Monday, June 12, 2023

711. பேச்சு எப்படி?

"பெரிய தமிழறிஞர்னு நினைச்சுக் கூப்பிட்டேன். சொதப்பிட்டாரே!" என்றார் அந்த நிறுவனத்தின் இலக்கிய மன்றச் செயலாளர் கண்ணன்.

"ஏன் நல்லாத்தானே பேசினாரு? எல்லாரும் ரசிச்சுக் கேட்டாங்களே!" என்றார் மன்ற உறுப்பினர் மணி.

"நல்லாப் பேசினாரா? முத்தழகன் யாரு? தமிழ் இலக்கியங்களைக் கரைச்சுக் குடிச்சவரு. அகநானூறு, புறநானூறு, திருக்குறள், கம்பராமாயணம், சிலப்பதிகாரம்னு எத்தனையோ காப்பியங்களைப் பத்தி அவர் சிறப்பாப் பேசி இருக்கலாம். ஆனா அதை விட்டுட்டு 'கற்கால வாழ்க்கையும், தற்கால வாழ்க்கையும்'னு உப்புச் சப்பில்லாத ஒரு தலைப்பை எடுத்துக்கிட்டு பொதுவா ஏதோ பேசிட்டுப் போயிட்டாரு. எனக்குக் கொஞ்சம் கூடத் திருப்தியில்லை!"

"தலைப்பை நீங்க கொடுக்கலியா?"

"இல்லை. அவரே பொருத்தமான ஒரு தலைப்பில பேசுவார்னு நினைச்சு தலைப்பை அவரையே தேர்ந்தெடுக்கச் சொன்னேன். அவர் இப்படிப் பண்ணுவார்னு தெரிஞ்சிருந்தா நானே ஒரு நல்ல தலைப்பைக் கொடுத்திருப்பேன்!" என்றார் கண்ணன் சலிப்புடன்.

அப்போது தொலைபேசி அடித்தது. 

"கூட்டத்தில கலந்துக்கிட்டவங்கதான் ஃபோன் பண்றாங்க. நிகழ்ச்சி நல்லா இல்லைன்னு என்னைத் திட்டப் போறாங்க!" என்றபடியே ரிசீவரை எடுத்தார் கண்ணன்.

"நான் அப்புறம் வரேன் சார்!" என்று கிளம்பினார் மணி.

டுத்த நாள் மணி கண்ணனைப் பார்க்க வந்தபோது அங்கே முத்தழகன் அமர்ந்திருந்தார்.

"இப்படி ஒரு வாய்ப்புக் கொடுத்ததுக்கு நன்றி சார். இலக்கியங்களைப் பத்தி நிறையப் பேசிட்டேன். உங்க ஆடியன்ஸைப் பார்த்ததும், 'இவங்கள்ளாம் பிசியான வாழ்க்கை வாழறவங்க. நிறைய பிரச்னைகள், மன அழுத்தங்கள், மனக்குறைகளோட இருப்பாங்க. இவங்ககிட்ட வாழ்க்கையைப் பத்திப் பொதுவான சில விஷயங்களைப் பத்திப் பேசினா நல்லா இருக்கும்னு நினைச்சேன். அப்பதான் 'கற்காலமும், தற்காலமும்' என்கிற இந்தத் தலைப்பு தோணிச்சு. நான் படிச்சதையும், என் அனுபவங்களையும் வச்சுப் பொதுவாப் பேசினேன். எல்லாரும் நல்லா ரசிச்சாங்கன்னு நினைக்கிறேன். எனக்கும் ரொம்ப திருப்தியா இருந்தது" என்றார் முத்தழகன்.

"ஆமாம் சார். உங்க பேச்சை எல்லாரும் ரசிச்சாங்க. உங்களை மறுபடி கூப்பிடணும்னு பல பேர் சொன்னாங்க" என்றார் கண்ணன்.

முத்தழகன் சென்றதும், "என்ன சார்? நேத்துதான் அவர் பேச்சு நல்லா இல்லை, எல்லாரும் திட்டப் போறாங்கன்னு சொல்லிக்கிட்டிருந்தீங்க. இன்னிக்கு எல்லாரும் பாராட்டினாங்க, மறுபடி கூப்பிடச் சொன்னாங்கன்னெல்லாம் சொல்றீங்களே! சும்மா அவரை உற்சாகப்படுத்ததுக்காகவா?" என்றார் மணி சற்று வியப்புடன்.

"இல்லை மணி. உண்மையாத்தான் சொன்னேன். அன்னிக்கு அவர் பேச்சை நான் சரியா கேக்கல. தலைப்பைக் கேட்டதுமே நல்லா இருக்காநுன்னு முடிவு பண்ணிட்டேன். மீட்டிங் தொடர்பா வேற சில வேலைகளுக்காக அடிக்கடி எழுந்து போயிட்டேன். அதனால பேச்சையும் முழுசாக் கேக்கல, ஆடியன்ஸ் ரியாக்‌ஷனையும் சரியா கவனிக்கல. நேத்து நீங்க போனப்பறம் நிறைய பேர் ஃபோன் பண்ணி அவர் பேச்சைப் பாராட்டினாங்க. அப்புறம்தான் எனக்கே தெளிவாச்சு!" என்றார் கண்ணன், குற்ற உணர்ச்சி தொனிக்கும் குலில்.

"முத்தழகன் இப்ப சொன்ன மாதிரி ஆடியன்ஸ் எப்படிப்பட்டவங்கன்னு பாத்துட்டு அதுக்கேத்த மாதிரி ஒரு தலைப்பைத் தேர்ந்தெடுத்து அருமையாப் பேசி எல்லாரையும் கவர்ந்துட்டார்னுதான் நான் அப்பவே நினைச்சேன். ஆனா நீங்க அவர் பேச்சு நல்லா இல்லேன்னு சொன்னப்ப உங்களோட விவாதம் பண்ண வேண்டாம்னு விட்டுட்டேன்!" என்றார் மணி."

பொருட்பால்
அரசியல் இயல்
அதிகாரம் 72
அவையறிதல்

குறள் 711:
அவையறிநது ஆராய்ந்து சொல்லுக சொல்லின்
தொகையறிந்த தூய்மை யவர்.

பொருள்:
ஒவ்வொரு சொல்லின் தன்மையும் உணர்ந்துள்ள நல்ல அறிஞர்கள், அவையில் கூடியிருப்போரின் தன்மையையும் உணர்ந்து அதற்கேற்ப ஆராய்ந்து பேசுவார்கள்.

அறத்துப்பால்                                                           காமத்துப்பால் 

No comments:

Post a Comment

1060. ஏன் உதவவில்லை?

"யார்கிட்ட உதவி கேக்கறதுன்னே தெரியல!" என்றான் பரந்தாமன். "யார்கிட்டயாவது கேட்டுத்தானே ஆகணும்? இன்னும் ரெண்டு நாளைக்குள்ள பணம்...