Tuesday, June 20, 2023

716. கட்டுரையைப் படித்த பின்...

"செமினாருக்கு பேப்பர் தயார் பண்ணிட்டீங்களா?" என்றார் கல்லூரி முதல்வர்.

"பண்ணிட்டேன் சார்!" என்றான் புருஷோத்தமன். அந்தக் கல்லூரியில் அவன் ஒரு பௌதிகப் பேராசிரியர்.

"யார்கிட்டேயாவது காட்டி எல்லாம் சரியா இருக்கான்னு பாத்துக்கிட்டீங்களா?"

"இல்லை சார்!" என்று தயக்கத்துடன் கூறிய புருஷோத்தமன், "அதுக்கு அவசியம் இல்லேன்னு நினைக்கிறேன்" என்றான்.

"ஓ, உங்க எச் ஓ டி லீவில இருக்காரு, இல்ல? சரி. எல்லாத்தையும் ஒரு தடவைக்கு ரெண்டு தடவையா சரி பார்த்துடுங்க. இது ஒரு இன்டர்நேஷனல் செமினார். நீங்க படிக்கப் போற பேப்பர் இன்டர்நேஷனல் ஃபிசிக்ஸ் ஜேர்னல்கள்ள பிரசுரமாகக் கூட வாய்ப்பு இருக்கு. ஆல் தி பெஸ்ட்!" என்றார் கல்லூரி முதல்வர்.

கல்லூரி முதல்வரின் அறையிலிருந்து வெளியே வந்தபோது, கணிதப் பேராசிரியர் அரவிந்தன் நடந்து செல்வதைப் பார்த்தான் புருஷோத்தமன். 

புருஷோத்தமனைப் பார்த்து அரவிந்தன் கையை உயர்த்தினான். ஆனால், புருஷோத்தமன் முகத்தைத் திருப்பிக் கொண்டான்.

அரவிந்தனுடன் புருஷோத்தமன் நெருக்கமாக இருந்தவன்தான். ஆனால், அரவிந்தன் மீது பாலியல் குற்றச்சாட்டு எழுந்த பிறகு எல்லாம் மாறி விட்டது.

பாதிக்கப்பட்ட பெண் ஆசிரியை புகார் அளிக்க விரும்பாமல் கல்லூரியை விட்டு விலகி விட்டதாலும், அரவிந்தன் கல்லூரி முதல்வரின் காலைப் பிடிக்காத குறையாகக் கெஞ்சிக் கேட்டுக் கொண்டதாலும், அரவிந்தனின் வேலை மட்டும் பிழைத்தது.

ஆனால், அதற்குப் பிறகு அரவிந்தனை யாரும் மதித்துப் பேசுவதில்லை. அரவிந்தன் ஒரு திறமையான ஆசிரியர் என்பதால், வகுப்பறைக்குள் மட்டும் மாணவர்கள் அவனை மதித்து நடந்து கொண்டனர். 

புருஷோத்தமன் தன் கட்டுரையைப் படித்து முடித்ததும், அவையில் பெரும் கைதட்டல் எழுந்தது. 

புருஷோத்தமன் பெருமையுடன் அவையைப் பார்த்தான். அவன் கல்லூரி முதல்வர் உட்படப் பல பேராசிரியர்களும், வேறு பல கல்லூரிகளிலிருந்து வந்திருந்த பேராசிரியர்கள், மாணவர்கள் ஆகியோரும் அங்கே வந்திருந்தனர்.

மேடையில் அமர்ந்திருந்த ஒரு ஜெர்மானியப் பேரசிரியர், "மிஸ்டர் புருஷோத்தமன்! உங்களுடைய தியரி சாத்தியமானது இல்லை என்று நினைக்கிறேன். உங்கள் பேப்பரைப் பார்க்கலாமா?" என்றார்.

புருஷோத்தமன் தன் கையிலிருந்த ஆராய்ச்சிக் கட்டுரையை அவரிடம் கொடுத்தான்.

அதன் பக்கங்களைப் புரட்டிப் பார்த்த அந்தப் பேராசிரியர் ஒரு இடத்துக்கு வந்ததும், நிமிர்ந்து புருஷோத்தமனைப் பார்த்தார்.

"6.243 x 10^5 என்ற மதிப்பை 6.243 x 10^6 என்று எடுத்துக் கொண்டு கணக்கிட்டிருக்கிறீர்கள். அதனால், உங்களுக்குக் கிடைத்த விடை தவறானது. உங்கள் முடிவும் தவறானது.  இந்த பேப்பர் ஒரு தவறான அடிப்படையில் அமைந்தது!" என்று சொல்லிக் கட்டுரையைப் புருஷோத்தமனிடம் திருப்பிக் கொடுத்தார் அவர்.

புருஷோத்தமன் அந்த அவையின் முன் கூனிக் குறுகி நின்றான்.

தன் கல்லூரி முதல்வரின் முகத்தைப் பார்த்தான். சில நிமிடங்கள் முன்பு பெருமையும், பூரிப்பும் நிறைந்ததாக இருந்த அந்த முகம், இப்போது அவமானத்தையும், கோபத்தையும் பிரதிபலித்தது.

