"நிலம் இல்லாட்டா என்ன? கூலி வேலக்குப் போகலாம் இல்ல?" என்றான் அவன் நண்பன் சண்முகம்.
"நான் வேற ஒரு ஐடியா வச்சிருக்கேன்."
"என்ன ஐடியா?"
"டவுனுக்குப் போய் வேலை தேடிக்கலாம்னு பாக்கறேன். மாசம் பொறந்தா சம்பளம் கிடைக்கும். இது மாதிரி வயல்ல கிடந்து அல்லாட வேண்டியதில்ல."
"ஏம்ப்பா, வயல்ல வேலை செய்யறவங்கள்ளாம் முட்டாள்களா? பட்டணத்துக்குப் போய் சொகுசா வேலை செஞ்சு சம்பாதிக்கறது அவ்வளவு சுலபம்னா, எல்லாரும் பட்டணத்துக்குப் போயிட மாட்டாங்களா? படிச்சிருந்தா, ஒருவேளை பட்டணத்தில வேலை கிடைக்கலாம். படிச்சவங்கள்ள கூட எத்தனையோ பேர் வேலை இல்லாம இருக்காங்க. நான் ஒரு யோசனை சொல்லட்டுமா?" என்றான் சண்முகம்.
"சொல்லு!" என்றான் பூமிநாதன்.
"நம்ம கதிர்வேலுகிட்ட அஞ்சு ஏக்கர் நிலம் தரிசாக் கிடக்கு. அதை நான் உனக்குக் குத்தகைக்கு வாங்கித் தரேன். ரெண்டு வருஷம் கஷ்டப்பட்டு, அதைப் பண்படுத்தணும். பண்படுத்திட்டா, விளைச்சல் ரொம்ப நல்லா இருக்கும். அது மாதிரி தரிசாக் கிடந்த சில நிலங்களை, நம்ம ஊர்ல சில பேர் பண்படுத்தி நல்லா விளைய வச்சிருக்காங்க. ரெண்டு வருஷம் பாடுபட்டா, அப்புறம் நல்ல வருமானம் வரும். அந்த வருமானத்தை வச்சு, அஞ்சாறு வருஷத்தில, நீயே சொந்த நிலம் கூட வாங்கலாம்."
"ரெண்டு வருஷம் நான் கஷ்டப்பட்டு வேலை செஞ்சு, பணம் செலவழிச்சு எல்லாம் பண்ணினப்புறம், அது விளையும்னு என்ன நிச்சயம்? அந்த ரெண்டு வருஷத்தில நான் வேலைக்குப் போய் சம்பாதிச்சா, கொஞ்சம் கொஞ்சமாப் பணம் சேர்த்து, சொந்தமா நிலம் வாங்கிடலாமே!" என்றான் பூமிநாதன்.
ஒரு நிமிடம் மௌனமாக இருந்த சண்முகம், 'சரி. நான் இன்னொரு யோசனை சொல்றேன். குத்தகையை என் பேரில எடுத்துக்கறேன். நீ பைசா செலவு செய்ய வேண்டாம். நீ வேலை மட்டும் செய். அதுக்குக் கூட, நீ என் நிலத்தில வேலை செய்யறதா நினைச்சு நான் உனக்குக் கூலி கொடுத்துடறேன். நிலம் விளைச்சல் காண ஆரம்பிச்சப்புறம், கதிர்வேலுகிட்ட சொல்லிக் குத்தகையை உன் பேருக்கு மாத்திக் கொடுத்துடறேன். நான் செலவழிச்ச பணத்தை நீ கொஞ்சம் கொஞ்சமாத் திருப்பிக் கொடுத்தாப் போதும். என்ன சொல்ற?" என்றான்.
நண்பனை வியப்புடன் பார்த்த பூமிநாதன், "நீ ஏன் எனக்கு இந்த அளவுக்கு உதவி செய்யறேன்னு எனக்குத் தெரியல. ஆனா, எனக்கு இது ஒத்து வராது. நான் டவுன்ல போய் வேலை தேடறதுன்னு முடிவு செஞ்சுட்டேன்" என்றான்.
