Friday, July 7, 2023

885. பெண் கேட்கச் சென்றபோது...

தண்டபாணி தன் தங்கை சுமதியின் வீட்டுக்குச் சென்று, தன் மகன் ராம்குமாருக்குச் சுமதியின் மகள் அனுராதாவைப் பெண் கேட்டபோது, சுமதியின் கணவன் பரமசிவம் சிரித்தான்.

"என்ன மச்சான் இது? நீங்க எந்தக் காலத்தில இருக்கீங்க? அத்தை பொண்ணைக் கட்டிக்கறது, மாமன் மகனைக் கட்டிக்கறதெல்லாம் இந்தக் காலத்தில சரியா வருமா? சினிமாவிலதான் இதையெல்லாம் இன்னும் தூக்கிப் புடிச்சுக்கிட்டிருக்காங்க. உறவுக்குள்ள கல்யாணம் செஞ்சுக்கிட்டா, அவங்களுக்குப் பிறக்கற குழந்தைங்களோட ஆரோக்கியம் பாதிக்கப்பட வாய்ப்பு இருக்கறதா விஞ்ஞான ரீதியாக் கண்டு பிடிச்சிருக்காங்க" என்றான் பரமசிவம்.

"உன் பொண்ணைக் கொடுக்க இஷ்டம் இல்லேன்னு சொல்லு. அதை விட்டுட்டு இல்லாத கதையெல்லாம் ஏன் சொல்ற?" என்றான் தண்டபாணி, கோபத்துடன்.

"என்ன மச்சான், மாப்பிள்ளைங்கற மரியாதை கூட இல்லாம பேசறீங்க?" என்றான் பரமசிவம், பொறுமையுடன்.

"உனக்கெல்லாம் என்னடா மரியாதை? உன் பொண்ணு யாரையோ காதலிக்கறா. அதை மறைக்கறதுக்காக, இல்லாத கதையெல்லாம் சொல்ற. பொண்ணை ஒழுங்கா வளர்க்கத் தெரியல. நீ எனக்கு விஞ்ஞானப் பாடம் எடுக்கறியா?" என்றான் பரமசிவம்.

"என்னடா சொன்ன?" என்றபடியே, பரமசிவம் தண்டபாணியின் சட்டையைப் பிடிக்க, சுமதி வேகமாக வந்து இருவரையும் விலக்கினாள்.

கோபமாக வெளியேறினான் தண்டபாணி.

அன்றே இரு குடும்பங்களுக்கும் இடையிலான உறவு முறிந்தது.

"இனிமே நீ உன் மகளைப் பாக்கப் போறேன்னு அந்த வீட்டுக்குப் போறதா இருந்தா, இங்கே திரும்பி வராதே!" என்று தன் தன் அம்மா பாக்கியலட்சுமியிடம் உறுதியாகச் சொல்லி விட்டான் பரமசிவம்.

"உனக்கும் மாப்பிள்ளைக்கும் சண்டைன்னா, அதுக்கு நான் ஏண்டா என் பொண்ணைப் பாக்காம இருக்கணும்?" என்று பாக்கியலட்சுமி கூறினாலும், மகனின் கோபத்துக்கு பயந்து, அவள் மகளைப் பார்க்கப் போகவில்லை.

பரமசிவமும் தன் மனைவி சுமதி தன் அம்மாவைப் பார்க்க தண்டபாணி வீட்டுக்குப் போகக் கூடாது என்று கூறி விட்டதால், அவளும் அம்மாவைப் பார்க்க வரவில்லை.

சில மாதங்கள் கழித்து, சுமதிக்கு உடல்நிலை சரியில்லை என்று பரமசிவத்திடமிருந்து செய்தி வந்தது. தண்டபாணி, அவன் மனைவி சாரதா, தாய் பாக்கியலட்சுமி ஆகிய மூவரும் பரமசிவத்தின் வீட்டுக்கு விரைந்தனர்.

கட்டிலில் சோர்வாகப் படுத்திருந்த மகள் சுமதியைப் பார்த்ததும், "என்னடி ஆச்சு உனக்கு?" என்று வெடித்து வந்த அழுகையுடன் கேட்டபடியே, சுமதியின் தலையில் ஆதரவாகக் கையை வைத்தாள் பாக்கயலட்சுமி. 

சுமதியின் கண்களில் நீர் வழிந்தது. ஏதோ பேச நினைத்து முடியாமல், அம்மாவின் கைகளைப் பிடித்துக் கொண்டாள் அவள்.

"என்ன ஆச்சு மாப்பிள்ளை?" என்றான் தண்டபாணி, பரமசிவத்தைப் பார்த்து.