பார்வையாளர்கள் வரிசையில் அரவிந்தன் அமர்ந்திருப்பதைப் புருஷோத்தமன் அப்போதுதான் கவனித்தான். இனி தன் நிலைமையும் அரவிந்தனின் நிலையைப் போல் ஆகி விடுமோ என்ற அச்சம் அவனுக்குள் எழுந்தது.

பொருட்பால்
அமைச்சியல்
அதிகாரம் 72
அவையறிதல்

குறள் 716:
ஆற்றின் நிலைதளர்ந் தற்றே வியன்புலம்
ஏற்றுணர்வார் முன்னர் இழுக்கு.

பொருள்:
அறிவுத்திறனால் பெருமை பெற்றோர் முன்னிலையில் ஆற்றிடும் உரையில் குற்றம் ஏற்படுமானால், அது ஒழுக்க நெறியிலிருந்து தளர்ந்து வீழ்ந்து விட்டதற்கு ஒப்பானதாகும்.

குறள் 715
அறத்துப்பால்                                                           காமத்துப்பால் 

Monday, June 19, 2023

715. யாருக்கு வாய்ப்பு?

"சர்வதேச ஆராய்ச்சி நிறுவனத்தில சேர்ந்து பணி செய்ய, நம்ம ஆராய்ச்சி நிறுவனத்திலேந்து ஒத்தருக்கு வாய்ப்புக் கிடைச்சிருக்கு. நம் இளம் விஞ்ஞானிகள்ள மூணு பேரை நாம அனுப்பலாம். அவங்க சர்வதேச விஞ்ஞானிகள் குழுவில மூணு மாசம் அண்டர்ஸ்டடியா இருக்கணும். திறமை மற்றும் செயல்பாடு அடிப்படையில அந்த மூணு பேர்ல ஒத்தரைத் தேர்ந்தெடுத்து, அவரை அஞ்சு வருஷம் கான்டிராக்ட்ல வேலைக்கு எடுத்துப்பாங்க. ஒத்தருக்குத்தான் வேலை கிடைக்கும்னாலும், மற்ற இரண்டு பேருக்கும் அண்டர்ஸ்டடியா இருக்கற அனுபவம் பயனுள்ளதா இருக்கும். நம்மகிட்ட பயிற்சி  விஞ்ஞானிகளா இருக்கறவங்கள்ள சிறந்த மூணு பேர்களைப் பரிந்துரை பண்ணி எனக்கு அனுப்புங்க. நான் அப்ரூவ் பண்ணிடறேன்" என்றார் அந்த ஆராய்ச்சி நிறுவனத்தின் இயக்குனர் சந்திரகாந்த்.

"சரி சார்!" என்றார் துணை இயக்குனர் தன்வந்திரி.

"நீங்க பரிந்துரைச்சிருக்கற மூணு பேருமே திறமையானவங்கதான். மூணு பேர்ல, யார் வேலைக்குத் தேர்ந்தெடுக்கப்படுவாங்கன்னு நீங்க நினைக்கிறீங்க?" என்றார் சந்திரகாந்த், தன்வந்திரி அனுப்பியிருந்த பெயர்ப்பட்டியலைப் பார்த்து விட்டு.

"அறிவழகனுக்குத்தான் அதிக வாய்ப்பு இருக்குன்னு நினைக்கிறேன்!"

"உங்க பட்டியல்ல அவர் பெயர் மூணாவதா இல்ல இருக்கு? முதல் பெயரா இருக்கற கோபிசந்தைச் சொல்லுவீங்கன்னு பாத்தேன்!" என்றார் சந்திரகாந்த், சற்று வியப்புடன்.

தன்வந்திரி பதில் சொல்லாமல் சிரித்தார்.

"எக்சலன்ட், தன்வந்திரி! நீங்க சொன்ன மாதிரியே, அறிவழகனைத்தான் தேர்ந்தெடுத்திருக்காங்க. எப்படி சரியா ஊகிச்சீங்க?" என்றார் சந்திரகாந்த், வியப்புடன்.

"பயிற்சி விஞ்ஞானிகளோண செயல்பாட்டை நான் நேரடியாப் பாக்கறதால, அவங்களைப் பற்றின சில நுணுக்கமான விவரங்கள் எனக்குத் தெரியும். 

"நாம அனுப்பின மூணு பேருமே திறமையானவங்கதான். ஆனா, கோபிசந்த், கிருஷ்ணபிரசாத் ரெண்டு பேரும் கொஞ்சம் ஓவர் எந்தூசியாஸ்டிக். எல்லா விஷயத்திலேயும் முந்திக்கிட்டுக் கருத்து சொல்லுவாங்க. தனக்குத் தெரியும்னு காட்டிக்கற ஆர்வம் அவங்க ரெண்டு பேர்கிட்டேயும் அதிகமா இருக்கும். 

"பலர் இருக்கற இடத்தில, இது மாதிரி முந்திக்கிட்டுப் பேசறது நல்ல பழக்கம் இல்லை. குறிப்பா, சீனியர்கள் அல்லது அறிஞர்கள் முன்னால இப்படிப் பேசினா, அவங்க அதை விரும்ப மாட்டாங்கன்னு நான் அவங்ககிட்ட பல தடவை சொல்லி இருக்கேன். ஆனா, அவங்க ரெண்டு பேருமே தங்களோட இந்தப் பழக்கத்தை மாத்திக்கல. 

