Saturday, June 10, 2023

709. பார்வை ஒன்றே போதுமே!

கூட்டுக் குடும்பமாக வாழ்ந்து கொண்டிருந்த குகனும் அவன் தம்பி அரவிந்தனும் அரவிந்தனின் திருமணத்துக்குப் பிறகு சொத்துக்களைப் பிரித்துக் கொண்டு தனித் தனியே வாழ்ந்தனர்.

அதற்குப் பிறகு அவர்களிடையே தொடர்பு விட்டுப் போய் விட்டது. 

பத்து வருடங்களுக்குப் பிறகு, திடீரென்று ஒருநாள் குகனைச் சந்திக்க விரும்புவதாக அரவிந்தன் அவர்கள் ஒன்று விட்ட மாமா சங்கரன் மூலம் செய்தி சொல்லி அனுப்பினான். அவர்களுக்கு வேறு நெருங்கிய உறவினர்கள் இல்லை.

சங்கரன் மூலமே நிகழ்ந்த ஓரிரு செய்திப் பரிமாற்றங்களுக்குப் பிறகு இருவரும் சங்கரன் வீட்டில் சந்திப்பதென்று முடிவாயிற்று.

இந்தச் சந்திப்பு குகனின் மனைவி புவனாவுக்குப் பிடிக்கவில்லை.

"பத்து வருஷம் கழிச்சு எதுக்கு இந்தச் சந்திப்பு? அறுந்து போன உறவு அறுந்து போனதாகவே இருக்கட்டும்!" என்றாள் புவனா.

"ஏன் இப்படிச் சொல்ற? என் தம்பி நல்லவன்தான். கல்யாணத்துக்கப்பறம் பெண்டாட்டி பேச்சை கேட்டுக்கிட்டு சொத்தைப் பிரிச்சுக்கிட்டுப் போனான். இப்ப மனசு மாறி உறவைப் புதுப்பிச்சுக்கணும்னு நினைக்கறான். சொந்தமா தொழில் செஞ்சுக்கிட்டு காரும் பங்களாவுமா இருக்கான். அவனுக்கு நம் தயவு தேவையில்லை. அவன் மனம் திருந்தி வரப்ப முடியாதுன்னு சொல்லணுமா?" என்றான் குகன்.

"உறவு முறிஞ்சதுக்கு அவர் மனைவி காரணம் இல்லீங்க. சுமதி ரொம்ப நல்ல பொண்ணு. உங்க தம்பிக்கு எப்பவுமே உங்க மேல ஒரு வெறுப்பும் விரோதமும் உண்டு. அவருதான் பிடிவாதமா இருந்து சொத்தைப் பிரிச்சுக்கிட்டுப் போனாரு. சுமதியை ஏன் குற்றம் சொல்றீங்க?"

"என் தம்பி பெண்டாட்டியை நீ விட்டுக் கொடுக்காம பேசறது நல்லாத்தான் இருக்கு. ஆனா என் தம்பியைப் பத்தி உனக்கு என்ன தெரியும்? அவன் எங்கிட்ட எவ்வளவு பாசமா, மரியாதையா இருந்தான் தெரியுமா?"

"நான் கவனிச்சதை வச்சு சொல்றேன். வெளியில அவரு உங்ககிட்ட அன்பா நடந்துக்கிட்டிருந்திருக்கலாம். ஆனா அவரு உங்களை விரோதியாத்தான் நினைச்சாரு. அவருக்கு உங்க மேல இருந்த வெறுப்பு அவர் பார்வையிலேயே எனக்குத் தெரிஞ்சது. தேவையில்லாம அதை உங்ககிட்ட சொல்லி உங்களுக்குள்ள பிளவை உண்டாக்க வேண்டாம்னுதான் நான் எதுவும் சொல்லாம இருந்தேன்!" என்றாள் புவனா.

"இப்பவும் அப்படியே இரு  அதுதான் குடும்பத்துக்கு நல்லது!" என்றான் குகன் மனைவியை அடக்கும் விதமாக.

ங்கரன் வீட்டில் அரவிந்தனைச் சந்தித்துப் பேசி விட்டு வந்த குகனிடம், "எப்படி இருந்தது சந்திப்பு?" என்று கேட்டாள் புவனா.