"கொஞ்ச நாளாவே கொஞ்சம் சோர்வா இருந்தா. அம்மாவைப் பார்க்க முடியலியேன்னு வருத்தமா இருக்கும்னு நினைச்சேன். சரி, உன் அண்ணன் வீட்டுக்குப் போய் உன் அம்மாவைப் பாத்துட்டு வான்னு சொல்லலாம்னு நினைச்சேன். ஆனா அதுக்குள்ள, ஒருநாள் திடீர்னு மயக்கம் போட்டு விழுந்துட்டா. அவளுக்கு ஏற்கெனவே சர்க்கரை வியாதி இருந்ததா, கொஞ்ச நாளா சரியா சாப்பிடாததால, சர்க்கரை அதிகமாயிடுச்சு. ஆஸ்பத்திரியில சேத்தேன். அங்கே ஒரு வாரம் சிகிச்சை கொடுத்து அனுப்பி இருக்காங்க. சர்க்கரை அதிகமா இருக்கறதால, இனிமே தினம் ரெண்டு வேளை இன்சுலின் ஏத்தணும், உடம்பை ஜாக்கிரதையாப் பாத்துக்கணும். இல்லேன்னா உயிருக்கே ஆபத்தாயிடும்னு டாக்டர் சொல்லி இருக்காரு" என்றான் பரமசிவம். பேசும்போதே அவன் குரல் தழுதழுத்தது.

"அடப்பாவிங்களா! உங்களுக்குள்ள போட்ட சண்டையால, என் பொண்ணு உயிருக்கே ஆபத்து ஏற்படற நிலைக்குக் கொண்டு வந்துட்டீங்களே! ஏன் மாப்பிள்ளை, ஆஸ்பத்திரியில சேத்தப்பறம் கூடவா எனக்கு சொல்லி அனுப்பக் கூடாது? உயிரே போயிடுங்கற நிலைமை வந்தாதான், நீங்க மனசு மாறுவீங்களா?" என்று அழுகையுடனும், ஆத்திரத்துடனும் கத்தினாள் பாக்கியலட்சுமி.

தண்டபாணியும், பரமசிவமும் ஏதும் பேசாமல் தலைகுனிந்து நின்றனர்.

பொருட்பால்
நட்பியல்
அதிகாரம் 89
உட்பகை

குறள் 885:
உறல்முறையான் உட்பகை தோன்றின் இறல்முறையான்
ஏதம் பலவும் தரும்.

பொருள்: 
உறவுமுறையோடு உட்பகை உண்டாகுமானால், அது ஒருவனுக்கு மரணம் போன்ற கொடிய துன்பம் பலவற்றையும் கொடுக்கும்.
அறத்துப்பால்                                                           காமத்துப்பால் 

Thursday, July 6, 2023

884. வாசுவின் கோபம்

"உன் அண்ணன், தனக்கு ரயில்வேயில உயர் அதிகாரி ஒத்தரைத் தெரியும், அவர் மூலமா எமர்ஜன்சி கோட்டாவில ரிசர்வேஷனை கன்ஃபர்ம் பண்ணிடறேன்னு சொன்னதாலதானே, மூட்டை முடிச்சையெல்லாம் தூக்கிக்கிட்டு ஸ்டேஷனுக்குப் போனோம்? ஆனா, டிக்கட் கன்ஃபர்ம் ஆகல. மறுபடி பெட்டியையெல்லாம் தூக்கிக்கிட்டு வீட்டுக்கு வரும்படி ஆயிடுச்சு. என்னைத் திட்டம் போட்டுப் பழி வாங்கி இருக்காரு உன் அண்ணன்!" என்றான் வாசு, கோபத்துடன்.

"அவன் எதுக்குங்க உங்களைப் பழி வாங்க நினைக்கணும்? முயற்சி செஞ்சிருக்கான், முடியல. இதுக்கு முன்னால சில பேருக்கு அவன் இது மாதிரி செஞ்சு கொடுத்திருக்கான். நம்பிக்கை இல்லாம ஸ்டேஷனுக்குப் போனவங்க, ரிசர்வேஷன் கன்ஃபர்ம் ஆனதைப் பார்த்து ஆச்சரியப்பட்டிருக்காங்க!" என்றாள் அவன் மனைவி புவனா.

"அதனாலதான் சொல்றேன். என்னைத் திட்டம் போட்டுப் பழி வாங்கி இருக்கார்னு. ஒருவேளை, நம்ம கல்யாணத்தில, என் வீட்டுக்காரங்க யாராவது அவர்கிட்டக் கோபமாப் பேசி இருப்பாங்க. அதுக்காக, என்னைப் பழி வாங்கி இருக்காரு!"

"அது மாதிரி எதுவும் இல்லை. ஏன் இப்படி நினைக்கிறீங்க?" என்று புவனா கூறியதை வாசு ஏற்றுக் கொள்ளவில்லை.