"அறிவழகன் ரொம்ப அடக்கமானவர். தனக்குத் தெரியுங்கறதை வெளிக்காட்டறதில அவசரப்பட மாட்டார் தன்னோட முறை வரும்வரை காத்துக்கிட்டிருப்பார், அல்லது அவரைக் குறிப்பிட்டுக் கேட்டா மட்டும்தான் சொல்லுவார். இந்த இயல்பு அவருக்கு இருக்கறதால, அவர் தேர்ந்தெடுக்கப்படத்தான் வாய்ப்பு அதிகம்னு நினைச்சேன்!" 

"நீங்க கூட அறிவழகன் மாதிரிதான்னு நினைக்கிறேன்!" என்றார் சந்தரகாந்த், சிரித்தபடி.

"ஏன் சார் அப்படிச் சொல்றீங்க?" என்றார் தன்வந்திரி, வியப்புடன்.

"மூணு பேர்ல யாருக்கு வாய்ப்புன்னு நான் ஆரம்பத்தில கேட்டப்ப, அறிவழகன்னு பேரை மட்டும் சொன்னீங்களே தவிர, ஏன் அப்படி நினைச்சீங்கன்னு சொல்லல. இப்ப நான் கேட்டப்பறம்தானே சொல்றீங்க?"

பொருட்பால்
அமைச்சியல்
அதிகாரம் 72
அவையறிதல்

குறள் 715:
நன்றென்ற வற்றுள்ளும் நன்றே முதுவருள்
முந்து கிளவாச் செறிவு.

பொருள்:
அறிவாளிகள் கூடியிருக்கும் இடத்தில், முந்திக் கொண்டு பேசாமல் இருக்கும் அடக்கமானது, எல்லா நலன்களிலும் சிறந்த நலனாகும்.

குறள் 714
அறத்துப்பால்                                                           காமத்துப்பால் 

714. அறிவாளிகள் மத்தியில்!

என் நண்பன் ஜகதீசன் அதிகம் பேசாத இயல்புடையவன். என் போன்ற நெருங்கிய நண்பர்களிடம் மட்டும்தான் பேசுவான். அதுவும், பெரும்பாலும் சுருக்கமாகதான் பேசுவான்.

என் நண்பர்கள் குழாம் ஒரு ஜாலியான குழு. நாங்கள் பெரும்பாலும் சினிமா, ஊர்வம்பு இவை பற்றிப் பேசுவோம், அல்லது  மற்றவர்களைக் கேலி செய்து பேசுவோம். உருப்படியான எந்த விஷயம் பற்றியும் பேச மாட்டோம்! 

நாங்கள் பேசுவதைக் கேட்பவர்கள், வாழ்க்கையை மேலோட்டமாகப் பார்க்கும் அறிவில் குறைந்த மனிதர்களகத்தான் எங்களைப் பார்ப்பார்கள்.

ஜகதீசன் எங்களைப் போல் இல்லை என்றாலும், அவனும் எங்கள், உரையாடலில் கலந்து கொள்வான்.

ன்று, நான் உறுப்பினராக இருக்கும் கிளப்புக்கு ஜகதீசனை அழைத்துச் சென்றேன். அந்த கிளப் உறுப்பினர்களில் பல அறிவுஜீவிகள் உண்டு. அவர்களில் சிலர் என் நண்பர்கள்.

இந்தியப் பொருளாதராம், உலகப் பொருளாதாரம், உலக அரசியல், விஞ்ஞான, தொழில்நுட்ப முன்னேற்றங்கள் என்று பல விஷயங்களையும் பற்றி அவர்கள் விவாதிக்கும்போது, நான் அருகில் அமர்ந்து கேட்டுக் கொண்டிருப்பேன். அந்த விவாதங்களில் கலந்து கொண்டு பேசும் அளவுக்கு எனக்கு அறிவோ, புரிதலோ கிடையாது!

ஜகதீசனை என் நண்பர்களுக்கு அறிமுகப்படுத்தினேன். அவர்கள் மரியாதைக்கு அவனுடன் கைகுலுக்கி விட்டு, வழக்கம்போல் பல விஷயங்களையும் பற்றிப் பேச ஆரம்பித்தனர்.

ஒரு கட்டத்தில், ஜகதீசன் அந்த விவாதத்தில் நுழைந்து அதில் கலந்து கொண்டான். அவர்கள் கூறிய கருத்துக்களில் சிலவற்றை ஆதரித்தும், சிலவற்றை மறுத்தும் பேசினான். உண்மைகள், விவரங்கள் அடிப்படையில் தெளிவாகவும், தர்க்கரீதியாகவும், ஆணித்தரமாகவும் பேசினான்.

அவர்கள் ஜகதீசனை வியப்புடன் பார்த்தனர். தொடர்ந்து விவாதித்தனர்.

