பேச்சுவார்த்தை அநேகமாக நிறைவடைந்து விட்டது.
"டிஸ்கஷனுக்கு நீங்க நாலு பேர் வந்திருக்கீங்க. அதில மூணு பேர்தான் பேசினீங்க. ஒத்தர் வாயையே திறக்கலையே!" என்றார் நிர்மல்குமார்.
"அவர் எப்பவுமே அப்படித்தான். அவர் அதிகமாப் பேச மாட்டாரு!" என்றார் வேலு.
"அப்புறம் எதுக்கு அவரை அழைச்சுக்கிட்டு வந்தீங்க?" என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டார் நிர்மல்குமார்.
"அப்ப நாங்க வரோம். நாம பேசின விவரங்களை எங்க புரொப்ரைடர்கிட்ட சொல்றோம். அவர் உங்ககிட்ட பேசுவாரு" என்று கூறி விடைபெற்றார் வேலு.
அவர்கள் கிளம்பிச் சென்றதும், நிர்மல்குமார் பேச்சுவார்த்தையின்போது தன்னுடன் இருந்த மூத்த நிர்வாகிகளைப் பார்த்து, "என்ன நினைக்கிறீங்க? நம்ம புரொபோசலை ஏத்துப்பாங்களா?" என்றார்.
"நிச்சயமா சார்! உங்க பிரசன்டேஷன்ல அவங்க ரொம்ப இம்ப்ரஸ் ஆயிட்டாங்க!" என்றார் ஒரு மூத்த அதிகாரி.
"பேச்சு வார்த்தை எப்படிப் போச்சு? என்ன சொல்றாரு நிர்மல்குமார்?" என்றார் கருணா என்டர்பிரைசஸ் அதிபர் கருணானந்தம்.
"அவரோட புரொபோசல் அட்ராக்டிவா இருக்கறதாத்தான் நாங்க நினைக்கிறோம். ஆனா, சார்தான் வேற விதமா நினைக்கிறாரு!" என்றார் வேலு.
'சார்' என்று குறிப்பிடப்பட்ட செல்வமணியைப் பார்த்தார் கருணானந்தம்.
"நிர்மல்குமார்கிட்ட உண்மை இல்லை தம்பி! அவர் நம்மை ஏமாத்த நினைக்கிறாரு" என்றார் செல்வமணி.
"எப்படிச் சொல்றீங்க?" என்றார் கருணானந்தம்.
"நிர்மல்குமாரோட கண்ணைப் பாத்தே கண்டுபிடிச்சிருப்பாரு!" என்றார் பேச்சு வார்த்தையின் கலந்து கொண்ட இன்னொரு அதிகாரியான குணசேகர்.
"கேலியாப் பேசாதீங்க, குணசேகர். நீங்க இங்கே புதுசாச் சேர்ந்தவரு. செல்வமணி சார் என் அப்பா காலத்திலேந்தே இருக்காரு. 'இந்த நிறுவனத்தில என்ன மாற்றங்களை வேணும்னா செஞ்சுக்க, ஆனா, செல்வமணி சாரை மட்டும் எப்பவுமே உன் கூட வச்சுக்க'ன்னு என் அப்பா எங்கிட்ட சொல்லி இருக்காரு. கடந்த காலங்கள்ள, மனிதர்களைப் பத்தின அவரோட ஜட்ஜ்மென்ட் எப்படி நமக்கு உதவியா இருந்திருக்கு, தவறான முடிவுகளை எடுக்காம எப்படி நம்மைக் காப்பாத்தி இருக்குங்கறதையெல்லாம் வேலு மாதிரி மூத்த அதிகாரிகள்கிட்டக் கேட்டுத் தெரிஞ்சுக்கங்க!" என்றார் கருணானந்தம், கடுமையாக.
"சாரி சார்!" என்றார் குணசேகரன், சங்கடத்துடன்.
"தம்பி குணசேகரன் சொன்னது சரிதான். நான் கண்ணைப் பாத்துத்தான் தெரிஞ்சுக்கிட்டேன். நிர்மல்குமார் பொய்யான விஷயங்களைச் சொன்னப்ப, அது அவரோட கண்ல எனக்குத் தெரிஞ்சுது. அந்த சமயத்தில அவரோட அதிகாரிகள் கண்களைப் பாத்தப்பவும், 'நம் முதலாளி இப்படிப் பொய் சொல்றாரே'ன்னு அவங்க நினைச்சது, அவங்க கண்லேயும் தெரிஞ்சது!" என்றார் செல்வமணி, தன் கண்ணாடியைக் கழற்றி, அதைக் கைக்குட்டையால் துடைத்தபடியே.
பொருட்பால்
அமைச்சியல்
அதிகாரம் 71
குறிப்பறிதல்
குறள் 710:
நுண்ணியம் என்பார் அளக்குங்கோல் காணுங்கால்
கண்ணல்லது இல்லை பிற.
பொருள்:
நுண்ணறிவாளர் எனப்படுவோர்க்கு பிறரின் மனத்தில் உள்ளதை அளந்தறியும் கோலாகப் பயன்படுவது அவரது கண் அல்லாமல் வேறு எதுவுமில்லை.
No comments:
Post a Comment