Thursday, February 22, 2024

1047. அம்மா உதவுவாளா?

 பரமேஸ்வரன் சோர்வுடன் வீட்டுக்குள் நுழைந்தான்.

அவன் மனைவி கௌரி அவனைக் கேள்விக்குறியுடன் பார்த்தாள். பரமேஸ்வரன் தலையைப் பக்கவாட்டில் அசைத்தான்.

"என்ன செய்யப் போறீங்க? நாளைக்குள்ள வாடகையைக் கொடுக்கலேன்னா வீட்டைக் காலி பண்ணணும்னு வீட்டுக்காரர் சொல்லி இருக்காரே!"

"என்ன செய்யறது? நிறைய இடத்தில கேட்டுப் பாத்துட்டேன். எங்கேயும் பணம் கிடைக்கல."

"ஏங்க , நாம எப்படி இருந்தோம்? சொந்த வீடு, நிறைய வருமானம்னு வசதியோட இருந்த நமக்கு இந்த நிலைமை வரணுமா?"

பரமேஸ்வரன் மௌனமாக இருந்தான்.

"நான் ஒண்ணு சொல்றேன். கேக்கறீங்களா?" என்றாள் கௌரி.

"நீ என்ன சொல்லப் போறேன்னு தெரியும் எங்கம்மா கிட்ட கேக்கறதில எந்தப் பரியோசனமும் இல்ல. எங்கிட்ட கோவிச்சுக்கிட்டுத் தன்னோட தங்கை வீட்டில போய் உக்காந்துக்கிட்டிருக்காங்க. அவங்களா எனக்கு உதவப் போறாங்க?" என்றான் பரமேஸ்வரன்.

"என்னதான் அவங்களுக்கு உங்க மேல கோபம் இருந்தாலும் இந்த மாதிரி சமயத்தில உதவாம இருக்க மாட்டாங்க. அவங்களோட நகைகளைக் கேட்டுப் பாருங்க. அடகு வச்சுப் பணம் வாங்கி வாடகை பாக்கியைக் கட்டிட்டு அப்புறம் உங்களுக்குப் பணம் வரப்ப நகைகளை மீட்டு அவங்ககிட்ட திருப்பிக் கொடுத்துடலாம்!"

சற்று யோசித்த பரமேஸ்வரன் 'சரி. கேட்டுப் பாக்கறேன்" என்று சொல்லி விட்டுக் கிளம்பினான்.

"என்னோட நகையெல்லாம் உனக்குத்தாண்டா! ஆனா இப்ப என்னால கொடுக்க முடியாது!" என்றாள் மரகதம்.

"ஏம்மா? ஒரு அவசரத்துக்குத்தானே கேக்கறேன்? மகன் கஷ்டப்படறப்ப அம்மா உதவக் கூடாதா?" என்றான் பரமேஸ்வரன்.

"எனக்கு உபதேசம் பண்ணாதேடா!" என்றாள் மரகதம் கோபமாக. "உனக்கு ஒரு கஷ்டம் வந்தா நீ கேக்காமயே நான் உதவி இருப்பேன். ஆனா இப்ப உனக்கு வந்திருக்கிற வறுமை இயல்பா வந்தது இல்ல. நீயா வரவழைச்சுக்கிட்டது. உன் அப்பா உனக்கு நிறைய சொத்து சேர்த்து வச்சாரு. அத்தனையையும் சூதாடித் தோத்துட்டு இப்ப நீ தெருவில நிக்கற நிலைமைக்கு வந்திருக்க. இப்ப நான் உனக்கு உதவி செஞ்சா நீ பண்ணின அக்கிரமத்துக்குத் துணை போன மாதிரிதான் ஆகும். இப்ப நீ கஷ்டப்படத்தான் வேணும். உன் வீட்டில இருக்கக் கூடாதுன்னுதானே என் தங்கை வீட்டில வந்து இருக்கேன்? நீ செஞ்ச தப்பை உணர்ந்து திருந்திட்டேன்னு எனக்கு எப்ப தோணுதோ அப்ப உதவி செய்யறேன்.  இப்ப நீ போகலாம்"

பரமேஸ்வரன் சோர்வுடன் அங்கிருந்து கிளம்பினான்.

பொருட்பால் 
குடியியல்
அதிகாரம் 105
நல்குரவு (வறுமை)

குறள் 1047:
அறஞ்சாரா நல்குரவு ஈன்றதா யானும்
பிறன்போல நோக்கப் படும்.

பொருள்: 
நியாயமான காரணங்கள் இல்லாத இல்லாமை ஒருவனுக்கு இருந்தால், பெற்ற தாய் கூட அவனை அந்நியனாகவே பார்ப்பாள்.
அறத்துப்பால்                                                           காமத்துப்பால்

No comments:

Post a Comment

1060. ஏன் உதவவில்லை?

"யார்கிட்ட உதவி கேக்கறதுன்னே தெரியல!" என்றான் பரந்தாமன். "யார்கிட்டயாவது கேட்டுத்தானே ஆகணும்? இன்னும் ரெண்டு நாளைக்குள்ள பணம்...