை பாத்தவங்களுக்கு அதுக்கும் வழியில்ல."

"ஒரு வருஷம் முன்னால வரைக்கும் எவ்வளவு நல்லா இருந்தோம்! கொஞ்சம் கொஞ்சமா நிலைமை மாறி, இப்ப இவ்வளவு மோசமாயிடுச்சே!" என்றாள் தனம்.

"வறுமையோட கொடுமை இப்படித்தான் இருக்கும்!" என்றான் பரமசிவம்.

"இவ்வளவு கொடுமையாவா? வறுமையை விடக் கொடிய விஷயம் உலகத்தில எதுவுமே இல்லை போலருக்கே!"

"அண்ணே!"

வாசலிலிருந்து குரல் கேட்டதும், இருவரும் சென்று பார்த்தனர்.

பரமசிவத்தின் தங்கை மல்லிகா ஒரு கையில் ஒரு பெட்டியுடனும், தோளில் குழந்தையுடனும் நின்று கொண்டிருந்தாள்.

"வா, மல்லிகா! என்ன திடீர்னு?" என்றான் பரமசிவம்,

பெட்டியைக் கீழே வைத்து விட்டுக் குழந்தையுடன் சோஃபாவில் வந்து அமர்ந்த மல்லிகா, கேவிக் கேவி அழ ஆரம்பித்தாள்.

"என்னம்மா ஆச்சு? ஏன் அழற?" என்றபடியே, மல்லிகாவின் தோளில் கைவைத்து, ஆதரவுடன் கேட்டாள் தனம்.

"என்னத்தைச் சொல்றது அண்ணி? அவங்க அப்பா அம்மா பேச்சைக் கேட்டுகிட்டு, அவர் என்னைக் கைக்குழந்தையோட வீட்டை விட்டு விரட்டிட்டாரு. குழந்தைக்கு அஞ்சு பவுன்ல சங்கிலி போட்டு எடுத்துக்கிட்டுத்தான் வரணுமாம்!" என்றாள் மல்லிகா, அழுகைக்கிடையே.

"சரி, கவலைப்படாதே, பார்க்கலாம்!" என்றபடியே, மனைவியின் முகத்தைப் பார்த்தான் பரமசிவம்.

"ஆமாம்மா. உன் அண்ணன் பாத்துப்பாரு. கவலைப்படாதே! மூஞ்சியைக் கழுவிக்கிட்டு வா, சாப்பிடலாம். குழந்தைக்கு என்ன பாலா, கஞ்சியா?" என்றாள் தனம்.

குழந்தையை தனம் வாங்கிக் கொள்ள, மல்லிகா முகம் கழுவிக் கொள்ளக் குளியலறைக்குச் சென்றாள்.

"வறுமையை விடக் கொடியது என்னன்னு கேட்டியே! வறுமையை விடக் கொடியது கூடுதல் வறுமைதான்! கடவுளே! என்ன செய்யப் போறேனோ!" என்றான் பரமசிவம், பொங்கி வந்த கண்ணீரை மறைக்கும் விதமாக முகத்தைத் திருப்பிக் கொண்டு.

பொருட்பால் 
குடியியல்
அதிகாரம் 105
நல்குரவு (வறுமை)

குறள் 1041:
இன்மையின் இன்னாதது யாதெனின் இன்மையின்
இன்மையே இன்னா தது.

பொருள்: 
வறுமையைப் போல் துன்பமானது எது என்று கேட்டால், வறுமையைப் போல் துன்பமானது வறுமை ஒன்றே ஆகும்.
அறத்துப்பால்                                                           காமத்துப்பால்

No comments:

Post a Comment

1080. 'தன்மானத் தலைவரி'ன் திடீர் முடிவு!

தன் அரசியல் வாழ்க்கையின் துவக்கத்தில் இரண்டு மூன்று கட்சிகளில் இருந்து விட்டு, அங்கு தனக்கு உரிய மதிப்புக் கிடைக்கவில்லை என்பதால், 'மக்க...