"ரொம்ப நல்லா இருந்தது. என் தம்பி மாறவே இல்லை. சொந்தமாத் தொழில் செஞ்சு வசதியா இருக்கறப்பவும் எங்கிட்ட அதே அன்போடயும், மரியாதையோடயும்தான் இருக்கான். நம்ம ரெண்டு பேரையும் அவன் வீட்டுக்கு வரச் சொல்லி இருக்கான். அடுத்த வாரம் போகலாம். இனிமே நாங்க ரெண்டு பேரும் பழையபடி நெருக்கமாத்தான் இருப்போம்!" என்றான் குகன் உற்சாகமாக.

ரண்டு நாட்கள் கழித்து சங்கரன் குகன் வீட்டுக்கு வந்தார்.

"குகா! நீயும் அரவிந்தனும் என் வீட்டில சந்திச்சுப் பேசினப்பறம் எனக்கு ஒரு சந்தேகம் வந்தது. அரவிந்தன்கிட்ட ஏதோ தப்பா இருக்கற மாதிரி தெரிஞ்சது. அவனைப் பத்தி விசாரிச்சேன். அவன் தொழில்ல நிறைய நஷ்டமாம். எல்லா சொத்துக்களும் பறி போகிற நிலையில இருக்கானாம். அதானாலதான் உன்னோட உறவைப் புதுப்பிச்சுக்க வந்திருக்கான்!" என்றார் சங்கரன்.

"அதனால என்ன? என் தம்பிக்கு ஒரு கஷ்டம்னா அவனுக்கு உதவறதில எனக்கு சந்தோஷம்தான்" என்றான் குகன்.

"நீ இவ்வளவு நல்ல மனசு உள்ளவனா இருக்கே. ஆனா உன் தம்பி இன்னும் உன் மேல விரோத பாவத்தோடதானே இருக்கான்?" என்றார் சங்கரன்.

"விரோத பாவமா? எப்படிச் சொல்றீங்க?" என்றான் குகன் அதிர்ச்சியுடன். 

'புவனா கூறியதையே இவரும் கூறுகிறாரே!'

குகனின் கண்கள்  அவன் அறியாமலே புவனாவைப் பார்த்தன. புவனா சங்கரனைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

"அவன் உன்னைப் பார்த்த பார்வையில விரோதம் இருந்த மாதிரி எனக்குத் தோணிச்சு. அதானாலதான் அவனைப் பத்தி விசாரிச்சேன். அவன் நல்ல நோக்கத்தோட உறவைப் புதுப்பிக்க விரும்பறதா எனக்குத் தோணல. நீ அவனை அதிகம் நெருங்க விடாதே! முறிஞ்சு போன உறவு முறிஞ்சு போனதாகவே இருக்கட்டும்!" என்றார் சங்கரன்.

'முறிஞ்சு போன உறவு முறிஞ்சு போனதாகவே இருக்கட்டும்!' 

கிட்டத்தட்ட புவனா சொன்ன அதே வார்த்தைகள்! 

அரவிந்தனின் பார்வையில் இருந்த விரோதம் புவனாவுக்கும், தன் மாமா சங்கரனுக்கும் புரிந்தது போல் தனக்கு ஏன் புரியவில்லை என்று வியந்தான் குகன்.

பொருட்பால்
அரசியல் இயல்
அதிகாரம் 71
குறிப்பறிதல்

குறள் 709:
பகைமையும் கேண்மையும் கண்ணுரைக்கும் கண்ணின்
வகைமை உணர்வார்ப் பெறின்.

பொருள்:
பார்வையின் வேறுபாடுகளைப் புரிந்து கொள்ளக் கூடியவர்கள், ஒருவரின் கண்களைப் பார்த்தே அவர் மனத்தில் இருப்பது நட்பா, பகையா என்பதைக் கூறி விடுவார்கள்.

      அறத்துப்பால்                                                           காமத்துப்பால் 

No comments:

Post a Comment

1060. ஏன் உதவவில்லை?

"யார்கிட்ட உதவி கேக்கறதுன்னே தெரியல!" என்றான் பரந்தாமன். "யார்கிட்டயாவது கேட்டுத்தானே ஆகணும்? இன்னும் ரெண்டு நாளைக்குள்ள பணம்...