அடுத்த நாள், புவனாவின் அண்ணன் கணேஷ் அவர்கள் வீட்டுக்கு வந்து, எமர்ஜன்சி கோட்டாவில் கன்ஃபர்ம் செய்வதாகச் சொன்ன அதிகாரியால் ஏதோ காரணத்தால் அப்படிச் செய்ய முடியாமல் போய் விட்டது என்று சொல்லி, வாசுவிடம் மன்னிப்புக் கேட்டுக் கொண்ட பிறகும், வாசு சமாதானமடையவில்லை.

அதற்குப் பிறகு, எத்தனையோ வருடங்கள் ஆகியும், கணேஷின் மீதிருந்த கோபம், வாசுவின் மனதை விட்டு நீங்கவில்லை.

"நீங்க இன்னும் என் அண்ணன் மேல விரோத பாவத்தோடதான் இருக்கீங்க. இப்படி இருக்கறது உங்களுக்கே நல்லது இல்லைங்க" என்று புவனா பலமுறை வாசுவிடம் கூறி இருக்கிறாள்.

"அப்படியெல்லாம் எதுவும் இல்லை" என்று வாசு உதட்டளில் மறுத்தாலும், தன் மனதில் கணேஷன் மீது ஒரு விரோத பாவம் இருப்பதை அவனால் உணர முடிந்தது.

"நம்ம இருபத்தைந்தாவது திருமண விழாவுக்குக் கூப்பிட்டிருந்தவங்கள்ள பல பேர் வரல. என் தம்பி கூட வரல. ஏன்னு தெரியல!" என்றான் வாசு.

"நீங்க இப்படி மனசில விரோத பாவத்தோட இருந்தா, எப்படி வருவாங்க?" என்றாள் புவனா.

"என்ன சொல்ற நீ? எனக்கும் என் தம்பிக்கும் எந்தப் பிரச்னையும் இல்லேயே! அவன் ஏன் வரல?"

"அதை நீங்க அவர்கிட்டதான் கேக்கணும். ஆனா, நான் கவனிச்ச ஒரு விஷயத்தை சொல்றேன். நீங்க என் அண்ணனை விரோதியா நினைக்க ஆரம்பிச்சதிலேந்தே, மற்றவங்களோட உங்களுக்கு இருந்த நெருக்கமும் குறைய ஆரம்பிச்சுடுச்சு. ஆரம்பத்தில உங்களுக்கு ரொம்ப நெருக்கமா இருந்த உங்க தம்பி, கொஞ்சம் கொஞ்சமா விலகிப் போய்க்கிட்டிருக்கறதை நான் கவனிச்சிருக்கேன். இனிமேலாவது, யார் மேலேயும் மனசில விரோதம் வச்சுக்காம, மத்தவங்ககிட்ட குற்றம், குறை இருந்தாக் கூட, அதையெல்லாம் உடனே மறந்து, இயல்பா இருக்கப் பழகுங்க. நான் உங்களுக்கு உபதேசம் பண்றதா நினைக்காதீங்க. நான் பார்த்ததை வச்சு சொல்றேன்!" என்றாள் புவனா.

பொருட்பால்
நட்பியல்
அதிகாரம் 89
உட்பகை

குறள் 884:
மனமாணா உட்பகை தோன்றின் இனமாணா
ஏதம் பலவும் தரும்.

பொருள்: 
மனம் திருந்தாத அளவுக்கு உட்பகை விளைவிக்கும் உணர்வு ஒருவனுக்கு ஏற்பட்டு விடுமானால், அது அவனைச் சேர்ந்தவர்களையே பகைவராக்கும் கேட்டினை உண்டாக்கி விடும்.
அறத்துப்பால்                                                           காமத்துப்பால் 

883. ஏன் இந்தக் கடுமை?

"என்னங்க, இந்த ராஜவேல் உங்களைப் பத்தியே தப்பாப் பேசி இருக்காரு? என்ன செய்யப் போறீங்க?" என்றார் வ.ம.க. கட்சியின் பொதுச் செயலாளர் அன்பரசன்.

"ஏதோ உணர்ச்சி வசப்பட்டுப் பேசி இருப்பார்னு நினைக்கறேன். விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்புங்க. வருத்தம் தெரிவிச்சார்னா, மன்னிச்சு விட்டுடலாம்!" என்றார் கட்சித் தலைவர் மாசிலாமணி.

"என்னங்க இது? இவ்வளவு மென்மையா இருக்கீங்க? இப்படிப் பேசினதுக்கு, அவரைக் கட்சியை விட்டே தூக்கணும். அப்பதான் மத்தவங்களுக்கு ஒரு பயம் இருககும்."

