Sunday, February 11, 2024

1042. அடுத்த ஜன்மம்

"முருகன் கோவில்ல இன்னிக்கு யாரோ கதை சொல்றாங்களாம். போயிட்டு வரேன்!" என்று மனைவியிடம் சொல்லி  விட்டுக் கிளம்பினார் ராமமூர்த்தி.

"போயிட்டு வாங்க" என்ற அவர் மனைவி சரஸ்வதி, 'பாவம்! வீட்டில உக்காந்துக்கிட்டு கவலைப்பட்டுக்கிட்டு இருக்கறதை விட எங்கேயாவது போயிட்டு வந்தா மனசுக்குக் கொஞ்சம் ஆறுதலாவாவது இருக்கும்' என்று நினைத்துக் கொண்டாள்.

சரஸ்வதி ராமமூர்த்தியைத் திருமணம் செய்து கொண்டபோது ராமமூர்த்தி ஒரு உற்சாகமான இளைஞராக இருந்தார். வசதிக் குறைவானவர்தான். ஆனால் வாழ்க்கையுடன் போராடி வெற்றி பெற வேண்டும என்ற ஒரு வேகம் அவரிடம் இருந்தது. 

வறுமையான குடும்பத்திலிருந்து வந்த சரஸ்வதி கணவருக்கு உறுதுணையாக இருந்தாள்.

ஆனால் எவ்வளவு போராடியும் அவர்களால் வறுமையை வெற்றி கொள்ள முடியவில்லை. அதிகப் படிப்போ, குடும்பப் பின்னணியோ இல்லாத ராமமூர்த்திக்கு நிலையான வேலை இல்லை. பல வேலைகள் மாறிய பிறகு, இறுதியில் ஒரு சுமாரான வேலையில்தான் ராமமூர்த்தியால் நிலைகொள்ள முடிந்தது.

இரண்டு குழந்தைகளையும் படிக்க வைத்துக் கரை சேர்ப்பது பெரும்பாடாகி விட்டது. எப்படியோ பையனும் பெண்ணும் படிப்பை முடித்து, வேலைக்குப் போய், திருமணமும் செய்து கொண்டு ஒருவிதமாக வாழ்க்கையில்  நிலைபெற்று விட்டனர். ஆயினும் பெற்றோர்களுக்கு உதவும் அளவுக்கு வசதி படைத்தவர்களாக அவர்கள் இல்லை.

அதனால் ஓய்வு பெறும் வயதைத் தாண்டியும் தனக்கும் தன் மனைவிக்குமான தேவைகளுக்காக வேலைக்குச் செல்ல வேண்டிய அவசியம் ராமமூர்த்திக்கு ஏற்பட்டது.

"நான் என்ன பாவம் பண்ணினேனோ தெரியல. பொறந்தத்திலேந்து சாகற வரைக்கும் வறுமையை எதிர்த்துப் போராட வேண்டி இருக்கு. எவ்வளவு கஷ்டப்பட்டேன்! எவ்வளவு முயற்சி பண்ணினேன்! எதுக்குமே பலன் இல்லாம போயிடுச்சே! என்னை விடக் குறைஞ்ச படிப்பு திறமை உள்ளவங்கள்ளாம் கூட நல்லா இருக்காங்க" என்று மனைவியிடம் அடிக்கடி சொல்லிப் புலம்புவா ராமமூர்த்தி.

"விடுங்க. நீங்க எவ்வளவோ முயற்சி செஞ்சீங்க. பலன் கிடைக்கலேன்னா அதுக்கு நீங்க என்ன பண்ணுவீங்க? எப்படியோ பையனையும் பெண்ணையும் கரை சேத்தாச்சு. நமக்கு உதவ முடியாட்டாலும் அவங்க வாழ்க்கையை அவங்க பாத்துப்பாங்க. நமக்கு மீதி இருக்கற நாட்களை நம்மால ஓட்ட முடியாதா?" என்று கணவருக்கு ஆறுதல் கூறுவாள் சரஸ்வதி. ஆயினும் ராமமூர்த்தி சமாதானமடைய மாட்டார்.

தை கேட்கக் கோவிலுக்குச் சென்ற ராமமூர்த்தி இரவு 9 மணிக்கு வீட்டுக்குத் திரும்பியபோது சோர்வுடன் காணப்பட்டார்.

"என்ன ஆச்சு? உடம்பு சரியில்லையா?" என்றாள் சரஸ்வதி படபடப்புடன்.

"அதெல்லாம் ஒண்ணுமில்லை" என்ற ராமமூர்த்தி நாற்காலியில் உட்கார்ந்து ஒரு நிமிடம் கண்களை மூடிக் கொண்டார்.

பிறகு, "இந்த ஜன்மம்தான் நமக்கு சரியா அமையல. அடுத்த ஜன்மத்திலேயாவது நல்ல வாழ்க்கை அமையும்னு நினைச்சேன். அதுவும் நடக்காது போலருக்கு" என்றார் சரஸ்வதியிடம்.

"ஏன் அப்படிச் சொல்றீங்க? அதுவும் அடுத்த ஜன்மத்தைப் பத்தி இப்ப என்ன? என்றாள் சஸ்வதி.

" கோவில்ல கதை சொன்னவர் ஒரு விஷயம் சொன்னாரு. அதைக் கேட்டதிலேந்து மனசு சங்கடமா இருக்கு!"

"என்ன சொன்னாரு அப்படி?"

"இந்த ஜன்மத்தில தான தர்மம் எல்லாம் செஞ்சாதான் அடுத்த பிறவி நல்லதா அமையுமாம்.  அப்படி தான தர்மம் எல்லாம் செஞ்சு புண்ணியம் தேடிக்காட்டா அடுத்த ஜன்மம் மோசமாத்தான் இருக்குமாம். அதைக் கேட்டப்புறம் அடுத்த ஜன்மத்திலேயாவது நமக்கு நல்ல வாழ்க்கை அமையுங்கற நம்பிக்கையும் எனக்குப் போயிடுச்சு" என்றார் ராமமூர்த்தி விரக்தியுடன்.

"என்னங்க இது? நாம என்ன தான தர்மம் எல்லாம் செய்யக் கூடாதுன்னா இருந்தோம்? நமக்கு அதுக்கான வசதி இல்ல. அதுக்காக நமக்கு தண்டனை கிடைக்குமா என்ன? முதல்ல அடுத்த ஜன்மம்னு ஒண்ணு இருக்கான்னே தெரியல. மீதி இருக்கற வாழ்நாளை நம்மால முடிஞ்ச அளவுக்கு நல்லா வாழ்ந்துட்டுப் போவோம். அவ்வளவுதான்" என்றாள் சரஸ்வதி.

பொருட்பால் 
குடியியல்
அதிகாரம் 105
நல்குரவு (வறுமை)

குறள் 1042:
இன்மை எனவொரு பாவி மறுமையும்
இம்மையும் இன்றி வரும்.

பொருள்: 
வறுமை என்று சொல்லப்படும் பாவி ஒருவனை நெருங்கினால், அவனுக்கு மறுமையின்பமும், இன்மையின்பமும் இல்லாமற் போகும் நிலைமை வரும்.
அறத்துப்பால்                                                           காமத்துப்பால்

No comments:

Post a Comment

1060. ஏன் உதவவில்லை?

"யார்கிட்ட உதவி கேக்கறதுன்னே தெரியல!" என்றான் பரந்தாமன். "யார்கிட்டயாவது கேட்டுத்தானே ஆகணும்? இன்னும் ரெண்டு நாளைக்குள்ள பணம்...