கிளப்பிலிருந்து நாங்கள் கிளம்பியபோது, அவர்களில் சிலர் என்னிடம் வந்து, "உங்க நண்பர் பெரிய அறிவாளியா இருப்பார் போலருக்கே. இனிமே அடிக்கடி அவரை கிளப்புக்கு அழைச்சுக்கிட்டு வாங்க!" என்று சொல்லி விட்டுப் போனார்கள்.

"டேய் ஜகதீசா! நாங்க மொக்கையா ஏதாவது பேசறப்ப, எங்களோட சேர்ந்து நீயும் மொக்கையான விஷயங்களைப் பேசற. இந்த அறிவுஜீவிகள் பேசறது என் மண்டையில ஏறரது இல்லை. நீ அவங்களோடயும், அவங்க அசந்து போற அளவுக்குப் பேசற. எப்படிடா இது?" என்றேன் நான் ஜகதீசனின் தோள்களை அணைத்தபடி.

ஜகதீசன் பதில் சொல்லாமல் சிரித்தான்.

பொருட்பால்
அமைச்சியல்
அதிகாரம் 72
அவையறிதல்

குறள் 714:
ஒளியார்முன் ஒள்ளிய ராதல் வெளியார்முன்
வான்சுதை வண்ணம் கொளல்.

பொருள்:
அறிவிற் சிறந்தவரின் முன், தானும் அறிவிற் சிறந்தவராக நடந்து கொள்ள வேண்டும், அறிவில் குறைந்தவர் முன், தாமும் வெண் சுண்ணம் போல் அறிவில்லாதவராய் இருக்க வேண்டும்.

குறள் 713
அறத்துப்பால்                                                           காமத்துப்பால் 

Sunday, June 18, 2023

713. 'தவறு என்னுடையதுதான்!'

"என்ன சார், உங்களைப் பேசறதுக்குக் கூப்பிட்டா, இப்படி செஞ்சுட்டீங்களே!" என்றார் நித்யசீலன்.

"என்ன செஞ்சுட்டேன்?" என்றார் புலவர் கணேசன்.

"நீங்க தொலைக்காட்சியில நிறைய நிகழ்ச்சிகள்ள நகைச்சுவையாப் பேசுவீங்க. அதனாலதான், உங்களை எங்க கிளப்ல பேசக் கூப்பிட்டேன். எங்க கிளப் உறுப்பினர்கள் பெரும்பாலும் தொழிலதிபர்கள், அல்லது பெரிய நிறுவனங்கள்ள உயர் பதிவிகள்ள இருக்கற அதிகாரிகள். அவங்க எப்பவும் மன அழுத்தத்தில இருக்கறவங்க. அவங்க கிளப்புக்கு வரது தங்களைக் கொஞ்சம் ரிலாக்ஸ் பண்ணிக்கத்தான். உங்க நகைச்சுவைப் பேச்சு அவங்களுக்கு இதமா இருக்கும்னுதான் உங்களைக் கூப்பிட்டேன். ஆனா, நீங்க உலகத்தில நடந்த புரட்சிகளைக் குறிப்பிட்டு, ஏழைகளோட கஷ்டங்களைப் புரிஞ்சுக்காம பணக்காரங்க உல்லாச வாழ்க்கை நடத்திக்கிட்டிருந்தா, ஏழைகளோட கோபம் அதிகமாகிப் புரட்சி வெடிக்கும், அப்ப, பணக்காரங்க எல்லாத்தையும் இழந்து நடுத்தெருவுக்கு வந்துடுவாங்க, அவங்க குடும்பங்களுக்குக் கூடப் பாதுகாப்பு இருக்காதுன்னு பேசறீங்க!"

"நகைச்சுவையாப் பேசறவங்க சீரியஸான விஷயங்களைப் பத்திப் பேசக் கூடாதா? நான் பேசின விஷயங்கள் உண்மைதானே?" என்றார் கணேசன்.

"உங்களோட நம்பிக்கைகள் உங்களைப் பொருத்தவரையில உண்மையா இருக்கலாம். ஒரு அரசியல் மேடையில இந்த மாதிரி பேசி இருந்தீங்கன்னா அதை எல்லாரும் ரசிச்சிருப்பாங்க. தொழிலதிபர்கள் மத்தியில இப்படிப் பேசறது அவங்களைக் குற்றம் சொல்ற மாதிரி இல்ல இருக்கு? நீங்க இந்தத் தலைப்பில பேச ஆரம்பிச்சதுமே, இந்தத் தலைப்பை விட்டுட்டு வேற எதையாவது பத்திப் பேசச் சொல்லி ஒரு துண்டுச் சீட்டில எழுதி உங்க கையில கொடுத்தேன். அப்படியும், நீங்க தலைப்பை மாத்தாம பேசிக்கிட்டிருந்தீங்க!"

"என் பேச்சைக் கேட்டு ஒரு சில பேராவது இதைப் பத்தி யோசிப்பாங்க, அது சமுதாயத்துக்கு நல்லதுன்னு நினைச்சுத்தான் அப்படிப் பேசினேன்" என்றார் கணேசன், விடாமல்.