"எப்பவாவது உணர்ச்சி வசப்பட்டுத் தப்பா எதையாவது பேசறது எல்லாருக்கும் இயல்புதான். அவர் கட்சியில ரொம்ப வருஷமா இருக்காரு. நல்ல உழைப்பாளி. ஒரு வாய்ப்புக் கொடுக்கலாம். மறுபடி இப்படிப் பேசினார்னா, அப்ப நடவடிக்கை எடுக்கலாம். ஆனா, அப்படி நடக்காதுன்னு நினைக்கறேன்!" என்றார் மாசிலாமணி, சிரித்தபடி.

"தங்கப்பன் பேசினதைப் பாத்தீங்க இல்ல?" என்றார் மாசிலாமணி.

"கொஞ்சம் அதிகமாத்தான் பேசி இருக்காரு. உடனே வருத்தம் தெரிவிச்சுட்டாரே!" என்றார் அன்பரசன்.

"வருத்தம் தெரிவிச்சா சரியாப் போச்சா? கட்சிக் கட்டுப்பாட்டை மீறி, கட்சிப் பெயருக்குக் களங்கம் ஏற்படுத்தற மாதிரி பேசினார்னு சொல்லி, அவரைக் கட்சியிலேந்து நீக்கிடுங்க!" என்றார் மாசிலாமணி.

"என்னங்க இது? அன்னிக்கு ராஜவேல் விஷயத்தில அவ்வளவு மென்மையா நடந்துக்கிட்டீங்க. அவர் உங்களையே தாக்கிப் பேசினாரு. இவர் கட்சியோட செயல்பாடு பற்றிப் பொதுவாத்தான் பேசி இருக்காரு. ராஜவேல் பேசினதோட ஒப்பிடச்சே, தங்கப்பன் பேசினது ஒண்ணுமே இல்லை. ஏன் தங்கப்பன் விஷயத்தில இவ்வளவு கடுமை காட்டறீங்க?" என்றார் அன்பரசன், புரியாமல்.

"ராஜவேல் என்னைத்தான் விமரிசனம் செஞ்சார். அது பரவாயில்ல. தங்கப்பன் கட்சிக்கு எதிராப் பேசி இருக்காரு. அதை மன்னிக்க முடியாது" என்றார் மாசிலாமணி.

கட்சிக்குள் மாசிலாமணிக்கு எதிரான ஒரு குழுவை உருவாக்கிக் கொண்டிருந்த தங்கப்பனைக் கட்சியிலிருந்து எப்படி வெளியேற்றுவது என்று யோசித்துக் கொண்டிருந்த மாசிலாமணி, இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டதை அவர் அன்பரசனிடம் வெளிப்படையாகச் சொல்லவில்லை!

பொருட்பால்
நட்பியல்
அதிகாரம் 89
உட்பகை

குறள் 883:
உட்பகை அஞ்சித்தற் காக்க உலைவிடத்து
மட்பகையின் மாணத் தெறும்.

பொருள்: 
உட்பகைக்கு அஞ்சித் தம்மைக் காத்துக் கொள்ள வேண்டும்; காக்காது போனால், நமக்குத் தளர்வு வந்தபோது, மண்கலத்தை அறுக்கும் கைக்கருவிபோல உட்பகை நம்மை உறுதியாக அழித்து விடும்.
அறத்துப்பால்                                                           காமத்துப்பால் 

Wednesday, July 5, 2023

882. நள்ளிரவில் நிகழ்ந்த மாற்றம்!

மாநில சட்டமன்றத் தேர்தலில், இரண்டு முக்கிய கட்சிகளுக்குமே பெரும்பான்மைக்குத் தேவையான இடங்கள் கிடைக்கவில்லை. இரு கட்சிகளும் கிட்டத்தட்ட சமமான அளவில் இடங்களைப் பெற்றிருந்தன.

அந்த நிலையில், ம.ஜ.க கட்சியின் தலைவர் திருமூர்த்தி விரைவாகச் செயல்பட்டு, மூன்று சிறிய கட்சிகளின் ஆதரவைப் பெற்று, பெரும்பான்மை சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவை உருவாக்கி விட்டார்.

திருமூர்த்தி தன் ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்களின் பட்டியலை ஆளுனரிடம் கொடுத்துத் தன்னை முதல்வராகப் பதவி ஏற்க அழைப்பு விடுக்க வேண்டும் என்று கோரினார். அவர் கோரிக்கையைப் பரிசீலித்து விரைவிலேயே முடிவை அறிவிப்பதாக ஆளுனர் அறிவித்தார்.

