Saturday, June 17, 2023

712. நிபுணரின் பேச்சு

அந்த மன்றத்தின் மாதாந்தரக் கூட்டத்துக்கு, புகழ் பெற்ற மனநல மருத்துவர் வெங்கடாசலம் அழைக்கப்பட்டிருந்தார்.

மனநலம் பற்றிய பல சுவையான செய்திகளை வெங்கடாசலம் சொல்லுவார் என்ற எதிர்பார்ப்பில், பல உறுப்பினர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

வெங்கடாசலம் பேசத் தொடங்கிய சில நிமிடங்களிலேயே, கூட்டத்துக்கு வந்திருந்தவர்களின் ஆர்வம் குறையத் தொடங்கியது. காரணம், வெங்கடாசலம் கல்லூரி மாணவர்களுக்குப் பாடம் எடுப்பது போல், மனநல மருத்துவம் பற்றி விளக்க ஆரம்பித்ததுதான்!

வெங்கடாசலம் பேசி முடித்ததும், அனைவரும் உற்சாகமின்றி ஒப்புக்காகக் கைதட்டினர்.

அடுத்து, மன்றச் செயலாளர் கிருபாகரன் மைக் முன் வந்தார்.

"நிகழ்ச்சி நிரலின்படி, நான் இப்போது நன்றி தெரிவிக்க வேண்டும். நிகழ்ச்சி முடிய இன்னும் அரைமணி நேரம் இருக்கிறது. கல்வியறிவும், அனுபவமும் நிரம்பப் பெற்ற வெங்டாசலம் போன்ற ஒரு நிபுணர் நம்மிடையே வந்திருக்கும்போது, அவரிடமிருந்து இன்னும் சில சுவையான, பயனுள்ள விவரங்களை நாம் கேட்டறிய வேண்டுமென்று விரும்புகிறேன். எனக்குத் தெரிந்த ஒரு மன நோயாளியின் நிலை பற்றிக் கூறி, அது பற்றி அவருடைய கருத்தைக் கேட்க விரும்புகிறேன்" என்று ஆரம்பித்த கிருபாகரன், ஒரு மன நோயாளியின் பிரச்னை பற்றி விவரித்தார். 

பிறகு, "வெங்கடாசலம் அவர்கள் இது பற்றித் தன் கருத்தைச் சுருக்கமாகக் கூற வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்!" என்றார், வெங்கடாசலதைப் பார்த்து.

வெங்கடாசலம் அந்தப் பிரச்னை பற்றித் தன் கருத்தைக் கூற ஆரம்பித்தார்.

இவ்வளவு நேரம் உற்சாகம் குன்றி இருந்த பார்வையளர்கள், இப்போது வெங்கடாசலத்தின் பேச்சை ஆர்வத்துடன் கேட்க ஆரம்பித்தனர்.

கிருபாகரன் குறிப்பிட்ட பிரச்னை பற்றி வெங்கடாசலம் பேசி முடித்ததும், "உங்களில் வேறு யாருக்காவது இது போன்ற பிரச்னைகள் பற்றித் தெரிந்திருந்தால், அவை பற்றிக் கேட்கலாம். மீதமிருக்கும் நேரத்தில், இன்னும் நான்கைந்து கேள்விகளுக்கு அவரால் விளக்கம் அளிக்க முடியும் என்று நினைக்கிறேன்" என்றபடியே, வெங்கடாசலத்தைப் பார்த்தார் கிருபாகரன். 

வெங்கடாசலம் ஆர்வத்துடன் தலையாட்டினார். அவரிடம் இப்போது ஒரு புதிய உற்சாகம் தெரிந்தது.

நிகழ்ச்சி முடிய வேண்டிய நேரம் கடந்த பிறகும், வெங்கடாசலம் பார்வையாளர்கள் எழுப்பிய மனநலப் பிரச்னைகளுக்கு விளக்கங்களை அளித்துக் கொண்டிருந்தார்.

ஒரு மணி நேரம் கடந்த பிறகும், பார்வையாளர்கள், வெங்கடாசலம் ஆகிய இரு தரப்பினருமே நிகழ்ச்சியைத் தொடர்வதில் ஆர்வத்துடன் இருந்தனர்.

கிருபாகரன் தலையிட்டு, நேரம் மிகவும் கடந்து விட்டதால் நிகழ்ச்சியை முடித்து வைப்பதாக அறிவித்தார்.

நிகழ்ச்சி முடிந்து கிளம்பும்போது, வெங்கடாசலம் கிருபாகரனின் கையைப் பற்றியபடி, "நான் இந்தத் தலைப்பு பற்றி தியரடிகலாப் பேசினது ஆடியன்ஸுக்கு அவ்வளவு சுவாரசியமா இல்லைன்னு நினைக்கறேன். எனக்கே அது புரிஞ்சுதான் நான் சீக்கிரமே என் பேச்சை முடிச்சுக்கிட்டேன். அதுக்கப்பறம், பிராக்டிகலான சில பிரச்னைகள் பற்றி விவாதிக்கற மாதிரி நீங்க எடுத்த முயற்சியால, என்னால ஆடியன்ஸைத் திருப்திப்படுத்த முடிஞ்சது. எனக்கு மேடைப் பேச்சில அனுபவம் இல்லை. ஆடியன்ஸுக்கு எது உகந்ததா இருக்கும்னு புரிஞ்சுக்கிட்டுத்தான் பேசணும்னு இப்ப புரிஞ்சுக்கிட்டேன். உங்களுக்குத்தான் நன்றி சொல்லணும்!" என்றார்.

"நான் ஒண்ணும் செய்யல சார். உங்களை மாதிரி நிபுணரோட அறிவையும், அனுபவத்தையும் ஆடியன்ஸுக்குப் பயனுள்ளதாச் செய்யணும்னு நினைச்சேன். அவ்வளவுதான்!" என்றார் கிருபாகரன்.

பொருட்பால்
அமைச்சியல்
அதிகாரம் 72
அவையறிதல்

குறள் 712:
இடைதெரிந்து நன்குணர்ந்து சொல்லுக சொல்லின்
நடைதெரிந்த நன்மை யவர்.

பொருள்:
சொற்களின் தன்மையை ஆராய்ந்த நன்மை உடையவர், அவையின் செவ்வியை (விருப்பத்தை) ஆராய்ந்து, நன்றாக உணர்ந்து சொல்ல வேண்டும்.

அறத்துப்பால்                                                           காமத்துப்பால் 

No comments:

Post a Comment

1080. 'தன்மானத் தலைவரி'ன் திடீர் முடிவு!

தன் அரசியல் வாழ்க்கையின் துவக்கத்தில் இரண்டு மூன்று கட்சிகளில் இருந்து விட்டு, அங்கு தனக்கு உரிய மதிப்புக் கிடைக்கவில்லை என்பதால், 'மக்க...