'அப்படி நீங்க நினைச்சா, உங்களைப் போல முட்டாள் யாரும் இருக்க முடியாது' என்று மனதுக்குள் நினைத்துக் கொண்ட நித்யசீலன், "உங்களைக் கூப்பிட்டது என்னோட தப்புதான்!" என்று கூறித் தொலைபேசி இணைப்பைத் துண்டித்தார்.

'எங்கே என்ன பேச வேண்டும் என்ற புரிதல் இல்லாதவர்களைப் பேச்சுத் திறமை இல்லாதவர்கள் என்றுதான் கருத வேண்டும்' என்று நினைத்துக் கொண்டார் நித்யசீலன்.

பொருட்பால்
அரசியல் இயல்
அதிகாரம் 72
அவையறிதல்

குறள் 713:
அவையறியார் சொல்லல்மேற் கொள்பவர் சொல்லின்
வகையறியார் வல்லதூஉம் இல்.

பொருள்:
அவையின் தன்மை அறியாமல் சொற்களைப் பயன்படுத்துகிறவர்கள் சொற்களின் வகை அறியாதவர்கள், பேசும் திறமையும் இல்லாதவர்கள்.

அறத்துப்பால்                                                           காமத்துப்பால் 

Saturday, June 17, 2023

712. நிபுணரின் பேச்சு

அந்த மன்றத்தின் மாதாந்தரக் கூட்டத்துக்கு, புகழ் பெற்ற மனநல மருத்துவர் வெங்கடாசலம் அழைக்கப்பட்டிருந்தார்.

மனநலம் பற்றிய பல சுவையான செய்திகளை வெங்கடாசலம் சொல்லுவார் என்ற எதிர்பார்ப்பில், பல உறுப்பினர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

வெங்கடாசலம் பேசத் தொடங்கிய சில நிமிடங்களிலேயே, கூட்டத்துக்கு வந்திருந்தவர்களின் ஆர்வம் குறையத் தொடங்கியது. காரணம், வெங்கடாசலம் கல்லூரி மாணவர்களுக்குப் பாடம் எடுப்பது போல், மனநல மருத்துவம் பற்றி விளக்க ஆரம்பித்ததுதான்!

வெங்கடாசலம் பேசி முடித்ததும், அனைவரும் உற்சாகமின்றி ஒப்புக்காகக் கைதட்டினர்.

அடுத்து, மன்றச் செயலாளர் கிருபாகரன் மைக் முன் வந்தார்.

"நிகழ்ச்சி நிரலின்படி, நான் இப்போது நன்றி தெரிவிக்க வேண்டும். நிகழ்ச்சி முடிய இன்னும் அரைமணி நேரம் இருக்கிறது. கல்வியறிவும், அனுபவமும் நிரம்பப் பெற்ற வெங்டாசலம் போன்ற ஒரு நிபுணர் நம்மிடையே வந்திருக்கும்போது, அவரிடமிருந்து இன்னும் சில சுவையான, பயனுள்ள விவரங்களை நாம் கேட்டறிய வேண்டுமென்று விரும்புகிறேன். எனக்குத் தெரிந்த ஒரு மன நோயாளியின் நிலை பற்றிக் கூறி, அது பற்றி அவருடைய கருத்தைக் கேட்க விரும்புகிறேன்" என்று ஆரம்பித்த கிருபாகரன், ஒரு மன நோயாளியின் பிரச்னை பற்றி விவரித்தார். 

பிறகு, "வெங்கடாசலம் அவர்கள் இது பற்றித் தன் கருத்தைச் சுருக்கமாகக் கூற வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்!" என்றார், வெங்கடாசலதைப் பார்த்து.

வெங்கடாசலம் அந்தப் பிரச்னை பற்றித் தன் கருத்தைக் கூற ஆரம்பித்தார்.

இவ்வளவு நேரம் உற்சாகம் குன்றி இருந்த பார்வையளர்கள், இப்போது வெங்கடாசலத்தின் பேச்சை ஆர்வத்துடன் கேட்க ஆரம்பித்தனர்.

கிருபாகரன் குறிப்பிட்ட பிரச்னை பற்றி வெங்கடாசலம் பேசி முடித்ததும், "உங்களில் வேறு யாருக்காவது இது போன்ற பிரச்னைகள் பற்றித் தெரிந்திருந்தால், அவை பற்றிக் கேட்கலாம். மீதமிருக்கும் நேரத்தில், இன்னும் நான்கைந்து கேள்விகளுக்கு அவரால் விளக்கம் அளிக்க முடியும் என்று நினைக்கிறேன்" என்றபடியே, வெங்கடாசலத்தைப் பார்த்தார் கிருபாகரன். 

வெங்கடாசலம் ஆர்வத்துடன் தலையாட்டினார். அவரிடம் இப்போது ஒரு புதிய உற்சாகம் தெரிந்தது.

நிகழ்ச்சி முடிய வேண்டிய நேரம் கடந்த பிறகும், வெங்கடாசலம் பார்வையாளர்கள் எழுப்பிய மனநலப் பிரச்னைகளுக்கு விளக்கங்களை அளித்துக் கொண்டிருந்தார்.