"ஆளுனர் நாளைக்கு என்னை முதல்வரா நியமிச்சுக் கடிதம் கொடுத்துடுவார்னு நினைக்கறேன். நாளைக்கே பதவி ஏற்பு விழாவை வச்சுக்கலாம். ரொம்பக் கஷ்டப்பட்டு, இந்த முறை ஆட்சியைப் பிடிச்சிருக்கோம். எல்லாம் நல்லபடியா நடக்கணும். கட்சியில எனக்குப் போட்டியா இருந்த தனபால் என் தலைமையை ஏத்துக்கிட்டாலும், அவன் எப்ப என்னைக் கவுத்துடுவானோன்னு எனக்கு ஒரு பயம் இருந்துக்கிட்டிருக்கு. அவன் மேல மட்டும் ஒரு கண் வச்சுக்க" என்றார் திருமூர்த்தி, அவரது  வலது கரம் என்று கருதப்படும் ஆறுமுகத்திடம்.

"என்ன ஆறுமுகம்? எதுக்கு இந்த அதிகாலையில ஃபோன் பண்ற?" என்றார் திருமூர்த்தி, அதிகாலை உறக்கத்திலிருந்து எழுப்பப்பட்ட எரிச்சலுடன்.

"தலைவரே! குடி முழுகிப் போச்சு! நம்ம கட்சி எம் எல் ஏக்கள் 20 பேர்  நள்ளிவில ஆளுனரைச் சந்திச்சு, இ.ம.க. கட்சித் தலைவர் பரந்தாமனுக்கு ஆதரவு கொடுக்கறதாக் கடிதம் கொடுத்திருக்காங்க. அதனால, ஆளுனர் இ.ம.க.வுக்குப் பெரும்பான்மை இருக்குன்னு தீர்மானிச்சு, பரந்தாமனுக்கு அதிகாலையிலேயே பதவிப் பிரமாணம் செஞ்சு வச்சுட்டாரு!" என்றான் ஆறுமுகம், பரபரப்புடன்.

"இது எப்படி நடந்தது? நான் சந்தேகப்பட்டது சரியாப் போச்சு. தனபால் தன் புத்தியைக் காட்டிட்டான். கட்சிக்கு துரோகம் பண்ணி..."

"ஐயா! ஒரு நிமிஷம். தனபால் இப்பவும் நம்ம கட்சியிலதான் இருக்காரு. உங்களுக்கு ஆதரவாத்தான் இருக்காரு. துரோகம் பண்ணினது அவர் இல்ல, உங்க தம்பி பையன்தான்!" என்றான் ஆறுமுகம்.

"என்னது? சதீஷா?" என்றார் திருமூர்த்தி, அதிர்ச்சியுடன்.

"ஆமாம். அவர்தான் நம்ம கட்சியிலேந்து 20 எம் எல் ஏக்களைக் கூட்டிக்கிட்டுப் போய் ஆளுனரைச் சந்திச்சவரு. அதுக்குப் பரிசா, அவருக்குத் துணை முதல்வர் பதவி கொடுத்திருக்காங்க!" என்றான் ஆறுமுகம்.

பொருட்பால்
நட்பியல்
அதிகாரம் 89
உட்பகை

குறள் 882:
வாள்போல பகைவரை அஞ்சற்க அஞ்சுக
கேள்போல் பகைவர் தொடர்பு.

பொருள்: 
வாளைப் போல் வெளிப்படையான பகைவர்க்கு அஞ்ச வேண்டியதில்லை, ஆனால் உறவினரைப் போல் இருந்து, உட்பகை கொண்டவரின் தொடர்புக்கு அஞ்ச வேண்டும்.
அறத்துப்பால்                                                           காமத்துப்பால் 

Monday, July 3, 2023

881. ஆதரவு கொடுத்தவர்

"நீ பொறந்த அஞ்சாறு மாசத்திலேயே, உன் அப்பா இந்த உலகத்தை விட்டுட்டுப் போயிட்டாரு. அப்ப உன் மாமா மட்டும் இல்லேன்னா, என்னால நிலைமையைச் சமாளிச்சு, உன்னை ஆளாக்கி இருக்கவே முடியாது" என்று கணபதியின் அம்மா சரசு, அவனிடம் அடிக்கடி சொல்லி இருக்கிறாள்.

அம்மா சொன்னதை ஏற்றுத் தன் மாமா பரஞ்சோதியிடம் நன்றியுடனும், விசுவாசத்துடனும் இருந்து வந்தான் கணபதி.

கணபதி படித்துப் பட்டம் வாங்கிய பின், சொந்தமாகத் தொழில் ஆரம்பித்தான்.

"உன் மாமாவை உன் கம்பெனியில வேலைக்குச் சேத்துக்கடா!" என்றாள் சரசு.

தன் மாமா ஏன் எந்த வேலைக்கும் செல்லவில்லை என்று முன்பே ஒருமுறை கணபதி சரசுவிடம் கேட்டபோது, தங்கள் சொத்துக்களைப் பார்த்துக் கொள்ள வேண்டி இருப்பதால்தான், பரஞ்சோதி வேலைக்குச் செல்லவில்லை என்று சரசு சொல்லி இருந்தாள்.

