"பாத்தேன். பணம் வரணும், வந்ததும் கொடுத்துடறேங்கறாரு. எப்ப போனாலும் இதையேதான் சொல்றாரு" என்றான் செல்வமணி.
"அவருக்கு எப்ப பணம் வந்து, எப்ப கொடுக்கறது? ஏதோ நல்ல குடும்பத்தில பொறந்தவராச்சேன்னு கடன் கொடுத்தேன். இப்படி இழுத்தடிக்கறாரு! நானே நேர்ல போய்க் கேட்டுட்டு வரேன்" என்று கிளம்பினான் நாகநாதன்.
"வாங்க, நாகநாதன்!" என்றான் சிவராமன்.
சிவராமனின் தோற்றத்தைப் பார்த்த நாகநாதன் திடுக்கிட்டான்.
'என்ன இப்படி இளைச்சுப் போய், வயசானவர் மாதிரி ஆயிட்டாரு? வறுமையா? வாங்கின கடனைத் திருப்பிக் கொடுக்க முடியலையே என்ற கவலையா?'
"ரொம்ப இளைச்சுட்டீங்களே! நான் உங்களைப் பாத்து ரொம்ப நாளாச்சு!" என்றான் நாகநாதன். சிவராமனைப் பார்த்துக் கடுமையாகப் பேச வேண்டும் என்ற நோக்கத்தில் வந்திருந்தாலும், சிவராமனின் தோற்றத்தைப் பார்த்ததும், நாகநாதனுக்கு அவனை அறியாமலேயே ஒரு கனிவு வந்து விட்டது.
"வாங்கின கடனுக்கு ஒழுங்கா வட்டி கட்டிக்கிட்டிருந்தா, நீங்க என்னைப் பாக்க வேண்டிய அவசியம் ஏன் வரப் போகுது?" என்று சிரித்துக் கொண்டே கூறிய சிவராமன், "செல்வமணி கூட ரெண்டு மூணு தடவை வந்துட்டுப் போனாரு. இப்ப வியாபாரத்தில கொஞ்சம் சுணக்கம். சீக்கிரமே உங்க பணத்தைக் கொடுத்துடறேன்!" என்றான்.
'கொஞ்சம் சுணக்கமா? வியாபாரமே மொத்தமாப் படுத்துடுச்சு, ஏகப்பட்ட நஷ்டம், சாப்பாட்டுக்கே கஷ்டம்கறதெல்லாம் ஊருக்கே தெரியுமே!' என்று மனதுக்குள் நினைத்துக் கொண்ட நாகநாதன், அப்போதைய நிலையில் சிவராமனுக்கு அழுத்தம் கொடுக்க மனமில்லாமல், "சரி, நான் அப்புறம் வரேன்" என்று சொல்லி விட்டுக் கிளம்பினான்.
அதற்குப் பிறகு, சில முறை நாகநாதனின் ஆள் செல்வமணி வந்து சிவராமனைப் பார்த்து விட்டுப் போனான். சிவராமன் 'சீக்கிரமே கொடுத்துடறேன்' என்ற ஒரே பதிலைக் கொடுத்துக் கொண்டு வந்தான்.
அதனால், மீண்டும் ஒருமுறை, நாகநாதனே சிவராமனைப் பார்க்க நேரே வந்தான்.
இந்த முறை, நாகநாதன் சற்று கடுமையாகப் பேசினான்.
"இங்க பாருங்க, சிவராமன்! உங்க அப்பா ஒரு பெரிய மனுஷர். இந்த ஊர்ல அவருக்கு நிறைய மரியாதை உண்டு. அவரோட மகன்கறதாலதான் உங்களை நம்பிக் கடன் கொடுத்தேன். இவ்வளவு நேரம் மரியாதையாவும் பேசிக்கிடிருக்கேன். இல்லேன்னா..."
நாகநாதன் பேசி முடிப்பதற்குள், சிவராமன் ஆவேசம் வந்தவன் போல், உரத்த குரலில் கைகளை ஆட்டிக் கொண்டு பேச ஆரம்பித்தான்.
"இல்லேன்னா என்னடா பண்ணுவ? ஏண்டா, வட்டிப் பணத்தில பொழைப்பு நடத்தற பய நீ. உனக்கே இவ்வளவு திமிர் இருந்தா, கௌரவமா வியாபாரம் பண்ற எனக்கு எவ்வளவு திமிர் இருக்கும்? பிச்சைக்காரப் பயலே!..."
ஒரு கணம் நாகநாதன் அதிர்ந்து நிற்க, உள்ளிருந்து ஓடி வந்த சிவராமனின் மனைவி, "என்னங்க இது?" என்று சிவராமனை அடக்கி விட்டு, நாகநாதனைப் பார்த்துக் கைகூப்பி, "மன்னிச்சுடுங்க. அவர் என்ன பேசறதுன்னே தெரியாம பேசறாரு. கொஞ்சம் பொறுத்துக்கங்க. உங்க பணத்துக்கு ஏதாவது ஏற்பாடு பண்றோம்" என்றாள். கெஞ்சும் குரலில்.
ஆத்திரத்தில் தன்னை மறந்து அத்து மீறிப் பேசி விட்டுத் தன் தவறை உணர்ந்து தலைகுனிந்து நின்ற சிவராமனைப் பார்த்தபோது, நாகநாதனுக்கு முதலில் அவன் மீது ஏற்பட்ட கோபம் மறைந்து, பரிதாபம்தான் ஏற்பட்டது.
'வறுமை ஒரு மனிதனின் கண்ணியத்தைக் கூட இந்த அளவுக்கா சிதைத்து விடும்?'
மௌனமாக அங்கிருந்து கிளம்பினான் நாகநாதன்.
பொருட்பால்
குடியியல்
அதிகாரம் 105
நல்குரவு (வறுமை)
குறள் 1044:
இற்பிறந்தார் கண்ணேயும் இன்மை இளிவந்த
சொற்பிறக்கும் சோர்வு தரும்.
No comments:
Post a Comment