Sunday, June 18, 2023

713. 'தவறு என்னுடையதுதான்!'

"என்ன சார், உங்களைப் பேசறதுக்குக் கூப்பிட்டா, இப்படி செஞ்சுட்டீங்களே!" என்றார் நித்யசீலன்.

"என்ன செஞ்சுட்டேன்?" என்றார் புலவர் கணேசன்.

"நீங்க தொலைக்காட்சியில நிறைய நிகழ்ச்சிகள்ள நகைச்சுவையாப் பேசுவீங்க. அதனாலதான், உங்களை எங்க கிளப்ல பேசக் கூப்பிட்டேன். எங்க கிளப் உறுப்பினர்கள் பெரும்பாலும் தொழிலதிபர்கள், அல்லது பெரிய நிறுவனங்கள்ள உயர் பதிவிகள்ள இருக்கற அதிகாரிகள். அவங்க எப்பவும் மன அழுத்தத்தில இருக்கறவங்க. அவங்க கிளப்புக்கு வரது தங்களைக் கொஞ்சம் ரிலாக்ஸ் பண்ணிக்கத்தான். உங்க நகைச்சுவைப் பேச்சு அவங்களுக்கு இதமா இருக்கும்னுதான் உங்களைக் கூப்பிட்டேன். ஆனா, நீங்க உலகத்தில நடந்த புரட்சிகளைக் குறிப்பிட்டு, ஏழைகளோட கஷ்டங்களைப் புரிஞ்சுக்காம பணக்காரங்க உல்லாச வாழ்க்கை நடத்திக்கிட்டிருந்தா, ஏழைகளோட கோபம் அதிகமாகிப் புரட்சி வெடிக்கும், அப்ப, பணக்காரங்க எல்லாத்தையும் இழந்து நடுத்தெருவுக்கு வந்துடுவாங்க, அவங்க குடும்பங்களுக்குக் கூடப் பாதுகாப்பு இருக்காதுன்னு பேசறீங்க!"

"நகைச்சுவையாப் பேசறவங்க சீரியஸான விஷயங்களைப் பத்திப் பேசக் கூடாதா? நான் பேசின விஷயங்கள் உண்மைதானே?" என்றார் கணேசன்.

"உங்களோட நம்பிக்கைகள் உங்களைப் பொருத்தவரையில உண்மையா இருக்கலாம். ஒரு அரசியல் மேடையில இந்த மாதிரி பேசி இருந்தீங்கன்னா அதை எல்லாரும் ரசிச்சிருப்பாங்க. தொழிலதிபர்கள் மத்தியில இப்படிப் பேசறது அவங்களைக் குற்றம் சொல்ற மாதிரி இல்ல இருக்கு? நீங்க இந்தத் தலைப்பில பேச ஆரம்பிச்சதுமே, இந்தத் தலைப்பை விட்டுட்டு வேற எதையாவது பத்திப் பேசச் சொல்லி ஒரு துண்டுச் சீட்டில எழுதி உங்க கையில கொடுத்தேன். அப்படியும், நீங்க தலைப்பை மாத்தாம பேசிக்கிட்டிருந்தீங்க!"

"என் பேச்சைக் கேட்டு ஒரு சில பேராவது இதைப் பத்தி யோசிப்பாங்க, அது சமுதாயத்துக்கு நல்லதுன்னு நினைச்சுத்தான் அப்படிப் பேசினேன்" என்றார் கணேசன், விடாமல்.

'அப்படி நீங்க நினைச்சா, உங்களைப் போல முட்டாள் யாரும் இருக்க முடியாது' என்று மனதுக்குள் நினைத்துக் கொண்ட நித்யசீலன், "உங்களைக் கூப்பிட்டது என்னோட தப்புதான்!" என்று கூறித் தொலைபேசி இணைப்பைத் துண்டித்தார்.

'எங்கே என்ன பேச வேண்டும் என்ற புரிதல் இல்லாதவர்களைப் பேச்சுத் திறமை இல்லாதவர்கள் என்றுதான் கருத வேண்டும்' என்று நினைத்துக் கொண்டார் நித்யசீலன்.

பொருட்பால்
அரசியல் இயல்
அதிகாரம் 72
அவையறிதல்

குறள் 713:
அவையறியார் சொல்லல்மேற் கொள்பவர் சொல்லின்
வகையறியார் வல்லதூஉம் இல்.

பொருள்:
அவையின் தன்மை அறியாமல் சொற்களைப் பயன்படுத்துகிறவர்கள் சொற்களின் வகை அறியாதவர்கள், பேசும் திறமையும் இல்லாதவர்கள்.

அறத்துப்பால்                                                           காமத்துப்பால் 

No comments:

Post a Comment

1080. 'தன்மானத் தலைவரி'ன் திடீர் முடிவு!

தன் அரசியல் வாழ்க்கையின் துவக்கத்தில் இரண்டு மூன்று கட்சிகளில் இருந்து விட்டு, அங்கு தனக்கு உரிய மதிப்புக் கிடைக்கவில்லை என்பதால், 'மக்க...