அம்மா சொன்னதால், தன் தொழில் நிறுவனத்தைப் பார்த்துக் கொள்ளும் மேலாளராகப் பரஞ்சோதியை நியமித்தான் கணபதி.

"அம்மா! மாமாவை வேலையை விட்டு நீக்கிட்டேன்!" என்றான் கணபதி, சரசுவிடம்.

"ஏண்டா? அவர் உன் கம்பெனியில் வேலை பாக்க ஆரம்பிச்சு ஆறு மாசம் கூட ஆகி இருக்காதே!" என்றாள் சரசு, அதிர்ச்சியுடன்.

"அவரை நான் வேலைக்கு வச்சதிலிருந்தே, அவர் பொய்க்கணக்கு எழுதி, கம்பெனி பணத்தைக் கையாடிக்கிட்டு இருந்திருக்காரு. என் கம்பெனியில வேலை செய்யறவங்க இதைப் பத்தி முன்னாடியே எங்கிட்ட சொன்னாங்க. இன்னிக்கு நானே அவரைக் கையும் களவுமாப் பிடிச்சுட்டேன். அதனால, அவரை வேலையை விட்டுப் போகச் சொல்லிட்டேன். அதோட, நம் குடும்பச் சொத்துக்களையெல்லாம் இனிமே அவர் பாத்துக்க வேண்டாம்னும் சொல்லிட்டேன்."

"ஏண்டா அப்படிச் சொன்ன? உங்கப்பா நம்மைத் தவிக்க விட்டுட்டுப் போனப்பறம், உன் மாமா மட்டும் இல்லைன்னா..."

"போதும்மா! இதை நான் ஆயிரம் தடவை கேட்டுட்டேன். அவர் நமக்குத் துணையா இருந்ததுக்கு அவர் மேல எனக்கு நன்றி இருக்கு. ஆனா, அவர் நம் சொத்துக்களைப் பாத்துக்கறேன்னு சொல்லிட்டு, நம் வருமானத்தில பெரும் பகுதியை எடுத்துக்கிட்டிருந்திருக்காரு. இதைப் பத்தி ஏற்கெனவே சில பேர் எங்கிட்ட சொன்னப்பவும், அவர் நமக்கு ஆதரவா இருந்திருக்கார்னுதான் பேசாம இருந்துட்டேன். இப்ப, அவர் பணம் கையாடற வரைக்கும் போனப்பறம், அவரோட உறவைத் துண்டிக்கறதைத் தவிர வேற வழியில்லை" என்றான் கணபதி.

"நிழல் கொடுத்த மரத்தை வெட்டக் கூடாதுடா!" என்றாள் சரசு.

"நாம மரத்தை வெட்டலேம்மா. அதோட நிழல்லேந்து விலகி வந்துட்டோம், அவ்வளவுதான். சில மரங்களோட நிழல்ல உக்காந்திருக்கறது உடம்புக்கு நல்லது இல்லேன்னு ஊர்ல சொல்லுவாங்க இல்ல? அது மாதிரி!" என்றான் கணபதி.

பொருட்பால்
நட்பியல்
அதிகாரம் 89
உட்பகை

குறள் 881:
நிழல்நீரும் இன்னாத இன்னா தமர்நீரும்
இன்னாவாம் இன்னா செயின்.

பொருள்: 
இன்பம் தரும் நிழலும், நீரும் நோய் செய்வனவாக இருந்தால், தீயனவே ஆகும். அதுபோலவே, சுற்றத்தாரின் தன்மைகளும் துன்பம் தருவானால், தீயனவே ஆகும்.
அறத்துப்பால்                                                           காமத்துப்பால் 

Saturday, July 1, 2023

880. முன்னாள் பார்ட்னர்

"தம்பிதுரை என் பார்ட்னரா இருந்தவர்தான். அவர் கணக்கில மோசடி பண்ணி, என்னை ஏமாத்தினதைக் கண்டுபிடிச்சு, அவரை நீக்கிட்டு, நான் இந்த நிறுவனத்தைத் தனியா நடத்திக்கிட்டிருக்கேன். ஆனா, வெளியில போனதிலேந்து, அவர் எனக்குத் தொந்தரவு கொடுத்துக்கிட்டே இருக்காரு" என்றார் சிவசுப்பிரமணியன்.

"என்ன மாதிரி தொந்தரவு?" என்றார் சண்முகம். சண்முகம் சிவசுப்பிரமணியனின் நிறுவனத்துக்கு மூலப்பொருட்கள் சப்ளை செய்பவர்.

