Tuesday, February 13, 2024

1043. யாரிடமும் சொல்லாதே!

"முன்னல்லாம் முக்கியமான செலவுக்குக் கூடப் பணம் கொடுக்க மாட்டீங்க. பணம் இல்லேம்பீங்க. இப்ப எதுக்காவது பணம் கேட்டா ரெண்டு மூணு நாள்ள ஏற்பாடு பண்ணிக் கொடுத்துடறீங்களே, எப்படி?" என்றாள் வசந்தி.

"வெளியில சொல்லாதே! சின்னதா ஒரு பிசினஸ் பண்ணிக்கிட்டிருக்கேன். அதில கொஞ்சம் பணம் வருது" என்றான் விஜயன்.

"நல்ல விஷயம்தானே! அதை ஏன் வெளியில சொல்லக் கூடாதுங்கறீங்க?"

"நான் ஒரு வேலையில இருக்கேன் இல்ல? வேலையில இருந்துக்கிட்டே தொழில் செஞ்சா அது எந்த முதலாளிக்கும் பிடிக்காது. அதனாலதான் சொல்றேன். உன் மனசுக்குள்ளேயே வச்சுக்க. நான் பிசினஸ் பண்றதா யார்கிட்டேயும் சொல்லாதே!

"எப்படியோ, இவ்வளவு நாளா கஷ்ட ஜீவனம் நடத்தினதுக்கு இப்ப செலவுக்கு தாராளமாப் பணம் கிடைக்கறது எனக்கு சந்தோஷமா இருக்கு" என்றாள் வசந்தி.

"என்னப்பா இது?" என்றார் விஜயனின் முதலாளி கேசவன்.

"என்ன சார்?"  என்றான் விஜயன்.

"பத்தாம் தேதி அன்னிக்கு காருக்கு 1000 ரூபாக்கு பெட்ரோல் போட்டிருக்கு. மறுபடி பதினைஞ்சாம் தேதி 1000 ரூபாய்க்கு பெட்ரோல் போட்டிருக்கு."

"டிரைவரைத்தான் சார் கேக்கணும்!"

"டிரைவரைக் கேட்டுட்டுத்தான் உன்னைக் கேக்கறேன். பத்தாம் தேதிக்கு அப்புறம் காரை அதிகமா எடுக்கலையே! மறுபடி பெட்ரோல் போட வேண்டிய அவசியம் இல்லையே! சரி, பில்லை எடுத்துக்கிட்டு வா, பாக்கலாம்."

ற்று நேரம் கழித்து வியர்த்து விறுவிறுக்க உள்ளே வந்த விஜயன், "சார்! பில் கிடைக்கலே. எங்கேயோ மிஸ் ஆயிடுச்சு போல இருக்கு" என்றான்.

"அது எப்படி மிஸ் ஆகும்? கணக்கை எல்லாம் விவரமாப் பாக்கணும் போல இருக்கு. நீ இப்ப வீட்டுக்குப் போ. நீ மறுபடி வேலைக்கு எப்போ வரணும்னு சொல்லி அனுப்பறேன்" என்றார் கேசவன். 

விஜயன் சடாரென்று முதலாளியின் காலில் விழுந்தான். "சார்! என்னை மன்னிச்சுடுங்க சார்! குடும்ப வறுமையினால இப்படிப் பண்ணிட்டேன். இனிமே இப்படிப் பண்ண மாட்டேன். காஷியர் வேலை இல்லாம வேற வேலை ஏதாவது கொடுங்க சார்!" என்றான் கெஞ்சும் குரலில்.

"எழுந்திருப்பா! உன் அப்பா ரொம்ப நல்லவர். ஊர்ல அவருக்கு நல்ல மதிப்பு உண்டு. அவர் பையன்கறதுக்காத்தான் உனக்கு வேலை கொடுத்தேன். நீயும் நல்லாதான் வேலை செஞ்சுக்கிட்டிருந்த. இப்ப உன் குடும்பப் பேரையும் கெடுத்து உன் பேரையும் கெடுத்துக்கிட்டிருக்க. இது மாதிரி பொய்க் கணக்கு எழுதிப் பணத்தைக் கையாடினப்புறம் உன்னை எப்படி வேலைக்கு வச்சுக்க முடியும்? உன்னை போலீஸ்ல பிடிச்சுக் கொடுக்காம வேலையை விட்டு அனுப்பறதோட நிறுத்திக்கறேனேன்னு சந்தோஷப்படு" என்றார் கேசவன் கடுமையான குரலில்.

"என்னது வேலை போயிடுச்சா? நீங்க பிசினஸ் பண்றது உங்க முதலாளிக்குத் தெரிஞ்சு போச்சா?" என்றாள் வசந்தி அதிர்ச்சியுடன்.

பொருட்பால் 
குடியியல்
அதிகாரம் 105
நல்குரவு (வறுமை)

குறள் 1043:
தொல்வரவும் தோலும் கெடுக்கும் தொகையாக
நல்குரவு என்னும் நசை.

பொருள்: 
வறுமையின் காரணமாக ஒருவனுக்கு ஏற்படும் ஆசை அவனுடைய பரம்பரைப் பெருமையையும், புகழையும் ஒரு சேரக் கெடுத்துவிடும்.
அறத்துப்பால்                                                           காமத்துப்பால்

No comments:

Post a Comment

1060. ஏன் உதவவில்லை?

"யார்கிட்ட உதவி கேக்கறதுன்னே தெரியல!" என்றான் பரந்தாமன். "யார்கிட்டயாவது கேட்டுத்தானே ஆகணும்? இன்னும் ரெண்டு நாளைக்குள்ள பணம்...