"சரி சார்!" என்றார் துணை இயக்குனர் தன்வந்திரி.
"நீங்க பரிந்துரைச்சிருக்கற மூணு பேருமே திறமையானவங்கதான். மூணு பேர்ல, யார் வேலைக்குத் தேர்ந்தெடுக்கப்படுவாங்கன்னு நீங்க நினைக்கிறீங்க?" என்றார் சந்திரகாந்த், தன்வந்திரி அனுப்பியிருந்த பெயர்ப்பட்டியலைப் பார்த்து விட்டு.
"அறிவழகனுக்குத்தான் அதிக வாய்ப்பு இருக்குன்னு நினைக்கிறேன்!"
"உங்க பட்டியல்ல அவர் பெயர் மூணாவதா இல்ல இருக்கு? முதல் பெயரா இருக்கற கோபிசந்தைச் சொல்லுவீங்கன்னு பாத்தேன்!" என்றார் சந்திரகாந்த், சற்று வியப்புடன்.
தன்வந்திரி பதில் சொல்லாமல் சிரித்தார்.
"எக்சலன்ட், தன்வந்திரி! நீங்க சொன்ன மாதிரியே, அறிவழகனைத்தான் தேர்ந்தெடுத்திருக்காங்க. எப்படி சரியா ஊகிச்சீங்க?" என்றார் சந்திரகாந்த், வியப்புடன்.
"பயிற்சி விஞ்ஞானிகளோண செயல்பாட்டை நான் நேரடியாப் பாக்கறதால, அவங்களைப் பற்றின சில நுணுக்கமான விவரங்கள் எனக்குத் தெரியும்.
"நாம அனுப்பின மூணு பேருமே திறமையானவங்கதான். ஆனா, கோபிசந்த், கிருஷ்ணபிரசாத் ரெண்டு பேரும் கொஞ்சம் ஓவர் எந்தூசியாஸ்டிக். எல்லா விஷயத்திலேயும் முந்திக்கிட்டுக் கருத்து சொல்லுவாங்க. தனக்குத் தெரியும்னு காட்டிக்கற ஆர்வம் அவங்க ரெண்டு பேர்கிட்டேயும் அதிகமா இருக்கும்.
"பலர் இருக்கற இடத்தில, இது மாதிரி முந்திக்கிட்டுப் பேசறது நல்ல பழக்கம் இல்லை. குறிப்பா, சீனியர்கள் அல்லது அறிஞர்கள் முன்னால இப்படிப் பேசினா, அவங்க அதை விரும்ப மாட்டாங்கன்னு நான் அவங்ககிட்ட பல தடவை சொல்லி இருக்கேன். ஆனா, அவங்க ரெண்டு பேருமே தங்களோட இந்தப் பழக்கத்தை மாத்திக்கல.
"அறிவழகன் ரொம்ப அடக்கமானவர். தனக்குத் தெரியுங்கறதை வெளிக்காட்டறதில அவசரப்பட மாட்டார் தன்னோட முறை வரும்வரை காத்துக்கிட்டிருப்பார், அல்லது அவரைக் குறிப்பிட்டுக் கேட்டா மட்டும்தான் சொல்லுவார். இந்த இயல்பு அவருக்கு இருக்கறதால, அவர் தேர்ந்தெடுக்கப்படத்தான் வாய்ப்பு அதிகம்னு நினைச்சேன்!"
"நீங்க கூட அறிவழகன் மாதிரிதான்னு நினைக்கிறேன்!" என்றார் சந்தரகாந்த், சிரித்தபடி.
"ஏன் சார் அப்படிச் சொல்றீங்க?" என்றார் தன்வந்திரி, வியப்புடன்.
"மூணு பேர்ல யாருக்கு வாய்ப்புன்னு நான் ஆரம்பத்தில கேட்டப்ப, அறிவழகன்னு பேரை மட்டும் சொன்னீங்களே தவிர, ஏன் அப்படி நினைச்சீங்கன்னு சொல்லல. இப்ப நான் கேட்டப்பறம்தானே சொல்றீங்க?"
பொருட்பால்
அமைச்சியல்
அதிகாரம் 72
அவையறிதல்
குறள் 715:
நன்றென்ற வற்றுள்ளும் நன்றே முதுவருள்
முந்து கிளவாச் செறிவு.
பொருள்:
அறிவாளிகள் கூடியிருக்கும் இடத்தில், முந்திக் கொண்டு பேசாமல் இருக்கும் அடக்கமானது, எல்லா நலன்களிலும் சிறந்த நலனாகும்.
No comments:
Post a Comment