"பலவிதமான தொந்தரவுகள். உதாரணமா, எனக்கு நிறையக் கடன் இருக்கு. சப்ளையர்களுக்குக் கொடுக்க வேண்டிய பணத்தை என்னால சரியாக் கொடுக்க முடியாதுன்னு ஒரு வதந்தியை சந்தையில பரப்பி இருக்காரு. இது உண்மையான்னு தெரிஞ்சுக்க, நீங்க என்னைப் பார்க்க நேரில வந்திருக்கீங்க. எத்தனை பேர் இந்த வதந்தியை நம்பி, என்னோட வியாபாரத் தொடர்பே வச்சுக்க வேண்டாம்னு முடிவு செஞ்சிருக்காங்களோ!"

"வேற என்ன தொந்தரவுகள்ளாம் கொடுப்பாரு?"

"வியாபாரத்தைக் கெடுக்க என்னென்ன செய்ய முடியுமோ, அதெல்லாம் செய்வாரு. என் வாடிக்கையாளர்கள்கிட்ட போய், சில வாடிக்கையாளர்களுக்கு மட்டும் நான் கடன்ல பொருட்களை சப்ளை பண்றதா சொல்லி, அவங்களுக்கும் அது மாதிரி கடன்ல பொருட்களை சப்ளை பண்ணச் சொல்லி எங்கிட்ட கேட்கச் சொல்லித் தூண்டி விடுவாரு. நான் கணக்கில காட்டாம வியாபாரம் செய்யறதா இன்கம் டாக்ஸ், சேல்ஸ் டாக்ஸ் அதிகாரிகளுக்கெல்லாம் மொட்டைக் கடுதாசி எழுதிப் போடுவாரு. நான் குழந்தைத் தொழிலாளர்களை வேலைக்கு வச்சிருக்கேன்னு லேபர் டிபார்ட்மென்ட்டுக்கு எழுதுவாரு."

"அடப்பாவமே!"

"அது மட்டுமா? என் ஆஃபீஸ்ல வேலை செஞ்ச ஒரு பொண்ணோட எனக்குத் தொடர்பு இருக்கறதா ஒரு பொய்யைப் பரப்பினாரு. என் மனைவி இதை நம்பல. ஆனா, அந்தப் பொண்ணு பாவம், அந்த அவதூறுக்கு பயந்து வேலையை விட்டுப் போயிட்டாங்க."

"இப்படிப்பட்ட எதிரிகளை விட்டு வைக்கக் கூடாது சார்!"  என்றார் சண்முகம்.

"என்ன செய்ய முடியும்?"

"போலீஸ்ல புகார் கொடுக்கணும். அல்லது, ஏதாவது செஞ்சு அவரை முடக்கணும். இந்த மாதிரி எதிரிகளோட வாழறது உயிர்க்கொல்லி நோய்களோட வாழற மாதிரி. நம்ம வாழ்க்கைக்கே அச்சுறுத்தலானவங்க இவங்க!" என்றார் சண்முகம்.

பொருட்பால்
நட்பியல்
அதிகாரம் 88
பகைத்திறன் தெரிதல் (பகையின் தன்மையை அறிதல்)

குறள் 880:
உயிர்ப்ப உளரல்லர் மன்ற செயிர்ப்பவர்
செம்மல் சிதைக்கலா தார்.

பொருள்: 
பகைவரின் சக்தியை அழிக்க முடியாதவர்கள், மூச்சு இருக்கும் வரை உயிர் வாழ்வார்கள் என்று கூற முடியாது.
அறத்துப்பால்                                                           காமத்துப்பால் 

879. இலக்கிய அணிச் செயலாளர்

நன்மாறன் அந்தக் கட்சியில் சேர்ந்த சிறிது காலத்துக்குள்ளேயே, கட்சித் தலைவரின் நன்மதிப்பைப் பெற்று விட்டான். அவனுடைய பேச்சுத் திறமை, கட்சி மேடைகளில் உரையாற்ற அவனுக்கு நிறைய வாய்ப்புக்களைப் பெற்றுத் தந்தது.

"தலைவர் நன்மாறனுக்கு ரொம்பவும்தான் இடம் கொடுக்கறாரு. போற போக்கைப் பாத்தா, அவன் நம்மையெல்லாம் தாண்டிப் போயிடுவான் போல இருக்கே!" என்றார் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான ஏழுமலை.

"தலைவருக்கே சவாலாக வந்தாலும் ஆச்சரியப்படறதுக்கில்ல!" என்றார் மற்றொரு தலைவரான நாகப்பன்.

"தலைவர் அதுக்கெல்லாம் இடம் கொடுக்க மாட்டார்" என்றார் கரிகாலன் என்ற மற்றொரு மூத்த தலைவர்.

இந்த நிலையில், நன்மாறன் கட்சியில் தனக்கென்று ஒரு ஆதரவு அடித்தளத்தை அமைத்துக் கொண்டிருப்பதாகச் செய்திகள் வெளியாகின

"தலைவர் இன்னுமா வேடிக்கை பாத்துக்கிட்டிருக்காரு? அவனைக் கட்சியை விட்டுத் தூக்க வேண்டாம்?" என்றார் ஏழுமலை, ஆவேசத்துடன்.