ஒரு மணி நேரம் கடந்த பிறகும், பார்வையாளர்கள், வெங்கடாசலம் ஆகிய இரு தரப்பினருமே நிகழ்ச்சியைத் தொடர்வதில் ஆர்வத்துடன் இருந்தனர்.

கிருபாகரன் தலையிட்டு, நேரம் மிகவும் கடந்து விட்டதால் நிகழ்ச்சியை முடித்து வைப்பதாக அறிவித்தார்.

நிகழ்ச்சி முடிந்து கிளம்பும்போது, வெங்கடாசலம் கிருபாகரனின் கையைப் பற்றியபடி, "நான் இந்தத் தலைப்பு பற்றி தியரடிகலாப் பேசினது ஆடியன்ஸுக்கு அவ்வளவு சுவாரசியமா இல்லைன்னு நினைக்கறேன். எனக்கே அது புரிஞ்சுதான் நான் சீக்கிரமே என் பேச்சை முடிச்சுக்கிட்டேன். அதுக்கப்பறம், பிராக்டிகலான சில பிரச்னைகள் பற்றி விவாதிக்கற மாதிரி நீங்க எடுத்த முயற்சியால, என்னால ஆடியன்ஸைத் திருப்திப்படுத்த முடிஞ்சது. எனக்கு மேடைப் பேச்சில அனுபவம் இல்லை. ஆடியன்ஸுக்கு எது உகந்ததா இருக்கும்னு புரிஞ்சுக்கிட்டுத்தான் பேசணும்னு இப்ப புரிஞ்சுக்கிட்டேன். உங்களுக்குத்தான் நன்றி சொல்லணும்!" என்றார்.

"நான் ஒண்ணும் செய்யல சார். உங்களை மாதிரி நிபுணரோட அறிவையும், அனுபவத்தையும் ஆடியன்ஸுக்குப் பயனுள்ளதாச் செய்யணும்னு நினைச்சேன். அவ்வளவுதான்!" என்றார் கிருபாகரன்.

பொருட்பால்
அமைச்சியல்
அதிகாரம் 72
அவையறிதல்

குறள் 712:
இடைதெரிந்து நன்குணர்ந்து சொல்லுக சொல்லின்
நடைதெரிந்த நன்மை யவர்.

பொருள்:
சொற்களின் தன்மையை ஆராய்ந்த நன்மை உடையவர், அவையின் செவ்வியை (விருப்பத்தை) ஆராய்ந்து, நன்றாக உணர்ந்து சொல்ல வேண்டும்.

அறத்துப்பால்                                                           காமத்துப்பால் 

Monday, June 12, 2023

711. பேச்சு எப்படி?

"பெரிய தமிழறிஞர்னு நினைச்சுக் கூப்பிட்டேன். சொதப்பிட்டாரே!" என்றார் அந்த நிறுவனத்தின் இலக்கிய மன்றச் செயலாளர் கண்ணன்.

"ஏன், நல்லாத்தானே பேசினாரு? எல்லாரும் ரசிச்சுக் கேட்டாங்களே!" என்றார் மன்ற உறுப்பினர் மணி.

"நல்லாப் பேசினாரா? முத்தழகன் யாரு? தமிழ் இலக்கியங்களைக் கரைச்சுக் குடிச்சவரு. அகநானூறு, புறநானூறு, திருக்குறள், கம்பராமாயணம், சிலப்பதிகாரம்னு எத்தனையோ காப்பியங்களைப் பத்தி அவர் சிறப்பாப் பேசி இருக்கலாம். ஆனா அதை விட்டுட்டு, 'கற்கால வாழ்க்கையும், தற்கால வாழ்க்கையும்'னு உப்புச் சப்பில்லாத ஒரு தலைப்பை எடுத்துக்கிட்டு, பொதுவா ஏதோ பேசிட்டுப் போயிட்டாரு. எனக்குக் கொஞ்சம் கூடத் திருப்தியில்லை!"

"தலைப்பை நீங்க கொடுக்கலியா?"

"இல்லை. அவரே பொருத்தமான ஒரு தலைப்பில பேசுவார்னு நினைச்சு, தலைப்பை அவரையே தேர்ந்தெடுக்கச் சொன்னேன். அவர் இப்படிப் பண்ணுவார்னு தெரிஞ்சிருந்தா, நானே ஒரு நல்ல தலைப்பைக் கொடுத்திருப்பேன்!" என்றார் கண்ணன், சலிப்புடன்.

அப்போது தொலைபேசி அடித்தது. 

"கூட்டத்தில கலந்துக்கிட்டவங்கதான் ஃபோன் பண்றாங்க. நிகழ்ச்சி நல்லா இல்லைன்னு என்னைத் திட்டப் போறாங்க!" என்றபடியே ரிசீவரை எடுத்தார் கண்ணன்.

"நான் அப்புறம் வரேன் சார்!" என்று கிளம்பினார் மணி.

டுத்த நாள் மணி கண்ணனைப் பார்க்க வந்தபோது அங்கே முத்தழகன் அமர்ந்திருந்தார்.

