Sunday, February 18, 2024

1046. சித்தப்பாவிடம் கேட்ட யோசனை

"இந்த கேஸ்ல சட்டம் உங்களுக்கு சாதகமா இல்ல"  என்றார் சேகரின் வக்கீல் ரமணி.

"என்ன சார் இப்படிச் சொல்லிட்டீங்க?" என்றான் சேகர் ஏமாற்றத்துடன்.

"சட்டம் அப்படி இருக்கு. நான் என்ன செய்யட்டும்? பேசாம உங்க பார்ட்னரோட காம்ப்ரமைஸ்க்குப் போயிடுங்க. அதுதான் நல்லது."

சேகர் ஏமாற்றத்துடன் வீட்டுக்குத் திரும்பினான்.

"வக்கீல் என்ன சொன்னாரு?" என்றாள் அவன் மனைவி சுந்தரி.

"சட்டம் நமக்கு சாதகமா இல்லையாம். அவனோட காம்ப்ரமைஸுக்குப் போகச் சொல்றாரு!"

"என்னங்க இது? பார்ட்னரா இருந்து உங்களை ஏமாத்தி இருக்காரு. அவர் மேல நடவடிக்கை எடுக்கறதுக்கு வக்கீல்கிட்ட போனா, வக்கீல் உங்களை காம்ப்ரமைஸ் பண்ணிக்க சொல்றாரு!"

"பார்ட்னர்ஷிப் ஒப்பந்தப்படி அவனுக்கு இருக்கற உரிமைகபடிதான் அவன் நடந்துக்கிட்டிருக்கானாம். அதனால அவனைக் கேள்வி கேக்க முடியாதாம்!"

"என்ன செய்யப் போறீங்க?"

"என்ன செய்யறது? வக்கீல் சொல்றபடி காம்ப்ரமைஸ் பண்ணிக்கிட்டு அவனுக்குக் கொடுக்க வேண்டிய பணத்தைக் கொடுத்து செட்டில் பண்ணிட்டு அவனை வெட்டி விட வேண்டியதுதான்" என்றான் சேகர் விரக்தியுடன்.

"ஏங்க, என்னோட சித்தப்பாகிட்ட கேட்டுப் பாக்கலாமா?" என்றாள் சுந்தரி தயக்கத்துடன்.

"என்ன சுந்தரி இது? ரமணி எவ்வளவு பெரிய வக்கீல்! அவரே சொல்லிட்டாரு. உங்க சித்தப்பா பேருக்குத்தான் வக்கீல். அவருக்கு பிராக்டீஸும் கிடையாது, வருமானமும் கிடையாது. நூறு ரூபா இருநூறு வாங்கிக்கிட்டு லீகல் ஒபினியன் கொடுத்துக்கிட்டு வாழ்க்கையை ஓட்டிக்கிட்டிருக்காரு. அவர்கிட்ட போய் அபிப்பிராயம் கேட்கச் சொல்றியே!" என்றான் சேகர் சற்று எரிச்சலுடன்.

"அவர் விஷயம் தெரிஞ்சவர்னு எங்க அப்பா சொல்லுவாரு. அதோட அவரு நீதிமன்றத் தீர்ப்புகளையெல்லாம் கூர்ந்து படிக்கிறவராம். நீங்க பார்ட்னர்ஷிப் டீடைக் கொடுத்தீங்கன்னா அவர்கிட்ட காட்டி அவர் அபிப்பிராயத்தைக் கேட்டுட்டு வரேன்" என்றாள் சுந்தரி.

"உன் திருப்திக்கு வேணும்னா செஞ்சுக்க. அவரோட ஒபினியனுக்கு ஃபீஸ் வேணும்னா கொடுத்துடறேன். ஆனா அவர் சொல்றதை வச்சு நான் எதுவும் செய்ய மாட்டேன்" என்றான் சேகர்.

"உங்க பார்ட்னர் மேல நிச்சயமா நடவடிக்கை எடுக்க முடியும்னு எங்க சித்தப்பா அடிச்சு சொல்றாரு. இது சம்பந்தமா ஒரு சுப்ரீம் கோர்ட் உத்தரவு இருக்காம், அதை  எழுதிக் கொடுத்திருக்காரு பாருங்க!" என்றாள் சுந்தரி சேகரிடம் ஒரு பேப்பரைக் காட்டி.

"அதான் அப்பவே சொன்னேனே, உன் திருப்திக்கு வேணும்னா அவர்கிட்ட அபிப்பிராயம் கேளு, நான் அதை எடுத்துக்க மாட்டேன்னு!" என்றான் சேகர் எரிச்சலுடன்.

"இந்த பேப்பரை நம்ம வக்கீல்கிட்ட காட்டி அவர் என்ன சொல்றாருன்னு கேட்டுப் பாருங்களேன்!"

"வேற வக்கீல்கிட்ட கேட்டேன் அவர் வேற மாதிரி சொல்றாருன்னு நம்ம வக்கீல்கிட்ட சொல்ல முடியுமா?" என்ற சேகர் சட்டென்று ஏதோ தோன்றியவனாக, "சரி. எனக்குத் தெரிஞ்ச வேற ஒரு வக்கீல் இருக்காரு. அவர்கிட்ட வேணும்னா கேட்டுப் பாக்கறேன்" என்றான்.

ன்று மாலை வீட்டுக்கு வந்த சேகர், "உன் சித்தப்பா சொன்னது சரிதான். உன் சித்தப்பா கொடுத்த பேப்பரை நான்  சொன்ன வக்கீல்கிட்ட காட்டினேன். அவரு அந்தத் தீர்ப்பை எடுத்துப் பாத்துட்டு உன் சித்தப்பா சொன்னது சரிதான்னு சொல்லிட்டாரு. அந்தத் தீர்ப்பைப் பத்தி ரொம்ப பேருக்குத் தெரிஞ்சிருக்காது, உன் சித்தப்பா எப்படி அதை சரியா எடுத்துக் காட்டினாருன்னு அவர் ஆச்சரியப்பட்டாரு!" என்றான் சுந்தரியிடம்.

"அப்ப அந்த வக்கீல்கிட்ட சொல்லியே கேசை நடத்தச் சொல்லுங்களேன்!" என்றாள் சுந்தரி.

"எதுக்கு? அதான் உன் சித்தப்பா இருக்காரே! இப்படி ஒரு வழி இருக்குன்னு கண்டுபிடிச்சு சொன்னவரே அவர்தானே? கேஸ் நடத்தற உரிமையும், பெருமையும் அவருக்குத்தான் போகணும்!" என்றான் சேகர் மனைவியை மகிழ்ச்சியுடன் பார்த்தபடி.

பொருட்பால் 
குடியியல்
அதிகாரம் 105
நல்குரவு (வறுமை)

குறள் 1046:
நற்பொருள் நன்குணர்ந்து சொல்லினும் நல்கூர்ந்தார்
சொற்பொருள் சோர்வு படும்.

பொருள்: 
அரிய பல் நூல்களின் கருத்துக்களையும் ஆய்ந்துணர்ந்து சொன்னாலும், அதனைச் சொல்பவர் வறியவராக இருப்பின் அக்கருத்து எடுபடாமல் போகும்.
அறத்துப்பால்                                                           காமத்துப்பால்

No comments:

Post a Comment

1060. ஏன் உதவவில்லை?

"யார்கிட்ட உதவி கேக்கறதுன்னே தெரியல!" என்றான் பரந்தாமன். "யார்கிட்டயாவது கேட்டுத்தானே ஆகணும்? இன்னும் ரெண்டு நாளைக்குள்ள பணம்...