"இப்ப அவனைக் கட்சியை விட்டுத் தூக்கினா, கட்சிக்குள்ள அவன் வளருவதைப் பொறுக்காமதான், தலைவர் அவனைக் கட்சியை விட்டு நீக்கிட்டதா சொல்லுவாங்க. அதோட, அவன் மேல அனுதாபம் வரும். நம்ம கட்சியிலேந்தே சில பேர் அவன் பின்னால போவாங்க. அதனால, தலைவர் அப்படிச் செய்ய மாட்டாரு" என்றார் நாகப்பன்.

"சட்டமன்றத் தேர்தல்ல அவனுக்கு சீட் கொடுத்து, அவன் ஜெயிச்சான்னா, அவனுக்கு அமைச்சர் பதவி கொடுத்து அழகு பாப்பாரோ என்னவோ!" என்றார் ஏழுமலை, கேலியாக.

"ஆபத்தானவங்களைப் பக்கத்தில வச்சுக்கறது கூட ஒரு நல்ல உத்திதான்!" என்றார் நாகப்பன்.

"நீங்க யாருமே தலைவரைப் புரிஞ்சுக்கல. தலைவரோட அணுகுமுறையே வித்தியாசமா இருக்கும். கட்சியில தன்னிச்சையா செல்படறவங்களை, அவர் விட்டு வைக்க மாட்டார். அவங்க தனக்குச் சவாலா வருவாங்கன்னு அவருக்குத் தெரியும். அவங்களை முளையிலேயே கிள்ளி எறிஞ்சுடுவாரு. இதுக்கு எத்தனையோ உதாரணங்களை என்னால சொல்ல முடியும்!" என்றார் கரிகாலன்.

'நீங்களே ஒரு உதாரணம்தானே! கட்சியில இரண்டாம் இடத்தில இருந்துக்கிட்டு, தலைவரைக் கவிழ்க்கப் பாத்த உங்களை ஒண்ணுமில்லாம ஆக்கி, எங்களோட உக்காந்து பேசிக்கிட்டிருக்கிற நிலைக்குக் கொண்டு வந்துட்டாரே!' என்று நினைத்துக் கொண்டார் நாகப்பன்.

சில நாட்கள் கழித்து, நன்மாறன் கட்சியின் இலக்கிய அணிச் செயலாளராக நியமிக்கப்பட்டதாகச் செய்தி வந்தது.

அந்தக் கட்சியில் ஒருவர் இலக்கிய அணிச் செயலாளராக நியமிக்கப்பட்டால், கட்சிக்குள் அவருடைய அரசியல் செயல்பாடுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டதாகப் பொருள். அவரிடமிருந்து ஒதுங்கியே இருக்க வேண்டும் என்று கட்சியில் அனைவருக்கும் கொடுக்கப்படும் சமிக்ஞை அது.

"நான் சொன்னேன் இல்ல, தலைவர் அவனை விட்டு வைக்க மாட்டார்னு? இனிமே அவன் ஆள் இல்லாத அரங்குகள்ள, 'தலைவரோட வெற்றிக்குக் காரணம் அவரது அரசியல் ஆளுமையா, அல்லது நிர்வாகத் திறமையா?'ன்னு பட்டிமன்றப் பேச்சாளர்களை வச்சு, பட்டிமன்றங்கள் நடத்திக்கிட்டிருக்க வேண்டியதுதான். கூட்டச் செலவுக்குக் கூடக் கட்சியில பணம் கொடுக்க மாட்டாங்க!' என்று சொல்லிச் சிரித்தார் கரிகாலன்.

பொருட்பால்
நட்பியல்
அதிகாரம் 88
பகைத்திறன் தெரிதல் (பகையின் தன்மையை அறிதல்)

குறள் 879:
இளைதாக முள்மரம் கொல்க களையுநர்
கைகொல்லும் காழ்த்த இடத்து.

பொருள்: 
முள் மரத்தை இளையதாக இருக்கும்போதே வெட்ட வேண்டும், காழ்ப்பு ஏறி முதிர்ந்த நிலையில், வெட்டுகின்றவரின் கையை அது வருத்தும்.
அறத்துப்பால்                                                           காமத்துப்பால் 

1080. 'தன்மானத் தலைவரி'ன் திடீர் முடிவு!

தன் அரசியல் வாழ்க்கையின் துவக்கத்தில் இரண்டு மூன்று கட்சிகளில் இருந்து விட்டு, அங்கு தனக்கு உரிய மதிப்புக் கிடைக்கவில்லை என்பதால், 'மக்க...