"இப்படி ஒரு வாய்ப்புக் கொடுத்ததுக்கு நன்றி சார். இலக்கியங்களைப் பத்தி நிறையப் பேசிட்டேன். உங்க ஆடியன்ஸைப் பார்த்ததும், 'இவங்கள்ளாம் பிசியான வாழ்க்கை வாழறவங்க. நிறைய பிரச்னைகள், மன அழுத்தங்கள், மனக்குறைகளோட இருப்பாங்க. இவங்ககிட்ட வாழ்க்கையைப் பத்திப் பொதுவான சில விஷயங்களைப் பத்திப் பேசினா நல்லா இருக்கும்னு நினைச்சேன். அப்பதான், 'கற்காலமும், தற்காலமும்' என்கிற இந்தத் தலைப்பு தோணிச்சு. நான் படிச்சதையும், என் அனுபவங்களையும் வச்சுப் பொதுவாப் பேசினேன். எல்லாரும் நல்லா ரசிச்சாங்கன்னு நினைக்கிறேன். எனக்கும் ரொம்ப திருப்தியா இருந்தது" என்றார் முத்தழகன்.

"ஆமாம் சார். உங்க பேச்சை எல்லாரும் ரசிச்சாங்க. உங்களை மறுபடி கூப்பிடணும்னு பல பேர் சொன்னாங்க" என்றார் கண்ணன்.

முத்தழகன் சென்றதும், "என்ன சார்? நேத்துதான் அவர் பேச்சு நல்லா இல்லை, எல்லாரும் திட்டப் போறாங்கன்னு சொல்லிக்கிட்டிருந்தீங்க. இன்னிக்கு, எல்லாரும் பாராட்டினாங்க, மறுபடி கூப்பிடச் சொன்னாங்கன்னெல்லாம் சொல்றீங்களே! சும்மா அவரை உற்சாகப்படுத்தறதுக்காகவா?" என்றார் மணி, சற்று வியப்புடன்.

"இல்லை, மணி. உண்மையாத்தான் சொன்னேன். அன்னிக்கு அவர் பேச்சை நான் சரியா கேக்கல. தலைப்பைக் கேட்டதுமே நல்லா இருக்காதுன்னு முடிவு பண்ணிட்டேன். அவர் பேசிக்கிட்டிருந்தப்ப, மீட்டிங் தொடர்பா வேற சில வேலைகளுக்காக அடிக்கடி எழுந்து போயிட்டேன். அதனால, அவர் பேச்சை முழுசாக் கேக்கல, ஆடியன்ஸ் ரியாக்‌ஷனையும் சரியா கவனிக்கல. நேத்து நீங்க போனப்பறம், நிறைய பேர் ஃபோன் பண்ணி, அவர் பேச்சைப் பாராட்டினாங்க. அப்புறம்தான் எனக்கே தெளிவாச்சு!" என்றார் கண்ணன், குற்ற உணர்ச்சி தொனிக்கும் குலில்.

"முத்தழகன் இப்ப சொன்ன மாதிரி, ஆடியன்ஸ் எப்படிப்பட்டவங்கன்னு பாத்துட்டு, அதுக்கேத்த மாதிரி ஒரு தலைப்பைத் தேர்ந்தெடுத்து அருமையாப் பேசி எல்லாரையும் கவர்ந்துட்டார்னுதான் நான் அப்பவே நினைச்சேன். ஆனா, நீங்க அவர் பேச்சு நல்லா இல்லேன்னு சொன்னப்ப, உங்களோட விவாதம் பண்ண வேண்டாம்னு விட்டுட்டேன்!" என்றார் மணி.

பொருட்பால்
அமைச்சியல்
அதிகாரம் 72
அவையறிதல்

குறள் 711:
அவையறிநது ஆராய்ந்து சொல்லுக சொல்லின்
தொகையறிந்த தூய்மை யவர்.

பொருள்:
ஒவ்வொரு சொல்லின் தன்மையும் உணர்ந்துள்ள நல்ல அறிஞர்கள், அவையில் கூடியிருப்போரின் தன்மையையும் உணர்ந்து, அதற்கேற்ப ஆராய்ந்து பேசுவார்கள்.

அறத்துப்பால்                                                           காமத்துப்பால் 

Sunday, June 11, 2023

710. அப்பா காலத்திலிருந்தே இருப்பவர்!

சக்தி என்டர்பிரைசஸ் நிறுவனத்தின் சீனியர் பார்ட்னர் நிர்மல்குமார் மற்றும் அந்த நிறுவனத்தின் மூத்த அதிகாரிகளுடன் ஒரு முக்கியமான தொழில்முறை ஒப்பந்தம் பற்றிப் பேச்சுவார்த்தை நடத்த, கருணா என்டர்பிரைசஸிலிருந்து அதன் நிர்வாகி வேலு தலைமையில் நான்கு மூத்த அதிகாரிகளைக் கொண்ட குழு வந்திருந்தது.

பேச்சுவார்த்தை அநேகமாக நிறைவடைந்து விட்டது.

"டிஸ்கஷனுக்கு நீங்க நாலு பேர் வந்திருக்கீங்க. அதில மூணு பேர்தான் பேசினீங்க. ஒத்தர் வாயையே திறக்கலையே!" என்றார் நிர்மல்குமார்.

"அவர் எப்பவுமே அப்படித்தான். அவர் அதிகமாப் பேச மாட்டாரு!" என்றார் வேலு.

