"வீட்டுக்காரர் வந்திருக்காரு" என்றாள் அவர் மனைவி பங்கஜம்.
'நாம ரெண்டு பேரும் இங்கே இருக்கச்சே, ஹால்ல யார்கிட்ட பேசிக்கிட்டிருக்காரு?' என்று மனைவியிடம் முணுமுணுத்தபடியே, முன்னறைக்கு வந்தார் ராமகிருஷ்ணன். வீட்டுக்காரரைப் பார்த்து வணக்கம் தெரிவித்தார்.
அவர் வணக்கத்தைப் பொருட்படுத்தாத வீட்டுக்காரர் சண்முகம், "ஏன் சார், கவர்ன்மென்ட் கம்பெனியில வேலை செய்யறீங்கன்னுதானே உங்களை நம்பி வாடகைக்கு வச்சேன்? இப்படி மூணு மாசமா வாடகை கொடுக்காம இருக்கீங்களே, இது நியாயமா இருக்கா?" என்றார், கோபத்துடன்.
"கவர்ன்மென்ட் கம்பெனிதான். ஆனா, எங்க கம்பெனியில எங்களுக்கு ஆறு மாசமா சம்பளம் கொடுக்கல. பேப்பர்ல பாத்திருப்பீங்களே! சம்பளம் வந்ததும் கொடுத்துடறேன்" என்றார் ராமகிருஷ்ணன், மெல்லிய குரலில்.
"உங்க கம்பெனியில சம்பளம் கொடுக்கலேன்னா, அது உங்க பிரச்னை. நான் ஏன் வாடகை கிடைக்காம கஷ்டப்படணும்? மூணு மாச வாடகை அட்வான்ஸ் கொடுத்திருக்கீங்க. அது கூட, மூணு மாச வாடகையில கழிஞ்சு போச்சு. தயவு செஞ்சு, ஒரு வாரத்தில வாடகை பாக்கியைக் கொடுங்க, இல்லேன்னா, வீட்டைக் காலி பண்ணுங்க. அடுத்த தடவை வரச்சே, நான் தனியா வர மாட்டேன். உங்களைக் காலி பண்ண வைக்க ஆளுங்களோடதான் வருவேன்!" என்று சொல்லி விட்டுக் கிளம்பினார் வீட்டுக்காரர்.
"பல் விளக்கிட்டு வாங்க. காப்பி கொடுக்கறேன்" என்றாள் பங்கஜம்.
"அதுதான் காப்பிப்பொடி நேத்தே தீர்ந்து போச்சே!"
"பக்கத்து வீட்டில கொஞ்சம் காப்பிப்பொடி கடன் வாங்கினேன். ரெண்டு நாளைக்கு வரும்."
பல் விளக்கி விட்டு வந்து, மனைவி கொடுத்த காப்பியைக் குடித்தபோது, காப்பியின் சுவை நாவுக்கு இதமாக இருந்ததை உணர்ந்தார் ராமகிருஷ்ணன்.
இவ்வளவு கஷ்டத்திலும், இது போன்று சிறிய சுகங்கள் கிடைக்கின்றனவே என்று கடவுளுக்கு நன்றி செலுத்தினார் அவர்.
அவர் காப்பி குடித்து முடிக்கும் வரை, அவர் அருகிலேயே நின்று கொண்டிருந்த பங்கஜம், அவர் காப்பி குடித்து முடித்ததும், சற்றுத் தயங்கி விட்டு, "என்னங்க, உங்ககிட்ட ஒண்ணு சொல்லணும்" என்றாள்.
"என்ன?"
"நேத்திக்கு, ஸ்கூல் ஃபீஸ் கட்ட முரளிகிட்ட பத்தாயிரம் ரூபாய் கொடுத்திருந்தீங்க இல்ல?"
"ஆமாம். ஃபீஸ் கட்டிட்டான் இல்ல?"
"பணத்தை ஒரு கவர்ல போட்டு, பேன்ட் பாக்கெட்ல வச்சுக்கிட்டு, பஸ்ல போயிருக்கான். பள்ளிக்கூடத்துக்குப் போய்ப் பாக்கறச்சே, பேன்ட் பாக்கெட்ல பணத்தைக் காணோம். பஸ்ல யாரோ பிக்பாக்கெட் பண்ணிட்டாங்க போலருக்கு!"
"என்னது?" என்று அதிர்ச்சியுடன் நாற்காலியிலிருந்து எழுந்தார் ராமகிருஷ்ணன். "என் ஃபிரண்ட்கிட்ட கடன் வாங்கிக் கொடுத்தேன். அதைத் தொலைச்சுட்டான்னு சாதாரணமா சொல்ற! அதுவும் நேத்திக்கு நடந்ததை இன்னிக்கு சொல்ற! இப்ப எங்கே அவன்?"
"நீங்க திட்டப் போறீங்களேன்னு பயந்து உள்ளே உக்காந்துக்கிட்டிருக்கான். நேத்திக்கு நீங்க வீட்டுக்கு வரப்ப, ரொம்ப சோர்வோட வந்தீங்க. அதனாலதான் நான் காலையில சொல்லிக்கலாம்னுட்டு..."
தலையைப் பிடித்துக் கொண்டு நாற்காலியில் அமர்ந்தார் ராமகிருஷ்ணன்.
"நான் என்ன செய்யறது? குடும்பத்தை நடத்தறதுக்காகக் கடன் வாங்கறதா, வீட்டு வாடகை கொடுக்கறதுக்காகக் கடன் வாங்கறதா, இல்லை ஸ்கூல் ஃபீஸ் கட்டறதுக்காக மறுபடி கடன் வாங்கறதா? கையில காசு இல்லாதப்ப, எல்லாக் கஷ்டமும் சேர்ந்தா வரணும்?" என்றார் விரக்தியுடன்.
அவர் தலையை மென்மையாகத் தொட்ட பங்கஜம், "கவலைப்படாதீங்க. எல்லாமே சீக்கிரம் சரியாயிடும்" என்றாள்.
பொருட்பால்
குடியியல்
அதிகாரம் 105
நல்குரவு (வறுமை)
குறள் 1045:
நல்குரவு என்னும் இடும்பையுள் பல்குரைத்
துன்பங்கள் சென்று படும்.
No comments:
Post a Comment