என் நண்பர்கள் குழாம் ஒரு ஜாலியான குழு. நாங்கள் பெரும்பாலும் சினிமா, ஊர்வம்பு இவை பற்றிப் பேசுவோம், அல்லது மற்றவர்களைக் கேலி செய்து பேசுவோம். உருப்படியான எந்த விஷயம் பற்றியும் பேச மாட்டோம்!
நாங்கள் பேசுவதைக் கேட்பவர்கள், வாழ்க்கையை மேலோட்டமாகப் பார்க்கும் அறிவில் குறைந்த மனிதர்களகத்தான் எங்களைப் பார்ப்பார்கள்.
ஜகதீசன் எங்களைப் போல் இல்லை என்றாலும், அவனும் எங்கள், உரையாடலில் கலந்து கொள்வான்.
அன்று, நான் உறுப்பினராக இருக்கும் கிளப்புக்கு ஜகதீசனை அழைத்துச் சென்றேன். அந்த கிளப் உறுப்பினர்களில் பல அறிவுஜீவிகள் உண்டு. அவர்களில் சிலர் என் நண்பர்கள்.
இந்தியப் பொருளாதராம், உலகப் பொருளாதாரம், உலக அரசியல், விஞ்ஞான, தொழில்நுட்ப முன்னேற்றங்கள் என்று பல விஷயங்களையும் பற்றி அவர்கள் விவாதிக்கும்போது, நான் அருகில் அமர்ந்து கேட்டுக் கொண்டிருப்பேன். அந்த விவாதங்களில் கலந்து கொண்டு பேசும் அளவுக்கு எனக்கு அறிவோ, புரிதலோ கிடையாது!
ஜகதீசனை என் நண்பர்களுக்கு அறிமுகப்படுத்தினேன். அவர்கள் மரியாதைக்கு அவனுடன் கைகுலுக்கி விட்டு, வழக்கம்போல் பல விஷயங்களையும் பற்றிப் பேச ஆரம்பித்தனர்.
ஒரு கட்டத்தில், ஜகதீசன் அந்த விவாதத்தில் நுழைந்து அதில் கலந்து கொண்டான். அவர்கள் கூறிய கருத்துக்களில் சிலவற்றை ஆதரித்தும், சிலவற்றை மறுத்தும் பேசினான். உண்மைகள், விவரங்கள் அடிப்படையில் தெளிவாகவும், தர்க்கரீதியாகவும், ஆணித்தரமாகவும் பேசினான்.
அவர்கள் ஜகதீசனை வியப்புடன் பார்த்தனர். தொடர்ந்து விவாதித்தனர்.
கிளப்பிலிருந்து நாங்கள் கிளம்பியபோது, அவர்களில் சிலர் என்னிடம் வந்து, "உங்க நண்பர் பெரிய அறிவாளியா இருப்பார் போலருக்கே. இனிமே அடிக்கடி அவரை கிளப்புக்கு அழைச்சுக்கிட்டு வாங்க!" என்று சொல்லி விட்டுப் போனார்கள்.
"டேய் ஜகதீசா! நாங்க மொக்கையா ஏதாவது பேசறப்ப, எங்களோட சேர்ந்து நீயும் மொக்கையான விஷயங்களைப் பேசற. இந்த அறிவுஜீவிகள் பேசறது என் மண்டையில ஏறரது இல்லை. நீ அவங்களோடயும், அவங்க அசந்து போற அளவுக்குப் பேசற. எப்படிடா இது?" என்றேன் நான் ஜகதீசனின் தோள்களை அணைத்தபடி.
ஜகதீசன் பதில் சொல்லாமல் சிரித்தான்.
பொருட்பால்
அமைச்சியல்
அதிகாரம் 72
அவையறிதல்
குறள் 714:
ஒளியார்முன் ஒள்ளிய ராதல் வெளியார்முன்
வான்சுதை வண்ணம் கொளல்.
பொருள்:
அறிவிற் சிறந்தவரின் முன், தானும் அறிவிற் சிறந்தவராக நடந்து கொள்ள வேண்டும், அறிவில் குறைந்தவர் முன், தாமும் வெண் சுண்ணம் போல் அறிவில்லாதவராய் இருக்க வேண்டும்.
No comments:
Post a Comment