Thursday, July 6, 2023

884. வாசுவின் கோபம்

"உன் அண்ணன், தனக்கு ரயில்வேயில உயர் அதிகாரி ஒத்தரைத் தெரியும், அவர் மூலமா எமர்ஜன்சி கோட்டாவில ரிசர்வேஷனை கன்ஃபர்ம் பண்ணிடறேன்னு சொன்னதாலதானே, மூட்டை முடிச்சையெல்லாம் தூக்கிக்கிட்டு ஸ்டேஷனுக்குப் போனோம்? ஆனா, டிக்கட் கன்ஃபர்ம் ஆகல. மறுபடி பெட்டியையெல்லாம் தூக்கிக்கிட்டு வீட்டுக்கு வரும்படி ஆயிடுச்சு. என்னைத் திட்டம் போட்டுப் பழி வாங்கி இருக்காரு உன் அண்ணன்!" என்றான் வாசு, கோபத்துடன்.

"அவன் எதுக்குங்க உங்களைப் பழி வாங்க நினைக்கணும்? முயற்சி செஞ்சிருக்கான், முடியல. இதுக்கு முன்னால சில பேருக்கு அவன் இது மாதிரி செஞ்சு கொடுத்திருக்கான். நம்பிக்கை இல்லாம ஸ்டேஷனுக்குப் போனவங்க, ரிசர்வேஷன் கன்ஃபர்ம் ஆனதைப் பார்த்து ஆச்சரியப்பட்டிருக்காங்க!" என்றாள் அவன் மனைவி புவனா.

"அதனாலதான் சொல்றேன். என்னைத் திட்டம் போட்டுப் பழி வாங்கி இருக்கார்னு. ஒருவேளை, நம்ம கல்யாணத்தில, என் வீட்டுக்காரங்க யாராவது அவர்கிட்டக் கோபமாப் பேசி இருப்பாங்க. அதுக்காக, என்னைப் பழி வாங்கி இருக்காரு!"

"அது மாதிரி எதுவும் இல்லை. ஏன் இப்படி நினைக்கிறீங்க?" என்று புவனா கூறியதை வாசு ஏற்றுக் கொள்ளவில்லை.

அடுத்த நாள், புவனாவின் அண்ணன் கணேஷ் அவர்கள் வீட்டுக்கு வந்து, எமர்ஜன்சி கோட்டாவில் கன்ஃபர்ம் செய்வதாகச் சொன்ன அதிகாரியால் ஏதோ காரணத்தால் அப்படிச் செய்ய முடியாமல் போய் விட்டது என்று சொல்லி, வாசுவிடம் மன்னிப்புக் கேட்டுக் கொண்ட பிறகும், வாசு சமாதானமடையவில்லை.

அதற்குப் பிறகு, எத்தனையோ வருடங்கள் ஆகியும், கணேஷின் மீதிருந்த கோபம், வாசுவின் மனதை விட்டு நீங்கவில்லை.

"நீங்க இன்னும் என் அண்ணன் மேல விரோத பாவத்தோடதான் இருக்கீங்க. இப்படி இருக்கறது உங்களுக்கே நல்லது இல்லைங்க" என்று புவனா பலமுறை வாசுவிடம் கூறி இருக்கிறாள்.

"அப்படியெல்லாம் எதுவும் இல்லை" என்று வாசு உதட்டளில் மறுத்தாலும், தன் மனதில் கணேஷன் மீது ஒரு விரோத பாவம் இருப்பதை அவனால் உணர முடிந்தது.

"நம்ம இருபத்தைந்தாவது திருமண விழாவுக்குக் கூப்பிட்டிருந்தவங்கள்ள பல பேர் வரல. என் தம்பி கூட வரல. ஏன்னு தெரியல!" என்றான் வாசு.

"நீங்க இப்படி மனசில விரோத பாவத்தோட இருந்தா, எப்படி வருவாங்க?" என்றாள் புவனா.

"என்ன சொல்ற நீ? எனக்கும் என் தம்பிக்கும் எந்தப் பிரச்னையும் இல்லேயே! அவன் ஏன் வரல?"

"அதை நீங்க அவர்கிட்டதான் கேக்கணும். ஆனா, நான் கவனிச்ச ஒரு விஷயத்தை சொல்றேன். நீங்க என் அண்ணனை விரோதியா நினைக்க ஆரம்பிச்சதிலேந்தே, மற்றவங்களோட உங்களுக்கு இருந்த நெருக்கமும் குறைய ஆரம்பிச்சுடுச்சு. ஆரம்பத்தில உங்களுக்கு ரொம்ப நெருக்கமா இருந்த உங்க தம்பி, கொஞ்சம் கொஞ்சமா விலகிப் போய்க்கிட்டிருக்கறதை நான் கவனிச்சிருக்கேன். இனிமேலாவது, யார் மேலேயும் மனசில விரோதம் வச்சுக்காம, மத்தவங்ககிட்ட குற்றம், குறை இருந்தாக் கூட, அதையெல்லாம் உடனே மறந்து, இயல்பா இருக்கப் பழகுங்க. நான் உங்களுக்கு உபதேசம் பண்றதா நினைக்காதீங்க. நான் பார்த்ததை வச்சு சொல்றேன்!" என்றாள் புவனா.

பொருட்பால்
நட்பியல்
அதிகாரம் 89
உட்பகை

குறள் 884:
மனமாணா உட்பகை தோன்றின் இனமாணா
ஏதம் பலவும் தரும்.

பொருள்: 
மனம் திருந்தாத அளவுக்கு உட்பகை விளைவிக்கும் உணர்வு ஒருவனுக்கு ஏற்பட்டு விடுமானால், அது அவனைச் சேர்ந்தவர்களையே பகைவராக்கும் கேட்டினை உண்டாக்கி விடும்.
அறத்துப்பால்                                                           காமத்துப்பால் 

No comments:

Post a Comment

1080. 'தன்மானத் தலைவரி'ன் திடீர் முடிவு!

தன் அரசியல் வாழ்க்கையின் துவக்கத்தில் இரண்டு மூன்று கட்சிகளில் இருந்து விட்டு, அங்கு தனக்கு உரிய மதிப்புக் கிடைக்கவில்லை என்பதால், 'மக்க...