"அப்புறம் எதுக்கு அவரை அழைச்சுக்கிட்டு வந்தீங்க?" என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டார் நிர்மல்குமார்.

"அப்ப நாங்க வரோம். நாம பேசின விவரங்களை எங்க புரொப்ரைடர்கிட்ட சொல்றோம். அவர் உங்ககிட்ட பேசுவாரு" என்று கூறி விடைபெற்றார் வேலு.

அவர்கள் கிளம்பிச் சென்றதும், நிர்மல்குமார் பேச்சுவார்த்தையின்போது தன்னுடன் இருந்த மூத்த நிர்வாகிகளைப் பார்த்து, "என்ன நினைக்கிறீங்க? நம்ம புரொபோசலை ஏத்துப்பாங்களா?" என்றார்.

"நிச்சயமா சார்! உங்க பிரசன்டேஷன்ல அவங்க ரொம்ப இம்ப்ரஸ் ஆயிட்டாங்க!" என்றார் ஒரு மூத்த அதிகாரி.

"பேச்சு வார்த்தை எப்படிப் போச்சு? என்ன சொல்றாரு நிர்மல்குமார்?" என்றார் கருணா என்டர்பிரைசஸ் அதிபர் கருணானந்தம்.

"அவரோட புரொபோசல் அட்ராக்டிவா இருக்கறதாத்தான் நாங்க நினைக்கிறோம். ஆனா, சார்தான் வேற விதமா நினைக்கிறாரு!" என்றார் வேலு.

'சார்' என்று குறிப்பிடப்பட்ட செல்வமணியைப் பார்த்தார் கருணானந்தம்.

"நிர்மல்குமார்கிட்ட உண்மை இல்லை தம்பி! அவர் நம்மை ஏமாத்த நினைக்கிறாரு" என்றார் செல்வமணி.

"எப்படிச் சொல்றீங்க?" என்றார் கருணானந்தம்.

"நிர்மல்குமாரோட கண்ணைப் பாத்தே கண்டுபிடிச்சிருப்பாரு!" என்றார் பேச்சு வார்த்தையின் கலந்து கொண்ட இன்னொரு அதிகாரியான குணசேகர்.

"கேலியாப் பேசாதீங்க, குணசேகர். நீங்க இங்கே புதுசாச் சேர்ந்தவரு. செல்வமணி சார் என் அப்பா காலத்திலேந்தே இருக்காரு. 'இந்த நிறுவனத்தில என்ன மாற்றங்களை வேணும்னா செஞ்சுக்க, ஆனா, செல்வமணி சாரை மட்டும் எப்பவுமே உன் கூட வச்சுக்க'ன்னு என் அப்பா எங்கிட்ட சொல்லி இருக்காரு. கடந்த காலங்கள்ள, மனிதர்களைப் பத்தின அவரோட ஜட்ஜ்மென்ட் எப்படி நமக்கு உதவியா இருந்திருக்கு, தவறான முடிவுகளை எடுக்காம எப்படி நம்மைக் காப்பாத்தி இருக்குங்கறதையெல்லாம் வேலு மாதிரி மூத்த அதிகாரிகள்கிட்டக் கேட்டுத் தெரிஞ்சுக்கங்க!" என்றார் கருணானந்தம், கடுமையாக.

"சாரி சார்!" என்றார் குணசேகரன், சங்கடத்துடன்.

"தம்பி குணசேகரன் சொன்னது சரிதான். நான் கண்ணைப் பாத்துத்தான் தெரிஞ்சுக்கிட்டேன். நிர்மல்குமார் பொய்யான விஷயங்களைச் சொன்னப்ப, அது அவரோட கண்ல எனக்குத் தெரிஞ்சுது. அந்த சமயத்தில அவரோட அதிகாரிகள் கண்களைப் பாத்தப்பவும், 'நம் முதலாளி இப்படிப் பொய் சொல்றாரே'ன்னு அவங்க நினைச்சது, அவங்க கண்லேயும் தெரிஞ்சது!" என்றார் செல்வமணி, தன் கண்ணாடியைக் கழற்றி, அதைக் கைக்குட்டையால் துடைத்தபடியே.

பொருட்பால்
அமைச்சியல்
அதிகாரம் 71
குறிப்பறிதல்

குறள் 710:
நுண்ணியம் என்பார் அளக்குங்கோல் காணுங்கால்
கண்ணல்லது இல்லை பிற.

பொருள்:
நுண்ணறிவாளர் எனப்படுவோர்க்கு பிறரின் மனத்தில் உள்ளதை அளந்தறியும் கோலாகப் பயன்படுவது அவரது கண் அல்லாமல் வேறு எதுவுமில்லை.

      அறத்துப்பால்                                                           காமத்துப்பால் 

1080. 'தன்மானத் தலைவரி'ன் திடீர் முடிவு!

தன் அரசியல் வாழ்க்கையின் துவக்கத்தில் இரண்டு மூன்று கட்சிகளில் இருந்து விட்டு, அங்கு தனக்கு உரிய மதிப்புக் கிடைக்கவில்லை என்பதால், 'மக்க...