Tuesday, June 20, 2023

716. கட்டுரையைப் படித்த பின்...

"செமினாருக்கு பேப்பர் தயார் பண்ணிட்டீங்களா?" என்றார் கல்லூரி முதல்வர்.

"பண்ணிட்டேன் சார்!" என்றான் புருஷோத்தமன். அந்தக் கல்லூரியில் அவன் ஒரு பௌதிகப் பேராசிரியர்.

"யார்கிட்டேயாவது காட்டி எல்லாம் சரியா இருக்கான்னு பாத்துக்கிட்டீங்களா?"

"இல்லை சார்!" என்று தயக்கத்துடன் கூறிய புருஷோத்தமன், "அதுக்கு அவசியம் இல்லேன்னு நினைக்கிறேன்" என்றான்.

"ஓ, உங்க எச் ஓ டி லீவில இருக்காரு, இல்ல? சரி. எல்லாத்தையும் ஒரு தடவைக்கு ரெண்டு தடவையா சரி பார்த்துடுங்க. இது ஒரு இன்டர்நேஷனல் செமினார். நீங்க படிக்கப் போற பேப்பர் இன்டர்நேஷனல்ஃபிசிக்ஸ் ஜேர்னல்கள்ள பிரசுரமாகக் கூட வாய்ப்பு இருக்கு. ஆல் தி பெஸ்ட்!" என்றார் கல்லூரி முதல்வர்.

கல்லூரி முதல்வரின் அறையிலிருந்து வெளியே வந்தபோது கணிதப் பேராசிரியர் அரவிந்தன் நடந்து செல்வதைப் பார்த்தான் புருஷோத்தமன். 

புருஷோத்தமனைப் பார்த்து அரவிந்தன் கையை உயர்த்தினான். ஆனால் புருஷோத்தமன் முகத்தைத் திருப்பிக் கொண்டான்.

அரவிந்தனுடன் புருஷோத்தமன் நெருக்கமாக இருந்தவன்தான். ஆனால் அரவிந்தன் மீது பாலியல் குற்றச்சாட்டு எழுந்த பிறகு எல்லாம் மாறி விட்டது.

 பாதிக்கப்பட்ட பெண் ஆசிரியை புகார் அளிக்க விரும்பாமல் கல்லூரியை விட்டு விலகி விட்டதாலும், அரவிந்தன் கல்லூரி முதல்வரின் காலைப் பிடிக்காத குறையாகக் கெஞ்சிக் கேட்டுக் கொண்டதாலும் அரவிந்தனின் வேலை மட்டும் பிழைத்தது.

 ஆனால் அதற்குப் பிறகு அரவிந்தனை யாரும் மதித்துப் பேசுவதில்லை. அரவிந்தன் ஒரு திறமையான ஆசிரியர் என்பதால் வகுப்பறைக்குள் மட்டும் மாணவர்கள் அவனை மதித்து நடந்து கொண்டனர். 

புருஷோத்தமன் தன் கட்டுரையைப் படித்து முடித்ததும் அவையில் பெரும் கைதட்டல் எழுந்தது. 

புருஷோத்தமன் பெருமையுடன் அவையைப் பார்த்தான். அவன் கல்லூரி முதல்வர் உட்படப் பல பேராசிரியர்களும், வேறு பல கல்லூரிகளிலிருந்து வந்திருந்த பேராசிரியர்கள், மாணவர்கள் ஆகியோரும் அங்கே வந்திருந்தனர்.

மேடையில் அமர்ந்திருந்த ஒரு ஜெர்மானியப் பேரசிரியர், "மிஸ்டர் புருஷோத்தமன்! உங்களுடைய தியரி சாத்தியமானது இல்லை என்று நினைக்கிறேன். உங்கள் பேப்பரைப் பார்க்கலாமா?" என்றார்.

புருஷோத்தமன் தன் கையிலிருந்த ஆராய்ச்சிக் கட்டுரையை அவரிடம் கொடுத்தான்.

அதன் பக்கங்களைப் புரட்டிப் பார்த்த அந்தப் பேராசிரியர் ஒரு இடத்துக்கு வந்ததும் நிமிர்ந்து புருஷோத்தமனைப் பார்த்தார்.

"6.243 x 10^5 என்ற மதிப்பை 6.243 x 10^6 என்று எடுத்துக் கொண்டு கணக்கிட்டிருக்கிறீர்கள். அதனால் உங்களுக்குக் கிடைத்த விடை தவறானது. உங்கள் முடிவும் தவறானது.  இந்த பேப்பர் ஒரு தவறான அடிப்படையில் அமைந்தது!" என்று சொல்லிக் கட்டுரையைப் புருஷோத்தமனிடம் திருப்பிக் கொடுத்தார் அவர்.

புருஷோத்தமன் அந்த அவையின் முன் கூனிக் குறுகி நின்றான்.

தன் கல்லூரி முதல்வரின் முகத்தைப் பார்த்தான். சில நிமிடங்கள் முன்பு பெருமையும், பூரிப்பும் நிறைந்ததாக இருந்த அந்த முகம் இப்போது அவமானத்தையும், கோபத்தையும் பிரதிபலித்தது.

பார்வையாளர்கள் வரிசையில் அரவிந்தன் அமர்ந்திருப்பதைப் புருஷோத்தமன் அப்போதுதான் கவனித்தான். இனி தன் நிலைமையும் அரவிந்தனின் நிலையைப் போல் ஆகி விடுமோ என்றஅச்சம் அவனுக்குள் எழுந்தது.

பொருட்பால்
அரசியல் இயல்
அதிகாரம் 72
அவையறிதல்

குறள் 716:
ஆற்றின் நிலைதளர்ந் தற்றே வியன்புலம்
ஏற்றுணர்வார் முன்னர் இழுக்கு.

பொருள்:
அறிவுத்திறனால் பெருமை பெற்றோர் முன்னிலையில் ஆற்றிடும் உரையில் குற்றம் ஏற்படுமானால், அது ஒழுக்க நெறியிலிருந்து தளர்ந்து வீழ்ந்து விட்டதற்கு ஒப்பானதாகும்.

குறள் 715
அறத்துப்பால்                                                           காமத்துப்பால் 

No comments:

Post a Comment

1060. ஏன் உதவவில்லை?

"யார்கிட்ட உதவி கேக்கறதுன்னே தெரியல!" என்றான் பரந்தாமன். "யார்கிட்டயாவது கேட்டுத்தானே ஆகணும்? இன்னும் ரெண்டு நாளைக்குள்ள பணம்...