Friday, June 30, 2023

878. கபால நாட்டின் அச்சுறுத்தல்

"அரசே! கபால நாட்டுப் படைகள் மீண்டும் நம் எல்லை தாண்டி வந்து நம் வீரர்களைத் தாக்கி இருக்கிறார்கள். இதற்கு நாம் உடனே பதிலடி கொடுக்க வேண்டும்" என்றார் அமைச்சர்.

"அமைச்சரே! கபால நாடு நம்மைவிடப் பெரிய நாடு. அவர்கள் படைபலம் நம் படைபலத்தை விட மிகவும் அதிகம். அவர்களை எதிர்த்துப் போரிடும் வலிமை நமக்கில்லை. எனவே அவர்களுடன் சமாதான உடன்படிக்கை செய்து கொள்வதைத் தவிர நமக்கு வேறு வழியில்லை" என்றார் அரசர்.

"தாங்கள் கூறுவது சரிதான். நாம் கபால நாட்டுக்கு ஒரு தூதரை உடனே அனுப்பி சமாதானம் பேச வேண்டும்."

"மிகச் சரியாகச் சொன்னீர்கள் அமைச்சரே! அவர்களுடன் சமாதானம் பேசி அவர்கள் என்ன விரும்புகிறார்கள் என்பதை அறிந்து வர ஒரு சிறந்த தூதரை நாம் அனுப்ப வேண்டும். இந்தப் பணியை நீங்களே மேற்கொள்ள வேண்டும் என்பது என் விருப்பம்" என்றார் அரசர்.

"தங்கள் விருப்பம் அரசே!" என்றார் அமைச்சர்.

"என்ன அமைச்சரே! உங்கள் தூதுப் பயணம் எவ்வாறு அமைந்தது?" என்றார் அரசர்.

"மகிழ்ச்சிகரமாக இல்லை அரசே! சமாதானத்துக்கு அவர்கள் விதிக்கும் நிபந்தனைகளை சுயமரியாதை உள்ள எந்த ஒரு நாட்டாலும் ஏற்றுக் கொள்ள முடியாது."

"நல்லது. நாம் அந்த நிபந்தனைகளை ஏற்றுக் கொள்ள வேண்டாம்!" என்றார் அரசர் சிரித்தபடி.

"அப்படியானால்..." என்றார் அமைச்சர் குழப்பத்துடன்.

"அமைச்சரே! நீங்கள் கபால நாட்டுக்குச் சென்றபோது இங்கே சில விஷயங்கள் நடந்தன. நம் நான்கு அண்டை நாடுகளுக்கும் இரண்டு இளவரசர்களையும் அனுப்பினேன். ஒவ்வொருவரும் இரண்டு நாடுகளுக்குச் சென்றனர் - என் ஓலையுடன். சிறிய நாடுகளான நாம் ஐவரும் இணைந்து செயல்படத் தீர்மானித்தால் நம் ஒன்றுபட்ட படைகளின் வலிமையால் கபால நாடு என்ற ஒரு பெரிய நாட்டை எதிர்த்து நிற்கலாம் என்று நான் யோசனை தெரிவித்தேன். அவர்களுக்கும் கபால நாடு ஒரு அச்சுறுத்தலாக இருப்பதால் நான்கு நாடுகளுமே என் யோசனையை ஏற்றுக் கொண்டு விட்டனர். இனி கபால நாடு நம்மைத் தாக்கத் துணியாது. ஐந்து நாடுகளின் படைகளும் ஒன்றாகச் செயல்படப் போகின்றன என்ற செய்தியை நம் ஒற்றர்கள் மூலம் கபால நாட்டில் பரப்பி விட்டேன். இனி நம் எல்லையில் நமக்குத் தொல்லை கொடுக்கும் வேலையில் கபால நாடு ஈடுபடாது!" என்றார் அரசர் பெருமிதத்துடன்.

பொருட்பால்
நட்பியல்
அதிகாரம் 88
பகைத்திறந்தெரிதல் (பகையின் தன்மையை அறிதல்)

குறள் 878:
வகையறிந்து தற்செய்து தற்காப்ப மாயும்
பகைவர்கண் பட்ட செருக்கு.

பொருள்: 
செய்யும் வகையை அறிந்து தன்னை வலிமைப்படுத்திக் கொண்டு தற்காப்புத் தேடிக் கொண்டால், பகைவரிடத்தில் ஏற்பட்ட செருக்கு தானாகவே அழியும்.
அறத்துப்பால்                                                           காமத்துப்பால் 

No comments:

Post a Comment

1060. ஏன் உதவவில்லை?

"யார்கிட்ட உதவி கேக்கறதுன்னே தெரியல!" என்றான் பரந்தாமன். "யார்கிட்டயாவது கேட்டுத்தானே ஆகணும்? இன்னும் ரெண்டு நாளைக்குள்ள பணம்...