மூன்று வருடங்களுக்குப் பிறகு ஊருக்கு வந்த பூமிநாதனை வரவேற்ற அவன் நண்பன் சண்முகம், "என்னடா, போனவன் திரும்பி வரவே இல்ல? அவ்வளவு வைராக்கியமா? நீ நினைச்சதை சாதிச்சுட்ட போலருக்கே!" என்றான்.
"இல்லடா! நான் நினைச்சபடி எதுவும் நடக்கல. நீ சொன்னது சரிதான். படிச்சவங்களுக்குத்தான் பட்டணம் லாயக்கு!" என்றான் பூமிநாதன், சோர்வுடன்.
"ஏன், என்ன ஆச்சு? மூணு வருஷமா நீ திரும்பி வராததால, நல்ல வேலையில செட்டில் ஆயிட்டேன்னு இல்ல நினைச்சேன்?" என்றான் சண்முகம், சற்று அதிர்ச்சியுடன்.
"சரியான வேலை எதுவும் கிடைக்கல. கிடைச்சதெல்லாம் கூலி வேலைதான். அது கூட நிரந்தரமா இல்லை. மாசத்தில பத்து நாள் வேலை கிடைச்சாலே அதிகம். அப்புறம், ஒரு தொழிற்சாலையில வேலை கிடைச்சது. கூலி வேலைதான். அங்கேயும் பர்மனன்ட் பண்ணக் கூடாதுங்கறதுக்காக, மாசத்தில இருபது நாள்தான் வேலை கொடுப்பாங்க. நீ சொன்னதை அப்பப்ப நினைச்சுப் பார்ப்பேன். இங்கேயே நிலத்தில கூலி வேலை செஞ்சிருந்தா கூட ஒரு அளவுக்கு முன்னுக்கு வந்திருப்பேன். அது சரி. நீ முன்னே சொன்னியே! அந்தத் தரிசு நிலத்தைக் குத்தகை எடுக்கலாம்னு, அது இப்ப முடியுமா?" என்றான் பூமிநாதன்.
"இவ்வளவு லேட்டா வந்து கேக்கறியே! நான் உங்கிட்ட பேசினதை தற்செயலாக் கேட்டுக்கிட்டிருந்த தனபால், எங்கிட்ட வந்து, 'அண்ணே! பூமிநாதனுக்கு செய்யறதாச் சொன்ன உதவியை, எனக்கு செய்வீங்களா? எனக்கும் வேலை எதுவும் இல்ல. ஆனா, நான் உழைக்கத் தயாரா இருக்கேன்' னு சொன்னான். உன் மாதிரி அவன் எனக்கு நெருங்கின நண்பன் இல்லேன்னாலும், அவன் ஆர்வமாக் கேட்டதால, அவனுக்கு உதவி செய்யலாமனு நினைச்சேன். நீயும்தான் ஊரை விட்டுப் போயிட்டியே! அதனால, அந்த நிலத்தைக் குத்தகைக்கு எடுத்து, அவனை வச்சு அதைப் பண்படுத்தினேன். இப்ப அந்த நிலம் நல்லா விளையுது. உங்கிட்ட சொன்ன அதே ஏற்பாடுதான். இப்ப குத்தகையை அவன் பேருக்கு மாத்திட்டேன். எனக்குக் கொடுக்க வேண்டிய பணத்தை, அவன் கொஞ்சம் கொஞ்சமாக் கொடுத்துக்கிட்டிருக்கான்" என்றான் சண்முகம், பூமிநாதனைப் பரிதாபத்துடன் பார்த்தபடி.
பூமிநாதன் ஏமாற்றத்துடன் தலையைக் குனிந்து கொண்டான். தரையில் முளைத்திருந்த புற்கள் காற்றில் இலேசாக அசைந்தது பூமி அவனைப் பார்த்து ஏளனமாய்ச் சிரிப்பது போல் இருந்தது.
பொருட்பால்
குடியியல்
அதிகாரம் 104
உழவு
குறள் 1040:
இலமென்று அசைஇ இருப்பாரைக் காணின்
நிலமென்னும் நல்லாள் நகும்.
No comments:
Post a Comment